
அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி
ஊர்வலம்
“காங்கிரஸின் செல்வாக்கு அழிந்து விட்டது. அதற்கு தேர்தலில் சந்தர்ப்பமில்லை என்று மக்கள் சொல்லுவதாக கேள்விப்படுகிறேன்.”
காமராஜரின் பேச்சிலே சிந்தியவை தான் மேலே காண்பது. காங்கிரசை யாரும் கவிழ்க்க முடியாது என்று கனல்
கக்க கர்ஜித்திருக்கிற காமராஜரால் உண்மையை மறைக்க முடியவில்லை. அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ மக்கள் மன்றத்தின் அபிப் பிராயத்தைக் கொட்டிவிட்டார். பின் உணர்ந்திருக்கிறார் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்பதை ! உடனே திரையை இழுத்து விட்டு மக்கள் மன்றத்தை மறைத்துவிட முயன்றிருக்கிறார். காங்கிரஸின் செல்வாக்கு போய்விட்டதென்று மக்கள் சொல்லுகிறார்கள் என ஆரம்பித்த காமராசர், அந்த மாதிரிக்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள் என்று ஆரூடம் எணித்துக் காட்டுகிறார்.
‘தேர்தல் கமிட்டியின் துவக்கத்தில் இம்மாதிரி ஒரு தேறுதல் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், விருதுநகராருக்கு வீண் வீராப்புத் தேவையில்லை என்று தான் கருதுகிறோம். ‘அந்த மாதிரி மக்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள்’ என்பதிலே என்ன தொனிக்கிறது! தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற உறுதி தான் ஒலிக்கிறதே தவிர, காங்கிரஸ் செல்வாக் கிழந்து விட்டதென்பதை மறுப்பதற்கான பதில்கள் பளிச்சிடவில்லை.செல்வாக்குப் போய் விட்டதென மக்கள் கூறுவதாக செவியில் விழுகிறது என்று புலம் பிய ராஷ்டிரபதியார் செல்வாக்குச் சீரழியவில்லை என்பதற்கான ஆதாரங்களையல்லவா அள்ளி வீசியிருக்க வேண்டும் ! சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும் !
காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயே காங்கிரசின் பலத்தைப் பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன. அவைகள் ஒழிய வேண்டும்.”
உடைந்துபோன தேர்- ஓட்டையாகிக் கிடக்கும் கேடயம் – உபயோகமற்ற வாள் – ஒலிக் கிளம்பாத – முரசு – உணர்ச்சியில்லாத வீரர்கள்- ஒற்றைக்கால் குதிரைகள் – இவைகளை வைத்துக் கொண்டு இந்தப் போரில் குதிக்க முடியாது என பயப்படுகிறார்கள் சேனைத் தலைவர்கள். அரசனோ, “அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம்” என்று வீரஉரை கூறுகிறான்.
அதைப் போலத்தான் இருக்கிறது காங்கிரஸ் தேர்தல் கமிட்டியில் நடத்திய பிரசங்கம். சேனாதிபதிக்கே சந்தேகமிருக்கிறது போரின் முடிவைப்பற்றி ! சிங்காதனமேறியோ “ஜெயித்து விடலாம்” என்று
வீரம் பேசுகிறார். காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயே காங்கிரசின் பலத்தைப் பற்றிய சந்தேகத்தை ஒழிக்கும் படி காமராசர் சண்டமாருத பிரசங்கம் செய்கிறார்.
“காங்கிரஸ் சர்க்கார் முட்டாள்தனமான பல தவறுகளைச் செய்துள்ளனர். ஆயினும் காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாக ஆட்சி நடத்த யோக்கிதை உள்ள வேறு கட்சி கிடையாது. ஆகவே காங் கிரஸ் கட்சியை சகித்துக் கொள்ள வேண்டும் ”. இதைச் சொல்லியிருப்பவர் காங்கிரஸின் பல நாளையத் தொண்டராய்- தலைவராய்- பணியாற்றிய கிருபளானி.
மந்திரிகளைத் திருத்த முடியாத மகாத்மா காந்தி என்னை காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்னார். அவர் அனுமதி பெற்று தலைமைப் பதவியை உதறித் தள்ளினேன்”. இதுவும் கிருபளானிதான். காங்கிரஸ் ஆளும் யோக்கிதையைப் பார்த்து காந்தியாரே மனம் புண்ணா கிப் போனார் என்ற செய்தி கிடைக்கிறது; காமராசரோ வெத்து வேட்டுகள் கிளப்புகிறார்.
வெத்து வேட்டுகளோடு நிற்கவில்லை. விசாரத்தை மறைத்துக் கொண்டு- விம்மிடும் குரலை வெளிக் காட்டிக் கொள்ளாமல்- விவேக மொழிகள் வேறு கூறி யிருக்கிறார். என்ன விவேக மொழி? தேர்தலில் வெற்றி பெற, இழந்த செல்வாக்கை மீண்டும் பெற, நாணயமாக நடந்துகொள்ளுங்கள் என்றா? அதுவுமில்லை.
இழந்து போன பெருமையை மீண்டும் அடைய முயற்சிப்பவன் பெருமை பாழ்பட்டதற்குக் காரணங்களை அறிந்துகொண்டு, தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல்வது அறிவுடமை. செத்துப்போன செல்வாக்கை புதுப்பிக்க புதுப்புது ஸ்டண்டுகள் நடத்துவதும்- எதிர் கட்சி மீது எரிந்து விழுவதும்- அழிந்த கௌரவத்தை ஆழக் குழி தோண்டி புதைத்து விடும் புன்மைச் செயல்கள். இதைக் காமராசர் உணர மறுக்கிறார். வேடிக்கை காட்டி மக்களை மயக்கி விடலாமென்று எண்ணுகிறார்.
“நகரங்களிலும், கிராமங்களிலும் கூட்டங்களும், ஊர்வலங்களும் நடத்துங்கள் ” என்று உபதேசிக்கிறார். ஊர்வலங்களையும், கூட்டங்களையும்தான் மக்கள் நடத்து கிறார்களே, கண்டிருப்பாரே காமராசர் ! நெசவாளர் ஊர்வலம்- வேலையற்றவர் ஊர்வலம்- அரிசி இல்லாதவர் ஊர்வலம்- இப்படி எத்தனை கண்ணீர்த்துளி களின் பவனிக ள் நடைபெறுகின்றன, வில்லையா காமராசர் ! “காங்கிரசுக்கு ஜே!” போட்டு ஒழித்து விடக் கூடிய பிரச்னைகளா இவை எல்லாம் ! காமராசரின் தேர்தல் ஊர்வலம் கண்ணுக்கு ரம்யமாக இருக்கும். கருத்தைக் கவரும் ஊர்வலங்கள் அல்லவா நாட்டில் நடைபெறுகின்றன. ஊர்வலம் மட்டுமா? ஊர்வலத்திலே உறுமுகிற போலீசார் எவ்வளவு ! உதிரம் குடிக்கிற துப்பாக்கிகள் எத்தனை! தலை பிளக்கும் தடிகள் எவ்வளவு!
மானையும் மயிலையும் வேட்டையாடக் கூடா தென்று சர்க்கார் அறிவித்திருக்கிறது, காட்டுக்காகப் போடப்பட்ட சட்டம். ஆனால் நாட்டில் நடமாடும் அதிகார வெறி, எத்தனையோ தோகை மயில்களைத் துவளச் செய்திருக்கிறது. எத்தனையோ மான்விழியர்களின் மல்லிகை மேனியில் இரத்தக் கரை உண்டு பண்ணி யிருக்கிறது. காட்டிலே உள்ள மானும் மயிலும் காப்பாற்றப் படுகின்றன. நாட்டிலே உள்ள மானும் மயிலும் மடிந்து போக விடப்படுகின்றன.
இந்தக் கொடுமைகள் எல்லாம் ஊர்வலமாக வருகிற நேரத்திலே, காமராசர் கோலாகல ஊர்வலம் நடத்த யோசனை கூறுகிறார். அதுவும் தேம்பும் மக்களுக்கு தேர் தல் ஊர்வலமல்ல; ‘தில்லு முல்லு’ க் கட்சியில் தேர்தல் ஊர்வலம் !
” மாலை மணி ” (1-12-51)



