
அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி
காட்கில் காம்போதி
“காங்கிரஸ் ஆட்சியின் தவறுதல்களையும் திறமை யின்மையையும் மக்கள் மறந்துவிட வேண்டும். காங்கிரஸ் சர்க்கார் சில தவறான காரியங்களை செய்திருக்கக் கூடும்.”
மந்திரி காட்கில் பூனாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோல பேசியிருக் கிறார்.
இதோடு மட்டுமல்ல; காங்கிரஸையே ஆதரிக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
தவறுதல் செய்த காங்கிரஸ்! திறமையில்லா த ஆட்சி! ஆனால் மீண்டும் பதவிக்கு வரவேண்டும்.
தவறுதல்களின் பட்டியலைத் தரவில்லை காட்கில்! ஆயிரத்து தொளாயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி பிரயோகம் செய்தது. மூவாயிரத்துக்கு மேற்பட்டவரின் மூச்சை நிறுத்தியது. பதினாயிரம் பேர்களை காயப்படுத்தியது. ஐம்பதாயிரம் பேர்களை சிறையில் தள்ளியது- எண்பதுக்கு மேற்பட்டவர்களை சிறைப் பிணமாக்கியது.
குன்றத்தூர்-கூச்பீகார் நடத்தியது. நெசவாளர் குடும்பங்களை சுடுகாடாக்கியது. பிள்ளை வியாபாரம் செய்யும் மனித மார்க்கெட்டை திறப்பு விழா செய்தது- சமுதாய நல்லீதங்காள்களை உலவ விட்டது, புளியங்கொட்டை பருத்திக் கொட்டைகளை சாப்பிடச் சொன்னது-மிருகங்களையல்ல மனிதர்களை!
பிணங்களை சாப்பிடும் அளவுக்கு நடைப் பிணங்களை நடமாடச் செய்தது. பட்டினி போட்டு-பதைக்க உயிர்வாங்கிய இதைப்போன்ற ஆயிரக் கணக்கான கொடுமை சூழ்ந்த பல வேதனைகளைத்தான் விளக்கமாக வெளியிட வெட்கப்பட்டு மந்திரி காட்கில் மறைமுகமாக ஒரே வார்த்தையில் “தவறு” என்று கூறியிருக்கிறார்.
அடுத்தபடியாக அமைச்சர் வெளியிடுகிற அழகான மதிப்புரை, திறமையின்மை நிறைந்த ஆட்சி என்பது.
சுயதேவைப் பூர்த்தியென்று பேசித் திரிந்து, வெளிநாடுகள் தருவதாகச் சொன்ன தான்யங்களை வாங்க மறுத்து, வீண் வீராப்பும் விவேகமற்ற செயல்களும் புரிந்து மக்களை பிணங்களாக்கியதும், பஞ்சத்திற்குக் காரணம் மழையில்லாததுதான் என்று கண்டு பிடித்து, மழை வருவிக்க, வனமகோற்சவம் என்ற வீண் விழா விலே ஈடுபட்டதும், ஆக்க வேலைகள் பல இருக்க அறிவுக் கருத்துக்களை அடக்கும் வேலையில் அனாவசியமாக ஈடுபட்டதும், சட்டத்தால் மதுவை ஒழிப்பதாகச் சொல்லி மது காய்ச்சுவது குடிசைத் தொழிலாக ஆகி விடுகிற அளவுக்குக் கோணல் ஆட்சி நடத்தியதும், ஓடாத அனுமார் விமானத்திற்கு ஓயாத செலவு செய்து அலுத்ததும், அழுகிப்போன உணவுப் பொரு ளுக்கு பணத்தைக் கொட்டி அழுததும், இதுபோன்றஅறிவீனச் செயல்களைத்தான் சுருக்கமாகச் சொல்கிறார் மந்திரியார் திறமையற்ற ஆட்சி யென்று!
தவறு செய்த ஆட்சி! திறமையற்ற நிர்வாகம்! பதவியிலிருக்கும் மந்திரியார் ஆட்சிபீடத்திற்கு தரும் ‘சர்டிபிகேட்!’
இரண்டையும் குறிப்பிட்டவர் இறுதியாக என்ன சொல்லுகிறார்!
கொலைகாரன்….. குற்றவாளி- என்ற பதங்களை உபயோகித்துவிட்டு, இவனில்லாவிட்டால் நீங்கள் வாழ முடியாது என்று கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தாரிடம் சொன்னால் எப்படியிருக்கும் !
அதைப் போலவே மந்திரி காட்கில், தவறு செய்தவர்கள், திறமையற்றவர்கள் என்று கூறிவிட்டு, ஆனால் இவர்களில்லாவிட்டால் நாடு உருப்படாது என்றும் கூறியிருக்கிறார்.
இங்கேதான் காட்கில் தவறு செய்கிறார். திறமையின்றியும் பேசுகிறார்.
திறமையின்மையையும் மறந்துவிடச் சொல்கிறார். மறந்துவிடுவது மட்டுமல்ல-மன்னித்து விடவும் தயாராகயிருக்கிறார்கள் மக்கள். ஆனால் அந்த மறதிக்குப் பிறகு, மன்னிப்புக்குப் பிறகு மறுபடியும் திறமையற்ற வர்களை மந்திரி நாற்காலிகளில் தூக்கிவைப்பதுதான் முடியாதென மறுக்கிறார்கள்.
காட்கில் காம்போதியின் நயம் நன்றாகத்தானிருக்கிறது – சாரீரம் இனிமையாகத்தானிருக்கிறது.
ஆனால் அதைக் கேட்பவர்கள் அந்த சங்கீதத்தில் மயங்கிவிடுகிற அளவுக்கு அவ்வளவு சாதாரணமானவர்களாயில்லை! சங்கடப் புயல்! சஞ்சலச் சூறாவளி! ஏழ்மை எரிமலை! வேதனை பூகம்பம்!-இதற்கிடையில் இருப்பவர்கள், காட்கிலின் காம்போதியிலா கருத்தை செலுத்தப்போகிறார்கள்!
நமக்குக்கூட ஆசைதான், காங்கிர சே மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்று!
ஏன் ?
அப்போதுதானே அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரசின் பெயரால் ஒரு ஆள்-ஒரே ஒரு ஆள் கூட- நேரு உட்பட -அபேட்சா பத்திரம் தாக்கல் செய்ய முயன்று முன் வரமாட்டார்கள் ! அந்த நல்ல முடிவைத் தான் காட்கிலின் காம்போதி எதிரொலிக்கப்போகிறது!
“மாலை மணி” (22-11-’51)



