அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி

“கலை”

கலை என்பது இயல், இசை, நாடகம் மட்டுமல்ல; எல்லா துறைகளிலும் கலையைக் காணலாம்.

கலை என்பது இன்னதென்றே மக்களுக்கு விளங்காதிருந்த காலமும் உண்டு. சுமார் 15 ஆண்டுகளாகத் தான் கலையைப் பற்றி நாட்டில் பேசப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் நமது அறிஞர் அண்ணா அவர்களேயாகும்.

ஒரு நாடோ, மக்களோ, மக்களின் சுக போகங்களோ நன்றாக வளர வேண்டுமானால், வளர்ந்திருக்கிறது என்று கூற வேண்டுமானால், அது கலையினால் என்று தான் என்று நிச்சயமாகக் கூறலாம். அண்ணா அவர்கள் மேடையில் தோன்றி பேச ஆரம்பித்த பிறகு தான் பேச்சின் இனிமையை மக்கள் சுவைக்க முற் பட்டார்கள்.

அதன் பிறகுதான் பேச்சும் ஒரு கலை என்பது எல்லோருக்கும் தெள்ளத் தெளிய தெரியலாயிற்று. அது மட்டுமல்ல; “கலை” என்ற சொல்லுக்கே ஒரு பெருமையும் ஏற்பட்டது. இப்போது மூலை முடுக்குகளிலும், பட்டி தொட்டிகளிலும் கலை விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆக, நாட்டின் நலன் கருதிய நாங்கள், கலைக்கு ஒரு தனிச் சிறப்பைத் தேடிக் கொடுத்த பிறகு, சில்லுண்டிகளும், சில்லரைகளும், சின்னது பெரியதுகளும் எங்களை கலை விரோதிகள் என்று கூறுகிறார்கள். எப்படி நாங்கள் கலைக்கு விரோதிகளாவோம்?

பேச்சிலே ஒரு புதுமையை உண்டாக்கினோம்; நாடகத்திலே ஒரு புரட்சியைக் கண்டோம்; இசையிலே ஒரு இயற்கை இன்பத்தைப் புகுத்தினோம்; இதற்காகவா நாங்கள் கலை விரோதிகள் ? பழமையை ஒழித்து, அறிவிலே ஒரு புதுமை காண்பது தவறா? இல்லையே! அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு என்பதை மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டனரே ! மக்கள் காண்பதும் கேட்பதும் பகுத்தறிவுப் புரட்சியாயிற்றே! கிருஷ்ணலீலா, ஹரிச்சந்திரா, சம்பூர்ண ராமாயணம் போன்ற நாடகங்களுக்குத்தான் அந்த நாட்களில் கூட்டம் வரும். அது ஒழிந்து, அறிவு வளர்ச்சிக்கான பகுத்தறிவு நாடகங்களை அல்லவா மக்கள் இன்று விரும்புகின்றார்கள். அன்று ஹரிச் சந்திரா நாடகம் என்றால், இன்று அதற்குப் பதில் அண்ணா ‘சந்திரமோகன்’ நாடகம் நடத்திக் காண்பிக்கிறார். அன்று மகாபாரதம் மிகமிக நன்றாக இருக்கிறது என்றால், இன்று ராமசாமியின் நாடகம் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு இழுத்துச் செல்கிறது. அந்தப் புரட்சியைக் கண்ட நாங்களா கலைவிரோதிகள்? “ராமாயணம் இழிவைக் கற்பிக்கிறது. வேண்டாம் என்கிறோம். சிலப்பதிகாரமும் ராமாயணத்தைப் போல் பழைமையானதுதான்.

அதை ஏன் நாங்கள் வெறுக்கவில்லை ? அதுமட்டுமல்ல; சங்க கால நூல் சிலவற்றையும் நாங்கள் வெறுப்பதற்குக் காரணம் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று கூறுகிறேன். சங்க நூலில் உள்ளது; நான் கற்பனை செய்ததல்ல. வேடன் வேட்டைக்குச் செல்கிறான். அங்கு ஒரு சிறுத்தையைக் கண்டான். உடனே வில்லில் நாணேற்றி அம்பை எய்கிறான். அம்பு சிறுத்தையின் மார்பில் பாய்ந்து, மறு பக்கமாக வந்து, அடுத்துள்ள வாழை மரத்தில் பாய்ந்து சாயாமல் நின்று விடுகிறதாம். இது சங்க காலத்துக் கவி. இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது பாருங்கள் ! அம்பு வில்லிலிருந்து, புறப்பட்ட வேகம் சிறுத்தையின் விலாவுக்குள் பாயும் சக்தியைப் பெற்றிருந்தது. விலாவின் மறு பக்கமாக வெளிவரும் போது, அதற்குள்ள இயற்கையான வேகம் குறைகிறது. அடுத்துள்ள வாழை மரத்தில் கொத்தி நிற்க முடிகிறதே தவிர, அதையும் துளைக்க முடிய வில்லை. இந்தச் செய்தி இயற்கையானது— உண்மையுங் கூட, பகுத்தறிவுக்கு எட்டிய வரையில். ஆனால்,ராமாயணம் – கம்பன் பாடியது- கவியின் திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டு என்று சொல்லுகிறார்கள். அந்த ராமாயணத்திலே, உண்மைக்கு மாறான பல விஷயங்கள் மட்டுமல்ல; ‘நடக்குமா ? நடக்க முடியுமா? நடந் திருக்க முடியுமா?’ என்று சந்தேகப்படக் கூடியவை அநேகம். ஒன்று மட்டும் காட்டுகிறேன். இலங்காபுரி மன்னன் இராவணனைக் கொல்ல, இராமருடைய அம்புராத் துளியிலிருந்து ராமபாணம் புறப்படுகிறது. அது இராவணனைக் கொன்றதோடல்லாமல், அவனு டைய பத்து தலைகளையும் வெட்டி வீழ்த்துகிறது.

அத்துடனின்றி, சீதையைப் பற்றின நினைவு அவன் மனதிலே இருக்குமென்று, அவன் உடலுக்குள் பாய்ந்து இரத்தத்தையும் சுவைத்து, நரம்புகளின் உள்ளும் புகுந்தோடி, இராவணன் உடலை சல்லடைக் கண்களாகச் செய்து, தன் மீதுள்ள இரத்தத்தைக் கழுவ, ஏழு கடல்களிலும் சென்று குளித்து, மறுபடியும் இராமனின் அம்புராத்துளியில் வந்து படுத்துக் கொண்டதாம். இது எத்தனை பச்சைப் பொய் பாருங்கள். அறிவுக்குப் பொருத்தமாக, ஆராய்ச்சிக்குட்பட்டதாக இருக்கிறதா? இந்தக் கவி கம்பன் பாடியது! யார்தான் பாடினால் என்ன? தவறைத் தவறென்று கூறுகிறோம். இப்படி கூறியதற்காக நாங்கள் கலை விரோதிகளா? நாங்கள் என்றும் கலையை வளர்க்க அல்லவா பாடுபடச் செய்வோம்.

எங்களைப் பழமைக்கு விரோதி என்று கூறுகிறார்கள். நாங்கள் பழமையிலும் நல்லது இருந்தால் எடுத்துக் கொண்டு அறிவுக்கு ஒவ்வாததைத் தள்ளி விடுகிறோம். குரங்கு பேசுமென்கிறார்கள்; நாங்கள் பேசாது என்கிறோம். இன்னும் எத்தனையோ கற்பனைக்கும் கட்டுப்படாத ஆபாசங்கள் பல இருக்கின்றனவே இராமாயணத்தில்! சில்லுண்டுகளுக்கு சவால் விடுகிறேன், தைரியமிருந்தால் கொண்டு வரட்டும் இராமாயணத்தை மேடைக்கு. பொது மக்கள் தீர்ப்புக்கு விடட்டும். இல்லையேல் அண்ணா எழுதிய கம்பரசத்தை 4 டோஸ் சாப்பிட்டுவிட்டு சும்மா கிடக்கட்டும் மூலையில்.

இந்தக் காலத்து இராமன் சீதையைக் காணாவிட்டால் கிஷ்கிந்தைக்கு ஓடமாட்டான். ஜனகருக்கு டிரங்க் போடுவான், ‘சீதை வந்தாளா?” என்று. அல்லது அயோத்திக்கு தந்தி அடிப்பான், ‘பரதா, அண்ணி வந்தாளா?’ என்று. இல்லை என்று தெரிந்தால், ‘சுதேச மித்திர’னில் சீதையின் புகைப்படம் போட்டு, விளம்பரம் செய்வான். கண்டுபிடித்தாலும் இராவணனும் இராமனும் கோர்ட்டுக்குச் சென்று வாதாடுவார்கள் கூண்டில் நின்று கொண்டு. இது நடக்கக் கூடியது! இந்தக் காலத்தில் சகோதர வாஞ்சையே கிடையாது என்கிறார்களே, இராமாயணத்தில் மட்டுமென்ன வாழு கிறது? வாலி, சுக்ரீவன் கதை தெரியாதா எங்களுக்கு ? இராவணனை விபீஷணன் துரோகம் செய்யவில்லையா ? இதைக் கவியாகப் பாடிவிட்டார் கம்பர்; விளக்கம் தருகிறார் டி. கே. சி !

சிதம்பரம் பிள்ளையவர்களை ஒருவன் கேட்டானாம், “அய்யா! நீங்கள் சுதேசியை ஆதரிக்கிறீர்கள். ரொம்ப சரி! பரதேசச் சாமான்களை வாங்காதே என்றும் சொல்லி பிறர் மனதை நோக வைக்கலாமா ?” என்று. உடனே சிதம்பரம் பிள்ளை அவனைப் பார்த்து, எப்போதும் உண்மையே பேசுகிறாய். அது நியாயம். ஆனால், அதற்காகப் பொய்யைக் கண்டு வெறுக்காதே என்பது போலிருக்கிறது உன் கேள்வி ” என்று பளிச் சென்று பதில் சொன்னாராம். அதைப் போல இருக்கிறது இந்த சில்லரைகள் நம்மைப் பார்த்து கலைக்கு விரோதி என்று கூறுவது.

ஒரு மேதாவி கூறுகிறார், எங்களால்தான் இந்த நாட்டில் மழை பெய்ய வில்லை என்று. பஞ்சத்திற்குக் கூட நாங்கள் தான் காரணமாம். நாங்கள் ஒழிந்துவிட வேண்டுமாம். அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.

இந்தக் காலத்தில் எங்களால்தான் மழையின்மையும், பஞ்சமும் வந்ததாக இருக்கட்டுமே; ஆனால், அந்தக் காலத்தில் நல்லதங்காள் தன் நாட்டில், ஒன்றிரண்டல்ல- 12 வருஷங்கள் மழையில்லாத பஞ்சத்தால் மூளி வீட்டுக்கு வந்ததாக எழுதி வைத்திருக்கிறாயே, அது யாரால் வந்த பஞ்சம் என்று சொல்லட்டுமே பார்க்கலாம். சொல்ல முடியுமா இந்த சில்லுண்டிகளால்! முடியாதே! இன்னும் எத்தனையோ காரணங்கள் காட்டலாம், இதைப் போலவும், இன்னும் மதங்களின் பெயரால் மக்களை மாக்களாக்கி வைத்திருப்பதற்கும். அறிவு வளர்ந்துள்ள இந்த விஞ்ஞான காலத்திலும், கல்லையும் மண்ணையும் காட்டித்தானே மக்களை ஏமாற்றுகிறார்கள்- வயிற்றை வளர்க்கிறார்கள். அம்மாதிரி இழிச் செயல்களா எங்களுடையவை ?

எங்களுடைய லட்சியம் நாடு விடுதலையடைந்து யாவரும் சுகமாக வாழ்வு நடத்த வேண்டும் என்பது தான். இதற்காகப் பேசுகிறோம்; நாடகம் நடத்துகிறோம்; இசைக் கலை மூலம் அறிவுப் பிரச்சாரம் செய்கிறோம். நாங்கள் இல்லாமல் எந்தத் துறையிலும் புதுமையைக் காண முடியாதே ! நாடகமா?-கே.ஆர். இராமசாமி, இராதா ! பாட்டா?- அனிபா! பேச்சா?- அண்ணாதுரை! இப்படியல்லவா இருந்து வருகிறது இன்றைய நாட்டின் நிலை ! இதைக் கண்டா வது புத்தி வரவேண்டாமா, உண்மைக் கலைக்குப் பாடு படுவதாகச் சொல்லும் உளறுவாயர்களுக்கு! ஆகவே, இனியாவது எங்களை ” கலை விரோதிகள் என்று திட்டுவதில் பலனேதும் கிடையாது.

அந்த நேரத்தை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நல்லது செய்யப் பாடுபடு என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

மாலை மணி” (30-7-51)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *