
என்னுரை
சாவி
8. ஜி.டி.நாயுடு
திரு.ஜி.டி.நாயுடுவுக்கு அப்பளம் என்றால் அலர்ஜி.
அவர் ஒரு சமயம் கேரளா போயிருந்தபோது அங்கே ஒரு ஊரில் அப்பள மாவைக் கால்களால் மிதித்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்துப் பதறிப் போனார். “சீ, அசிங்கம்! இனிமேல் அப்பளத்தைக் கையாலும் தொடமாட்டேன்” என்று விரதம் எடுத்துக் கொண்டார்.
நாயுடு அவர்கள் இந்த அநியாயத்தை ஒரு முறை தமிழ் அறிஞர் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களிடம் சொல்லி முறையிட்டபோது, “அப்படியா!இன்றோடு நீங்க அந்த கேரளா அப்பளத்தை மறந்துடுங்க.இனி நான் உங்களுக்கு எங்கள் வீட்டில் அப்பளம் தயாரித்து அவ்வப்போது அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னது மட்டுமல்லாமல், நாயுடுவின் கடைசி காலம் வரை அனுப்பிக் கொண்டும் இருந்தார்.
நாயுடுவின் மகன் ஜி.டி.கோபாலின் திருமணம் கோவை ‘கோபால் பாக்’ பங்களாவில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த மங்கள நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன்.
‘இந்தக் கல்யாணத்தில் அப்பளமும், அசைவமும் கண்டிப்பாகப் பரிமாறக்கூடாது’ என்று நாயுடு தம் குடும்பத்தாரிடம் ஓர் உத்தரவுபோல் சொல்லி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அதுபற்றி அவரிடம் நான் எதுவுமே கேட்கவில்லை.
திருமணத்தன்று காலையில் நான் நாயுடுவைப் பார்த்து வணக்கம் சொல்லிய போது அவர் ‘வாங்க’ என்று கைகூப்பியபடி, “இப்படியே என்னோடு கொஞ்சம் வரீங்களா? சமையற்கட்டுப் பக்கம் வரை போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்று அழைத்துச் சென்றார்.
நாயுடுவைக் கண்டதும் சமையலறையில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். சமையற்கட்டில் இவரது கட்டளையை மீறிப் பொரித்து வைக்கப்பட்டிருந்த அப்பளக் கூடைகளையும், சமைக்கப்பட்டிருந்த அசைவ ‘அயிட்ட’ங்களையும் சட்டென்று அவர்களால் மறைத்துவிட முடியவில்லை. நாயுடுவின் கூர்மையான கண்கள் அந்த அப்பளக் கூடைகளைக் கவனிக்கத் தவறவும் இல்லை.
“பார்த்தீங்களா! இப்படி எதையாவது இவங்க செய்வாங்கன்னு சந்தேகப்பட்டுதான் இங்கே வந்தேன். அப்பளம், போடலைன்னா கல்யாணச்சாப்பாடு போட்டது மாதிரி இருக்காதுன்னு வீட்டில் உள்ளவங்க சொல்லியிருப்பாங்க. நான் நெனச்சது சரியாப் போச்சு” என்று கோபமாக அந்த அப்பளக் கூடைகளை ‘தரதரவென்று குழாயடிக்கு நகர்த்திக் கொண்டு போனார். என்னவோ விபரீதம் நடக்கப் போகிறது என்று எல்லோரும் நடுங்கிப் போனார்கள்.
வேகமாக நடந்த நாயுடு குழாயடியில் போய் நின்றார். இழுத்து வந்த அப்பளக் கூடைகளை ஒவ்வொன்றாக குழாயின் அடியில் தள்ளி வைத்துத் தண்ணீரைத் திருப்பி விட்டார். அப்பளம் முழுதும் நனைந்து பாழாய்ப் போயிற்று!
ஒரு வருடம் கழித்து மீண்டும் கோவை சென்றபோது நாயுடு அவர்களைப் பார்க்க ‘கோபால்பாக் போயிருந்தேன்.
வாழைப்பழம் தந்து உபசரித்தார். ஒரு பழத்தைச் சாப்பிட்டதும் “இது என்ன பழம் சொல்லுங்க பார்ப்பம்” என்று ஒரு புதிர் போட்டார்.
‘ரஸ்தாளி’ என்றேன்.
உடனே “நீங்க என்ன நார்த் ஆர்க்காடா?” என்று கேட்டார் நாயுடு. “கரெக்டாச் சொல்லிட்டீங்களே, எப்படி?” என்று வியந்தேன்.
நாயுடுவே அந்த சூட்சுமத்தை விளக்கினார்
“என் மகன் திருமணத்தன்று குழாயடியில் அப்பளத்தின் மீது தண்ணீரைத் திருப்பி விட்டேனே, ஞாபமிருக்கா? மறுநாள் அந்த அப்பளங்களைக் கொண்டு போய் என் தோட்டத்து வாழை மரங்கள் அருகே வைத்துக்கொண்டு துப்பாக்கிக் குண்டுகளால் வாழை மரங்களின் அடித்தண்டில் பெரிய பெரிய துளைகள் போட்டேன். அந்தத் துளைகளில், நனைந்து போன அப்பளங்களையும் அசைவப் பண்டங்களையும் திணித்து மூடி விட்டேன்.
அந்த வாழை மரங்கள் இப்போது பெரிதாகி குலை தள்ளி பழம் தருகின்றன. அந்தப் பழங்கள் வித்தியாசமாகவும் பெரிய பெரிய சைஸிலும் உள்ளன.
உங்களிடம் இப்போது தந்தது அந்தப் பழங்களில் ஒன்றுதான்” என்றார்.
வடஆர்க்காட்டில் ரஸ்தாளி ஜாதிதான் அதிகம். அந்த ருசிதான் எனக்குப் பழக்கம். நாயுடு கொடுத்த பழத்தின் சுவையும் கிட்டதட்ட ரஸ்தாளி போலவே இருந்ததால் ரஸ்தாளி என்றேன்.
‘வாழைப்பழம் சாப்பிடுகிறவர்களிடம் ஒரு சைக்காலஜி உண்டு. தங்கள் பிராந்தியங்களில் விளையும் பழங்களின் ருசிதான் அவர்களுக்குத் தெரியும். எந்த வகை வாழைப்பழமாயிருந்தாலும் அது அவர்களுக்குப் பழக்கமான பழத்தின் ருசி போலத்தான் தோன்றும். அதனால் அந்தப் பழ வகையின் பெயரைத்தான் சொல்வார்கள். இதிலிருந்து அவர்கள் எந்த மாவட்டம் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுவேன்!” என்று கூறிச் சிரித்தார் நாயுடு.
இதுபோலவே வருகிறவர்களுக்கெல்லாம் வாழைப் பழங்களைக் கொடுத்து, ஒவ்வொருவரின் அபிப்ராயத்தையும் தனித்தனியாகக் கேட்டு அவர் அவர்களின் சொந்த மாவட்டத்தைச் சொல்லி வியக்க வைத்துக் கொண்டிருந்தார் நாயுடு. இவரை விந்தை மனிதர் என்றும் தாவர விஞ்ஞானி என்றும் சொல்லலாம்தானே!



