
என்னுரை
சாவி
6. ராஜாஜி
முதல் முதல் நான் சிங்கப்பூர் போயிருந்த போது மலேசியாவிலிருந்து நண்பர் திரு. அலி அங்கே வந்திருந்தார். ஒரு நாள் மாலை ஆறுமணிக்கு, “சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம் வாங்க” என்று என்னை அழைத்துக் கொண்டு வீதிகளில் நடக்க ஆரம்பித்தார்.ஒரு ‘சாக்லெட்’டை எடுத்து என்னிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். நான் அதன் மேல் சுற்றப்பட்டிருந்த காகிதத்தை உரித்து, தெருவில் வீசாமல் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். இதை அதிசயமாகப் பார்த்த என் நண்பர் அலி, “ஆச்சரியமாயிருக்கிறதே! இந்தியாவிலிருந்து இங்கே வருபவர்கள் குப்பையைக் கீழே போடுவதைத்தான் பார்த்திருக்கிறேன். உங்களுக்கு மட்டும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது?” என்று கேட்டார்.
‘கல்கி அலுவலகத்துக்கு ராஜாஜி அடிக்கடி வருவதுண்டு. ராஜாஜிக்குச் சாத்துக்குடி பழம் பிடிக்கும். பழத்தைத் தாமே தான் உரித்துச் சாப்பிடுவார். சில நாட்களில் திருமதி எம்.எஸ். வீட்டில் அவருக்குச் சாத்துக்குடி கொடுப்பார்கள். ராஜாஜி அதை உரித்துச் சாப்பிடும்போது நான் கவனித்திருக்கிறேன். ஒரு சின்ன செத்தையோ, குப்பையோ கீழே விழாது. அதை அவர் உரித்துச் சாப்பிடுவதே ஒரு தனிக் கலை!
முதலில் பழத்தின் மேல் தோலைப் பக்குவமாக நகத்தால் நடுப்பாதியில் வட்டமாகக் கிறி, இரண்டு கிண்ணங்களாகச் செய்து கொள்வார். பிறகு, ஒவ்வொரு சுளையாக எடுத்து அதன் மீதுள்ள வெள்ளைத் தோல்களை அகற்றி, நார் நரம்புகளை நீக்கி, விதைகளை விலக்கிய பின் முத்துமுத்தான சுளைகளை மட்டும் சாப்பிடுவார்.
பிறகு அந்த நார், விதை எதையும் கீழே எறிய மாட்டார். அத்தனை குப்பைகளையும் அந்தப் பழத்தின் மூடி போன்ற கிண்ணங்களிலேயே அடைத்து நிரப்பிவிடுவார்!
அப்புறம் அந்த இரண்டு கிண்ணங்களையும் ஒன்று சேர்த்து பழையபடியே பந்துபோலச் செய்து கொண்டு, தம் வேட்டியிலிருந்து ஒரு நூலை உருவி அந்த நூலால் அந்தப் பந்தைச் சுற்றிக் கட்டி,தம் ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்.
காரில் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது வழியில் கண்ணில் படும் குப்பைத்தொட்டியில் போட்டுவிடச் சொல்வார். அதுமட்டுமல்ல; அந்த டிரைவர் குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைக் காரில் இருந்தபடியே கண்காணிப்பார். இப்படி எந்தக் காரியம் செய்தாலும் அதைக் கச்சிதமாகச் செய்தால்தான் அவருக்குத் திருப்தி ஏற்படும். அந்தக் காலத்தில் ராஜாஜியை அருகிலிருந்து கூர்ந்து கவனித்து வந்த நான் ராஜாஜியைப் போல் எதையும் துல்லியமாகச் செய்யவேண்டுமென்று ஆசைப்படுவேன்.
ராஜாஜி அளவுக்கு Perfection இருக்காது என்றாலும் ஓரளவுக்காவது இருக்கும் என்று கருதுகிறேன்.



