அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி

கொந்தளிக்கும் கடல்


நாட்டிலே குமுறிக் கொண்டிருந்த தேர்தல் புயல் அனேகமாக ஓய்ந்து விட்டது. புது நிலைக்கான முயற்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கின்றன. ஐந்தாண்டு காலம் அடக்குமுறை பாசீச ஆட்சி நடத்தி வந்தவர்கள் பொது மக்களின் தீர்ப்பைப் பரிசாகப் பெற்று தலை தாழ்ந்திருக்கிறார்கள்!

திராவிட முன்னேற்றக் கழகத்தார் துணிவிருந்தால் தேர்தலில் நின்று பார்க்கட்டுமே என்று தோள் தட்டினார் காமராசர். நேரடியாகத் தேர்தலில் கலந்து கொள்ளாமலேயே, குறுகிய காலத்தில் ஆதரவை மட்டும் அளித்து, காங்கிரசை முறியடித்து வெற்றிக்கொடி பிடிக்கும் வகையில் ஐம்பது தோழர்களை திராவிட முன்னேற்றக் கழகம் உலவ விட்டிருப்பது கண்டு “தோற்றேன், தோற்றேன்” என்று முகாரி பாடுகிறார் இப்போது!

சிறையிலே கொலைச் சிந்தும், வீதியிலே பிணமும், வேடிக்கை விருத்தங்களாக ஆகிவிட்டகாங்கிரஸ் கொலு மண்டபத்திலே இடி விழுந்துவிட்டது. அதுவும் பேரிடி!

சர்வாதிகாரிகள் பலர், காலடியில் மக்களைத் துவைத்து வாழ்ந்த நேரத்தில் அவர்களை வீழ்த்திட புரட்சிகள் உருவாயின. சர்வாதிகாரிகளின் த லைகள் உருட்டப்பட்டன.

அரசியலிலே நாகரீகம் நல்ல அளவுக்கு அமையாத நேரமது!

கொடியவர்க்குத் தண்டனை கொலை-குடும்பத்தோடு கொலை- கூட்டோடு கொலை-என்ற விதத்திலே தரப்பட்ட காலம்.

பழிவாங்கும் உணர்ச்சி பலாத்காரத்தோடு இணைந்திருந்த நேரம்.

ஆகவே இத்தகைய தண்டனைகள் குற்றமாகக்கூட கருதப்படாத காலமது.

இன்றோ அரசியலிலே நாகரீகம் தேவைப்படுகிறது. காட்டு மிராண்டித்தனம்-பேய்க் கூத்து-இவை போன்ற தாண்டவங்கள் கூடாது என்கின்ற நிலை வளர்ந்திருக்கிறது. இப்போதே காந்தியாரும், லியாகத்தும், அங்சானும் மற்றும் சிலரும் கொலை செய்யப்படுகிற அளவுக்கு அரசியல் நேர்மை இருந்திருக்கிறதென்றால், அரசியல் நாகரீகம் அற்ற அந்த நாட்களிலே நடைபெற்ற புரட்சிகளிலே எதிரிகள் – அதுவும் கொடியவர்கள் கொல்லப்படுவதிலே ஆச்சரியம் என்ன இருக்க முடியும்!

அந்நாள் கொடுங்கோலர் கொலையை வெகுமதியாக அடைந்தனர்.

இந்நாள் கொடுங்கோலர் தோல்வியை வெகுமானமாகப் பெறுகின்றனர்; பெற்றனர்.

அந்நாள் கொடுங்கோலனுக்கு எதிரே வேட்டு முழக்கம்!

இந்நாள் ஓட்டுச் சீட்டு !

இப்படி மாறியிருக்கிறது மக்களின் தீர்ப்பு முறை ! அந்தத் தீர்ப்பு முறையிலேதான் மக்கள் மன்றத்திலே குற்றவாளியாக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தவர்கள் பலர் வீழ்த்தப்பட்டனர்; வெற்றிகரமாக வீழ்த்தப்பட்டனர்.

நமது இதய தாகம் ஓரளவு அடங்கி விட்டது, நாட்டைக் காடாக்கியவர்கள் நலிவுற்றது கண்டு !

கள்ளிக் காட்டை அழித்து விடுவது மட்டும் நமது வேலையல்லவே! கள்ளி இருந்த இடத்திலே பள்ளி அமைப்பது அல்லவா நமது லட்சியம்; இதயகீதம்; எல்லாம்!

காங்கிரசை ஒழித்துக் கட்டுவதை மட்டும் லட்சியமாகக் கொண்டிருந்தால் தேர்தலின்போது ஆதரவு கேட்டவர்களிடம் திராவிட நாட்டுப் பிரச்னையை முக்கியமாக வைத்திருக்காது, தி. மு. கழகம்!

தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் கொள்கை தி.மு. கழகத்திடம் இல்லாத காரணத்தால்தான் திராவிடநாட்டுப் பிரச்னையை உயிர்ப் பிரச்னையாக-அடிப்படைப் பிரச்னையாக தேர்தல் காலத்திலும் அனுஷ்டித்து வந்தது தி.மு. கழகம் !

ஏசல்-ஏளனம்-கிண்டல்-கேலி-கண்டனம் இவைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் லட்சியம் ஒன்றையே முன்னிருத்தி தேர் தலில் தன் பிரசாரத்தைச் செய்தது தி. மு. கழகம் !

கிராமங்களிலே-பட்டி தொட்டிகளிலே – இதுவரை கேள்விப்பட்டிராத குப்பங்களிலே-தேர்தல் பிரசாரத்திற்கா க தி. மு. க. வீரர்கள் சென்றபோது திராவிடப் பிரிவினை முழக்கத்தை மக்கள் மனதிலே பதிய வைத் திடத் தவறவில்லை.

தன் இலட்சியத்தைப் பரப்பிடத் தேர்தலையும் ஒரு சந்தர்ப்பமாக தி. மு. க. கருதியது. அப்படிக் கரு தீயதிலே வெற்றியும் பெற்றது.

ஆதரவு பெற்றவர்கள்-தி. மு.க. ஓப்பந்த ஏட் டிலே கையெழுத்திட்டவர்கள்- திராவிட நாட்டை வாங்கிக் கொடுத்து விடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கைக் கொண்டு அலையவில்லை நாம். நமது போராட்டத் திற்கான பல ஆயுதங்களிலே சட்டசபை, மக்கள் சபை யிலே எழும் குரலையும் ஒரு ஆயுதமாகக் கருதுகிறோம். லட்சியம் என்பது கல்லால் அடித்தவுடன் கீழே விழுகிற மாங்காய் அல்ல! மாங்காய்கூட குறி தவறினால் கீழே விழாது!.

எந்த நாட்டு அரசியல் சரித்திரத்தை எடுத்தாலும், லட்சியப் போராட்டத்திலே முதல் மோதுதலிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. ரஷ்ய நாட்டுப் புரட்சி ஒரே நாளிலே முடிந்து விடவில்லை. சீனாவின் புது வாழ்வு நினைத்தவுடன் கிடைத்துவிடவில்லை. இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரப் போராட்டத்தை ஐம்பது வருடங்கள் நடத்தியிருக்கிறது.

அதுமட்டுமல்ல; வெள்ளையன் ஆட்சி நடைபெறும் போது அமைந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் விடுதலைக்கான குரலை எழுப்பியதே தவிர, அப்போதே சுதந்திரத்தை மூட்டைக் கட்டிக்கொண்டு எடுத்து வந்து மக்கள் கையிலே கொடுத்துவிடவில்லை. இவை எல்லாம் அரசியலிலே அப்பாவிகளாய் இருப்பவர்கள்கூட அறிந்து கொள்ளக்கூடிய விஷயம்தான்.

வெளியிலே நாம் நடத்த இருக்கும் திராவிடப் பிரிவினைப் போராட்டத்திற்கு சட்டசபைகளிலும்— மக்கள் சபைகளிலும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும் என்று நிபந்தனை கேட்டோம். அப்படி நிபந்தனை தந்தவர்களை மட்டும் திராவிட நாட்டுப் பிரச்னை நம்பியிருக்கிறது என்று அர்த்தமல்ல; நிபந்தனை கேட்கிற அளவுக்கு கழகம் வளர்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்!

இதைப் புரிந்துகொண்டுதான் விஷமிகள் விஷத்தை வாரி இறைக்கிறார்கள்; புரியாதவர் போலவும் நடிக்கிறார்கள்.

பொறாமையின் விளைவுதான் அவைகள் என்பதை உணர்ந்துகொண்டு செயலாற்றிடப் புறப்பட வேண்டும் திராவிடக் காளையர்.

நாடெங்கும் திராவிட நாதம் பரப்பிட நல்லதோர் வாய்ப்பாக அமைந்தது கடந்துபோன தேர்தல்.

தேர்தல் முடிந்து விட்டது; தேர்தலுடன் நம் பிரச் னைகள் முடிந்து விடவில்லை. திராவிடநாடு கிடைக்கும் வரையில், அப்படிக் கிடைத்த திராவிடத்திலே சமத்துவம் கொழிக்கும் வழி இருக்கும் வரையில், வகுக்கப்பட்ட சமத்துவம் வகையோடு வாழ்ந்திட பாதுகாத்திடும் பணியிருக்கும் வரையில் நம் பிரச்னைகள் முடிந்து விடாது. நம் இலட்சியக் குரல் முடிந்து விடாது.

அடுத்து அமையப் போகும் மந்திரிசபை யாருடையதாக இருந்தாலும், எந்தக் கட்சியுடையதாக இருந்தாலும், திராவிடத்தை டெல்லியிலிருந்து வெட்டி எடுக்கும் வீரப் போராட்டத்திலே தி. மு. கழகத்தார் குதிக்கத் தான் போகிறார்கள்.

டில்லியின் கொடுமைகளை, டில்லியின் ஏகாதிபத்தியத்தை, திராவிடம் இனியும் வளரவிட எண்ணவில்லை.

ஆகவேதான், திராவிடர், நாட்டுப் பிரிவினைப் போரிலே இன்னும் தீவிரமாக ஈடுபட இருக்கிறார்கள். அதற்கு சட்டசபையிலேயிருந்தும் நமக்கு ஆதரவுக் குரல் எழும்பும். அது டில்லியிலேதான் எதிரொலிக்கும். அப்படிக் கிளம்புகிற குரலை அடக்கிடும் போக்கினர் ஆட்சிபீடத்திலே இருந்தால் அதற்காகக் கவலைப் படப் போவதில்லை திராவிடர் எழுச்சிக் கடல்!

அந்தக் கடலின் கொந்தளிப்பு, டில்லி மூலவர்களை மூழ்கடிக்கும்! டில்லி தாசர்களை விரட்டி அடிக்கும் ! பலரை பலி கொடுத்து வளர்த்த சொல் திராவிடம்!

வேலாயுதம்,தாளமுத்து, நடராசன், அழகிரி, செல்வம், நெல்லிக்குப்பம் மஜீத், சென்னை பாண்டியன் இப்படி பலப் பலர் கடைசி மூச்சை ‘திராவிடம்’ என்ற மூச்சாக மாற்றிவிட்டு மறைந்திருக்கிறார்கள் !

அந்த வீரர் பெருந்தகைகளின் திருவுருவத்தை நெஞ்சிலே ஏந்தி-“திராவிடநாடு திராவிடருக்கே !” என்ற முழக்கத்தை விண்ணதிர-மண்ணதிர- வீண ரின் விழி அதிர எழுப்பி, “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் இடுகாடு!” என்ற உறுதியுடன் நடந்திடுவோம்!

திராவிட நாடு

திராவிடருக்கே!

மாலை மணி ” (4-1-’51)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *