
என்னுரை
சாவி
15. எடிட்டர் என்பவர் யார்?
ஒவ்வொரு இதழிலும் என்னென்ன மேட்டர் வரவேண்டும் என்பதைத் தீர்மானித்து அவற்றுக்கான படங்களை முடிவு செய்து, போட வேண்டிய இடங்களில் ஜோக்குகளைப் போட்டு, லே-அவுட்டில் கவனம் செலுத்தி பத்திரிகையை தினசரியோ, வாராவாரமோ, மாதா மாதமோ கொண்டு வருகின்ற ஆசிரியர்தான் எடிட்டர் என்று பொதுவாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால் பிரசுரமாகிற ஒவ்வொரு மேட்டரையும், ஜோக் உள்பட எடிட் செய்கிறவர்தான் எடிட்டர் என்று நான் பொருள் கொள்கிறேன். நான் படித்த பத்திரிகைக்கூடங்களில் எனக்குச் சொல்லிக் கொடுத்தது அப்படி.
என் பத்திரிகைக்கூடங்களின் பெயர்: வாசன் கல்கி.
வளவளவென்று எழுதக்கூடாது. அப்படியே எழுதப்பட்டிருந்தாலும், அதை அப்படியே பிரசுரம் செய்யாமல் வளர்ந்து போன முடியை வெட்டி ‘ட்ரிம்’ செய்வது போல எடிட் செய்து மேட்டரைச் சுருக்கி வெளியிட வேண்டும்.
அதுதான் எடிட்டரின் வேலை. ஒரு உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும். இதுவொன்றும் சுகமான வேலையோ, சுலபமான வேலையோ அல்ல.
நாம் எழுதியவற்றைத் திரும்பவும் தரம் படிப்பதே போரடிக்கும். அப்படியிருக்க வெளியிலி ருந்து வருகின்ற மேட்டரையெல்லாம் படிப்பது என்றால்? அந்தப் பொறுமைதான் ஒரு எடிட்டரின் மிக முக்கிய தகுதி.
கல்கியிலும், ஆனந்த விகடனிலும் பணியாற்றிய நாட்களில் கல்கி, வாசன் ஆகிய ஜாம்பவான்களின் எடிட்டிங் திறமையை நான் அருகே இருந்து கவனித்துப் பார்ப்பதுண்டு.
சிறுகதையோ, கட்டுரையோ எதுவாக இருந்தாலும் எழுத்தாளர்கள் பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்கள். அவற்றைக் கொஞ்சம் கூட தயவு இல்லாமல் பாரா பாராவாக வெட்டித் தள்ளுவார்கள் இந்த இரண்டு பேரும். பிரசுரமாகும் போது பார்த்தால் அடடா என்று வியக்கும்படி இருக்கும். கல்லிருந்து சிலை வடிப்பது என்கிற கோணத்தில் பார்க்காமல், கல்லி லேயே சிலையிருக்கிறது. சிலையைச் சுற்றியுள்ள தேவையற்ற பகுதிகளைச்
சதுக்கி எடுத்து வீசிவிட்டால் சிற்பம் தயார் என்ற கோணத்தில் பாருங்கள். அதுதான் எடிட்டிங்.
‘உலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே மாம்பழம்’ என்ற போது முருகர் என்ன செய்தார்? பந்தாவாக மயில் மீது ஏறி உலகம் முழுவதையும் பவனி வர ஆரம்பித்துவிட்டர். பிள்ளையார் என்ன செய்தார்? சுருக்கமாக அம்மா, அப்பாவைச் சுற்றி வந்து விட்டு உலகத்தைச் சுற்றியாயிற்று’ என்றார். பிள்ளையாருக்கே வெற்றி மாம்பழம் கிடைத்தது. ஆகவே உலகத்தில் முதல் எடிட்டர் பிள்ளையார் தான் என்பேன் நான்.
‘கம்போஸ்’ ஆகிவந்த மேட்டரை எடிட் செய்வதற்காக கையில் எடுத்துவிட்டால் எனக்கு உலகமே மறந்து போகும்.
‘நாலாவது பாராவில் நடுவில் இரண்டு வரிகளை தூக்கி விட்டால் பாதகமில்லை என்று தோன்றி அந்த வரிகளை அடிக்கும் போது முதல் பாராவில் இன்னும் கூட கை வைக்கலாமே என்று தோன்றும். பேனா மீண்டும் முதல் பாராவில் ‘கிராப்’ வெட்டும். இது ஏதோ மற்றவர்கள் எழுத்தில் மட்டும்தான் என்று நினைத்துவிடக்கூடாது. என் எழுத்துக்களிலேயே நான் கருணை காட்டுவதில்லை.
‘சாவி’ யில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதே என் கேள்வி பதில் பகுதியை ஓ.கே. செய்வதற்குத்தான். எத்தனையோ முறை கேள்விக்கான பதிலை இரண்டுவரிகளில் எழுதி, திருத்தி, குறைத்து ஒரு வரியாக்கி, கடைசியில் ஒரே ஒரு வார்த்தையாகக்கூட ஆக்கியிருக்கிறேன்.
ஒரு ஐம்பது வருடத்துக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இப்போதைய எழுத்தாளர்கள் சுருக்கமாக எழுதுகிறார்கள் என்றே நான் சொல்வேன். இதில் தலைமை தாங்குபவர் சுஜாதா. அவர் எழுத்துக்கள் எந்த எடிட்டருக்கும் வேலை தருவதில்லை. அவரே அழகிய சிற்பமாகத்தான் செதுக்கி அனுப்புவார். சுஜாதாவின் பெரிய பிளஸ் பாயிண்ட் அவரது சுருக்கமான எழுத்துக்கள். ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எழதவேண்டும் என்று கல்கி அவ்வப்போது எனக்கு அட்வைஸ் பண்ணுவார். சுஜாதா, அவராகவே அப்படி எழுதுகிறார் என்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
வரலாறு சம்பந்தப்பட்ட எழுத்துக்களில் வர்ணனைகள் சற்று நீளமாக இருப்பதுண்டு. அரசகுமாரி தன் தோழியுடன் நீராடி விட்டு மஞ்சத்தில் அமர்ந்து அகிற்புகைபோட்டு மயிலிறகால் தலையை ஆற்றிக் கொள்ளும் ஒருகாட்சியை மட்டுமே தொடர்கதையில் ஒரு வார கதையாக எழுதிய காலங்களும் உண்டு. சில வாசகர்கள் அந்த வர்ணனைகளுக்காகவே வாங்கி ரசிப்பதும் உண்டு.
ஆனால் அப்படிப்பட்ட வளவளாக்களில் எனக்கென்னவோ உடன்பாடு இல்லை.
1938 ஜூன் மாதம் சென்னை வானொலியில் கல்கி அவர்கள் பேசினார். தமிழில் சிறுகதை என்பது தலைப்பு. பின்னர் அவரது அந்த உரை விகடனில் பிரசுரமாயிற்று.
சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு கல்கி அதில் ஒரு உதாரணம் கொடுத்திருந்தார்.
…ஒரு நாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த தாத்தய்யங்கார் ஸ்வாமிகள், அவருடைய வேலைக்காரன் குப்பனைக் கூப்பிட்டு, ‘அடே குப்பா! நீ உடனே ஸ்ரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு ஓடிப்போய் திருக்குடந்தை திருநாராயண ஐயங்கார் ஸ்வாமி, திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுத்துக்கொண்டு, திருக்குளத்துக்குப் போன போது திருப்பாசி வழுக்கவே திருவடி தவறி விழந்தார் என்று சொல்லு!’ என்றார்.
‘சரி சாமி’ என்றான் குப்பன், தான் சொன்னதை குப்பன் சரியாக மனதில் வாங்கிக் கொண்டானா என்பதை உறுதி செய்து கொள்ள, அங்கே போய் என்ன சொல்வே, சொல்லு’ என்று கேட்டார்.
குப்பன் சர்வசாதாரணமாக பதில் சொன்னான். ‘இது தெரியாதா சாமி! கும்பகோணத்துப் பாப்பான் குட்டையில் விழுந்தான்.. என்றான்!
இதுதானே செய்தி’
குப்பன் செய்தானே, அதுதான் எடிட்டிங்.



