
என்னுரை
சாவி
9. லண்டனில் பெரியார்
என்னால் மறக்க முடியாத என் நெருங்கிய நண்பர்களில் கோவை தொழிலதிபர் திரு.ஜி.டி.நாயுடு அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை என்னிடம் விவரிக்கத் தவறியதில்லை.
ஒருசமயம், திரு.நாயுடு அவர்கள் லண்டன் போயிருந்தபோது அங்கே ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது பெரியார் அவர்கள் லண்டனுக்கு வந்திருப்பதாகவும், அதே ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் நாயுடுவின் காதுக்குச் செய்தி எட்டியது. நாயுடு மிகுந்தமகிழ்ச்சியோடு பெரியார் தங்கியிருந்த அறைக்குப் போன் செய்து “நீங்க லண்டனுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். எப்போது வந்தீங்க? உங்களைப் பார்த்துப் பேச ஆவலாயிருக்கிறேன்” என்றார்.
“நானும் இப்போதுதான் கேள்விப்பட்டேன். நீங்களும் இதே ஓட்டலில்தான் தங்கியிருப்பதாகச் சொன்னார்கள்” என்றார்.
ஆமாம், நான் இப்போது கீழே டைனிங் ஹாலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். தாங்கள் தயவு செய்து அங்கே வந்து விடமுடியுமா?” என்று கேட்டார் நாயுடு-
“சரி” என்றார் பெரியார்.
பெரியார் வருவதற்கு முன்பே டைனிங் ஹாலுக்குப் போய்விட்ட நாயுடு பெரியாருக்கும் சேர்த்து உணவு ஐட்டங்களுக்கு ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தார்.
பெரியார் அங்கு வந்து சேர்ந்த ஒரு ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே ஆர்டர் பண்ணிய அயிட்டங்களும் மேஜைக்கு வந்து விட்டன.
“சாப்பிடுங்க ஐயா…” என்றார் நாயுடு.
“நான் இப்போதுதான் சாப்பிட்டேன். சாப்பிட்டு விட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார் பெரியார்.
“இல்லை.நீங்கள் மறுக்கக்கூடாது- கொஞ்சமாவது சாப்பிடுங்கள்” என்று வற்புறுத்தினார் நாயுடு.
“அதெல்லாம் முடியாது, நான் ஏற்கெனவே வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டுத் திணறிக் கொண்டிருக்கிறேன். இனி என்னால் ஒரு துண்டு ரொட்டிகூடச் சாப்பிட முடியாது! தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்” என்றார் பெரியார்.
“நான் உங்களை விடப்போவதில்லை, உங்களுக்கும் சேர்த்து ஒரு செட் ஆர்டர் பண்ணியாச்சு. தாங்கள் சாப்பிடாவிட்டால் அவ்வளவும் வீணாகிவிடும்” என்றார் நாயுடு.
பெரியார் தர்மசங்கடத்தில் தவித்தார். சற்று யோசித்துவிட்டு, “அப்படியா?.. எவ்வளவு ரூபாய்க்கு ஆர்டர் பண்ணினீங்க?” என்று கேட்கவும், ‘சுமார் முன்னூறு ரூபாய்க்கு’ என்றார் நாயுடு. அந்தக் காலத்தில் முன்னூறு ரூபாய் என்பது பெரிய தொகை.
“அப்படியா! அவ்வளவு பணமா!” என்று வியந்த பெரியார் சட்டென அத்தனை ஐட்டங்களையும் தனக்கு எதிரில் நகர்த்தி வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்துவிட்டார்!
இந்தச் சம்பவத்தை என்னிடம் விவரித்த நாயுடு அவர்கள் “இதிலிருந்து பெரியாரைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டார்.
“பெரியார் ரொம்ப சிக்கனக்காரர் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே! செலவு பண்ணாமல் இருப்பது மட்டுமல்ல சிக்கனம். உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருப்பதும் ஒருவகை சிக்கனம்தான். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு வந்திருந்த போதிலும், தான் சாப்பிடாமல் போனால் அத்தனை உணவும் வீணாகிவிடுமே’ என்ற பெரியாரின் சிக்கன உணர்வுதான் அவரது மனச்சாட்சியை உறுத்தியிருக்க வேண்டும்” என்றேன்.



