என்னுரை
சாவி

12. கத்தரி விகடன்

ஆனந்த விகடன் அலுவலகம் அப்போது பிராட்வேயில் இருந்தது. இப்போது அப்பர் அச்சகம். ஒருநாள் பொறுப்பாசிரியர் கல்கி அவர்களைப் போய்ப் பார்த்து உதவி ஆசிரியர் வேலை கேட்டேன்.

“வேலையெல்லாம் இங்க ஒண்ணுமில்லே…” என்று சற்று அலட்சியமாகவே சொல்லி அனுப்பி விட்டார்.

ஏமாற்றத்துடன் திரும்பினேன். ஆனாலும் கல்கியை நேரில் சந்தித்துப் பேசியதில் ஓர் ஆனந்தம்!

அந்த நாட்களில் எனது நெருங்கிய நண்பராக இருந்தவர் தி.ஜ.ரங்கநாதன். மஞ்சரி ஆசிரியர் தி.ஜ.ர. என்றால் சட்டெனப் புரியும்.

நானும், தி.ஜ.ர.வும் தம்புச்செட்டித் தெருவில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். கல்கி அவர்களைப் போய்ப் பார்த்து உதவி ஆசிரியர் வேலை கேட்டு தோல்வியடைந்தது பற்றி தி.ஜ.ர.விடம் புலம்பினேன்.

“கவலைப்படாதீங்க. கல்கியிடமே உமக்கு நான் வேலை வாங்கித் தருகிறேன்” என்று நம்பிக்கையோடு சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை.

அப்போது தி.ஜ.ர. ‘ஹநுமான்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். சிலகாலம் ஹநுமானில் நான் அவருடன் சேர்ந்து உப ஆசிரியராகப் பணி புரிந்துகொண்டிருந்தேன். தி.ஜ.ரவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது அப்போதுதான்.

ஹநுமான் சஞ்சீவி பர்வதத்தைக் கையிலேந்தி பறப்பதுபோல் வரையப்பட்ட ஓவியம்தான் அந்தப் பத்திரிகையின் சின்னம்! அதில் ஹநுமானின் வால் நீளமாகத் திட்டப்பட்டிருக்கும். அதே மாதிரி விகடன் பத்திரிகையின் அரசியல் நிருபரின் வாலும் நீளமாக இருக்கும்.

“இந்த இரண்டு சின்னங்களின் வால்களையும் ஒரு கத்தரிக்கோல் வெட்டுவதுபோல் படம் வரைந்து அதையே நம் புதிய பத்திரிகைக்குச் சின்னமாகப் போட்டு விடலாம். புதிய பத்திரிகைக்குக் ‘கத்தரி விகடன்’ என்று பெயர் சூட்டி, விளம்பரம் செய்து விடலாம். இதை ஆனந்த விகடன் அலுவலகத்தில் பார்ப்பார்கள். ‘விகடனுக்குப் போட்டியாக இன்னொரு விகடனா?’ என்று யோசிப்பார்கள். போட்டி விகடன் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். உடனே உம்மைக் கூப்பிட்டு வேலை தந்து விடுவார்கள். பாருங்களேன்” என்றார் தி.ஜ.ர.

“உங்க ஐடியா கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போலுள்ளது” என்றேன்.

“பாருங்களேன்” என்றார் தி.ஜ.ர. நம்பிக்கையோடு.

நண்பரின் யோசனைப்படியே ‘கத்தரி விகடன் வெளி வருகிறது’ என்று ஓவியர் ஜி.எச்.ராவ் என்பவரைக் கொண்டு ஒரு டிஸைன் தயார் செய்தேன். ஹநுமான் பத்திரிகையிலேயே அந்த விளம்பரத்தைப் பெரிதாக வெளியிடச் செய்தார் தி.ஜ.ர.

விளம்பரம் வெளியான மறுநாள் மாலை நாங்கள் இரண்டு பேரும் தம்பு செட்டித் தெருவில் கடற்கரை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தோம்.

பின்னால் சைக்கிளில் வேகமாக வந்த ஆனந்த விகடன் ஆபீஸ் பாய், எங்களை நெருங்கியதும் ஒட்டி நிறுத்தி, ஒரு சிறிய துண்டுக் காகிதத்தை என்னிடம் நீட்டினான். அப்போது விகடனில் உதவி ஆசிரியராக இருந்த தேவன் எழுதியிருந்தார்.

“ஆசிரியர் கல்கி உங்களைப் பார்க்க விரும்புகிறார். உடனே விகடன் அலுவலகத்துக்கு வரவும்”.

“பார்த்தீரா? கல்கியே உம்மைக் கூப்பிடுகிறார்! என்றார் தி.ஜ.ர. பெருமிதத்துடன்

மறுநாள் காலை பதினோரு மணிக்கு நான் கல்கியைப் பார்க்கப் போயிருந்தேன். என்னைக் கண்டதும் கல்கி, “போன வாரம் நீ இங்கே வந்து வேலை கேட்டாயல்லவா? இப்ப ஒரு வேலை இருக்கு. வேணுமானால் சேர்ந்துக்கலாம்” என்றார். நான் மெளனமாக நின்றேன்.

“சம்பளம் நாற்பது ரூபாய்தான். ஆரம்பத்தில் அவ்வளவுதான் கொடுப்பார்கள்” என்று சொல்லி விட்டு, “மணியடித்து தேவனைக் கூப்பிடு” என்றார் பியூனிடம்.

தேவன் வந்ததும் “உனக்கு முதல்ல எவ்வளவு சம்பளம்?”

“நாற்பது ரூபாய்”.

இப்படியே கதிர், நாடோடி இருவரையும் அழைத்து அவர்களின் ஆரம்ப சம்பளம் நாற்பது ரூபாய் என்பதை அவர்கள் மூலமாகவே உறுதிப்படுத்தினார்.

”என்ன? ஒப்புக் கொள்கிறாயா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“நாளைக்கு வந்து சொல்கிறேன்” என்றேன்.

“முடிவு பண்ண வேண்டியது நீதானே?இப்பவே சொல்லேன். என்ன யோசனை?” என்று கேட்டார். நான் தயங்கினேன். “என்ன சமாசாரம் சொல்லு” என்றார் கல்கி.

“வேலையில் சேர்ந்து கொள்கிறேன். ஆனால் சொந்தமா பத்திரிகை தொடங்கும் ஏற்பாட்டில் கொஞ்சம் பணம் செலவாயிட்டுது. பணம் கடன் வாங்கிச் செலவு செய்திருக்கிறேன். அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்” என்றேன். ‘எந்த மாதிரி கேள்விகள் வரும்? அவற்றுக்கு நான் எப்படியெல்லாம் பதில் சொல்ல வேண்டும், என்னென்ன சொல்ல வேண்டும்’ என்பதையெல்லாம் தி.ஜ.ர. எனக்கு ஏற்கனவே பாடம் நடத்தியிருந்தார்.

“உனக்குப் பணம் கொடுத்தது யார்?” என் கேட்டார் கல்கி.

“என் பெரிய மாமனார் புரசைவாக்கத்தில் இருக்கிறார். அவர்தான் பணம் போட்டிருக்கிறார்” என்றேன்.

“அவர் பணத்தை எங்கே போட்டார்? குளத்திலா போட்டார்!”

நான் மௌனமாக இருந்தேன்.

“எவ்வளவு பணம்?”

ஆயிரம் ரூபாயாவது சொல்லியிருக்கலாம். என் தரித்திர புத்தி என்னை விட்டு எப்படிப் போகும்?

“நூற்றிருபது ரூபாய்!” என்றேன்.

“சரி, போய் அக்கௌண்டன்ட வாஞ்சிநாதய்யரிடம் வாங்கிக்கோ” என்று கூறி வாஞ்சிநாதய்யருக்கு ஒரு சீட்டு எழுதி என்னிடமே கொடுத்தனுப்பினார்.

பணத்தை வாங்கிக் கொண்டு நேரே பூக்கடை காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள கதர்க் கடைக்குப் போனேன். கதர் ‘சில்க்’ வாங்கி அப்போதே ஜிப்பா தைத்துப் போட்டுக் கொண்டேன்.

மறுநாள் காலை ஆபீஸுக்குப் போனதும் கல்கி கூப்பிட்டனுப்பினார். என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, அர்த்த புஷ்டியோடு ஒரு புன்னகை பூத்தார்.

‘என்ன, நேத்து வாங்கிண்டு போன பணத்தில் ஜிப்பாவா! இதோ பார். நீ சில்க் ஜிப்பாவெல்லாம் போடக்கூடாது. கதர் வேட்டி, கதர்ச் சட்டைதான் போட்டுக்கொள்ளணும்” என்றார்.

அன்று கழற்றிப்போட்ட அந்த சில்க் ஜிப்பாவை நான் அப்புறம் தொடவே இல்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *