என்னுரை
சாவி

1.கலைஞர்

வருடா வருடம் வயதாகிக் கொண்டே போவதில் நம்முடைய சாதனை ஏதுமில்லை. என் பிறந்த நாளைப் பற்றி நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை என்றாலும் சில தவிர்க்க முடியாத பிறந்த நாட்கள் மறக்க முடியாதவையாக அமைந்து விடுகின்றன.

அப்படிப்பட்ட ஒன்றுதான் என்னுடைய அறுபதாவது பிறந்த நாள்.

நண்பர்கள் சிலர் விழாக்குழு அமைத்து எனது அறுபதாவது பிறந்த நாளை முதலமைச்சர் கலைஞரின் தலைமையில் கொண்டாடுவது என்று தீர்மானித்தார்கள். பிறந்த நாள் கொண்டாடுவதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும் அந்த ஆண்டு விழாவுக்கு நான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பதால்தான்.

கலைஞர் வந்து வாழ்த்தப் போகிறார் என்பது ஒன்றுதான் அந்த விழாவில் எனக்கிருந்த பெரிய கவர்ச்சி. நல்ல தமிழால் வாழ்த்துப் பெறுவதை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

ஏ.வி.எம்.ராஜேசுவரி திருமண மண்டபத்தில் வி ழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அன்று காலை பத்தரை மணிக்கு கோபாலபுரத்திலி ருந்து எனக்கொரு தகவல்!

“சி.எம்.முக்கு உடம்பு சரியில்லை. இன்று விழாவுக்கு வரமாட்டார்.” இந்தச் செய்தியைக் கலைஞரின் உதவியாளர் திரு. சண்முகநாதன் சொல்லக் கேட்டதும் நான் ‘அப்ஸெட்’ ஆனது போல் வேறு எப்போதும் ஆனதில்லை.

கலைஞருக்கு உடனே ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

“உடம்பு சரியில்லாத காரணத்தால் இன்று என் விழாவுக்கு வரமாட்டீர்கள் என்று கேள்விப்படுகிறேன். ஒரு பெரிய தலைவர் இப்படிச் செய்யலாமா? என்னை இப்படி ஒரு ஏமாற்றத்துக்குள்ளாக்கலாமா? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 104 டிகிரி காய்ச்சலிலும் உடம்பின் சோர்வைப் பொருட்பாடுத்தாமல் திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுக்குப் போய் தலைமை வகித்த நிகழ்ச்சியைத் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அவ்வளவு காய்ச்சலோடு அவர் ஊர்வலத்திலும் கலந்து கொண்ட செய்தி தாங்கள் அறியாததல்லவே! இன்றைய விழாவில் நீங்கள் கலந்து கொள்வீர்கள் என்று நான் எவ்வளவு ஆவலாக உள்ளேன் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு விளங்கும்” என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். அப்புறம் கலைஞரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மாலை ஆறு மணிக்கெல்லாம் மண்டபத்துக்கு வந்துவிட்டார். விழாவில் கலந்துகொண்டு மிக அருமையான சொற்பொழிவு ஒன்றும் நிகழ்த்தினார்.

தமது பேச்சைத் தொடங்கும்போது நான் காலையில் எழுதியனுப்பிய கடிதத்தைக் குறிப்பிட்டதுடன் நிற்காமல் அதைப் படித்தும் காட்டினார்.

“நேதாஜியின் அன்றைய உடல்நிலையையும், எனது இன்றைய உடல் நிலையையும் ஒப்பிட்டு சாவி கோபமாகக் கடிதம் எழுதியிருக்கிறார். நேதாஜிக்கு அன்று வந்ததோ காய்ச்சல். இன்று எனக்கு வந்துள்ளதோ வயிற்றுக் கடுப்பு. ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்திருக்க முடியாத நிலை. இருந்தும் ஏற்றுக்கொண்ட பணியை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்கிற கொள்கை காரணமாக, கடமை உண்ர்வு காரணமாக வந்திருக்கிறேன். நான் முன்னெச்செரிக்கையாகச் சில மருந்துகளை உட்கொண்ட பிறகே இந்த விழாவுக்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

நான் நெகிழ்ந்து போனேன்.

இன்று என்னைப் பலபேர் கேட்கிறார்கள் : “எப்படி இந்த வயதில் உங்களால் அயராமல் உழைக்க முடிகிறது?”

சிரமமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஏற்றுக் கொண்ட பொறுப்பைச் செய்து முடிக்க வேண்டும், எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வோடு செய்து வருகிறேன்.

இது கலைஞர் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *