
அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி
அமைச்சரின் ஆலோலம்
“பொதுவாக ராஜ்யத்தில் தற்போது குற்றங்கள் ஓரளவு அதிகரித்துள்ளன”
சொல்வது நாமல்ல. சென்னை முதன் மந்திரியாரே பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில் கூறியிருக்கிறார். கள்ள மார்க்கெட், பதுக்கல், திருட்டுச் சாராயம் காய்ச்சல், தெருவிலே அடிபிடிச் சண்டை, கொலை, களவு, இன்னோரன்ன குற்றங்கள் நாட்டிலே மலிந்து கிடக் கின்றன கவனிக்க நாதியற்று.
சென்னை மந்திரிகள் தங்கள் தவறுகளை எப்போதுமே தாமதமாகத்தான் உணருகிறார்கள். அப்படி தாமதித்து வந்த உண்மையைத்தான் பிரதமர் வெளியிட்டிருக்கிறார்.
போலீஸ் படைக்காக சென்னை செலவிடும் தொகை வெள்ளையர் காலத்தைவிட பல மடங்கு அதிகம். புதிய புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் வேறு திறக்கிறார்கள்.
ஆனால் பிரதமரே வேதனையோடு வெளியிடுகிறார். ராஜ்யத்தில் குற்றங்கள் அதிகமாகிவிட்டன என்று!
ராமராஜ்யம் கிடைத்தவுடனே பஜனை மடங்கள் அதிகமாகுமென எண்ணினோம். அவர்களும் அந்த ‘சத’ காரியத்தில்தான் ஈடுபட்டிருந்தார்கள். நாடாளும் பொறுப்பு கிடைக்கும் வரையில் நிர்வாகம் என்றால் ‘ராம்தூன்’ பாட்டைப்போல சுலபமானது என்றுதான் நினைத்திருந்தார்கள். இப்போது நிர்வாகம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது தெரிந்திருக்கிறதே தவிர, நிர்வாகத்தை நடத்திச் செல்லும் பாதை தெரியாமல் தவிக்கிறார்கள். ஜார், ரஸ்புடீன் பாதைகளிலே பார்வையைச் செலுத்துவதால் இன்பபுரிப் பயணத்தை இழந்து துன்பச் சிந்து இசைத்திடுகிற இளித்த வாய்த்தனத்துக்கு ஆளாகிறார்கள்.
புதிய புதிய பள்ளிக்கூடங்கள் திறக்கிறார்கள் என்று கேள்விப்படவில்லை. புதிய புதிய ஆலைகள் அமைக்கிறார்கள் என்று கேள்விப்படவில்லை. புதிய புதிய தொழில்களை ஏற்பாடு செய்தார்கள் என்று கேள் விப்படவில்லை. புதிய புதிய போலீஸ் ஸ்டேஷனை அமைக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அதோடு குற்றங்களும் பெருகுகின்றன என்று மந்திரியாரே தகவல் தருகிறார்.
போலீஸார் திறமை அற்றவர்களா? பலசாலிகள் அல்லவா? கொலையைக் கண்டால் குலை நடுக்கமெடுத்து கொலைகாரனை விட்டுவிட்டு ஓடக்கூடிய கோழைகளா? திருடனைத் தீண்டுவது பாபம் என்று கூறுகிற குறை மதியாளர்களா? இல்லை; கெட்டிக்காரர்கள். ஆனாலும் குற்றங்கள் குறையவில்லை. அதிகமாகின்றன. காரணம் என்ன?
மந்திரியார் சொல்லுகிறார், ‘பொருளாதார நிலை தான் முக்கிய காரணமென்று. பொருளாதார நிலையில் தாழ்ந்திருப்பவர்கள் மட்டும் குற்றம் செய்யவில்லை. பொருள்மீது பொருள் குவிக்கும் பேராசைக்காரர்களும் குற்றம் செய்கிறார்கள். கள்ளமார்க்கெட், ஏழைகளா நடத்துகிறார்கள்? காரைக்கால், புதுச்சேரி சாமான்களை ஏழைகள் மட்டுமா கொண்டுவருகிறார்கள்? பொருளாதார நிலை ஒன்றுதான் குற்றங்களுக்குக் காரணம் என்பது பிரதமரின் போலிச் சமாதானமே தவிர வேறில்லை. சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடி யாமல் சஞ்சலப்படுகிற வழக்கம் ‘நம்ம சர்க்காரு’க்குப் பழக்கமான விஷயம்.
போலீஸ்காரர்களைப் பயன்படுத்தத் தெரியாத மந்திரியார் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று புலம்புவதால் பயனில்லை. வீட்டுக்கு சமையலுக்காக வைத்த ஆளை, அவனுக்குப் படிக்கத் தெரியும் என்பதற்காகக் குமாஸ்தாவாகவும் ஆக்கிக் கொண்டால் சமையல் வேலை ஒழுங்காகவா நடக்கும்? அதே போலத்தான் போலீசைப் பயன் படுத்திக் குற்றங்களை வளர விடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
எதிர்க் கட்சியை அடக்க-அடக்குமுறை பிரயோகிக்க-தடையை மீறினால் கைது செய்ய-கூட்டங்களுக்குச் சென்று என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க -துப்பாக்கிப் பிரயோகம் செய்ய-தடியடி தர்பார் நடத்த-பாதுகாப்புக் கைதிகளைப் பிடிக்க-இப்படிப் பயன்படுத்தப்படுகிறது போலீஸ். நாட்டைக் காப்பாற்றுவது—நாசத்தைத் தடுப்பது என்கிற லட்சியத்திலிருந்து போலீசார் பிரிக்கப்பட்டு, காங்கிரசையும், காங்கிரஸ் ஆட்சியையும் கரையாமல் கண்காணிக்க, உபயோகப் படுத்தப்படுகிறார்கள். எந்த மந்திரி எங்கே போகிறார்; யார் கருப்புக்கொடி பிடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு குதிரைப் பட்டாளத்தை விடலாமா? ‘குன்றத்தூர்’ நடத்தலாமா?- என்று யோசனை செய்யும் நிலைமையை போலீசுக்கு ஏற்படுத்தி விட்டு குற்றங்கள் மலிந்து விட்டன என்றால் ஏன் மலியாது? குற்றங்களைக் கண்டு பிடிக்க போலீசுக்கு நேரமேது ? ஒரு எம். எல். ஏ. பேசுகிறார் என் றால் பாதுகாப்புக்கு எண்பது போலீஸ் தேவைப்படுகிறதே! எப்படி குற்றங்களைக் கண்டு பிடிக்க முடியும் அவர்களால்! மாதத்துக்கு முப்பது நாள் மந்திரிகள் சுற்றுப் பயணம் நடத்துகிறார்கள். ஊருக்கு ஊர் போலீஸார் மந்திரிக்கு ‘பராக்கு’ கூறும் பணியிலே ஈடுபட வேண்டியிருக்கிறது. குற்றங்களைக் குறைப்பது ஆகிற காரியமா ?
கூட்டம் நடத்த அனுமதி, ஒலிபெருக்கி வைக்க உத்தரவு-இப்படி எல்லாம் எதிர்க்கட்சிகளை மடக்கும் புதுப் புதுச் சுமைகளை போலீஸார் தலையில் சுமத்தி விட்டுப் புலம்புகிறது, சர்க்கார்!
பூனையின் தலையில் யானை அளவு பாரத்தைத் தூக்கி வைத்துவிட்டு, எலித்தொந்திரவு அதிகமாகிறது, என்று சொல்வது கேலிக்குரியது மட்டுமல்ல; கடைந் தெடுத்த முட்டாள் தனம் !
நிர்வாகங்கள், ‘இவர்கள்’ ஆட்சியிலே நிலையில்லா குணங்களாகி விட்டன. அடிக்கடி, அதிகாரக் கற்களை வீசி, அலைக்கழிப்பதே இவர்கள் ஆட்சி முறையாகி விட்டது. ஆனாலும் ஆலோலம் பாடத் தவறுவதில்லை அடிக்கடி.
கொலையும் களவும் சமுதாயத்துக்கு தீங்கூட்டும் காரியங்கள். அவைகள் தடுக்கப்பட ‘ஆலோலம்’ பாடினால் மட்டும் போதாது. அடக்குமுறைப் பாதையும் பயன் தந்துவிடாது. இதை அறிய வேண்டும்— குற்றம் மலிந்து விட்டதெனக் கூறும் மந்திரியார் !
“மாலை மணி” (8-6-’51)



