
என்னுரை
சாவி
7. கர்நாடக இசை
கர்நாடக இசையின் மீது எனக்குள்ள ஆர்வமும், ஈடுபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.
சிறு பிராயத்திலேயே எங்கே கச்சேரி நடந்தாலும் அங்கெல்லாம் ஓடிப்போய் உட்கார்ந்து கொள்வேன். அதாவது டிக்கெட் இல்லாத கச்சேரிகளில் மட்டும்!
என்னால் மறக்கவே முடியாத கச்சேரி ஒன்று உண்டு. சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நடந்த திருமணக் கச்சேரி அது. வருடம் நினைவில் இல்லை.
சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை வாய்ப்பாட்டு, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிரா , என்று எல்லாம் பிள்ளைமார்களாகவே அன்று குழுமியிருந்தார்கள். மிருதங்கம் மட்டும் பாலக்காடு மணி ஐயர்.
அன்று பழனி சுப்பிரமணியப் பிள்ளைதான் மிருதங்கம் வாசித்திருக்க வேண்டும். ஆனால் வாசிக்கவில்லை. காரணம் அன்று நடந்தது அவருடைய திருமணமாதலால் மணமேடையில் உட்கார வேண்டிய மாப்பிள்ளையே கச்சேரி மேடையில் உட்கார விரும்பாததுதான். எனவே தனக்கு பதில் பாலக்காடு மணி ஐயரை வாசிக்கச் சொல்லியிருந்தார்.
கச்சேரியின் தரம் பற்றிச் சொல்லவா வேண்டும்! கணீரென்ற குரல், தேர்ந்த விரல்கள். எடுத்த எடுப்பிலேயே களை கட்டிவிட்டது.
சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை எப்போதும் லயத்துக்கு முக்கியத்துவம் தருபவர். ராஜமாணிக்கம் பிள்ளையோ தேனாய்ப் பொழிந்து தள்ளுபவர். மிருதங்கம், கஞ்சிரா பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஒன்று சிம்மம் என்றால் இன்னொன்று புலி!
மிருதங்கத்தில் இரண்டு பக்கம் இருப்பது தெரியும். வலது புறம் வாசிக்கப்படும் வட்டத்தை வலந்தரை என்றும், இடதுபுறத்தைத் தொப்பி என்றும் குறிப்பிடுவார்கள்.
கச்சேரி நல்ல ‘டெம்ப்போ’வில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று மிருதங்கத்தின் தொப்பியில் தொய்வு நேர்ந்து ‘பொத் பொத் என்று சத்தம் வந்தது. வேறு மிருதங்கத்தை மாற்றிக் கொள்ளவும் முடியாத இக்கட்டான நிலை.
பாலக்காடு மணி தவித்துப் போனார். என்ன செய்வது என்று தெரியவில்லை. கச்சேரியோ கன கம்பீரமாக அனைவரையும் சொக்க வைத்துக் கொண்டிருந்தது. ரசிகர்கள் உற்சாகமாய்த் தாளம் போட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள். இடையில் நிறுத்துவதோ, வேறு ஏதும் செய்வதோ இயலாதநிலை. திருஷ்டிப் பரிகாரமாகப் போய்விடுமே!
கஞ்சிரா தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் மேதைத்தனம் இந்த இக்கட்டான தருணத்தில் மிக அற்புதமாய் வெளிப்பட்டது.
அவர் பாலக்காடு மணி ஐயரைப் பார்த்துச் சொன்னார் :
“அப்பனே! நீ வலந்தரையைப் பார்த்துக்கொள். தொப்பியைப் பற்றிக் கவலைப்படாதே. அதை நான் கவனித்துக்கொள்கிறேன்”.
என்ன செய்தார் தெரியுமா?
மிருதங்கத்தில் தொப்பி தரவேண்டிய ஒலியைத் தம் கஞ்சிராவிலேயே கொண்டு வந்து காட்டினார். அதாவது அவர் கஞ்சிராவையும் வாசித்துக் கொண்டு அதே சமயம் மிருதங்கத்தில் தொப்பி செயல்பட வேண்டிய கட்டத்தில், காலப்பிரமாணம் தவறாமல், அந்த ஒலியையும் எழுப்பி பாலக்காடு மணி ஐயர்தான் தொப்பி வாசிக்கிறாரோ என்ற பிரமையை ஏற்படுத்தி ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை எழுப்பினார்!
அந்தக் கால லயக்கலைஞர்கள் தங்கள் தொழிலில் அப்படி ஒரு அதிசயமான சாதனையைச் செய்து காட்டினார்கள். இசைக்கலைஞர்களோ அசுரத்தனமாய்ச் சாதகம் செய்து தேவகானமாய்ப் பொழிந்து தள்ளினார்கள்.
எனக்குத் தெரிந்த இரண்டு ஜாம்பவான்களைப் பற்றிச் சொல்கிறேன். ஒருவர் ஜலதரங்கம் ரமணய்ய செட்டியார். இன்னொருவர் பாலக்காடு மணி ஐயர். அந்த இரண்டு பேருடனும் நான் நெருங்கிப் பழகியிருக்கின்றேன்.
ரமணய்ய செட்டியார் இசையில் ஆழ்ந்த புலமை பெற்றவர். சுருதி சேர்க்கும்போது காதைத் தீட்டிக்கொண்டு, மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார். அகத்தியர் போன்ற உருவம். ஏழு கிண்ணங்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு அவர் சுருதி சேர்க்கும் விதமே அலாதி. ஸரி கம பதநியில் எந்த ஸ்வரமானாலும் ஸுஸ்வரமாக ஒலிக்க வேண்டும்.தமக்கு திருப்தி ஏற்படும் வரை தண்ணீரை அந்தக் கிண்ணங்களில் கூட்டியும் குறைத்தும் மாற்றிக்கொண்டே இருப்பார். கனமான தண்ணீரா, லேசான தண்ணீரா என்று நுட்பமாக ஆராய்ந்து பார்ப்பார்.
அவர் எந்த அளவுக்கு நுணுக்கமாகச் செயல்படுவார் என்பதற்கு ஓர் உதாரணம்;
ஏழு கிண்ணங்களையும் அர்த்த சந்திர வடிவில் வைத்துக் கொண்டு அவற்றில் ஜலத்தை நிரப்பித் தட்டித் தட்டி ஸ்வரங்களைப் பேச வைப்பார். ‘ப் ஸ்வரம் சரியாக ஒலிக்கவில்லை என்றால் மிக மிகக் குறைவான அளவில் அந்தக் கிண்ணத்தில் தண்ணீர் விட்டுப் பார்ப்பார். அந்த அளவுக்கு விட்டால்தான் ‘ப’ பேசும். ஒரு ‘ட்ராப்’ என்பார்களே, அப்படி.
ஒரு இங்க் ஃபில்லரில் தண்ணீரை இழுத்து அதன் வழியாக ஒரு ட்ராப், ஒரே ஒரு ட்ராப் விட்டுத் தட்டினால் ‘ப பளிச்சென்று பேசும்!’
பாலக்காடு மணி அய்யரைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
மயிலாப்பூர் எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் வீட்டுத் திருமணம்.
அன்று மாலை அரியக்குடி கச்சேரி. பாலக்காடு மணி அய்யர் மிருதங்கம்.
ஆனால் அன்று மணி அய்யர் சென்னையில் இல்லை. பம்பாயிலிருந்து வந்து சேர வேண்டும். மாலை ஐந்து மணி அளவில் விமானத்தில் வந்து மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கினார்.
கச்சேரிக்கு எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். அரியக்குடியும் வந்து மேடையில் அமர்ந்து விட்டார். வயலின், கடம் எல்லோரும் வந்தாயிற்று. மணி ஐயர் மட்டும் வரவில்லை. திருமண வீட்டார் அருகிலுள்ள ஓட்டலுக்குக் கார் அனுப்பி மணி ஐயரை அழைத்து வரச் சொன்னார்கள்.
“மன்னிக்கணும், நான் இப்போது வருவதற்கில்லை. ஆறரை மணிக்கு வருகிறேன்” என்றார் மணி அய்யர்.
“கச்சேரிக்கு எல்லோரும் வந்து காத்திருக்கிறார்கள்” என்று பரபரத்தார் அவரை அழைக்கப் போனவர்.
“தயவு செய்து என்னைப் புரிஞ்சுக்கணும். நான் இப்போதுதான் ப்ளேனில் வந்திருக்கிறேன். அந்தச் சப்தம் ‘கும்’ என்று இன்னும் என் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. காதிலேயே தேங்கிக் கிடக்கும் சத்தத்தோடு போய் உட்கார்ந்தால் சரியாகச் சுருதி சேர்க்க முடியாது. பிளேன் ஸவுண்ட் காதிலிருந்து கொஞ்சம் க்ளியர் ஆகட்டும். லேட்டானாலும் பரவாயில்லைன்னு சொல்லுங்க. வாசிப்பு சுத்தமாக இருக்க வேண்டாமா?” என்று விநயமும், அதேசமயம் சற்று கண்டிப்பும் கலந்த குரலில் சொல்லி அனுப்பி விட்டார் மணி ஐயர்.
வேறு வழியின்றி, மேலும் அரை மணி நேரம் காத்திருந்து, தாமதமாகத்தான் கச்சேரியைத் தொடங்க வேண்டியதாயிற்று.
இத்தகைய அபூர்வமான வித்வான்களை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. இசை உலகில் மட்டும் அல்ல. கலைத்துறைகள் எல்லாவற்றிலுமே தரம் குறைந்து போயிருக்கிறது. Art for art sake என்பது போய் Art for money sake என்றாகிவிட்டது.



