அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி

அகிம்சா மூர்த்திகள்!

பசியை வளர்த்தனர்!
பதைபதைக்க உயிர் வாங்கினர் !

தூக்கு மரம் நாட்டினர் !
தொல்லைகள் படைத்தனர் !

பிணமலை குவித்தனர் !
பிள்ளைக்கடை வைத்தனர் !

எல்லாம் காமராசர் தலைமையில் தான் !
காங்கிரஸ் தர்பாரில்தான் !

சர்க்கார் சாதித்ததைவிட நம்மை சோதித்தது மிக மிக அதிகம் ! வெள்ளையரை குறை கூறிய காங்கிரஸ் காரர்கள் தான் தங்கள் ஆட்சி காலத்தில் அவனையும் மிஞ்சி விட்டார்களே ! எதிர்க் கட்சி என்று. ஒன்று இருக்கவே கூடாது என்ற நோக்கத்துடன் நம்மீது ஏவிய அடக்குமுறைகள் கொஞ்சமா, நஞ்சமா? நான்காண்டு முடிய இந்த அகிம்சா சர்க்கார் 1982 தடவை துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறதே ! இது வெள்ளையன் காலத்தில் கூட நடக்காத அக்ரமம் ! வெள்ளையன் ஆட்சியிலே மட்டுமல்ல; வேறெந்த நாட்டிலும் நடந்ததாகத் தெரியவில்லையே! இத்துடனாவது நின்று விட்டார்களா இந்த காந்தி பக்தர்கள் ! இல்லை ! துப்பாக்கிப் பிரயோகத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றா, இரண்டா ? இல்லை தோழர்களே! 3784 பேர்கள் பதை பதைக்க உயிரிழந்தனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஐம்பதினாயிரம் மக்கள் சிறையில் வைக்கப்பட்டனர். சிறைப்பட்டவர்களைப்பற்றி விசாரணையாவது உண்டா? இல்லை ! சிறையிலும் ளசிப்பாய்கள் சும்மா விட்டார்களா? தடியடி தர்பார் நடத்தினார்கள்! தனி கொட்டடியில் இட்டு இம்சித்தார்கள் !

போதாக் குறைக்கு சுட்டும் பார்த்தார்கள். பரிதாபத்திற்குரிய நம்மவர்கள் அங்கேயும் எண்பத்திரண்டு பேர் உயிரிழந் தார்கள்! பாருங்கள் தோழர்களே, நமது ஆட்சி என்று சொல்லிக் கொள்ளுகிறோமே, அதன் லட்சணத்தை ! மஞ்சள் பெட்டிக்கு நாம் அளித்த ஓட்டு, நம்மை அடிக்கவும் சுட்டுத் தள்ளவும் தான் உதவியது. மக்கள் பசியைத் தீர்க்கவில்லை ! இந்தக் கொடுமைகள் வேறெந்த நாட்டிலாவது நடக்குமா ? நடக்கத்தான் விட்டு வைப்பார்களா அந்நாட்டு மக்கள் !

எனக்கு முன் பேசிய நண்பர் ஒருவர் குறிப்பிட்டார், திருவாங்கூர் காங்கிரஸ் ஆட்சியில் மகனைக் கொண்டு மாதாவைப் புணர வைத்தார்களென்று! ஆம்,நானும் படித்தும் கேட்டும் இருக்கிறேன் அந்த அக்கிரம அநியாயச் செய்தியை ! அதிலும் நமது காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததாக அவர் கூறியதைக் கேட்ட உங்கள் மனம் என்ன பாடு பட்டது ! இன்னும் விவரமாகச் சொல்லுகிறேன், கேளுங்கள். கேட்டு இந்த அகிம்சா மூர்த்திகளின் காலத்தில் எந்தெந்த விதமான இம்சைகள் நடந்திருக்கின்றன என்று எண்ணிப் பாருங்கள். பிறகு கூறுங்கள் உங்கள் தீர்ப்பை, யாருக்கு ஓட்டுப் போடுவது என்று!

பொதுவுடமைவாதி என்ற சந்தேகத்தின் மீது பிடிக்கப்பட்ட ஒருவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்களாம்! அழைத்து வந்தவனை அவன் சுருண்டு சுருண்டு விழும் வரையில் அடித்தார்களாம். அடி தாளாமல் விழுந்த அவன், “தண்ணீர், தண்ணீர் என்று கத்தினானாம்! அதைக் கேட்ட அவர்கள் தண்ணீர் வேண்டுமா ? இதோ தருகிறேன் !” என்று கூறி, மறைவாகப் போய் சிறுநீரைக் கொண்டு வந்து அவன் வாயில் ஊற்றினார்களாம். தண்ணீர் கேட்ட உங்கள் தோழன் சிறுநீராக இருப்பதைக் கண்டு,“அடப் பாவிகளே ! நான் தண்ணீர் கேட்டால் மூத்திரத்தைக் கொடுக்கிறீர்களே !” என்று பரிதாபக் குரலில் அலறினான். அவ்வார்த்தையைக் கேட்ட அப்புலிகள், மறுபடியும் அவனை அடித்து, அதையே குடிக்கும்படிச் செய்தார்களாம்! இச் செய்கையால் களைப்புற்ற அவன் “அம்மா, அம்மா” என்று கூச்சலிட்டான். கூச்சலைக் கேட்டதும் அவர்கள் அவனைப் பார்த்து, அம்மாவா வேண்டும்? இதோ அழைத்து வருகிறோம்” என்று ஓடோடியும் சென்று, வீட்டில் படுத்திருந்த அவன் தாயை நடுநிசியில் எழுப்பி, அழைத்து வந்து, மகன் எதிரில் நிறுத்தினார்களாம். எப்படி? பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பாலகன் முன் நிர்வாணமாக! பாலூட்டி சீராட்டி வளர்த்த மகனைப் பார்க்கிறாள் தாய் நிர்வாணமாக! ஆசை மொழிகளைக் கூறி ஆலோலோ பாடிய அம்மா மட்டுமா நிர்வாணமாக நிற்கிறாள்? இல்லை தோழர்களே ! சொல்ல வெட்கமாக இருக்கிறது. அவனையும் அம்மணமாக்கி அம்மா எதிரிலே நிற்க வைத்தார்கள் பாவிகள். அதோடு விட்டார்களா? தாயும் சேயும் நிர்பந்த புணர்ச்சியில் ஈடுபட இம்சித் தார்களாம். என்ன கொடுமை! யாரால் இந்த அக்கிரமங்கள் ?’ அயல் நாட்டினர்கள் ஆட்சியிலா? இல்லை. காந்தியின் சீடர்கள்- அகிம்சா வாதிகளின் ஆட்சி காலத்திலே! மாதர்க்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று கூறும் மகாத்மா காந்தியின் பக்தர்கள் ஆளும் காலத்தில் தான் தோழர்களே !

ஜஸ்டிஸ் கட்சி ஆண்ட காலத்தில் உப்பு சத்தியா கிரகத்தின் போது அபராதம் விதிக்கப்பட்டதாம் ஒரு பெண்ணுக்கு. அபராதம் கட்ட கையில் காசில்லை என்று அந்த மாது கூறினாள். அவளுக்குத் தண்டனை விதித்த மாஜிஸ்டிரேட், தாலியிலுள்ள பொன்னை விற்று அபராதம் செலுத்தும்படிக் கூறினாராம். இதைக் கேட்ட தேச பக்தர்களுக்கு உடனே கோபம் வந்து விட்டது. அந்தக் காலத்தில் சட்ட மந்திரியாக இருந்த ஆற்காட்டு ராமசாமி “ தாலியை அறுத்தார்! பெண்ணின் கற்புக்குப் பங்கம் வந்து விட்டது.” என்று ஊர் முழுதும் கூச்சலிட்டார். தேசீய ஏடுகள் அதைக் கொட்டை கொட்டையாகப் போட்டு தங்களுடைய தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டன.

ஆதாரமற்ற பேச்சுக்கு அர்ததமற்ற கூச்சல் போட்ட இந்த அகிம்சாவாதிகள் இந்த அக்ரமத்துக்கு வாய் திறந்து ஏதாவது கூறியிருப்பார்களா ? அவர் களது தேசீய ஏடுகள் ஒப்புக்காவது இதைக் கண்டித் திருக்க வேண்டாமா, தோழர்களே ! பாருங்கள், நம் பரமாத்மாக்கள் பாராளும் லட்சணத்தை! இப்படிப் பட்டவர்கள் தான் மாட்டுப் பெட்டியைக் காட்டி ஓட்டு கேட்கிறார்கள் !

நெசவாளர் துயர் நீங்க வில்லை. வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது. எங்கும் பட்டினிப் பட்டாளம் பவனி வரத் தலைப்பட்டு விட்டன.

பசிக் கொடுமை தாளாது மக்கள் மாண்டு மடிவது மட்டு மல்ல; தற்கொலையும் செய்து கொள்ளும் நிலைக்கு நாடு வந்து விட்ட.து, இந்த நல்லவர்களின் ஆட்சி காலத்தில்.

சமீபத்தில் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. அதை நீங்கள் பார்த்தீர்களோ, இல்லையோ ! ஒரு நெசவாளி நூல் கிடைக்காத கஷ்டத்தால் பல நாள் பட்டினி இருந்தான். அவன் மனைவி தனது இரண்டு குழந்தைகள் பசியால் வாடி வதங்குவது காண சகியாமல் கணவன் வெளிச் சென்றிருந்தபோது, தூக்கிலே தொங்க ஆரம்பித்து விட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்த கணவன் இக் கோரக் காட்சியைக் கண்டு மனம் வெதும்பி, மக்கள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் தூக்குக் கயிற்றில் தொங்க ஆரம்பித்தான். தூக்கில் தொங்கும் பாட்டாளியின் சரீரம் படபடவென அடித்துக் கொண்ட சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தார் ஓடி வந்து அவனைக் காப்பாற்றினர். என்ன நடந்தது பிறகு தெரியுமா தோழர்களே ! மனைவி, மக்களைக்கொன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தான் என்று தண்டிக்கப்பட்டான். ஐகோர்ட்டுக்கு மனு செய்து கொண்டான், “பசியால் வாடிய நான் இந்த பாருலகைப் பிரிய விருப்பப்பட்டேன். பிடித்தார்கள்; தண்டித்தார்கள் !” என்று !

வழக்கைப் பரிசீலனை செய்த நீதிபதிகள் அவனை விடுதலை செய்தார்கள், அவன் குற்றவாளி அல்லவென்று. அவன் அந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்தது அரசாங்கத்தின் கவனக் குறைவேயாகும் என்று கூறிவிட்டார்கள். இப்படி நீங்களோ, நானோ, ஆல்பர்ட் ஜேசுதாசனோ கூற வில்லை, தோழர்களே! இந்த ஆட்சியில் அமர்ந்திருக் கும் நீதிபதிகள் கூறுகிறார்கள், அவனது மனைவி மக்கள் மடியக் காரணம் ஆளத்தெரியாதவர்களால் ‘வந்த வம்பு என்று !

மற்றொரு அதிசயத்தைப் பாருங்கள். பசியால் வாடி ஒருவன் வேறு வழியின்றி ஓடினான், சுடுகாட்டை நோக்கி. தவம் புரிவதற்கல்ல. வெந்து கொண்டிருந்த பிணத்தை ருசி பார்க்க! பிணத்தின் மீதிருந்த நெருப்பைத் தள்ளினான். துடைக்கறி வெந்து இளகி இருந்தது, சூடாக. பிய்த்தான், தின்றான், பசி தீர, பசியின் கோரம் தணிய. ஆனந்தம் அவனையும் அறியாமல் வந்து விட்டது. ஆடினான்; ஆனந்தத் தாண்டவம் அல்ல–அப்போதைய பசி தீர்ந்துவிட்டதே என்று. ஊரார் பார்த்தனர்; போலீஸாருக்குத் தெரிவித்தனர். போலீசார் ஓடோடியும் வந்தனர்; “உனக்கு என்ன பிடித்துக் கொண்டனர். பைத்தியமா?” என்று கேட்டனர்.

“இல்லை! நான் பைத்தியக்காரன் இல்லை. பசியால் பாதிக்கப்பட்ட பரம ஏழை ! பசி தீர பிணக்கறியைத் தின்றேன்” என்றான். “இல்லை! நீ பைத்தியக்காரன்தான் என்று கூறினர் போலீசார். அவன் இல்லவே இல்லை யெனக்கூறினான். ஒப்புக்கொள்ளுவார்களா அரசாங்கத்தினர்? ஒப்புக்கொண்டால் மறு நாளே பத்திரிகையில் வெளிவரும் செய்தியைக் கண்டு வெளி நாட்டார் எள்ளி நகையாடுவார்களே என்று கூறி, அவன் பைத்தியக் காரன்தான் என்று பதிவு செய்து கொண்டு அவனைப் பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்கள்.

என்னைக் கேட்டால் அவன் உண்மையில் பைத்தியக்காரன் தான் என்று கூறுவேன். பசித்தால் வேகும் பிணத்தை பிடுங்கித் தின்னுவதைவிடத் தெருவில் திரியும் மந்திரிகளையல்லவா பிடுங்கித் தின்றிருக்க வேண் டும்?

பசிக்கொடுமையால் மக்கள் புளியங் கொட்டையை சாப்பிட விடுகிறது நமது அரசாங்கம். ஏன், நமது ஆச்சாரியார் புல்லைத் தின்னுங்கள் என்று கூட வாய் கூசாமல் சொல்லியிருக்கிறாரே! இதையும் கேட்டுக் கொண்டு தானே நாம் சும்மாயிருக்கிறோம். அகிம்சையில் நமக்கு நம்பிக்கை இருந்தால் திண்டிவனத்திற்கருகே கத்தாழை தின்று ஆறு பேர் மாண்டதாகப் பத்திரிகையில் படித்தோமே, அதைப் பார்த்து நம் மந்திரிகள் மனம் பதைபதைத்ததா? இல்லையே ! அவர்கள் தான் உணவுக்கு உலகத்தையும், அளவுக்கு டில்லியையும் நோக்கி ஆரூடம் பார்க்கிறார்கள் அறிவு கெட்டத் தன்மையில் !

நமது உணவு மந்திரியார் ஒருமுறை டில்லிக்குச் சென்று தென்னாட்டார் உணவுப் பற்றாக்குறையால் கஷ்டப்படுவதாகக் கூறினார். உடனே மூன்ஷி அதற்கு “நான் காரணம் கண்டு பிடித்திருக்கிறேன். பிறகு உடனே நமது எல்லாம் தீர்ந்து விடும் ” என்றார். மந்திரி ரோச் விக்டோரியாவுக்கு ஆனந்தம் பொங்கி விட்டது. காரணம் கேட்டார். உணவுமந்திரி கூறுகிறார்: உணவு உற்பத்தி குறைந்து விட்டது தான் காரணம். உற்பத்தி குறைவதற்குக் காரணம் விவசாயம் குறைந்து விட்டது. விவசாயம் குறைந்த தற்குக் காரணம் நெல் விளைச்சல் அதிகமில்லை. நெல் அதிகம் இல்லாததால் அரிசி குறைந்து விட்டது. அரிசி குறைந்ததற்குக் காரணம் மழையில்லை. மழையில்லாத தற்குக் காரணம் ஆகாயத்தில் மேகமில்லை. மேகமில்லாததற்குக் காரணம் மரங்கள் அதிகமில்லை. எல்லாம் அதனால் மரம் நடுவிழா ஆரம்பமாகட்டும். சரியாகிவிடும். ஆகவே, நீங்கள் உங்கள் மாகாணத்தில் மரம் நடும் வேலையைத் துவக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் வந்து விழாவை நடத்தி வைக்கிறேன் !” என்றார். எஜமானர் உத்திரவுப்படி இந்த மானங்கெட்ட மந்திரிகள் ஊர் ஊராக மரம் நட ஆரம்பித்தார்கள். ஒன்றாவது பிழைத்ததா ? இல்லையே ! இதற்காக வரிப் பணம் எத்தனை லட்சம் வீணாகியது !

மரம் இல்லாத இடத்தில் மரம் நடுவது கூட நியாயம் என்று ஒப்புக் கொள்வோம். அந்தக் காரியத்துக்காக இருக்கும் மரங்களைக் கூடவா வெட்டி விடுவது? கேளுங்கள், ஓர் அதிசயத்தை ! வடநாட்டில் ஒரு திறந்த வெளியில் மரம் நடும் விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த திறந்த வெளிக்கு சுற்றுப்புறமும் அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்தன. மைதானத்தில் நடக்கும் விழாவைக் காண அவைகள் மறைத்துக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி, ஒரு சிறு கொடியை நட்டார்களாம். எத்தகைய மேதாவித் தன்மை! என்ன இவர்கள் மூளை! இருப்பதை ஒழித்து விட்டு மரம் நடும் மடத்தனம் நிறைந்த மகான் கள்தான் மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து ஓட்டுக் கேட்கிறார்கள். இந்த மாடுகளைச் சட்ட சபைக்கு அனுப்பினால் அது சட்ட சபையாகவா இருக்கும். மாட்டுப் பட்டியாக அல்லவா இருக்கும் !

தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசனைப் பற்றி பலர் பேசினார்கள். அவர் செய்த சேவையின் பட்டியலும் உங்களுக்குப் படித்துக் காட்டப்பட்டது. நான் அவரது சேவையைக் கூறி உங்கள் ஓட்டுக்களைப் போடும்படிக் கேட்கப் போவதில்லை. அவர் வெற்றி பெறுவது காங்கிரசைத் தோற்கடிப்பதில் இருக்கிறது. காங்கிரஸ் மந்திரிகளைப் பற்றி நாம் கூறுவதைக் கண்டு யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். அவர்களைத் தினமும் துதி பாடும் தேசீய ஏடு கூறுகிறது சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம். எல். ஏ.க்கள் என்று! இப்படிப்பட்டவர்கள் சட்ட சபையிலிருந்து பொது மக்களுக்காக என்ன பணியாற்ற முடியும் ! ஆகவே தான் அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நமது ஆல்பர்ட் ஜேசுதாசன் அவர்கள் இருப்பதே நல்ல தென்று நமது கழகம் நினைத்தது.

நமது கழகம் சர்வாதிகாரப் போக்குடையது அல்ல. நூற்று நாற்பது பேர்களைக் கொண்ட ஒரு பொதுக் குழுவிற்கு கட்டுப்பட்டு நடப்பது! அதன் முடிவுப்படி கழகத்தவர் நடப்பதுதான் கடமை!

நாம் தேர்தலில் நிற்பதில்லை என்று சேலத்தில் முடிவு கட்டினோம்! அதன்படியே நடந்து வருகிறோம். நம்மைக் கேட்கிறார்கள் பொதுமக்கள், ‘நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கவில்லை’ என்று. நான் அவர்களுக்குக் கூற ஆசைப்படுகிறேன், நமக்கு நிற்பதற்கு தகுதியோ திறமையோ இல்லை என்ற காரணத்தாலல்ல அம்முடிவு. இன்றைய சூழ்நிலையில் நாம் சட்டசபைக்குச் செல்வது நல்லதல்ல என்று பட்டதால்தான். நாம் சட்ட சபைக்குப் போகாததால் நமக்கு அரசியல் ஞானம் இல்லை என்று கூறிவிட முடியாது. அண்ணா கூறுவது போல் இந்த ஆட்சி பீடம் நமக்கு இடங்கொடுத்தால், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆச்சரியப்படும்படி ஆட்சியை நடத்திக் காண்பிப்போம். அப்படிப்பட்ட அறிவாளிகளும், அரசியல் ஞானம் படைத்த வாலிபர் களும் நம்மிடையே இருந்து வருகிறார்கள்.

இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடாத போது நாம் யாரை ஆதரிப்பது, யாருக்கு நமது ஓட்டுக்களைப் போடுவது என்ற சந்தேகம் நம்மைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டபடி இருந்தன.

இந்தத் தொகுதியில் தோழர் ஜீவானந்தம் தேர்தலுக்கு நிற்பது உங்களுக்குத் தெரியும். அவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். நமது பழைய நண்பர். சுயமரியாதைக்காரர். அவர் அண்ணாவைப் பல முறை சந்தித்து தேர்தலில் கலந்து கொள்ளும்படிக் கேட்டார். அண்ணா சந்தோஷப்பட்டார் அவரது ஆர்வத்தைக் கண்டு. தேர்தலில் தம் கட்சி கம்யூனிஸ்டுகளுக்கு நண்பராக இருந்து- தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்யும்- அதுவே எனது ஆசையும் என்று கூறினார். ஆனால், ஐக்கிய முன்னணியில் சேர்ந்து காங்கிரசைத் தோற்கடிக்க அழைத்தார் ஜீவா. ஐக்கிய முன்னணி என்பது யார் யாரைக் கொண்டது என்ற கேள்வியை எழுப்பினார் அண்ணா! “நீங்களும் நானும் பெரியாரும் சேர்ந்துள்ள கட்சிகள் தான் என்றாராம் ஜீவா. “மிகவும் சந்தோஷம். ஆனால் நீங்கள் முதலில் பெரியாரின் சம்மதம் பெற்று வாருங்கள் ” என்றார் அண்ணா. பிறகு வந்த ஜீவா, “ஐயா உங்களை ஒரு கட்சியாக ஒப்புக் கொள்ள முடியாதென்று கூறுகிறார். ஆகவே, நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

தோழர் ஜீவானந்தம் மிகவும் நல்லவர் மட்டுமல்ல; அரசியல் ஞானம் படைத்த அறிவுடமையை பேச்சாளியுமாகும். அவருக்குத் தெரியும் ஐக்கிய முன்னணி என்பது சரிசமத்துவம் கொண்ட கட்சிகள் ஒன்றோ டொன்று உயர்வு தாழ்வற்ற முறையில் பாவிக்க வேண்டுமென்பது. ஒரு தனிப்பட்ட வியாபாரக் கம் பெனியை எடுத்துக் கொண்டாலும், அக் கம்பெனியுலுள்ள பாகஸ்தர்கள் ஒருவரை ஒருவர் சரிசமானமாக நடத்தினால்தான் அந்தக் கம்பெனியும் வேலை செய்ய முடியும். அப்படிக்கின்றி, நம்மை கட்சி என்றே ஒப்புக் கொள்ள முடியாத ஒருவனுடன் கூடி எப்படி பணியாற்ற, ஐக்கிய முன்னணி அமைக்க முடியும்? ஆகவே அண்ணா தனது கட்சியின் பொதுக் குழுவின் சம்மதம் பெற்று தெரிவிப்பதாகக் கூறினார்.

பொதுக்குழு மதுரையில் கூடியது. சுமார் 45 பேர்கள் விவாதித்து கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நமது உதவியைத் தருவது என்று முடிவு செய்தது. திராவிடநாட்டுப் பிரிவினைக்கு ஆதரவு தேட, சட்டசபையிலும் பாடுபடுவதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட கம்யூனிஸ்டுகளுக்கு நிபந்தனை போட்டது. அதை உத்யோகப் பூர்வமாகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெரிவித்தது. அவர்கள் தங்கள் முடிவை “ஜனசக்தி” தாள் மூலமாக சூசகமாகத் தெரிவித்தனர். மதுரைக் கூட்டத்திற்கு முன்பு பல கூட்டங்களில் நாங்கள் திராவிடநாட்டுப் பிரிவினையை ஆதரிக்கிறோம் என்று பேசி வந்ததுடன், அக்கட்சியின் தலைவர் டாங்கேயும் திராவிட நாடு பிரிவினை நியாயமான கோரிக்கைதான் என்று கூறி வந்தவர்கள், நம்முடைய மதுரை தீர்மானத்திற்குப் பிறகு “திராவிடநாடு பிரிவினை அர்த்தமற்றது. திராவிட ஆரிய கலாசாரம் என்பது ஒன்றுமில்லை.” என்று கூறிவிட்டார்கள். காரணம் ? நமது ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டுமென்ற நிபந்தனை கண்டு.

மேடையில் பேசி வந்தவர்கள், அந்தக் குறுகிய காலத்திற்குள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளும் சக்திவாய்ந்தவர்களை நாம் எப்படி நம்ப முடியும்? கஷ்ட நஷ்டங்களைத் தாங்கி, ஏச்சல் பேச்சுகளை ஏற்று, தடியடிபட்டு, சிறை சென்று, துப்பாக்கிப் பிரயோகத் திற்கு ஆளாகி, கட்டிக் காப்பாற்றிய நமது இலட்சியத்தை- நமது ஜீவதார உரிமையாகிய திராவிடநாடு பிரிவினையை மறந்து நாம் எப்படி உதவி செய்ய முடியும்? நமக்கு கம்யூனிஸ்டுகளிடம் அளவற்ற மதிப்பு உண்டு. அதற்காக லட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியுமா? முடியாது! ஆகவே நிபந்தனை காட்டினோம். நமது நேசக் கரத்தை நீட்டினோம். கம் யூனிஸ்டுகள் இசையவில்லை, நமது நட்பைப்பெற. ஆகவே நாம் நமது லட்சியத்தை ஒப்புக் கொள்ளுபவர்கள் யார் யார் என்று பார்த்தோம். மாவட்ட கமிட்டி சிபார்சு செய்தவர்களுக்கு தேர்தலில் உதவி செய்வது என்ற முடிவுக்கு வந்தோம். இதில் தப்பிதம் என்ன இருக்கிறது ! நாம் ஏதும் முடியாத ஒன்றைக் கேட்க வில்லையே! இதுவரை மேடையில் திராவிடநாடு பிரி வினையை ஆதரித்தவர்களைத்தானே கேட்டோம் ஒப்பந்தத்தில் ‘கையெழுத்து போடு’ என்று. ‘முடியாது’ என்றார்கள். சந்தோஷம்! தேர்தல் வரை ஒதுங்கி நிற்பது அல்லவா நாணயமுள்ளவர்களுக்கு அழகு. அதைவிட்டு தியாகிகளின் பெயரைச் சொல்லி நம்மைத் திட்டுவது நியாயமா? அதிலும் நமது ஜீவானந்தமா- நம்மோடு பல நாட்கள் பழகி, நமது கொள்கைக்காகப் போராடியவரா, நம்மையே திட்டுவது?

தோழர் ஜீவா கூட்டமொன்றில் குறிப்பிட்டாராம், தி. மு. கழகம் தனது முடிவைத் தேடி நடந்து கொண் டிருக்கிறது என்று. ஜார் மன்னரை அழித்து-ஹிட்லரின் இருப்பிடம் தெரியாமல் செய்து-முசோலினியைச் சென்ற இடம் தெரியாமல் ஓடச் செய்த கம்யூனிஸ்ட் கட்சியுடன் நாம் மோதிக்கொள்ளுகிறோமாம். இவர்களுக்கு ஏற்பட்ட கதியே தி. மு. கழகத்துக்கு ஏற்படுமாம்! யார் கூறுவது ? நமது மதிப்பிற்குரிய ஜீவா.

நமக்கு கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியும் அவர்களைவிட. நாம் கம்யூனிஸ்டுகளின் விரோதிகளல்ல. அவர்கள் நம்மை விரோதிகளாகப் பாவிக்கின்றார்கள். நாம் கம்யூனிசம் வேண்டாம் என்று கூறவில்லை. பாகிஸ்தான் பிரிந்த பிறகு அங்கே கம்யூனிஸ்ட் கட்சி இல்லையா ? இருக்கிறதே, பாகிஸ்தான் கம் யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு. அதைப் போலவே திராவிடநாட்டுப் பிரிவினைக்குப் பிறகு திராவிடநாட்டு கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்துக் கொள்ளலாமே! அதைவிட்டு எங்களை ஏன் தூற்ற வேண்டும்? குறைகூற வேண்டியது வேறிடத்தைப் பார்த்தல்லவா ! எங்கள் நேசத்தால் அவர்களுக்கு நஷ்டமேற்பட்டிருக்காதே!

உண்மையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி பூட்சுவாக்களின் விரோதி என்றால் சாமியப்பாவை அல்லவா எதிர்த்திருக்க வேண்டும்? தஞ்சை மண்ணிலே குருதி கொட்ட காரணமாக இருந்த சாமியப்பாவை அல்லவா தோற் கடிக்கப் பாடுபடவேண்டும்? அதைவிட்டு தி.மு. கழகத்தைப் பழித்து கூறுவது கூடாதென்று ஜீவாவுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஜீவாநல்ல உழைப்பாளி பேச்சாளி. அவரது உழைப்பும் பேச்சும் நமக்கு மிகமிக அவசியம். அவரை சட்டசபையில் போட்டு அடைத்துவைப்பதைவிட வெளியில் இருப்பதுதான் மக்களுடைய நன்மைக்கு மிகவும் நல்லது. ஆல்பர்ட் டைப் போன்ற சட்ட அறிவாளிகள் அங்கு சென்று, ஜீவா நம்முடன் இருந்தால், நாட்டில் இன்னும் நல்ல காரியத்தைச் செய்யலாம். ஆகவே, ஆல்பர்ட் ஜேசு தாசனுக்கு உங்கள் வாக்குகளை அளித்து அவரை அங்கு அனுப்புங்கள்.

“கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகள். அவர்களுடனா போட்டி போடுவது?” என்று கேட்கிறது பெரியார் ஏடு. நாங்கள் மட்டுமென்ன, தியாகம் செய்யாதவர் களா ? தியாகம் என்ற பொருளுக்கு அர்த்தம் அவர் களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூறுவேன். தியாகம் என்பது உயிர் துறப்பது, என்பது மட்டுமல்ல தியாகத்திற்குப் பலன் தெரிய வேண்டுமே !

ஆச்சாரியார் சென்னை வந்தபோது 150 பேர் அடிபட்டு படுக்கையில் கிடந்தார்கள். தங்கசாலைத் தெரு கழகக் கட்டிடத்தில் அவர்களைக் கண்டு அண்ணா கண்ணீர்விட, அவர்கள் அண்ணாவைக் கண்டு கண்ணீர் விட்ட காட்சியை ஜீவா கண்டிருந்தால் அவரும் கண்ணீர் விட்டிருப்பாரே! பெண்களின் ரவிக்கை கிழியும்படி அடிக்கவில்லையா ஆச்சாரியாருக்கு கருப்புக் கொடி காட்டியபோது! சிறைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்! குன்றத்தூரில் எட்டு தடவை துப்பாக்கி சுட்டதே, யாரை? எங்களையல்லவா ? ஆரியமாயை எழுதியதற்காக 6 மாதம் சிறை சென்றவரை 10 நாட்களில் வெளியே அனுப்பிவிட்டதே, இதனால் தெரியவில்லையா எங்கள் தியாகத்தின் பலன்! கம்யூனிஸ்டு களால் முடியவில்லையே, சிறையில் கிடப்பவர்களை விடுதலை செய்ய!

நாம் இதுவரைக் கட்டிக் காப்பாற்றிய இலட்சியம் திராவிடநாடு. அதை அடைய எல்லா வகையிலும் பாடுபடுவோம்- என்று ஆல்பர்ட் ஜேசுதாஸ் கூறினார். அதைக் கேட்டபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. நமது இலட்சியத்தை அலட்சியம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நமக்கு அக்கரை இல்லை. நாடு பிரிவதற்குப் பாடு படுவதாக உறுதி அளித்த ஜேசுதாசனுக்கே ஓட்டுக் கொடுத்து ஆதரியுங்கள். அவர் வெற்றி பெற்றால் நாட்டுப் பிரிவினைக்கு நாம் முதல் வழி வகுத்தவர்களாவோம்.

ஆல்பர்டுடைய சின்னம் ஒட்டகம். ஒட்டகம் மிகவும் சாதுவானது. பாலைவனங்களைக் கடக்கக் கூடியது-அது போய்ச் சேரும் இடத்திற்கு தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் சக்தி பெற்றது! அதைப்போலவே ஒட்டகச் சின்னமுடைய ஆல்பர்டும் நமக்கு வேண்டியவைகளைச் சேகரித்துக்கொண்டு சட்ட சபையில் போராடுவார். “திராவிடம்” என்ற பாதுகாப்பு இல்லாவிட்டால் தானியக் கதிர்களை சட்ட சபையில் மாடுகள் மேய்ந்து விடும். ஜாக்கிரதை ! ஒட்டகப் பெட்டியில் ஓட்டு போடுவதை ஒவ்வொருவரும் மறக்க வேண்டாம்.

வாழ்க திராவிடம்!

(6-12-51) “மாலை மணி

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *