
என்னுரை
சாவி
13. காந்தி மகாத்மா
காந்தி மகாத்மா நவகாளியில் பாதயாத்திரை துவங்கியிருந்த நேரம். இந்து முஸ்லிம் கலவரம் காரணமாக நவகாளி முழுதும் பயங்கரப் படுகொலைகளும், பற்றி எரியும் வீடுகளும் பரவலாய்க் காட்சி தந்து கொண்டிருந்தன. அந்தப் பகைப்போரிலிருந்து மக்களை மீட்கவும், அமைதி வழிக்குத் திருப்பவும் மகாத்மா மேற்கொண்ட அந்த யாத்திரையில் நானும் கலந்துகொண்டேன்.
நவகாளியின் பூகோள அமைப்பே சற்று வித்தியாசமானது.
வயல் வரப்புகளின் வழியே நடந்து சென்றால், நடுவே ஒரு தோப்பு தென்படும் – அதற்கிடையே குட்டை போன்ற ஒரு நீர்த்தேக்கமும், அதைச் சுற்றிலும் இருபது முப்பது வீடுகளும் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு தீவுபோல என்று வைத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி ஏழெட்டு தீவுகள் கொண்டது ஒரு கிராமம். மரங்கள், குட்டைகள், வீடுகள் இப்படி அடுத்தடுத்து அமைந்துள்ள கிராமங்களைக் கொண்டதுதான் நவகாளி மாவட்டம்.
ஒரு தோப்பிலிருந்து இன்னொரு தோப்புக்கு நடந்து செல்லும்போது வழிநெடுகச் சிறிதும், பெரிதுமாய் வாய்க்கால்கள் குறுக்கிடும். காந்திஜியால் அந்த வாய்க்கால்களைத் தாண்டிச் செல்வது முடியாத காரியம் என்று கூடியிருந்தவர்கள் கருதியததால், மகாத்மா கடக்கவேண்டிய கால்வாய்களின் குறுக்கே பலமான மூங்கில்களைப் போட்டு இணைத்து ஒரு தாற்காலிக பாலம் அமைத்துவிட்டார்கள்.
நான் கல்கி பத்திரிகையின் நிருபராகப் போயிருந்தேன். காந்திஜியைப் பார்த்துப் பேசுவது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. அவருடைய மொழி பெயர்ப்பாளர் வங்காள யூனிவர்ஸிடி புரொபஸர் நிர்மல் குமார் போஸை அணுகி, கெஞ்சிக் கூத்தாடி பெரும் சாகஸத்தின் பேரில் பேட்டிக்கு அனுமதி பெற்றேன்.
ஒரு குடிலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த காந்திஜி அரை மணி நேரத்துக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்து கைராட்டையில் நூல் நூற்கத் தொடங்கி விட்டார்.
ராஜாஜியின் பெயரைச் சொல்லி, கல்கியின் பெயரைச் சொன்னதும் காந்திஜி, “அப்படியா? ராஜாஜிக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! நான் இங்கே பத்திரிகை நிருபர்கள் யாருக்கும் இங்கே அனுமதியில்லை என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. உன்னை மட்டும் அனுமதிப்பது சரியாகாதே!” என்று சொல்லி மறுத்துவிட்டார். “ஒரே ஒரு நாள் மட்டும் தங்கிவிட்டுப் போய்விடுகிறேன்” என்று நான் கெஞ்சிக் கூத்தாடியதின் பேரில் மகாத்மா மனமிரங்கி “இவ்வளவு துாரம் வந்தவிட்டாய். சரி இன்று ஒருநாள் மட்டும் அனுமதிக்கிறேன்” என்று அந்த ஒரே ஒரு நாள் என்ற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
அதன்பின் அவர் குழுவில் நானும் ஒருவனாய் ஒட்டிக் கொண்டேன்.
வாய்க்கால் மீது வேயப்பட்ட மூங்கில் பாலங்கள் மகாத்மாவின் பயணத்துக்கு ஏற்றதாக இருந்தாலும் அதிலேயும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
கலவரக்காரர்கள் சிலர் வேண்டுமென்றே அந்தப் பாலங்களின் மீது போடப்பட்டிருந்த மூங்கில்களை உடைத்து, அப்படி உடைத்தது தெரியாதபடி அவற்றின் மீது தழைகளைப் போட்டு மூடி மறைத்திருந்தார்கள்.
இந்தச் செய்தி காந்திஜியின் காதுக்கு எட்டியது.
அவ்வளவுதானே! அப்படியானால் நான் அந்தப் பாலங்களின் மீது நடக்காமல் தாண்டியே போய் விடுகிறேன்’ என்றவர் அதற்காக அருகே இருந்த அகலமான வாய்க்கால் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தினமும் அதைத் தாண்டித் தாண்டி பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்தப் பயிற்சி தொடங்கிய அன்று காலையில்தான் நான் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன்.
அது மட்டுமல்ல, சற்று நேரத்துக்கெல்லாம் இன்னொரு அதிசயமும் நடந்தது. திடீரென்று மாகாத்மாஜி முகாமிட்டிருந்த அந்த இடத்துக்கு நாலைந்து கார்களும், ஜீப்புகளும் வரிசையாக வந்து நின்றன.
சுதந்திர இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த பண்டித நேருவும், வல்லபாய் படேலும், அவர்களோடு அரசு அதிகாரிகள் சிலரும் கும்பலாக வந்து இறங்கினார்கள். நேருவையும், படேலையும் கண்டதும் மகாத்மாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. மூவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கட்டித் தழுவிக் கொண்டார்கள்.
“பாபுஜி! எதற்காக இந்தக் கால்வாயைத் தாண்டிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் நேரு.
விஷயத்தை விவரித்துச் சொன்னார் மகாத்மா
“ப்பூ… இவ்வளவுதானே…! இதற்காகவா இவ்வளவு பிரயாசை? பார்க்கிறீர்களா? இதோ, இதை நான் ஒரே தாண்டாகத் தாண்டிக் காட்டுகிறேன்!” என்று சவால் விடுவதுபோல் கேட்டார் பண்டிட்ஜி
“எங்கே பார்ப்போம்…!” என்றார் காந்திஜி.
அவ்வளவுதான்; நேருஜி கச்சத்தை இழுத்துக் கட்டிக் கொண்டார். கிரிக்கெட் போட்டியில் வேகப் பந்து வீச்சாளர் பந்து வீசுமுன்பாகப் பல அடிகள் பின்னுக்குப் போய், அங்கிருந்து ஓடிவந்து பந்து வீசுவாரே, அப்படி நேருஜி கால்வாயிலிருந்து பல அடிகள் பின்னோக்கிப் போய் அங்கிருந்து வேகமாக ஓடிவந்து, ஒரே எட்டில் கால்வாயைத் தாண்டிக் குதித்தார்!
“அரேரே! அச்சா, அச்சா!” என்று அதிசயித்த காந்திஜி, அப்புறம் சொன்னதுதான் அவரது நகைச்சுவைக்கு உதாரணம்.
‘பண்டிட்ஜி! நீங்கள் ரொம்ப சுலபமாகத் தாண்டிவிட்டீர்கள்! ஆனால் நான் ஒவ்வொரு கால்வாயைத் தாண்டும்போதும் உங்களைப்போல பின்னுக்கு நடந்துபோய், அங்கிருந்து ஓடிவந்து தாண்டிக் கொண்டிருக்க முடியாதே!” என்று பலத்த சிரிப்புக்கிடையே கூறினார்.
நாட்டுப் பிரிவினையின்போது ஐந்நூறு கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு இந்தியா தரவேண்டும் என்று ஒப்பந்தமாகி இருந்தது. இதை உடனே கொடுப்பதா, வேண்டாமா? என்பதுதான் பிரச்னை.
“கூடாது, கொடுத்தால் பாகிஸ்தான் அந்தப் பணத்தைக் கொண்டே யுத்த தளவாடங்களை விலைக்கு வாங்கி நம் தலைமீதே குண்டு போடும்” என்பது வல்லபாய் படேலின் வாதம். நேருஜியால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.”சரி, வாருங்கள். காந்திஜியைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம்” என்று கூறி படேலையும் அழைத்துக்கொண்டு காந்திஜி தங்கியிருந்த ஸ்ரீராம்பூருக்கு வந்துசேர்ந்தார். ஆனால் காந்திஜியோ கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே தீரவேண்டும். பணத்தை உடனே கொடுத்துவிடுங்கள்’ என்று தீர்மானமாகக் கூறி, அவர்களை அன்றே வழி அனுப்பி வைத்துவிட்டார்.
என் பெருமையெல்லாம், மகாத்மா காந்தியை ஒரு வித்தியாசமான சூழலில், மிக முக்கியமான சரித்திரம் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் – அதுவும் நேருஜி, படேல் போன்ற மாபெரும் தலைவர்களை காந்திஜியுடன் சேர்த்துப் பார்க்கும் அபூர்வக் காட்சியைக் காண முடிந்ததே, அதுதான்!



