
அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி
சிங்கங்கள் தோற்று விட்ட களத்தில் சிறு நரிகளா !
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வளர்ந்து வரும் ஆதரவு கண்டு, எதிரிகள்- எலக்ஷன் வேட்டைக் காரர்கள்- ஏந்திப் பிழைப்பவர்கள்- மக்களை ஏமாளி களாக ஆக்கி வைத்திருந்தோர்- மாறு வேடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளனர். மனம் போனபடி வசை மாறி பொழிகின்றனர். ஆனால், நமது கொள்கைகள் யாராலும் தோற்கடிக்கப்பட முடியா தவை. சேதுப் பிள்ளைகள் நிற்க முடியாத இடத்திலே இந்தச்செல்லாக் காசுகள் நடனமாட முயற்சிக்கின்றன. பாரதியார்கள் நிற்க முடியாத இடத்திலே இந்த பண வேட்டைக்காரர் கள் மச்சு வீடு கட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த இடத்தை இம்மாதிரியான சில்லரைகளால் நெருங்கக் கூட முடியாதென்பதை கழகத்தின் வளர்ச்சி காட்டி நிற்கிறது. சீற்றம் பிறக்கவில்லை நண்பர்களே, சிரிப்பு தான் வருகிறது! சிங்கங்களே தோற்று விட்ட களத்திலே சிறு நரிகள் வால் முறுக்குவதா? புலிகள் போரிட்டுப் பின்னடைந்த முனையிலே புழுக்கள் நெளிந்து காட்டுவதா? சாதாரணமானவர்களல்ல- சங்கத் தமிழ் கற்றவர்கள்- ஆராய்ச்சிப் பெருமக்கள்- அறிவு நிறைந்த அண்ணல்கள்- அவர்களே எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு கொள்கை பலம் உள்ளவர்கள் நாம். குறை மதியினர் குறை கூறுகிறார்கள்- கூறட்டும்- அது அவர்களின் தொழில்!
பலாத்காரத்தில் ஒழித்து விடலாம் இந்தப் படையை எனப் பகற்கனவு காணுகிறவர்களுக்கு அறிவிக்க ஆசைப்படுகிறோம். மதுரை மாநாடு இவர்களால் எரிக்கப்பட்ட நேரத்திலே மனம் கலங்கவில்லை நாம்! தூக்கிலே மாட்டி விட்ட நேரத்திலும் துவக்கிய பணியை நீக்கி துவண்டு விட மாட்டேன் என்று உறுதி கூறி பிணமாக ஊசலாட விடப்பட்ட உடையார் பாளையம் வேலாயுதத்தைக் கண்டும் உள்ளம் உடைந்து ஓடிவிடவில்லை நாம் ! சேலத்தில் கண்ணையும் காலையும் பெயர்த்தார்கள், காந்தி பக்தர்கள். கலங்கிடவில்லை நாம்! தாலமுத்து நடராசனைப் பிணமாகத் திருப்பித் தந்தார்கள். தைரியமிழந்து விடவில்லை நாம்! ஆச்சாரியார் வந்த நேரம்— அதிகார வர்க்கம் அடக்கு முறை அம்புகளை வாரி இறைத்தது. அயரவில்லை நாம்! குன்றத்தூர் கொடுமை நடந்தது. கட்சி குப்பை மேடாகவில்லை; கோபுரமாகத்தான் உயர்ந்தது!
பரிகசிப்போர்- பலாத்காரத்தில் இறங்குவோர்- எங்கள் பழைய வரலாற்றை- நாங்கள் வளர்ந்த வரலாற்றை ஒரு முறை எண்ணிப் பார்க்கட்டும். முதல் இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர் பெரும்படை அழகிரி சாமி தலைமையில் புறப்பட்டு சென்னை நோக்கிச் செல் கிறது. செல்லும் வழியிலே ஒரு சிறு கிராமம். அகிம்சா வாதிகள் நிறைந்த இடம். செருப்புத் தோரணம் கட்டினார்கள் நமதியக்கத் தொண்டர்களை கேலி செய்யும் முறையில்- அறப்போரை அவமதிக்கும் வகையில் ஆனால் தொண்டர்கள் தோரணத்தைக் கடந்து செல்ல வில்லை. அழகிரி பேச ஆரம்பித்தார். மணிக் கணக்கிலே மாவீரனின் முழக்கம் நடைபெற்றது. தோரணம் கட்டிய தோழர்கள் துவண்டு போனார்கள். மன்னிப்புக் கேட்டார்கள். தோரணத்தை அவிழ்த்தார்கள். மாலை அணிவித்தார்கள். வழி அனுப்பி வைத்தார்கள். இது நடந்த நிகழ்ச்சி- கற்பனைச் சம்பவமல்ல !
ஆகவே, தூற்றுவோர் துதிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் தொண்டாற்றுகிறோம். சிறுமதியினர் தான் சீறுகிறார்கள் என்றால், கண்ணியமிக்க காமராஜர்களும் கனல் கக்குகிறார்களே என்றுதான் பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. மந்த மதியினர் சிலர் தான் பேசுகிறார்களே என்றால், மதிப்புமிக்க மந்திரிமார்களும் கச்சைக் கட்டுகிறார்களே என்றுதான் வருந்த வேண்டி யிருக்கிறது. மந்திரிமார்களின் பேச்சிலே எவ்வளவு மட்ட ரகமான வார்த்தைகள் ! வரலாமா? மதிப்பிற்குரியவர்கள் அல்லவா? மாகாணத்தை ஆளுகிறவர்கள் அல்லவா ?
திராவிடர் இயக்கம் காங்கிரசின் விரோதி! காங்கிரஸ் எது செய்தாலும் எதிர்க்கும் துரோகக் கும்பல்!” என்று எங்களுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. வாதத்திற்காக அக் கூற்றை உண்மையென ஒப்புக் கொண்டாலும், அப்போதும் நாங்கள் கட்சிப் பெயரை ‘காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி என்று வைத்துக் கொண்டிருக்க வில்லையே ! உணரட்டும் உண்மை உணராத உதவாக்கரையினர், எங்களது உயர்ந்த பண்புகளை, என்று இதைக் கூறுகிறேன்
ஒரு புறத்திலே உண்மை அறியாதவர்- ஒரு புறத்திலே ஊர் கெடுப்போர்- இன்னொரு புறத்திலே எகத்தாளம் பேசுவோர்- வேறொரு புறத்திலே வேதனை தரும் சர்க்கார்— இதற்கிடையே திராவிட முன்னேற்றக் கழகம் வளர்கிறது. ஆனால், இந்த எதிர்ப்பு உணர்ச்சி கழகத்துடன் இறுதிப் போர் நடத்த முன் வந் துள்ளது, அதன் விளைவுதான் ஆங்காங்கு எழுப்பப்படும் சிறு பூசல்கள். அண்ணாவை சிறைக்கு அனுப்பியது. ஆசைத்தம்பியை வாட்டியது. ஆச்சாரியார் வந்தபோது அடிதடி நடத்தியது. குன்றத்தூர் செய்து காட்டியது. நாடெல்லாம் 144 போடுவது, நாரண மங்கலம் நடத்திக் காட்டுவது என்ற விதத்தில் பலப் பல :-
சட்டத்தை மீறும் அளவுக்குக் கொண்டு வரப்பட்டோம். எந்த சட்டத்தை? பேச்சுரிமை பறிக்கும் சட்டத்தை! எழுத்துரிமை பறிக்கும் சட்டத்தை !
144-களை மீறினோம்; இன்னும் மீறுவோம். புத்தகத் தடையை மீறினோம்; இன்னும் மீறுவோம். நாடகத்தை மீறினோம்; இன்னும் மீறுவோம். தடை மீறு வதிலேகூட வீரப்போர் ஒரு புறம்-நகைச் சுவைப்போர் ஒரு புறம் நடைபெறும் !
கற்பனை செய்து பாருங்கள், 144 போடுகிற ஊரிலே கல்யாண ஊர்வலமும், பிரேத ஊர்வலமும் மட்டும் செல்லலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்படும்போது, நமது நண்பர் நடராசனையும், அவரது மனைவியையும் காரிலே உட்காரவைத்து, ஊர்வலம் நடத்தி-“நடராசன் வாழ்க! திராவிடநாடு திராவிடருக்கே !” என்று முழக்கமிட்டுச் சென்றால்-போலீஸ் அதிகாரி குறுக்கிட் டால்-‘நடராசனுக்குத் திருமணம் ! அல்லது சஷ்டி யப்தப் பூர்த்தி !’ என்று சொன்னால் எப்படி இருக்கும்! நகைச் சுவைப்போர் ‘நம்பர்’ ஒன்று இது!
இன்னுமொரு கற்பனை-ஒரு பிரேத ஊர்வலம். கருப்புக் கொடிகள் ஆயிரம். “வட நாட்டு ஏகாதிபத்யம் ஒழிக!” என்ற முழக்கம்! ஸ்ரீமான் தேசீய அய்யங்கார் மாண்டுவிட்டார் என்ற செய்தி! எப்படி இருக்கும் இந்த நகைச்சுவை! இப்படி நகைச் சுவைப் போர்கள் நாடெங்கிலும் நடைபெறலாம்.
நாட்டுக் குழைக்கும் வீரர்களே ! நகைச்சுவைப் போர் மட்டுமல்ல-நாடாள வந்தவர்களின் ஈட்டி முனைகளையும் – துப்பாக்கிகளையும் குதிரையடிகளையும்- தாங்கிக் கொள்ளும் இதயத்துடன் அறப்போர் அணி வகுப்பில் வந்துசேர அழைக்கிறேன், தாலமுத்து, நடராசனின் கல்லறைகளின் சாட்சியாக! – அழகிரிசாமிக்கு தஞ்சையிலே எழுந்துள்ள கற்றூணின் சாட்சியாக! வருக, வருக, வாலிப வீரர்களே ! தொங்கும் நரம்பின் தூள்களை- பொட்டுப் பூச்சிகளை-புன்மைத் தேரைகளை ‘அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!’ என்று எச்சரித்திட எந்நாட்டுத் தோழர்களே! எழுக, வருக!
“மாலை மலர்” (12-2-’50)



