அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி

நம்ம மந்திரிகள்!

‘நம்ம சர்க்காரில்’ மந்திரிகளின் ‘குட்’டை நாமே வெளிப்படுத்திவிட்டால் வெளி நாட்டான் நம்மைப் பற்றி நகைக்க மாட்டானா ?

நம்ம மந்திரிகளின் யோக்கியதைகளை அம்பலப் படுத்துவோரைப் பார்த்து “நமது சர்க்கார் அனுதாபிகள்” கூறும் சமாதான வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்……

இப்படியே நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு ஆட்சிபீட மகான்கள் செய்யும் காரிய மனைத்தும் மகோன்னதச் செயல் என்றே கூறிக்கொண்டு இருந்ததின் விளைவே, இந்த நாடு வறுமையால் அவதிப்பட நேரிட்டுவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஆட்சி பீடத்திலமர்ந்தோர் செய்யும் தகாத செயல்களையும் கண்டிக்க இந்த நாட்டில் எதிர்க்கட்சி இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது. அதனாலேயே எதேச்சாதி: காரம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்து விட்டது.

மக்களின் ஆதரவிலே ஆட்சிக்கு வந்து-மக்களின் நலத்திலேயே நாட்டம் செலுத்தாது-தங்கள் சுகபோக வாழ்விலேயே கண்ணும் கருத்துமாக கொலு வீற்றிருக்கும் நம் காங்கிரஸ் மந்திரிகளுக்கு, பாடம் கற்பிக்கும் வகையிலே வெளிநாட்டுச் செய்திகள் பல வந்த வண்ணம் இருக்கின்றன.

அண்மையில் பதவிக்கு வந்த இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதோடு, தன் சக மந்திரிகளின் சம்பளத்தையும் தகுதிக் கேற்றவாறு குறைத்திருக்கிறார். ஆண்டொன்றுக்கு 10,000 பவுன் சம்பளமாக இருந்ததை 7,000 பவுனாகத் தன் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

சிவப்புச் சீனாவின் தலைவர் மாசேதுங் மாதம் 800 ரூபாய்கள் தான் சம்பளம் பெறுகிறாராம்

பாரசீகப் பிரதமர் முசாதிக் மிகக் குறைந்த அளவு சம்பளம் பெறுவதோடு, தனக்காக உள்ள சர்க்காரின் கார்களைக் கூடப் பயன் படுத்திக் கொள்வதில்லையாம்.

அதே நேரத்தில் நம் மந்திரிகளைக் கவனிப்போம். இவர்கள் மாதம் ஒன்றுக்கு பல்லாயிரக் கணக்கிலே சம்பளம் பெறுவதோடு, எதற்கெடுத்தாலும் தனி அலவன்ஸ் பெற்றுக் கொள்வதில் தவறுவதில்லை.

சென்னை மந்திரிகள் ஓராண்டுக்கு முன்பு தங்கள் சம்பளம், அலவன்ஸ் போதாமல், தங்கள் குடும்ப மருத் துவச் செலவிற்கும் அரசாங்கச் செலவில் பணம் பெறும் சலுகையைத் தீர்மானமாக்கி, நிறைவேற்றிக் கொண் டது நினைவிருக்கலாம். தேர்தல் பிரசாரத்திற்கு வேறு சர்க்காரின் பணத்தை பாழ்படுத்தினார்கள்.

நம் மந்திரிகளின் கோலாகல வாழ்வு, அவர்கள். நடத்தும் அட்டகாசம், மக்கள் சர்க்காரிலே நடப்ப தாகவா இருக்கிறது?

தேர்தலிலே வாக்குறுதி கொடுத்தவைகளில் ஒன்றான சம்பளக் குறைப்பை தாம் பதவிக்கு வந்த ஒரு சில தினங்களிலேயே நிறைவேற்றி இருக்கிறார் சர்ச்சில் !

சர்ச்சிலைக் கிண்டல் செய்த இந்நாட்டு ஆளுங்கட்சி யார், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது!

நம் நாட்டு மந்திரிகள் நடன விழாவிற்குத் தலைமை தாங்கி நளின நடையில் பேசத்தான் கற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறு எதைச் செய்தார்கள் ? தினந்தினம் திறப்பு விழாக்கள்! ஆரம்ப வைபவங்கள்! அஸ்திவாரக் கல் நாட்டுகள்!- இவைகளைத்தானே செய்து கொண்டு வருகிறார்கள் இவர்கள் மக்களின் பகுத்தறிவுக்கு ஒவ்வாதப் பழக்க வழக் கங்களுக்குப் பாதுகாவலராக இருந்து வரும் இவர்கள் ஆட்சியில் உணவுப் பஞ்சத்தைவிட அறிவுப் பஞ்சம் தானே வளர வழி ஏற்படுகிறது.

மதச் சார்பற்ற இவர்கள் ஆட்சியிலே மதச் சடங்குகளுக்கு மந்திரிகளே சூத்ரதாரிகளாக விளங்கினால் எப்படி ஆட்சி உயர்வடைய முடியும்? மக்கள் பகுத் தறிவுபெற முடியும்?

வருஷப் பிறப்புக்குப் பஞ்சாங்கம் படிக்கிற மந்திரி கள்-‘இராம லீலா’வைக் கண்டு களித்துப் பரவசப்படும் மந்திரிகள் -சோமநாதர் கோவில் திருப்பணியில் ஈடுபடும் மந்திரிகள்-தீபாவளியைத் தேசியத் திருநாள் போன்று கொண்டாடும் அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாடு எப்படி உருப்பட முடியும்?

ஆரிய மதப் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை நமது மாஜி பஞ்ச மந்திரி முன்ஷியார் வெகு சிறப்பாகக் கொண்டாடினார். இந்தியக் குடியரசு தலைவர் இராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு உட்பட பல உயர்தர உத்யோகஸ்தர்கள்கூட அம்மாதிரி பண்டிகையில் கலந்து கொண்டிருக்கிறார்கள் பலமுறை!

இதன் அர்த்தமென்ன? தென்னாட்டு-திராவிட மக்கள் பகிஷ்கரிக்கும் தீபாவளியை வட நாட்டுத் தலை வர்கள் வெகுவாக வரவேற்கிறார்கள் என்பதைக் காட்டு வதற்குத்தானே பயன் படுகிறது!

நாட்டிலே பஞ்சம் தலைதூக்கி நிற்கும் நேரங் களிலே, பொறுப்பும் கடமையும் உணர்ந்த மந்திரிகளால் பண்டிகை கொண்டாடவா நேரமிருக்கும் ? அதற்கு மனம் தான் துணியுமா?

துயரக் கடலில் தத்தளித்து நிற்கும் நாட்டு மக்க ளின் இன்னல் களைய இலாயக்கற்ற-சிறிதும் தகுதியோ திறமையோ இல்லாத வெறும் சுய நல அரசியல் சூதாட்டக்காரர்களெல்லாம், ஆட்சிக்கு வந்ததினால் ஏற்பட்ட பலன்தானே நாடு இன்று இக்கதிக்கு உள்ளாகி இருக் கிறது? இதைத்தானே உண்மையான தேச பக்தர்கள் உள்பட எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் எடுத்துக் கூறி வருகின்றனர் ! இதை எடுத்துச் சொன்னால் அடக்குமுறை பாணத்தைக் காட்டி, சிறையிலே தள்ளி, சித்ரவதை செய்து, ‘ஜார்’ ஆட்சி நடத்தினால் இவர்களை எந்த நாட்டுக்காரர்கள்தான் மதிப்பார்கள்?

எனவே இந்தக் கொடுங்கோலர்களின் ஆட்சியை உபதேசத்தையும் சகித்து, இந்த ‘நம்ம சர்க்கார்’ மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதை இந் நாட்டு ஒரு சிறு குழந்தைகூட ஒப்புக் கொள்ளாது!

மாலை மணி” (1-11-’51)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *