என்னுரை
சாவி

4. நாயர்ஸான்

முதன் முறை நான் ஜப்பான் போயிருந்தபோது நாயர்ஸான் பற்றி கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க விரும்பினேன். டோக்கியோ கின்ஸாப்பகுதியில் ‘நாயர் ரெஸ்டாரெண்ட்’ என்ற பெயரில் உணவுக்கூடம் ஒன்று உள்ளது. பகல் உணவுக்காக ஒருநாள் அங்கே போயிருந்தபோது, நாயர்ஸான் என்னைப் பார்த்துவிட்டு ‘தமிழ்நாடா?’ என்று அன்புடன் விசாரித்தார். சுடச்சுட உணவு தந்து உபசரித்தார். இரண்டொரு தினங்களில் எங்களுக்குள் ஒரு சகோதர பாசம் ஏற்பட்டு ராமனும் குகனுமாகிவிட்டோம். பணம் கொடுக்கப் போனபோது, “நோ நோ! முதல்முதலாக என் உணவகத்தில் சாப்பிடுகிறீர்கள். உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆகவே, நான் பணம் வாங்க மாட்டேன். அடுத்தமுறை வரும்போது வாங்கிக் கொள்கிறேன்” என்று சகோதர பாசத்தோடு சொல்லி அனுப்பிவிட்டார்.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து நான் மறுபடியும் ஜப்பான் போனபோது அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போது அவர் தமது அரசியல் வாழ்வின் சுயசரிதையை எழுதி முடிக்கும் தறுவாயில் இருந்தார்.

டில்லியில் புகழ்பெற்ற புத்தக நிறுவனம் ஒன்று அதை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆங்கிலத்தில் வெளிவருவது போலவே இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தம் சுயசரிதை வெளிவர வேண்டும் என்ற தமது விருப்பத்தை என்னிடம் வெளியிட்டார். ஆனால் அதற்கான திட்டம் ஏதும் அப்போது அவரிடம் இல்லை.

நான் சென்னை திரும்பிய சில மாதங்களுக்குப் பின் நாயர்ஸானே இங்கு வந்து சோழா ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது என்னை அழைத்து, “என் சுயசரிதையைத் தமிழில் நீங்கள் கொண்டுவர வேண்டும். செய்து தருவீர்களா?” என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். அப்படியே செய்தும் தந்தேன். புத்தகம் அச்சிடுவதற்கான செலவு முழுதும் அவரே ஏற்றுக்கொண்டார். எனினும் அதற்கான வரவு செலவுக்கணக்கை துல்லியமாக எழுதி அவரிடம் ஒப்படைத்தேன்.

என் மீதும், என் நேர்மை மீதும் அவருக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது பின்னொரு சமயம் வெளிப்பட்டது.

பத்திரிகை நடத்துவதில் பல ஏற்றத்தாழ்வுகளை நான் சந்தித்ததுண்டு. பொருளாதார நெருக்கடி என்னை முற்றுகையிட்ட ஒரு காலகட்டத்தில் நான் ஜப்பானில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக என்னை வரவேற்று உபசரித்தார். நான் சற்று கவலையோடு இருப்பதைப் பார்த்து விட்டு, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்.

“ஒன்றுமில்லை, ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைத்தால் எனது பிஸினஸில் ஒரு இக்கட்டான கட்டத்தைத் தாண்டிவிட முடியும்” என்றேன். அதன் பொருள் அவருக்குப் புரிந்தது.

“சரி …. நான் பணம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. வட்டி வாங்க மாட்டேன்.உங்களால் எப்படித் திருப்பித் தர முடியுமோ, எப்போது முடியுமோ, அந்த வகையில் திருப்பித் தாருங்கள். உங்கள் பாங்க் அக்கௌண்ட் நம்பரைக் கொடுங்கள். திருவனந்தபுரம் ‘பாங்க் ஆஃப் இந்தியா’வில் எனக்கு கணக்கு இருக்கிறது. அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் செய்யச் சொல்கிறேன்” என்றார்.

நெகிழ்ந்து போனேன். நான் சென்னை திரும்பி வந்து சேருவதற்குள் எனக்கு முன்பாக என் பாங்க் அக்கௌண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது.

மாதாமாதம், தவறாமல் பத்தாயிரம் ரூபாய்க்கு டிராஃப்ட் எடுத்து அந்த பாங்குக்கே அனுப்பி, பத்தே மாதங்களில் கடனை அடைத்து விட்டேன்.

பத்திரிகையில் நஷ்டம் வருவதற்குக் கேட்கவா வேண்டும்! அடுத்தமுறை இன்னொரு பெரிய நெருக்கடி வந்தபோது இரண்டு லட்சம் வேண்டும் என்று கேட்டேன். அப்போதும் ஜப்பானுக்குப் போயிருந்தேன்.

மறுநாள் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னைப் பார்க்க வந்த நாயர்ஸான் இரண்டு லட்சம் யென் நோட்டுகளைக் கற்றையாகக் கட்டிக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினார்.

“நான் இரண்டு லட்சம் ரூபாய் அல்லவா கேட்டேன்! நீங்கள் கொண்டுவந்திருப்பது இரண்டு லட்சம் யென்கள் அல்லவா?” என்று விளக்கியபோது, “ஓ… அப்படியா? நான் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஸாரி.. ஸாரி … நாளைக்கே உங்கள் அக்கௌண்ட்டுக்கு திருவனந்தபுரம் பாங்க் மூலம் டிரான்ஸ்பர் செய்து விடுகிறேன் நீங்கள் கவலையில்லாமல் போய் வாருங்கள்” என்றார். சொன்னபடியே பணமும் அனுப்பி வைத்துவிட்டார்.

அந்த முறையும் நான் நேர்மையாக அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்து விட்டேன்.

நான் ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைத்த ‘டிமாண்ட் ட்ராப்ட்களின்’ ஜெராக்ஸ் காப்பியை இன்னும் வைத்திருக்கிறேன்.

இவ்வளவையும் நான் சொல்லக் காரணம் உண்டு.

லட்ச ரூபாய் என்பது அந்தக்காலத்தில் சாதாரண விஷயம் அல்ல. நானும், நாயர்ஸானும் ஏதோ காலாகாலமாகத் தோளில் கைபோட்டுப் பழகியவர்களும் அல்ல. ஆனால் நான் பணம் கேட்ட மறுநொடியே வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஒரு பத்திரம் கையெழுத்து எதுவும் இல்லாமல் – சரி என்று அவரைச் சொல்ல வைத்தது எது?

“இந்த மனிதனிடம் நேர்மை இருக்கிறது. கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றுவான்” என்று அவருள் தோன்றிய நம்பிக்கைதான் காரணமாயிருக்க வேண்டும். அவரது சுயசரிதையை நான் தமிழில் கொண்டு வந்த போது செலவழித்த ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கெழுதிக் கொடுத்தேன். என்னை அவர் சரியானபடி கணிப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

பண விஷயத்தில் நேர்மையுடன் செயல்படுவது என்பதை அன்று தொட்டு இன்று வரை நான் ஒரு விரதமாகவே கடைப்பிடித்து வருகிறேன்.

காலத்தினால் அவர் எனக்குச் செய்த உதவியை என் காலமெல்லாம் மறக்க மாட்டேன். நான் யாருக்காவது சிலை வைப்பதாக இருந்தால் அது நாயர்ஸானுக்காகவே இருக்கும்.

நாயர்ஸான் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் அவர் தூண்டிவிட்ட, என்னுள் தூங்கிக் கொண்டிருந்த நேர்மை ஒளி, இன்றும் பிரகாசமாய்ச் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *