
அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி
மாடோட்டிகள்!
அன்றொரு நாள் திராவிடத்தைச் சுரண்ட வந்தவர்கள் மாடோட்டித்தான் வந்தார்கள் இமாலயத்தின் கணவாய்களின் வழியாக!
இப்போதும் நம்மிடம் மாட்டோட்டி வருகிறவர்கள் திராவிடத்தை வடவரின் வலையில் சிக்கிடும் மானாக ஆக்கத்தான் பாடுபடுகிறார்கள்.
வடவரின் அடிமைகள் இவர்கள்! இவர்கள் ஓட்டி வரும் மாடுகள் நம்மையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வடவரின் அடிமையாக்க முயற்சிப்பவை.
வட நாட்டு நாகரிகத்தை, வட நாட்டு மொழியை, வட நாட்டுக் கலாச்சாரத்தை திராவிடத்திலே பதிப்பது மட்டுமல்ல; வட நாட்டாரின் நிரந்தர எடுபிடியாக திராவிடத்தை மாற்றிவிட வேண்டுமென்ற தீவிர முயற்சி, மாடோட்டிகளால் நடைபெறுகிறது.
காங்கிரஸ்தான் விடுதலை வாங்கித் தந்தது; சுதந் தரம் பெற்றுத் தந்தது; என்ற காரணங்களைக் காட்டி மக்களை மயக்கிவிடலாமென்ற துணிவு ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்கு!
சுதந்தரம் வாங்கித் தந்தமைக்காக நம் சுகவாழ்வையெல்லாம் இழக்க வேண்டுமென்று அர்த்தமல்ல!
சுதந்தரம் இவர்களின் திறமையால், தியாகத்தால் மட்டும் கிடைத்துவிட்டதல்ல.
சுதந்தரம் பெற்றோம் நாமும்தான் மகிழ்ந்தோம். அந்த ரேநத்திலும் வெள்ளையனுக்குஏற்பட்ட நெருக்கடி, உலகப்போர் முடிந்து அவனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை- இந்தியாவைக் கட்டிக்காக்க முடியாத நிலைமை, இவை களும் முக்கிய காரணமா யிருந்தன விடுதலைக்கு என்பதை எடுத்துக் காட்டத் தவறிடவில்லை.
சுதந்திர பூமிதான்! ஆனால் இங்கேதானே பிண மலைகள்! பிள்ளைச் சந்தைகள்! தற்கொலைகள்! தான் தோன்றி தர்பார்கள்!
வடவரின் கையிலே இருக்கும் கொடுங்கோலுக்குப் பெயரா, சுதந்தரம்!
அடக்குமுறை தர்பாருக்குப் பெயரா சுதந்தரம்!
திராவிடம் தனியாட்சி பெற்றிருந்தால், பிணங்கள் விழுந்திருக்குமா, இங்கே!
திராவிடம் தனியரசு செலுத்தியிருந்தால் மலேயா வுக்கும், இலங்கைக்கும் ஓடுவார்களா, திராவிடர்கள்!
இலங்கையிலே இடர் பல ஏற்றுக்கிடக்கும் திரா விடரையெல்லாம் திருப்பியழைத்து தித்திப்பான வாழ்வைத் தந்திருக்காதா சுதந்திரத் திராவிடம்!
மலேயாவிலே கணபதி கயிற்றிலே தொங்க நேர்ந்தது.
சாம்பசிவம் தப்புவது பெரிதாகிவிட்டது.
இதோ சின்னாட்களுக்கு முன் லோகநாதனைத் தின்று ஏப்பமிட்டுவிட்டது மலேயாவின் மரண மேடை !
காமன் வெல்த்திலே அங்கம் வகிக்கிறது நம்மை யாளும் சர்க்கார்.
மலேயா கொடுமை பற்றி எடுத்துரைத்து ஏற்றது செய்ய மனத்துணிவு இல்லை. காமன் வெல்த்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற உணர்ச்சி ஏற்படவும் இல்லை. திராவிடம் தனி நாடாக இருந்திருந்தால் கணபதியை, லோகநாதனை சாக விடுவோமா? ஏன்; மலேயா சென்று வாழவேண்டிய நிலைமைதான் அவர் களுக்கு இருந்திருக்குமா?
கேடுகள் செய்தனர். வெளிநாடுகளில் வீசப்பட்ட கேடுகளைக் கண்டிக்க மறந்தனர்! மாடுகளை மட்டும் ஓட்டிக்கொண்டு ஓட்டுக்கு வருகின்றனர்.
வடநாட்டுப் பிடியிலே இருப்பதால் தானே, கோயாங்கா தென்னாட்டு அபேட்சகராக நிற்க முடிகிறது?
வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, பிர்லாவின் ஏஜெண்டுகள் சிலர்- பிர்லாவின் பணத்தை வாரி இறைத்து தேர்தலிலே போட்டியிடுகிறார்கள் திராவிடத்திலே?
இத்தகைய கொடுமையான ஏகாதிபத்யத்திலிருந்து திராவிடம் விடுபெறவேண்டு மென்பதற்காகத்தான், திராவிடம் சுதந்திர பூமியாக மாறவேண்டு மென்பதற் காகத்தான், திராவிடத்திலே உண்மையான சமத்துவம் நிலைக்கவேண்டு மென்பதற்காகத்தான், ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று முழங்குகிறோம்.
இந்த முழக்கம் மாடோட்டிகளுக்குப் பிடிக்க வில்லை; பிடிக்காதது மட்டுமல்ல, மறுக்கிறார்கள்.
“வடவரின் அடிமைகள்” என்றால் கோபத்தால் குதிக்கிறார்கள். வடநாட்டின் மொழி, கலாச்சாரம், அந்த நாட்டிற்குத் தகுந்தவாறுள்ள பிரச்சினை, இவைகளை யெல்லாம் திராவிடத்திலே அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறவர்களை வடநாட்டு அடிமைகள் என்று கூறாமல் வேறென்ன கூறுவது! கோயாங்காவைக் கொண்டுவந்து திராவிடத்திலே போட்டியிடச் சொல்லுகிறவர்களை வடநாட்டு அடிமை என்று கூறுவதிலே தவறு இருப்பதாகத் தெரிய வில்லையே!
“திராவிடம் ஒரு தனி நாடு. இதை வேறு நாட்டுப் பிரச்சினைகள், அமைப்புகள், அவைகளை மட்டும் வைத்து ஒரே கண்ணால் ஒரே கோணத்தில் பார்க்கக் கூடாது” என்றுதான் நாம் பலமுறை விளக்கங்கள் தந்து திராவிட நாட்டுப் பிரச்சினையை மக்கள் முன்னே வைத்திருக்கிறோம்.
ஆனால் சிலர், “தாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால்” என்ற தன்மையில் ஆகாதது, முடியாதது, குறுகிய நோக்கம் என்றெல்லாம் ஆரூடம் கணித்தார்களே தவிர, இன்னொரு நாட்டை உதாரணத்துக் கழைத்து நம் இதயகீதத்தை மறைக்க எண்ணினார்களே தவிர, தத்துவங்களுக்கு அடிமையாகி, நடைமுறைக்கு எதிரி யாகிவிட்டார்களே தவிர, நம் பிரச்னையின் உட்கருத்தை அறியாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
எதிரிகளாகவே காட்டிக் கொண்டவர்கள் நேரடி யாக எதிர்த்தார்கள் நம் பிரச்னையை! காட்டிக்கொள் ளாதவர், மறைமுகமாக எதிர்த்தார்கள். இத்தகைய எதிர்ப்புக்களுக்கெல்லாம் முடிவு காணத்தான் தேர்தலிலே திராவிடநாடு பிரச்னையை ஏற்பவர்களை ஆதரிப்பது என்று முடிவு செய்தோம்.
தி.மு.க. ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திட்டவர்களின் வெற்றி-திராவிட நாட்டு பிரச்னையில் முதல் வெற்றி! மாடு ஓட்டி வருபவர் மீண்டும் சிம்மாசனம் ஏறினால் நம் பிரச்னை சிறிது நாள் தள்ளப்படுகிறது என்று பொருள் !
சட்டசபையில், மக்கள் சபையில் நம் குரல் எழும் பினால், மாடோட்டி வந்தவர்கள் மிரண்டு போவார்கள்.
அந்த மிரட்சியை ஏற்படுத்த, தேர்தலிலே மாடோட்டி வருகிறவர்களை, முதுகு காட்டிடச் செய்ய வேண்டும்.
சட்டசபை, மக்கள் சபையிலே நம் குரல் கிளம்பினால் அது நம் ஒப்பந்தப் பத்திரத்தின் வெற்றி என்றுதான் அர்த்தம்!
அந்தச் சபைகளில் கிளம்பும் முழக்கம், டில்லியை காஞ்சீபுரம் நோக்கி ஓடிவரச் செய்யவேண்டும்.
அந்த இன்பச் செய்தியைக் கேட்க, மாடோட்டிகளைத் தோற்கடியுங்கள்!
தோல்வித் தோரணம் கட்டவேண்டும், காங்கிரசார்! திராவிடம் பிரிய-திராவிடப் பிரச்சினைக்கு ஆதரவு தேட – மாடோட்டிகளை மண் கவ்வச் செய்யுங்கள் !
வெல்க திராவிடர்! வாழ்க திராவிடம்!
“மாலை மணி” (30–12–’51)



