
என்னுரை
சாவி
2. எஸ்.எஸ். வாசன்
வாசன் என்ற பெயரைக் கேட்டதுமே, ஒளவையார் படம் எடுத்த சினிமா அதிபர் என்றுதான் பல பேருக்கு நினைவு வரும்.
ஆனால், பட அதிபர் வாசனையும் மீறி அவருக்குள்ளே இருந்த பத்திரிகை ஆசிரியர் வாசனை பல பேருக்குத் தெரிந்திருக்காது. அந்த மாமனிதரை ‘குளோஸ் அப்’ பில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றவர்களில் நானும் ஒருவன்.
திரு.வாசன் தலைமையில் இயங்கிய ஆசிரியர் குழுவினருடன் இணைந்து ஆனந்த விகடனில் பணிபுரிந்தபோது பத்திரிகைத் தொழிலில் நான் படித்துக் கொண்ட பாடங்களும், நுட்பங்களும் அதிகம். திரு.வாசனின் கம்பீரமான, கண்ணியமான தோற்றத்துக்கு ஏற்ற மாதிரியே அவருடைய பேச்சும் செயலும் இருக்கும். பொருள் செறிந்த பேச்சு, எதையும் தீர்க்கமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல், எடிட்டிங் திறமை, நகைச்சுவை உணர்வு, மற்றவர்களின் திறமையைப் புரிந்து பாராட்டி, தட்டிக் கொடுக்கும் தாராள மனப்பான்மை, மலை புரண்டாலும் நிலை கலங்காத மனோதிடம் – இவ்வளவும் ஒருங்கிணைந்த ஒரு பர்ஸனாலிடிதான் வாசன்.
1962-ல் பொதுத் தேர்தல் நடைபெற்ற சமயம் வாசன் அவர்கள் ஜெமினி ஸ்தாபன நிர்வாகப் பொறுப்பை ஒரு சட்டைபோல் கழற்றி வைத்துவிட்டு, ஆனந்த விகடன் தலையங்கம் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தேடும் நோக்கத்துடன் தினமும் விகடன் அலுவலகத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். ஆனந்த விகடனின் ஸர்க்குலேஷன் பலம், வாசகர்களிடையே அதற்குள்ள செல்வாக்கு இரண்டையும் பயன்படுத்தி காங்கிரஸின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். அதுவே இந்த நாட்டுக்கு விகடன் செய்யும் சிறந்த பணியாக இருக்க முடியும் என்று அவர் கருதினார். அந்த நாட்களில், வீட்டை மறந்து, ஸ்டுடியோவை மறந்து, இரவு பகலாக ஆனந்த விகடனிலேயே ஆசிரியர் குழுவோடு அமர்ந்து அரசியல் விஷயங்களை அலசி ஆராய்ந்து விவாதிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்.
அவருடைய நாட்டுப் பற்றையும், பத்திரிகைத் தொழிலில் அவருக்குள்ள ஆர்வத்தையும், அந்தத் தொழிலை அவர் எந்த அளவு நேசிக்கிறார் என்பதையும் அவரோடு பழகிய காலத்தில் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு நாள் அப்படித்தான், நாங்கள் எல்லோரும் அந்த வாரம் எழுத வேண்டிய தலையங்கம் பற்றிய சர்ச்சையில் மூழ்கியிருந்தோம். அன்றைய ‘எடிடோரியல் டிஸ்கஷன்’ மிகத் தீவிரமாகவும், சூடாகவும் நடந்து கொண்டிருந்த நேரம்.
திடீரென்று பூஜை வேளையில் கரடி புகுந்த மாதிரி, எங்கள் சிந்தனைக்குத் தடைக்கல் போட்டதுபோல் டெலிபோன் மணி ஒலித்தது. வாசன் மிக மிக எரிச்சலுடன் ரிசீவரை எடுத்துப் பேசினார்.
“யெஸ்! யார் பேசுவது? என்ன விஷயம்?” என்று புருவத்தை நெரித்துச் சிடுசிடுத்தார்.
நான்சென்ஸ் ! இதற்காகவா என்னைக் கூப்பிட்டாய்? இப்போது அதுதானா எனக்கு முக்கியம்? அது உங்களுடைய தலைவலி என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?”
‘………..’
“குதிரை செத்துப் போச்சுன்னா உடனே அதற்கு எவ்வளவு நஷ்ட ஈடு தரணுமோ அதைக் கொடுத்து செட்டில் பண்ண வேண்டியதுதானே? நான் இப்போது எவ்வளவு முக்கியமான டிஸ்கஷனில் இருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரிய வேண்டாமா?” என்று மிகக் கடுமையாகப் பேசி போனை வைத்துவிட்டார்.
விஷயம் இதுதான் :
பல்லாவரம் பக்கத்திலுள்ள ஒரு குன்றில் ஜெமினி படத்தின் அவுட்டோர் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. வஞ்சிக்கோட்டை வாலிபனோ அல்லது வேறு ஏதோ தெரியவில்லை. குதிரைகள் பூட்டிய ராஜரீக வண்டி ஒன்று மலைப் பாதையில் வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென சக்கரம் கழன்று வண்டியே கவிழ்ந்து குதிரை இறந்து விடுகிறது. இறந்துபோன அந்தக் குதிரை உயர்ந்த ஜாதிக் குதிரை. மைசூர் மகாராஜாவுக்குச் சொந்தமானது. மிகுந்த பிரயாசையின் பேரில் வரவழைக்கப்பட்ட குதிரை. அந்தக் குதிரை இறந்து போனதும் படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்கள் பதறிப்போய் வாசனுக்கு டெலிபோனில் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
திரு. வாசன் அவர்கள் அதையெல்லாம் சட்டென்று எங்களிடம் சொல்லி விடவில்லை. டிஸ்கஷன் எல்லாம் முடிந்து, நாங்கள் எல்லோரும் வேலை முடிந்த திருப்தியுடன் சாப்பிட்டு விட்டு வந்த பிறகுதான் சாவகாசமாகச் சொல்லி முடித்தார். ‘நாமாக இருந்திருந்தால் அந்த நேரத்தில் எப்படிப் பதறிப் போயிருப்போம்?’ என நான் எண்ணிப் பார்த்தேன்.
வாசன் அடிக்கடி சொல்வதுண்டு. “பத்திரிகை விஷயமாய் உங்களோடு கலந்துரையாடுவதில் எனக்குள்ள மகிழ்ச்சிக்கும், இன்பத்துக்கும் ஈடு எதுவுமில்லை. சினிமாத் தொழிலில் நிறையப் பணம் வருகிறது. பத்திரிகைத் தொழிலில் அந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடியாதுதான். ஆனால் உங்களைப் போன்ற அறிவு ஜீவிகளோடு உட்கார்ந்து தேசிய அளவில் அரசியல் விஷயங்களை அலசும்போது ஏற்படுகிற திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் அது ஈடாகுமா? படத் தொழில் ‘பேயிங் பிஸினஸ்!’ பத்திரிகைத் தொழில் ‘பேயாத பிஸினஸ்!’ என்று சொல்லிவிட்டுச் சிரிப்பார்.



