என்னுரை
சாவி

5. தினமணிகதிர் ஆசிரியர்

தினமணி கதிர் ஆசிரியராக நான் இருந்தபோது எனக்குப் பல சோதனைகள். ஆனாலும் நான் மிகுந்த பொறுமை காட்டி அந்தச் சோதனைகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து இறுதியில் வெற்றி கண்டேன்.

கதிரில் என்னை ஆசிரியராக அமர்த்திவிட்டுப் பல ஆண்டுகள் வரை அதைப் பத்திரிகையில் அறிவிக்காமலே இருந்தார்கள். பலமுறை இதுபற்றி பி.டி. கோயங்காவிடம் கேட்டும் சரியான பதில் இல்லாமல் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கோபத்தை வெளிக்காட்டாமல் பொறுமையாக இருந்தே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்பினேன். நான் ஆசிரியர் பொறுப்பேற்றபின் கதிரின் சர்க்குலேஷன் பெருமளவு உயர்ந்தது என்பது ஊரறிந்த உண்மை. அப்படியிருந்தும் நிர்வாகம் என் பெயரை ஆசிரியர் என்று அறிவித்து வெளிப்படையாக அங்கீகரிக்க ஏனோ முன்வரவில்லை.

தானாகவே கனிந்து வரட்டும் என்று நான் நீண்டகாலம் காத்திருந்தது வீண் போகவில்லை.

ஒருநாள் நான் சற்றும் எதிர்பாராதபோது நிர்வாகமே என் பெயரை ஆசிரியர் என்று ‘இம்ப்ரிண்ட்’டில் போட்டு என்னை வியக்க வைத்தது. திரு.பி.டி.கோயங்கா என்னை அழைத்து “ஏம்பா, இம்ப்ரிண்ட்டில் உன் பேர் போட்டாச்சு. உனக்கு இப்ப திருப்திதானே?” என்று கேட்டார். நான் கொஞ்சம் அமுத்தலாகவே தலையை மட்டும் அசைத்து விட்டு வந்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு திரு.பி.டி.கோயங்கா என்னைக் கூப்பிட்டனுப்பினார்.

‘நீ தினமணியை எடுத்து நடத்தணும். நாளையிலிருந்து நீதான் எடிட்டர்’ என்ற அளவுக்குப் பேச ஆரம்பித்தார்.

‘நமக்குத் தெரியாத விஷயத்தில் அல்லது துறையில் நாம் மூக்கை நீட்டக்கூடாது’ என்று நான் எனக்குள் ஒரு சங்கல்பமே செய்து கொண்டிருந்தேன். எனவே என்னால் முடியாது” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டேன்.

ஆனால், பகவன்தாஸ் கோயங்கா என்னை விடுவதாக இல்லை. நாள்தோறும் நச்சரித்துக் கொண்டே இருந்தார். நானும் பிடிகொடுத்துப் பேசவில்லை.

ஒருநாள் நான் என் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தபோது அங்கே போன் செய்து “என்னப்பா! நான் சொன்னேனே, என்ன முடிவு செய்தாய்?” என்று கேட்டார். நான் என் நிலைமையை விளக்கினேன்.

“நான் முழுக்க முழுக்க வாரப்பத்திரிகையாளன். தினசரிப் பத்திரிகை எனக்குச் சரிப்பட்டு வராது. எனக்கு அந்த வேலையும் தெரியாது.டெய்லி நடத்துவது தவில் வாசிப்பது மாதிரி. வீக்லியோ மிருதங்கம் வாசிப்பது மாதிரி. இரண்டுமே வாத்தியம் தான் என்றாலும் தவில்காரர் மிருதங்கம் வாசிப்பதோ, மிருதங்கக்காரர் தவில் வாசிப்பதோ இரண்டிலுமே தேர்ச்சி பெற்றிருந்தால் தவிர சாத்தியமல்ல. நான் மிருதங்கம் வாசிப்பவன். எனக்கு தவில் வாத்தியத்தில் பயிற்சி கிடையாது. ஆகவே தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்” என்றேன்.

எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாயில்லை. சரி என்று அப்போதைக்கு என்னிடம் சொல்லிவிட்டு ஒரு வாரம் சென்றபின் மறுபடியும் பழைய பல்லவியை ஆரம்பித்துவிட்டார்.

நான் நழுவிக் கொண்டே இருந்தேன்.

சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். தினமணி கதிர் அட்டையில் எம்.ஜி.ஆர். படம் போட வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அடுத்த சில மாதங்களுக்குள் நான் வெளிநாடு போயிருந்தபோது என் சீட்டு கிழிக்கப்பட்டது.

கலைஞர் அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டியதுதான் தாமதம், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய அன்றே, அக்கணமே என்னை டெலிபோனில் கூப்பிட்டு “எல்லாம் கேள்விப்பட்டேன். குங்குமம் என்ற பெயரில் ஒரு வார இதழ் தொடங்கி உங்களை அதற்கு ஆசிரியராக்கப் போகிறேன். வந்து சேருங்கள்” என்று அன்போடும், பாசத்தோடும், உரிமையோடும் சொன்னார். நான் மறு பேச்சின்றி மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன். காரணம், அது வாரப் பத்திரிகை என்பதால்தான்.

இப்போதும் சொல்கிறேன். கலைஞர் என் ஆருயிர் நண்பர் தான் என்றாலும், நான் கதிரிலிருந்து வெளியே வந்த சமயம் அவர் வாரப்பத்திரிகை ஆரம்பிக்காமல் தினசரி ஒன்றைத் தொடங்கி என்னை ஆசிரியராக இருக்கச் சொல்லியிருந்தால், அவரிடமும் முடியாது என்றுதான் சொல்லியிருப்பேன்.

பத்திரிகைத் தொழிலைப் பொறுத்தவரை நான் இன்னும் ஓர் இளைஞன் தான். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக இத்தொழிலைச் செய்து வருகிறேன். இதுவரை உற்சாகம் குன்றியதில்லை. புதிய புதிய உத்திகளைக் கையாண்டு புதுமைகள் பல செய்ய வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் என் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது.

நண்பர்கள் என்னை ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

“இவ்வளவு நாள் எழுத்துத்துறையில் இருக்கிறீர்கள். சினிமாத் துறையில் இன்னும் ஏன் கால் பதிக்கவில்லை?”

ஒரே பதில்தான். ‘அது எனக்குத் தெரியாத துறை:

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *