அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி

பிரிவினை கீதம்

தென்னிந்திய உணவுப் பஞ்சம் ராமபா தசாகர் திட்டத்தை நிறைவேற்றினால்தான் தீரும். இத் திட் டத்தை ஆராய்ந்து வேண்டியன செய்வதற்காக மத்திய அரசாங்கம் என்னை நியமித்தது. நானும் வெகு ஆவலுடன் ஒப்புக்கொண்டேன். திட்டம் சம்மந்தமான வேலைகளை ஆரம்பித்தேன். ஆனால், மத்திய அரசாங்கமோ வட இந்தியாவில் ஏற்படுத்துவதற்கான பல திட்டங்களில் பணத்தை விரயம் செய்துவிட்டு, தென்னிந் தியாவிலுள்ள ராமபாதசாகர் திட்டத்திற்கு இப்போது பணமில்லை என்று கூறிவிட்டது.

-எஸ்.வி. ராமமூர்த்தி, ஐ.சி.எஸ்.

” சுதந்திரா “, 8-6-’51

இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்று கூறும் தோழர்களுக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக்கின்றோம்.

மத்திய அரசாங்கம் தென்னிந்தியாவைப் பல வகையிலும் துரோகம் செய்கிறது என்பதும், தென் னிந்தியாவைச் சுரண்டி, வட இந்தியாவின் வாழ்வைப் பரிமளிக்க வைக்கிறதென்பதும், மத்திய அரசாங்கத்தின் போக்கிலிருந்து நன்கு அறியக் கிடக்கிறது.

உலக நிதியிலிருந்து இந்தியா வாங்கிய கடன் தொகையில் தென்னிந்தியாவுக்கு நியாயமான பங்களிக்கப்பட்டதா ? இல்லை. வட இந்திய மாகாணங்களில் தொழிற்சாலைகள் தொடங்கவும், அவற்றை அபிவிருத்தி செய்யவுமே அத் தொகையில் பெரும் பகுதி பயன் பட்டது.

சர்க்கரை ஆலைகள் உத்திரப் பிரதேசத்திலும், பீஹாரிலுமாக அமைக்கப்பட லைசென்ஸ் அளிக்கப்பட்டதே தவிர, தென்னிந்தியா கவனிக்கப்படவில்லை.

பம்பாய் மாகாணத்தில் பருத்தி விளைவிக்க அனுமதி தரப்பட்டதே ஒழிய, அதே போன்ற நிலமுள்ள அனந்தபூர் ஜில்லாவில் பருத்தி விளைவிக்க அனுமதி தரப்படவில்லை.

மத்திய அரசாங்கம் இங்கு உற்பத்தியாகும் நூல்களை எல்லாம் வாரிக் கொண்டு போய் வட இந்திய மாகாணங்களுக்கு விநியோகித்து விட்டு, தென்னிந் திய நெசவாளர்கள் வேலையற்றுப் பட்டினிகிடந்து சாகச் செய்து விட்டது.

பீஹார் மாகாணத்தில் தினசரி 1,12,000 பேருக்கு இலவசமாக உணவு அளிக்க எப்போதோ ஏற்பாடு செய்து, அதற்கேற்ற உணவுப் பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருக்க, தென்னிந்தியாவில் மக்கள் பட்டினி யால் செத்துக் கொண்டிருந்தும், கஞ்சியூற்றும் திறமை கூட இந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்படவுமில்லை. மத்திய அரசாங்கம் கவனிக்கவுமில்லை.

“மாஜி யூனியன் உணவு மந்திரி முன்ஷி சென்னைக்கு வந்திருந்த போது, இந்த நாட்டில் எப் பகுதியிலும், எவரும் பட்டினியால் சாகுமாறு அரசாங்கம் விட்டு விடாது” என்று இங்குள்ளோர் மெச்சிக் கொள்ளுமாறு பேசினார்.

ஆனால் இன்றோ, ” இங்கு மங்குமாகச் சில தனிப் பட்டவர்கள் பட்டினியால் சாவதைத் தடுத்து நிறுத்தி விட முடியும் என்று நான் உறுதி செய்ய முடியாது” என்று பண்டித நேரு புதுடில்லியில் கூறிவிட்டார். பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டிருப்பது தென்னிந் தியாவில்தான். இதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில் மத்திய அரசாங்க முதல்வர் கூறுகிறார்.

சென்னை மாகாணத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் டன் தானியம் வேண்டுமென்று கேட்டதற்கு மத்திய அரசாங்கம் லட்சம் டன் தானியமே கொடுத்தது. ஆனால், சென்னையைப் போலவே 10 லட்சம் டன் தானியம் கேட்ட பம்பாய் மாகாணத்திற்கு 8 லட்சம் டன் தானியத்தை மத்திய அரசாங்கம் ஒதுக்கியது.

இவ்வாறே இன்னும் பல நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டிக் கொண்டே போக முடியும். தென்னிந்தியாவில் இன்றியமையாத இனங்களில் செலவு செய்யப் பணமில்லை என்று கூறிய மத்திய அரசாங்கம், எத்தனையோ பயனில்லாத திட்டங்களில் பணம் செல வீட்டு ஏமாந்திருக்கிறது. ஜீப் வாங்கும் திட்டம், வார்ப் பில்லங்கள் அமைக்கும் திட்டம் போன்ற எத்தனையோ திட்டங்களில் கோடிக் கணக்கான ரூபாய்களை இழந்து விட்டிருக்கிறது.

ஆனால், அதே சமயத்தில் தென்னிந்தியாவில் ராம பாதசாகர் திட்டத்தை நிறைவேற்றப் பணமில்லை என்று மத்திய அரசாங்கம் கூறிவிட்டதை அரசாங்க அதிகாரியே எடுத்துக் கூறுகிறார். தென்னிந்தியாவில் மணிமுத்தாறு திட்டம் போன்றவைகள்கூட மக்கள் பணம் போட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் தென்னிந்தியா கைவிடப்பட்டது.

இவ்வாறு மத்திய அரசாங்கம் தென்னிந்தியாவை மாற்றாந்தாயன்புடன் நடத்தி, வெளிப்படையாகத் துரோகம் செய்து, வஞ்சனையாக நடந்து கொள்ளுகிறது என்பது மிகமிகத் தெளிவாக விளங்குகிறது. வட இந்தியரின் மனப்போக்கையும், மத்திய அரசாங்கம் எப்படி நடந்து கொள்ளும் என்பதையும் முன்கூட்டியே நன்கறிந்துதான் திராவிட இயக்கத்தவராகிய நாம் திராவிட நாட்டைத் தனியே பிரிக்க வேண்டுமென்று கோறுகிறோம். திராவிட நாடு தனியே பிரிந்தால்தான் வடநாட்டு சுரண்டலிலிருந்து, வஞ்சகத்திலிருந்து தென் னாடாகிய திராவிடம் தப்ப முடியும் எனக் கருதுகிறோம். திராவிடம் தனியே பிரிந்தால்தான் திராவிட மக்கள் பசியின்றி வாழ முடியும் என்கிறோம்.

மாலை மணி” (12-6-51)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *