அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி

ஐக்யமாகாணம் – அருமையான பாடம்

“திராவிடநாடு திராவிடருக்கே!” இந்த முழக்கம் காதிலே விழுந்ததோ இல்லையோ – துடித்தெழுந்து “யாரடா பாவி ! பிரிவினைப் பேயனே ! இது ஒரே நாடு-ஒரே மக்கள்!” என்று உரத்தக்குரலில் பேசிடுவார்கள் பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் புரிகிறவர்கள். திராவிடம் தனித்து வாழ்வ தற்கான சூழ்நிலைகளையும் நாம் பலமுறை சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். சென்னை மாகாணம் சீரழிக்கப்படுகிறது-வடக்கு மாகாணங்கள் வளம் பெறுகின்றன என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.மற்ற மாகாண ங்களின் எடுபிடியால் ஏங்கித் தவிக்கிறது சென்னை என்பதை எத்தனையோ நிகழ்ச்சிகள் காட்டியிருக்கின்றன. அவைகளை உணர்ந்தும்கூட உண்மையை மறைக்கும் உத்தமர்கள் உதைத்த காலுக்கு முத்தமிடும் வீரர்களாகவே காட்சி தருகிறார்கள். நாம் தரும் செய்திகள் அவர்களால் அலட்சியப் படுத்தப் பட்டாலும்கூட அவர்களுடைய ஏமாற்று மொழிகளுக்கு இறையானவர்களின் கண்களையாவது கட்டாயம் திறக்குமென்று நம்புகிறோம்.

தென்னாட்டுக்குத் தேவையான உளுந்து போன்ற உணவு தானியங்கள் கிழக்கு பஞ்சாப், ஐக்கிய மாகாணம், ராஜஸ்தான் முதலிய இடங்களிலிருந்துதான் கிடைக்கின்றன. அதில் குறிப்பிடக் கூடியது ஐக்கிய மாகாணம்தான். அது, மேற்சொன்ன பொருள்களை வெளி மாகாணங்களுக்குச் செல்வதை தடைசெய்திருக்கிறது. கட்டுப்பாடு, விலை நிர்ணயம் ஆகிய புது உத்தரவுகளின் மூலம் !

ஐக்கிய மாகாணம் இந்திய யூனியனைச் சேர்ந்தது தான்; நேரு பிறந்த மாகாணம் கூட. ஆனால், அது பிற மாகாணங்களைக் கேவலப்படுத்தும் நிலையில்-குறிப்பாகச் சென்னையை மட்டமாக மதித்து இம்மாதிரி ஒரு உத்தரவை வீசியிருக்கிறது. முன்பொரு தடவை இதே மாகாணம் சென்னைக்கு செய்த பெரும் பிழையை யாரும் மறந்திருக்க முடியாது. அரிசி கேட்டது ஐக்கிய மாகாணத்தை சென்னை சர்க்கார். அந்த மாகாணம் சென்னைக்கு அரிசி அனுப்பியது. எப்படி? நியாயமாகத் தர வேண்டிய விலைக்கு அதிகமாக ஒரு கோடி ரூபாய் சென்னையிடமிருந்து வாங்கிக்கொண்டது. அதிக விலை ஒரு கோடி ரூபாயை அளிப்பதற்கு முடியாமல் அவதிப் பட்ட சென்னை அரசாங்கம் ரேஷன் கடைகளில் விற்கப் படும் அரிசிக்கு படி ஒன்றுக்கு ஒரு பைசா உயர்த்தி மக் களிடமிருந்து கிடைத்த ஒரு கோடி ரூபாயை ஐக்கிய மாகாணத்தின் திருவடிகளிலே வைத்து தெண்டனிட் டது. சென்னையிடம் ஒரு கோடி கொள்ளையடித்த கொடுமைபற்றி ஐக்கிய மாகாணத்தை டில்லி சர்க்கார் எ துவும் கேட்கவில்லை. இதேபோல சர்க்கரையிலும் ஒரு சங்கடத்தை உண்டுபண்ணி சென்னையைத் தவிக்க விட்டது அந்த மாகாணம்தான்.

‘மாகாணங்கள் சகோதர பாசம் கொண்டவை! மாகாண உணர்ச்சிகள் கூடாது. ஒரே நாடு-ஒரே மக்கள்’ என்று கூறுகிறவர்கள் ஐக்கிய மாகாணத்தின் இந்த அகம்பாவ உணர்ச்சிக்கு என்ன அர்த்தம் சொல்லப் போகிறார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.நேருவின் மாகாணம்-நேர்மையாளர் பிறந்த மாகாணம்- இப்படி நெறிதவறி வெறிபிடித்து அலைகிறது. ஆனால் நேருவும், அவர் நிழல்களும் ‘ஒரே நாடு-ஒரே மக்கள் ’ என்ற உபதேசத்தை மறக்கவில்லை.

ஐக்கிய மாகாணத்திற்கிருக்கிற மாகாணப் பற்றை நாம் மறுக்கவில்லை. ஆனால் சென்னைக்கு அந்த மாகாண உணர்ச்சி கூடாது, அது மகாபாவம் என்கிறார்களே, அந்த மட்டரகக் கருத்தைத்தான் மண்டையிலடிக்க வேண்டு மென்கிறோம்.

ஒருகோடி கொள்ளை போயிற்று; டில்லி கேட்கவில்லை. தானியங்களுக்குத் தடைபோட்டது; டில்லி பேசா மடந்தையாக இருக்கிறது. இன்னும் ‘ஒரே நாடு’ என்ற “கூச்சல்

மட்டும் மறையவில்லை. வடநாட்டுத் தலைவர்களிலிருந்து அவர்களுக்கு வால்பிடிக்கும் தென் னாட்டுத் தவளைகள், குட்டிச் சுவற்றுக் குயில்கள், சந்து முனை சிந்து நடைக்காரர்கள் வரையிலே திராவிடநாட்டுப் பிரிவினையை எதிர்க்கிறார்கள். திராவிட இயக்கத்தின் மீது எதிர்ப் பாய்ச்சல் நடத்துகிறார்கள். ஐக்கிய மாகாணம் தரும் பாடத்தை அவர்கள் உணர மறுக்கலாம். ஆனால் திராவிட மக்கள் அந்தப் பாடம் தரும் பாதையிலே பயணம் நடத்தவேண்டும். திராவிடப் பிரிவினை எவ்வளவு தேவையானது என்பதை இடித்துச் சொல்வதுதான் ஐக்கிய மாகாணத்து இந்தப் புது உத்தரவு.

மாலை மணி” (6-6-’51)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *