என்னுரை
சாவி

11. “குவிட் இண்டியா”

வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து ‘குவிட் இண்டியா’ என்று குரல் கொடுத்த மகாத்மா காந்தியுடன் நேரு, படேல் போன்ற மூத்த தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அடியேனும் ஒருவன். காந்திஜி புனாவிலுள்ள ஆகாகான் அரண்மனையில் காவலில் வைக்கப்பட்டு, தேசமே கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் காந்திஜியின் பெயரில் ஓர் அறிக்கை வெளியாயிற்று.

‘இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்பது பற்றி காந்திஜியின் பெயரில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகியிருந்தது. அது ஆட்சேபகரமான துண்டுப்பிரசுரம் என்பதால் மிக ரகசியமாக நண்பர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. தண்டவாளத்தைப் பெயர்க்க வேண்டும், தபாலாபீசைக் கொளுத்த வேண்டும், தந்திக் கம்பிகளை வெட்ட வேண்டும் என்றெல்லாம் அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது நினைத்துப் பார்த்தால் அகிம்சா மூர்த்தியான காந்திஜி அப்படியெல்லாம் வன்முறையைத் தூண்டிவிட்டிருப்பாரா என்று சந்தேகம் எழக் கூடும். ஆனால் அன்றைக்கிருந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் அவரது பெயரால் வெளியான அந்த அறிக்கையைப் பலரும் முழுமையாக நம்பி விட்டார்கள்.

அதுவும் என்னைப் போன்ற இளைஞர்கள் பலரை அந்த வாசகங்கள் வீறு கொள்ளச் செய்ததில் வியப்பில்லை.

அறிக்கையைப் படித்ததும் என்னுள் ரத்தம் வேகமாகக் கொதித்தது.

காந்திஜியே சொல்லிவிட்டார். அப்புறம் என்ன? உடனே செயலில் இறங்க வேண்டியதுதான் என்ற ஆவேசத்துடன் அவசரம் அவசரமாக வெளியே கிளம்பிவிட்டேன்.

நேரே மண்ணடி போஸ்ட் ஆபீஸுக்குப் போய் வாசலில் இருந்த தபால் பெட்டிக்குள் தீக்குச்சிகளைக் கொளுத்திப் போட்டேன். அவை புஸ்ஸென்று புகைந்து போயிற்றே தவிர எரியவில்லை. இதை யாரும் கவனிக்கவில்லை. என்னை யாரும் கைது செய்யவும் வரவில்லை. உள்ளூர இது எனக்கு ஏமாற்றத்தை அளித்ததால் வேறு வழியின்றி நானே செக்குமேடு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்து என் வீரப்பிரதாபத்தைச் சொல்லி, “உடனே வந்து என்னைக் கைது செய்யுங்கள். நான் இங்கே போஸ்டாபீஸ் வாசலிலேயே காத்திருக்கிறேன்’ என்றேன். அடுத்த சில நிமிடங்களுக்குள் போலீஸார் ஒரு வேனில் வந்து என்னைக் கைது செய்து கொண்டு போய் லாக் அப்பில் வைத்தார்கள். கோர்ட் விசாரணைக்குப் பின்னர் ஒன்பது மாதம் சிறைத்தண்டனை பெற்று பெல்லாரி அலிபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எட்டு மாதங்களுக்குப்பின் ஆகஸ்டு தியாகி என்ற முத்திரையுடன் வெளியே வந்தேன்.

சுதந்திரம் பெற்ற பல ஆண்டுகளுக்குப்பின் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மானியமாக நிலம் வழங்கப்படும் என்று அரசாங்கம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. பிரபல காங்கிரஸ் தலைவர் திரு.பக்தவத்சலம் உட்பட பல பிரமுகர்கள் இந்த மானியத்துக்கு மனுச் செய்து பத்து ஏகர் நிலமும் பெற்றுக்கொண்டனர்.

ஏழைத் தொண்டனாகிய நானும் மனுப் போட்டேன்.

நீண்டகாலம் வரை நிலம் வரும் என்று காத்திருந்தேன். ஒரு நாள் என் பெயருக்கு ஒரு தபால் கார்டு வந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி தம் கைப்பட எழுதியிருந்தார். நம் தியாகத்தைப் பாராட்டி நிலம் சாங்ஷன் பண்ணியிருப்பார் என்று ஆவலோடு கார்டைப் படித்தேன். கார்டில் அவர் எழுதியிருந்த வாசகம் வருமாறு

“அன்புள்ள சாவிக்கு, ஆசீர்வாதங்கள்.

தங்களுடைய விண்ணப்பம் பார்த்தேன். நிலம் கேட்டு உங்கள் தியாகத்தை விலை கூற வேண்டியது அவசியம்தானா?” என்று ஒரு கேள்வி கேட்டு கையெழுத்துப் போட்டிருந்தார்.

ராஜாஜியே இப்படி எழுதிவிட்ட பிறகு அந்த நிலம் பற்றிய ஆசையை அப்போதே மறந்துவிட்டேன். எனது அன்றைய பொருளாதார நிலை, அந்த மானியத்தை மறுக்க வேண்டும் என்ற உணர்வை என்னுள் தோற்றுவிக்கவில்லை. ஆனாலும் ராஜாஜியே கடிதம் எழுதிவிட்டதால் அதை வேதவாக்காக மதித்து தியாகி நிலத்தையும் வேண்டாமெனத் தியாகம் செய்துவிட்டேன்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *