என்னுரை
சாவி

3. தீரர் சதாசிவம்

பிராட்வே 144. முகவரிக்கு நான் அடிக்கடி போவது வழக்கம். அங்கே தான் விகடன் அலுவலகம் இருந்தது.ஏதாவது ஜோக் எழுதிக் கொண்டு போய் நேரிலேயே கொடுத்து விட்டு வருவேன்.

டிராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்த காலம் அது – ரொம்ப தூரத்தில் மண்ணடிக்கு அருகில் டிராம் வரும்போதே டிங்-டிங் என்று அதன் மணி ஓசை விகடன் அலுவலகம் வரை கேட்கும்.

அந்த ஓசை கேட்டதும் விகடன் அலுவலகத்தில் ஓர் இளைஞர் பரபரப்படைந்து விடுவார். டிராம் வருவதற்குள் சில வேலைகளை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு டிராமைப் பிடிக்க வேகமாக வாசலுக்கு விரைவார். அந்த இளைஞர் டிராம் வண்டியில் மோஷனில் ஏறும் காட்சியை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

அவர் வேறு யாருமல்ல பிற்காலத்தில் கல்கி அதிபர் திரு.டி.சதாசிவம் என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் தான். திருமதி எம்.எஸ். அவர்களைத் திருமணம் செய்து கொண்ட சுந்தரபுருஷர்தான்.

திரு.சதாசிவம் அவர்கள் விகடன் அலுவலகத்தை விட்டு விலகிய பின்னர் ‘ஹநுமான்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட பத்திரிகையில் சேர்ந்தார். பரதன் என்கிற ஆர்.பார்த்தசாரதி, ஹநுமான் பத்திரிகையின் ஆசிரியராகவும் திரு.சதாசிவம் விளம்பர நிர்வாகியாகவும் இணைந்து அந்தப் பத்திரிகையைச் சில காலம் வெற்றிகரமாக நடத்தினார்கள்.

அந்தக் காலத்தில் (1936) டெலிபோனைச் சுழற்றியே விளம்பரங்களைப் பெற்றுவிடும் தனித்திறமை திரு சதாசிவத்துக்கு இருந்தது.

கேசரி பிரிண்டிங் ஒர்க்ஸ் சுந்தரம் ஐயரும், பிரபல காங்கிரஸ்காரர் ரகுராஜபாரதியும் ஹநுமான் பத்திரிகையின் உரிமையாளர்கள். நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக திரு.பார்த்தசாரதியும் சதாசிவமும் அந்தப் பத்திரிகையை விட்டு விலக நேர்ந்தது.

திரு.சதாசிவம் அவர்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும், ஒரு தவமாக இருந்து, அதில் வெற்றி காணும் வரை ஓயமாட்டார்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது துல்லியமாக இருக்க வேண்டும். எவ்விதத் தொய்வும் இன்றி நிறைவேற வேண்டும். நானறிந்தவரை  Perfectionist என்ற சொல் திரு.சதாசிவம் அவர்களுக்குத்தான் முழுமையாகப் பொருந்தும்.

திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி சேவாசதனம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. கிண்டியில் இருந்த ஒரு ஸ்டுடியோவில் நாள்தோறும் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. பத்திரிகை தொடர்பாக திரு.சதாசிவம் அடிக்கடி அந்தப் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய் வருவார்.

அப்போது எம்.எஸ்.ஸுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது.

திரு.சதாசிவம் கர்நாடக இசைப்பிரியர், சிறந்த ரசிகர். அவரே நன்றாகப் பாடுவார். ஒரு காலத்தில் தம்முடைய கம்பீரமான குரலில் தேசிய கீதங்களைப் பாடி கதராடைகள் விற்பனை செய்தவர். எனவே எம்.எஸ்.இவரைக் கவர்ந்ததிலும், எம்.எஸ்.ஸை இவர் கவர்ந்ததிலும் வியப்பு ஏதுமில்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் சதாசிவம் சுபலட்சுமியின் திருமணம் திருநீர்மலைத் திருக்கோயிலில் மிக எளியமுறையில் நடைபெற்றது.

இந்தத் திருமண தம்பதியரின் போட்டோ, அப்போது பம்பாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இல்லஸ்ட்ரேட் வீக்லியில் வெளியாயிற்று.

நான் அந்தப் படத்தைக் கத்தரித்து என் நோட்டுப் புத்தகம் ஒன்றில் ஒட்டி வைத்திருந்தது இன்னும் என் நினைவில் உள்ளது.

திருமணத்துக்குப் பின் திரு.சதாசிவம் தம்பதியர் கீழ்ப்பாக்கத்துக்குக் குடியேறியதும், அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து உச்சத்தைத் தொட்டதும் தமிழகம் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகமே அறிந்த உண்மை- திரு.சதாசிவம் விடுதலைப் போரில் கலந்து கொண்டு சிறைபுகுந்து தியாகங்கள் புரிந்தவர். அன்று முதல் இன்று வரை தூய கதராடையே அணிந்து கொண்டிருப்பவர்.

தேசியவாதி என்கிற முறையில் ராஜாஜி, மதுரை வைத்தியநாதய்யர், திருச்சி டி.எஸ்.எஸ்.ராஜன் போன்ற தலைவர்களுடனும் மாயவரம் சாமி அய்யங்கார், ஆர். கே.சுப்பிரமணி பிள்ளை போன்ற காங்கிரஸ் பிரமுகர்களோடும் நட்போடு நெருங்கிப் பழகியவர்.

1940-ல் ஆசிரியர் கல்கி அவர்கள் காந்திஜியின் அனுமதியுடன் தனிப்பட்ட சத்தியாக்கிரகப் போரில் ஈடுபட்டு சிறைசெல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது திரு.கல்கி திரு. கல்கி ஆனந்த விகடனில் பொறுப்பாசிரியராக இருந்ததால் சத்தியாகிரகப்போரில் ஈடுபட விகடன் அதிபர் திரு.வாசனிடம் கடிதம் முலம் அனுமதி கேட்டிருந்தார். தன்னிடம் முன் அனுமதி பெறாமலேயே கல்கி சத்தியாக்கிரகப்போரில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தது வாசனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர்களிருவருக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட, அதன் காரணமாக கல்கி கிருஷ்ணமூர்த்தி விகடனை விட்டு விலக நேர்ந்தது.

திருமதி.எம்.எஸ். நடித்த சகுந்தலை படம் அப்போதுதான் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த நாட்களில் கல்கி எழுதும் கலை விமரிசனங்கள் தமிழ் வாசகர்களுக்கு வேதவாக்கு. அதிலும் அவர் எழுதும் சினிமா விமரிசனத்தை மிகுந்த ஆவலோடு படிப்பார்கள். கல்கியின் பேனா ஒரு படத்தைப் பாராட்டி விட்டால் அந்தப் படம் வெற்றி விழாக்கள் கொண்டாடத் தவறியதில்லை. இந்த உண்மையை சதாசிவம் அவர்கள் நன்கு அறிந்திருந்தார். அது மட்டுமல்ல; கல்கி எழுத்தில் அவருக்கு ஒரு பிரமையே இருந்தது.

சகுந்தலைக்கு கல்கி விமரிசனம் எழுதினால் சிறப்பாக இருக்குமே, அதனால் படத்துக்கு வெற்றியும் பெருமையும் கிட்டுமே என்று சதாசிவம் எண்ணினார். ஆனால், அது அத்தனை எளிதான காரியமாகத் தோன்றவில்லை. காரணம் கல்கி அப்போது மாயவரம் சிறையிலிருந்தார்.

மாயவரம் சாமி அய்யங்கார், ஆர்.கே.சுப்பிரமணியப்பிள்ளை போன்ற பிரமுகர்களெல்லாம் கல்கியின் சத்தியாக்கிரகம் மாயவரத்தில்தான் நடக்க வேண்டும் என்று விரும்பி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மூன்று மாதம் சிறைத்தண்டனை பெற்ற கல்கி மாயவரம் சப்ஜெயிலில் காவல் வைக்கப்பட்டார். சிறைக்குள்ளிருந்த கல்கி அவர்களைத் தம்முடைய செல்வாக்கினால் வெளியே அழைத்துச் சென்று, தஞ்சாவூரில் ஓடிக் கொண்டிருந்த சகுந்தலை படத்தை பார்க்க வைத்ததுடன், அன்றிரவே கல்கியிடம் ஒரு விமர்சனத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு, அவரை பத்திரமாக மறுபடியும் ஜெயிலில் கொண்டு போய்ச் சேர்த்தும் விட்டார் சதாசிவம்! அந்த விமரிசனம் ஹிந்து பத்திரிகை உட்பட பல பத்திரிகைகளில் வெளியாயிற்று.

திரு.சதாசிவம் அவர்களை ஏற்கனவே கல்கி நன்கு அறிந்திருந்த போதிலும் இத்தனை சாமர்த்தியசாலி என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் சொந்தப்பத்திரிகை தொடங்கினால் திரு.சதாசிவத்தின் நிர்வாகத்தில் தான் அதை நடத்த வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தார்.

கடல் போன்ற கல்கி கார்டன்ஸ் பங்களா ஒரு காலத்தில் விருந்தோம்பலுக்குப் பெயர் போன இடமாகத் திகழ்ந்தது. அநேகமாக வாரம் ஒரு பெரிய விருந்து அந்த வீட்டில் நடக்கத் தவறியதில்லை.திரு. சதாசிவம் அவர்களது அறுசுவை உண்டி பிரசித்தமானது. சிரித்த முகத்துடன் அவர் விருந்தினர்களை உபசரிக்கும் பாங்கும், நகைச்சுவை கலந்த பேச்சும் விருந்தினர்களை மகழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.

ம.பொ.சி. ஒருமுறை சதாசிவம் வீ ட்டுக்குச் சாப்பிட அழைக்கப்பட்டிருந்தார். விருந்தின் இடையே முக்கிய ஐட்டமாகப் பால் பாயசம் வந்தது. ‘ஐயோ! என்னால் முடியாது. இனி வயிற்றில் இடமில்லை’ என்று உரிமையோடு மறுத்தார் ம.பொ.சி. திரு.சதாசிவம் சிரித்துக் கொண்டே ‘அப்படிச் சொல்லாதீர்கள். திருவனந்தபுரம் போயிருக்கிறீர்களா? அங்கே பத்மநாப ஸ்வாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். கோயிலைச் சுற்றிப் பெரும் கூட்டம் நிரம்பி வழியும். கூட்டத்தின் நெருக்கடியில் மூச்சுத் திணறும். மகாராஜா சுவாமி தரிசனத்துக்கு வருவார். அவர் வருகிறார் என்றதுமே கூட்டத்தின் இடையில் வழி கிடைத்துவிடும். இடைஞ்சலே இல்லாமல் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்து விடுவார். இப்போது இந்தப் பால் பாயாசம் மகாராஜா மாதிரி,சாப்பிடுங்கள். தன்னால் இடம் கிடைத்துவிடும் என்றார்!

கல்கி தோட்டத்துக்கு வராத பிரமுகர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். ஆவடி காங்கிரஸின் போது வந்திருந்த நேருஜி அவர்கள் ஆவடி போகிற வழியில் காரை கல்கி பங்களாவுக்கு விடச் சொல்லி திருமதி எம்.எஸ்., திரு சதாசிவம் இருவரையும் வியக்க வைத்த செய்தி அனைவரும் அறித்ததுதான்.

‘டைனமிஸம் என்ற சொல்லுக்கு அர்த்தம் சதாசிவம் என்று சொன்னால் அது மிகையாகது. எந்த ஒரு முயற்சியாக இருப்பினும் அதை ஒரு இயக்கமாகச் செய்து சாதனை புரியும் ஆற்றல் படைத்தவர். தம் எண்ணத்துக்கு இசைவாகச் சுற்றி இருப்பவர்களையும் இயங்கச் செய்யும் வல்லமை பெற்றவர்.

அவருக்குக் கோபம் வருவதையும் அடுத்த நிமிடமே அந்தக் கோபம் தணிந்து சாந்த புருஷராக மாறி விடுவதையும் கல்கி அலுவலகத்தில் நான் பணிபுரிந்த காலத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்.

கொஞ்ச நேரம் முன்பு புயலாகச் சீறிய அவரா இப்போது இப்படி தென்றலாக வீசுகிறார் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

சற்றுமுன் எரிமலையாகக் கொந்தளித்தவரா இப்போது இத்தனை குளுமையாக, பச்சை வாழப்பட்டையாக மாறி இருக்கிறார் என்று அதிசயித்திருக்கிறேன்.

சதாசிவம் என்கிற ரசனைக் கூட்டில் வாழ்ந்ததால் தான் திருமதி எம்.எஸ். என்ற இசைக்குயில் தன் சங்கீத இறகுகளைப் புவியெங்கும் வீசிப் பறக்க முடிந்தது என்றால் அதை யாரும் மறுப்பதற்கில்லை.

திருமதி எம்.எஸ்.ஸின் இசை நிகழ்ச்சிகள் மூலம் ஈட்டிய பெரும் செல்வத்தை நல்ல பல காரியங்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல் கணவர் சதாசிவம்.

செய்வன திருத்தச் செய் என்ற கொள்கையுடைய திரு.சதாசிவம் தமது விசாலமான தோட்டத்தில் புறங்கை கட்டிக் கொண்டு உலாவுகிறார் என்றால் அச்சமயம் தான் கல்கி வளர்ச்சி பற்றியும் எம்.எஸ்ஸின் எதிர்காலம் பற்றியும் தீவிரமாகச் சிந்தித்து திட்டமிடுகிறார் என்று அர்த்தம்.

திருமதி.எம்.எஸ்ஸின் புகழ் இந்த அளவுக்கு உலகம் முழுவதும், ஆர்.ஆர்.சபையிலிருந்து ஐ.நா.சபை வரை பரவியிருக்கிறது என்றால் அதற்கு எம்.எஸ்ஸின் இசைப்புலமை மட்டும் காரணமல்ல; திரு.சதாசிவம் அவர்களின் அயராத உழைப்பும், அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுமே முக்கியம்.

திருமதி எம்.எஸ்., திரு.சதாசிவம் இவர்கள் அடிக்கடி சென்றுவரும் திருத்தலங்கள் மூன்றுதான். காஞ்சி, திருப்பதி, புட்டபர்த்தி இம்மூன்றுமே அவை. காஞ்சிப் பெரியவர்களிடம், புட்டபர்த்தி பாபாவிடம் திருப்பதி தெய்வத்திடம் அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி கொஞ்ச நஞ்சமன்று. இந்த மூன்று தெய்வங்களின் அருளும் எம்.எஸ். சதாசிவம் தம்பதியருக்குப் பரிபூரணமாய் வாய்த்திருக்கிறது.

ஒரு ரிஷி போல் வாழ்ந்து வரும் திரு.சதாசிவம் அவர்களுக்கு இப்போது வயது 94 நிறைகிறது. அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்குக் காரணம் ஒன்று உண்டென்றால் அது அவருடைய இனிமையான இயல்பான நகைச்சுவை உணர்வுதான். நமஸ்கரிக்கிறேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *