என்னுரை
சாவி

16. அப்பலோ ஆஸ்பத்திரியில்…

பெங்களூர் பெல் காலனியில்தான் என் மருமான் (சகோதரியின் மகன்) வசித்து வருகிறான். அடுத்த தெருவில் சுஜாதா வீடு. ஒரு நாள் சாயங்காலம் அக்கா கொடுத்த இட்லியைச் சாப்பிட்டு விட்டு சுஜாதாவைப் பார்க்க நடந்தே போனேன். தெருக்கோடி போவதற்குள் மார்பில் லேசாக வலி எடுக்கவே, ரோடு ஓரத்தில் இருந்த கற்பலகை மீது உட்கார்ந்து விட்டேன். சற்று நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடையைத் தொடர்ந்தேன்.

சுஜாதா என்னைக் கண்டதும் மலர்ச்சியோடு வாங்க, என்றார். ‘ஏன் ஒரு மாதிரி சோர்ந்து போயிருக்கீங்க?’

விஷயத்தைச் சொன்னேன்.

‘ஹார்ட் ட்ரபிளாத்தான் இருக்கும். இதை இப்படியே வளரவிடக் கூடாது. உடனே டாக்டரைப் பார்த்துருங்க, என்று கூறிக் கொண்டே அந்தப்புரம் திரும்பி மிஸஸ் சுஜாதாவை அழைத்து ‘ஐஸோர்டில் மாத்திரை கொண்டு வா’, என்றார். அது வந்ததும், ‘இதை நாக்குக்கு அடியில் வச்சுக்குங்க. வலி குறைஞ்சிடும்’, என்றார்.

சுஜாதாவுக்கு ஹார்ட் ட்ரபிள் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போயிருந்த இடத்தில் எனக்கே நெஞ்சுவலி என்றபோது ஒரு சின்ன ஷாக்!

சென்னைக்கு வந்ததும் முதல் காரியமாகக் கார்டியாலஜிஸ்ட் ஆர்.எஸ்.ராஜகோபாலனைப் பார்த்தேன். அவர் ஈ.ஸி.ஜி., எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டு, கம்ப்யூட்டரைஸ்டு கார்டியோகிராமை இயக்கி அதில் என்னை விட்டார்.(‘சும்மா நிமிர்ந்து நின்னு காலை மாத்தி வையுங்க,ஆ, அப்படித்தான், வெரிகுட்!’)

‘ஹார்ட் டிரபிள் தான் சந்தேகமில்லை, என்றது கார்டியோகிராம்.

‘ஸ்பாட் பிளாக்கேட் (Spot Blockade) போல் தெரிகிறது. ப்ளட்வெஸலில் மூன்று குழாய்களில் அடைப்பு தெரிகிறது. நாளைக்கே நீங்கள் அப்பலோவுக்குப் போய் டாக்டர் கிரிநாத்தைப் பாருங்க. அவருக்கு லெட்டர் தருகிறேன். பைபாஸ் ஸர்ஜரியில் அவர் ஒரு எக்ஸ்பர்ட், அங்கே ஆஞ்ஜியோகிராம் சோதனையில் எல்லாம் தெளிவாகத் தெரிந்துவிடும். அப்புறம் ஆபரேஷன் தேவையா இல்லையா என்பதை கிரிநாத் பளிச்சென்று சொல்லி விடுவார். ஒரு சதவிகிதம் எனக்குச் சந்தேகம் இருந்தாலும் நான் உங்களை அங்கே அனுப்பிவைக்க மாட்டேன். தைரியமாகப் போய் வாங்க, என்று கூறி டாக்டர் கிரிநாத்துக்கு ஒரு கடிதம் எழுதித் தந்தார்.

பின்னர் பை-பாஸ் ஆபரேஷன் பற்றி ஒரு குட்டி லெக்சர். ‘ரோடு பழுதாப் போனால் அங்கே பக்கத்திலேயே இன்னொரு ரோடு போட்டு கனெக்ட் பண்ணிடறதில்லையா, அந்த மாதிரிதான், ரத்தக் குழாய் கெட்டுப் போனா பக்கத்திலே இன்னொரு குழாயை இணைச்சுடறாங்க. பை-பாஸ் ஆபரேஷன் இப்பல்லாம் நம் ஊரிலேயே ரொம்ப ஈஸியா செய்யறாங்க. இதுக்காக அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் ஓட வேண்டாம்.

ஆபரேஷன் அப்பலோவில் தான் செய்து கொள்வதென்று அந்த நிமிடமே முடிவு செய்து கொண்டேன். ஆனாலும் அவர் எழுதிக் கொடுத்த கடிதத்தைக் கொண்டு போய் அலமாரியில் வைத்துவிட்டு, மறுநாளே வெளிநாட்டுக்குக் கிளம்பி விட்டேன். என் வீட்டில் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்! இருதய சிகிச்சைக்கு ஒரு ‘மெக்கா’ என்று வர்ணிக்கப்படும் ஹ்யூஸ்டனுக்குத்தான் புறப்பட்டு விட்டேனோ என்று அவர்களுக்கு ஒரு சந்தேகம்! ஆனாலும் நான் ஹ்யூஸ்டனுக்குப் போகவில்லை.

நேராக ஜப்பான் போனேன். அங்கிருந்து ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ. என்னுடன் என் மகள் ஜெயாவும் அவள் கணவர் அர்த்தநாரியும் வந்தார்கள். ஜப்பானில் எக்ஸ்போ 85 முழுவதையும் சக்கர வண்டியில் அமர்ந்தபடியே சுற்றிப் பார்த்தேன். அங்கங்கே சக்கர வண்டி பிடித்து, அதில் என்னை வைத்துத் தள்ளிக் கொண்டு போகும் பொறுப்பை ஜெயாவும் அர்த்தநாரியும் ஏற்றுக் கொண்டார்கள்.

சரி, ஆபரேஷனைத் தள்ளிப் போட்டுவிட்டு, உயிருக்கு ஆபத்தான நெஞ்சு வலியைக் கூடவே அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் போவதற்கு அப்படி என்ன அவசரம் வந்தது?

அமெரிக்காவில் உடனடியாக நானே நேரில் சென்று கவனிக்க வேண்டிய முக்கிய வேலை ஒன்று இருந்தது. இன்னொன்று, இன்னும் சில நாட்களில் குவைத்திலிருந்து என் முத்த மகளும் அவள் கணவரும் குழந்தைகளும் இந்தியாவுக்கே திரும்பிவிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆபரேஷன் நடக்கும் போது அவர்களும் என்னோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்பியது. ஆபரேஷனைத் தள்ளிப் போட்டதற்கு இந்த இரண்டு காரணங்கள்தான்.

அமெரிக்கா போய் வந்தபிறகு, டாக்டர் ஆர்.எஸ்.ஆரை மறுபடியும் போய்ப் பார்த்தேன்.

என்னைக் கண்டதும் அவர் ‘என்ன ஆபரேஷன் எல்லாம் முடிந்து விட்டதா?’ என்று கேட்டார்.

‘இல்லை…. அமெரிக்கா போய்விட்டு நேற்றுதான் திரும்பி வந்தேன்.’

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, என்ன ஸார் இது! உங்களை அப்பலோ போகச் சொன்னால் அமெரிக்கா போய் வந்தேன் என்கிறீர்களே!’ என்றார்.

மறுபடியும் டெஸ்ட்டுகள் நடத்தினார். மறுநாளே அப்பலோவுக்குப் போய் டாக்டர் கிரிநாத்தைப் பார்த்தேன். ஆர்.எஸ்.ஆரின் ரிப்போர்ட்டை மிக கவனமாகப் பார்த்த அவர் ‘முதலில் ஆஞ்ஜியோகிராம் செய்து பார்த்து விடலாம். அப்புறம்தான் எந்த முடிவும் எடுக்க முடியும், என்றார்.

எனக்கு டயபடீஸ் இருந்ததால் முதலில் அதைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டியதாயிற்று. எனவே, என் உடம்பிலிருந்து ரத்தம் எடுத்து ப்ளட் ஷுகர் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தார்கள். அப்புறம் தினமும் முன்று முறை இன்ஸுலின் ஊசி போட்டார்கள்.இப்படி ஒரு வார காலத்திற்குள் ரத்தம் எடுக்கவும் இன்ஸுலின் போடவும் என் உடம்பு முழுதும் சல்லடையாய்த் துளைத்து எடுத்து விட்டார்கள்.

ஆஸ்பத்திரி ரிகார்டுக்கு எம்.எஸ்.விசுவநாதன் என்ற என் அசல் பெயரைக் கொடுத்திருந்தேன். ‘சாவி’ என்று எந்தச் சமயத்திலும் யாரிடமும் சொல்லவில்லை. எம்.எஸ்.விசுவநாதன் என்ற பெயரைப் பார்த்துவிட்டு அங்குள்ள நர்ஸுகளும், சிப்பந்திகளும் என்னை மியூஸிக் டைரக்டர் விசுவநாதன் என்று எண்ணிக் கொண்டு அடிக்கடி என் அறைக்குள் வந்து ஒரு ஆவலோடு பார்த்துவிட்டுப் போனார்கள்.

ஒரு நாள் எனக்கு ஊசி போட வந்த நர்ஸ் ஏன் ஸார்! நீங்க மியூஸிக் டைரக்டர் விஸ்வநாதன் தானே? என்று விசாரித்தாள். நான் ‘இல்லை’ என்றதும் அவள் முகத்தில் பெரிய ஏமாற்றம் தெரிந்தது.

அப்புறம் ஒரு வார காலம் என்னைக் காக்க வைத்தார்கள். கடைசியில், ‘ஆஞ்ஜியோகிராம்’ இயந்திரம் பழுதாகி விட்டதென்றும் ரிப்பேர் முடிய இன்னும் சில நாட்களாகுமென்றும் சொன்னார்கள்.

‘வீட்டுக்குப் போனால் ப்ருஃப் பார்க்கலாமே,’ என்று நான் என் மகள் உமாவிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே டாக்டர் கிரிநாத் வந்து, ‘நீங்கள் வீட்டுக்குப் போகலாம், நாங்கள் போன் முலம் தகவல் சொல்கிறோம். அப்போது வந்தால் போதும்,என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அடுத்த ஏழாவது நாள், ‘மெஷின் சரியாகி விட்டது. உடனே வரலாம், என்று அப்பலோ என்னை டெலி போனில் அழைத்தது.

உடனே புறப்பட்டுச் சென்றேன்.

ஆஞ்ஜியோகிராம் செய்வதில் ஒரு பர்ஸெண்ட் ரிஸ்க் இருப்பதாக சம்பந்தப்பட்ட டாக்டர் வந்து சொன்னார். ‘டாக்டர் ஆர்.எஸ்.ஆர். ஒரு பாஸெண்ட் கூட ரிஸ்க் இல்லை என்று சொன்னாரே! இதை இவர்கள் முன்பே சொல்லியிருந்தால் நான் இங்கு வராமலே கூட இருந்திருப்பேனே,’ – மருமான் சந்துருவிடமும் மாப்பிள்ளை ராமமூர்த்திடமும் முணுமுணுத்தேன். ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க விருப்பமின்றி ஆஸ்பத்திரி ரிக்கார்டில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு ஆஞ்ஜியோகிராம் சோதனைக்குத் தயாரானேன்.

அடிவயிற்றில் வலது பக்கம் துளைபோட்டு அதன் வழியே ஒரு ட்யூபை இருதயத்துக்குச் செலுத்துகிறார்கள். அது வாழைப்பழத்தில் ஊசியாகப் பயணம் செய்து உள்ளே ரத்தக்குழாய்களில் மசியைப் பூசி விடுகிறது. எங்கெல்லாம் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கிறதோ அந்த இடங்களை படத்தில் பார்க்க இந்த மை உதவுகிறது. ஆஞ்ஜியோகிராம் நடந்து கொண்டிருக்கும் போதே வீடியோப் படம் போல் எல்லாம் தெரிந்து விடுகிறது. நான் எதையும் பார்க்க விரும்பவில்லை. கண்களை மூடிக்கொண்டு விட்டேன். என்னுடைய ப்ளட் வெஸல்ஸில் மூன்று இடங்களில் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருப்பதை ஆஞ்ஜியோகிராம் வழி மொழிந்தது. (முன் மொழிந்தவர் டாக்டர் ஆர்.எஸ்.ஆர்.) எனவே, பை-பாஸ் சர்ஜரி அவசியம் என்பதும் முடிவாயிற்று.

‘அப்படியானால் ஆபரேஷன் எப்போது?’

‘அடுத்த வாரம் புதன்கிழமை வைத்துக் கொள்ளலாம். அதுவரை நீங்கள் இங்கே காத்திருக்கத் தேவையில்லை. வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு திங்கட்கிழமை வந்து சேருங்க’, என்று மீண்டும் எனக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தார் சர்ஜன் கிரிநாத்.

திங்கட்கிழமை பகல் இரண்டு மணிக்கு ஆஸ்பத்திரிக்குப் புறப்படுவதென்று முகூர்த்தம் குறித்தாயிற்று. அதற்கு முன் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் பாக்கி வைக்காமல் செய்து முடித்தேன். யார் யாரிடம் எதை எதைச் சொல்ல வேண்டுமோ அதை அதை அவரவர்களிடம் சொல்லி முடித்தேன். என்னதான் மருத்துவ விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை இருந்தபோதிலும் ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கக் கூடிய சந்தேகங்களும் பயமும் எனக்கும் இருந்தன. ஒருவேளை நாம் பிழைக்காமல் போய்விட்டால்?..

இதற்கிடையில் நண்பர்களும் உறவினர்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தார்கள். என் மனோதிடத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி, எமன் வந்து கூப்பிட்டாலும், ‘கொஞ்சம் இருடா பத்திரிகையில் சில லட்சியங்கள் பாக்கி இருக்கின்றன. முடித்துவிட்டு வருகிறேன்’ என்று துரத்தி அனுப்பும் தைரியசாலியாச்சே, நீங்கள்! என்றெல்லாம் உற்சாகப்படுத்தினார்கள். என் வில் பவரைப் பற்றி அவர்கள் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டியவை நினைவுக்கு வந்தது.

என் அப்பாவுக்கு நான் ஒரே மகன். அவர் எனக்கு வைத்துவிட்டுப் போன சொத்து இந்த பரந்த ஆகாயமும், பூமியும் தான். எனக்கோ இரண்டு பிள்ளைகள், வக்கீலை அழைத்து ஆகாயத்தை ஒருவனுக்கும், பூமியை ஒருவனுக்குமாக வில் எழுதி வைத்து விட்டேன்!

திட்கட்கிழமையன்று புறப்பட வேண்டிய நேரம் நெருங்க நெருங்க எனக்கு என்னவோ போல் இருந்தது. நெஞ்சில் ஒரு பாரம் அழுத்தியது. ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் தைரியமாகப் புறப்பட்டு விட்டேன். எனக்கு வேண்டிய சோப்பு, சீப்பு, முக்குக் கண்ணாடி, புத்தகங்கள், கிரிதாரி பிரசாத் கொடுத்த பகவத் கீதை. வேங்கடாசலபதி படம், நாமகிரிப்பேட்டை, மணிகிருஷ்ணசாமி, நீலா குஞ்சுமணி, டி.கே. ஜெயராமன் இசைக் கேசட்டுகள் இத்தனையும் கைப்பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டேன். வீட்டு வாசல் விநாயகரை வணங்கிவிட்டு, பந்து மித்திரர்கள் புடை சூழ ஆஸ்பத்திரி நோக்கிப் பயணமானேன். காரில் போகும்போது வழியெல்லாம் ஆபரேஷனைப் பற்றிய நினைவாகவே இருந்தது.கார் அண்ணா சாலையில் திரும்பிய போது, எல்.ஐ.ஸி. கட்டிடம், ஹிக்கின்பாதம்ஸ், ஸ்பென்ஸர் பில்டிங் போன்ற பழைய நண்பர்களைப் பாசத்தோடு ஒருமுறை ஒருவேளை கடைசி முறையோ! பார்த்துக் கொண்டேன்.

அப்பலோவில் எனக்கு ரிசர்வ் செய்திருந்த அறையில் ஏ.ஸி. குளிர் இதமாக இருந்தது. ஆனாலும் அந்த இதத்தை டாக்டர்கள் அதிக நேரம் அனுபவிக்க விடவில்லை. நலைந்து பேர் வந்து வந்து என்னைச் சோதித்துப் பார்த்துவிட்டு ‘நாளைக்கே ஆபரேஷன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

நாளைக்கே ஆபரேஷனா! புதன்கிழமை என்றார்களே! இந்த திடீர் அறிவிப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படியானால் என் ஆயுளில் ஒருநாளை இந்த டாக்டர்கள் குறைத்து விடுகிறார்களோ? என் முத்த மகள் ஜெயந்தி ஆசையோடு செய்து கொண்டு வந்திருந்த சைனீஸ் ரைஸ் என் தொண்டைக்குள் இறங்கவில்லை.

இதற்குள், நாளை ஆபரேஷன் என்ற செய்தி கேட்டு நண்பர்களும், எழுத்தாளர்களும், உறவினர்களும் என்னைக் காண அலைஅலையாய் வரத் தொடங்கி விட்டார்கள். நேரம் ஆக ஆக அந்த அறையில் ஒரு சின்ன மாத்திரை போட்டால் அது கீழே விழாத அளவுக்கு இட நெருக்கடி.

அமைச்சர் ராஜாராம் என்னைப் பார்க்க வந்தபோது அறையிலிருந்த கூட்டத்தைக் கண்டுவிட்டு, ‘இதென்னய்யா, பொதுக் கூட்டமா நடத்தறீங்க?’ என்று கேட்டார். ‘அன்போடு பார்க்க வருகிறவர்களை வேண்டாமென்று சொல்ல முடியுமா?சிறிது நேரம் என்னிடம் பேசிவிட்டு, ‘சரி, நான் மறுபடி நாளைக்கு வந்து பார்க்கிறேன், வரட்டுமா?’ என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டு விட்டார்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஆபரேஷன் என்பதால் இரவு முழுவதும் தூக்கமில்லை. ஏதேதோ கதம்பமான யோசனைகள்.

மறுநாள் பகல் இரண்டு மணிக்கு என்னை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போனார்கள். வராந்தாவில் என் மனைவி, மகள்கள், மருமகன்கள், பிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகள், எனக்கு ரத்தம் கொடுத்த (என் மகள் உமா, ஜெயா உட்பட) இன்னும் சில நண்பர்கள், மருமான் சந்துரு இவ்வளவு பேரும் சோகமே வடிவமாய், கண்கலங்க என்னைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். நான் மல்லாந்து படுத்தப்படியே இவர்களைப் பார்க்கிறேன்.

மகள் மாலதியின் வாடிய முகம் தெரிகிறது. (அழாதேம்மா, வந்துருவேன்.) ஆபரேஷன் தியேட்டர் நுழைவு வாயில் வரை கூடவே வேகமாக வந்த என் மகன் பாச்சாவும், மூத்த மருமகன் விஸ்வநாதனும் சொன்ன வார்த்தைகள் என்னை உணர்ச்சி வசப்படுத்தி, கேவிக் கேவி அழ வைத்த போதிலும் அதை அடக்கிக் கொள்ள முயன்று தோற்றுப் போகிறேன். பெருகி வரும், கண்ணீரை வெட்கத்தோடு துடைத்துக் கொள்கிறேன்.

நான் ஏன் அழுகிறேன்? என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

ஓகோ, இதனால் தான் ஆண்டவன் மனிதனுடைய கடைசித் தேதியை முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லையோ? மனிதனிடமுள்ள பாச உணர்வை எமன் முதலில் அகற்றி விட்டுப் பிறகே உயிரைக் கவர்ந்து செல்வதன் ரகசியம் அதுதானோ!

அறையை விட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு கிளம்பு முன் இரண்டு துச்சாதனர்கள் வந்து என் உடைகளைக் களைந்துவிட்டு ஒரு சின்ன டவலால் மறைக்க வேண்டிய இடத்தை மறைத்து விட்டுப் போகிறார்கள். ஆபரேஷன் தியயேட்டரில் சில ஸ்ரீதேவிகளும், அம்பிகாக்களும் நர்ஸ் வேடத்தில் அங்குமிங்கும் பரபரப்போடு அலைவதைப் பார்க்கிறேன்.

பச்சை நிற அங்கிகளில் டாக்டர்களும் நர்ஸுகளும் சூழ்ந்து நிற்கின்றனர். தியேட்டர் முழுவதும் சூரிய வெள்ளம். ஆயுதங்களின் பளபளப்பு. என்னை ஸ்ட்ரெச்சரிலிருந்து ஆபரேஷன் மேஜைக்கு மாற்றியதும் மூடி மறைத்திருந்த அந்தச் சிறிய துண்டும் அகற்றப்படுகிறது.

என் நிர்வாணகோலம் எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. சுற்றிலும் உள்ள பெண்கள் பார்க்கிறார்களே என்று வெட்கம் பிடுங்கித்தின்கிறது.

எமனோடு உயிர்ப் போராட்டத்துக்கு நேரம் குறித்தாயிற்று. இன்னும் சில மணி நேரங்களில் என் தலைவிதி நிர்ணயிக்கப்படும் கட்டம். பிழைத்து வரப் போகிறேனோ, அல்லது இந்த உலகத்திலிருந்தே விடுதலை பெறப் போகிறேனோ என்ற கேள்விக் குறியோடு களம் புகுந்துள்ள நேரம். ஆனாலும் என் உயிர்ப்பிரச்சினையை மீறிக் கொண்டு மானப்பிரச்சினை மேலோங்கி நிற்கிறது. இதற்குள் யாரோ ஒரு சிறு துணியால் என் மானத்தைக் காப்பாற்றுகிறார்கள். மனம் நிம்மதி பெறுகிறது. அப்புறம் என்னென்னவோ நடக்கிறது. நான் அரை மயக்கத்தில் இருக்கிறேன். டாக்டர்களின் குரல்கள் மெலிதாய்க் கேட்கின்றன. வண்டியைத் தள்ளுகிறார்கள். மார்புக்கு மேலே சூரிய விளக்கை நகர்த்தி அட்ஜஸ்ட் செய்கிறார்கள். கத்தரிகளும், கத்திகளும் மின்னுகின்றன. ஊசி போடுகிறார்கள். இதோ, அனஸ்தேஷியா கொடுக்….

நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு இழந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். திடீரென அந்த துறை, நான், டாக்டர்கள், நர்ஸ்கள், உபகரணங்கள், கூரைவிளக்குகள், சுவர்கள் எல்லாம் கிறுகிறுவெனச்சுற்றி ஒரு வட்ட மேகத்துண்டாக மாறி மேலே மேலே போகிறோம்.

‘ஐயோ, நான் செத்துப் போய்விட்டேன், மேலே போய்க் கொண்டிருக்கிறேன்’ என்ற உணர்வுதான் என்னுள் அப்போது சுத்தமாக இருந்தது. மனைவியும், மக்களும் காத்துக்கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு இந்தச் செய்தியை இன்னும் யாரும் போய்ச் சொல்லவில்லையா என்று கவலைப்படுகிறேன். அப்படிக் கவலைப்படும்போதே அந்த நினைப்பும் போய் விடுகிறது.

அடுத்த விநாடி (ஆபரேஷன் நடைபெற்ற ஐந்தரை மணி நேரம் எப்படிப் போயிற்று?) மார்பில் யாரோ எதையோ தைப்பதை உணர்கிறேன். லேசாக வலி தெரிகிறது.

‘ஓ…. நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று உணர்கிற போது அந்த மகிழ்ச்சியில் மார்பில் போடும் தையல் வலி பெரிதாகத் தெரியவில்லை.

அதற்குப் பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது.

மறுநாள் காலை ‘இன்ட்டென்ஸிவ் கேர்’ வார்டில் நான் படுத்திருக்கிறேன். யாரோ என்னைத் தொட்டு எழுப்புகிறார்கள். கண் திறந்து பார்க்கிறபோது எதிரில் என் ஆப்த நண்பர் எம்.கிருஷ்ணசாமி நின்று கொண்டிருக்கிறார். அவரை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். ஆபரேஷன் முடிந்து முதலில் நான் காண்பது அவரைத்தான். அவர் கையில் திருப்பதி பிரசாதம். புதன் கிழமைதான் எனக்கு ஆபரேஷன் என்று எண்ணிக் கொண்டு முதல் நாளே திருப்பதி சென்று எனக்காக பிரார்த்தனை செய்து பிரசாதம் கொண்டு வந்திருக்கிறார். இன்னொரு அதிசயம், அந்த இன்டென்ஸிவ் கேர் வார்டுக்குள் டாக்டர் அனுமதியில்லாமல் காற்று கூட நுழைய முடியாது என்ற நிலையில் நண்பர் எம்.கே.மட்டும் எப்படி வந்தார்? அவரை மட்டும் யார் அனுமதித்தது? அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்!

மறுநாள் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்தபோது என் உடம்பின் பல்வேறு பகுதிகளில் டியூப்கள் பொருத்தப்பட்டு விதவிதமான திரவபாட்டில்கள், வெவ்வேறு கருவிகளோடு இணைக்கப் பட்டிருந்தன. என் மீது ஒரு மருத்துவ அவரைப் பந்தலே படர விட்டிருந்தார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பின் ஐஸியுயிலிருந்து மீண்டும் என் அறைக்குக் கொண்டு போகப்படுகிறேன். அங்கே என் இரண்டு கால்களிலும், ஏதோ வலி இருப்பதை உணர்கிறேன். இதயத்தில் அல்லவா ஆபரேஷன் ? கால்களில் ஏன் வலிக்கிறது? கால்களைப் பார்க்க வேண்டும் போல் ஓர் உந்துதல். பார்த்தால் இரண்டு கால்களிலும் கணுக்காலிலிருந்து முழங்கால் வரை கிட்டத்தட்ட ஓர் அடி நீளத்துக்கு நீண்ட தையல் போடப்பட்டிருந்தது. காலில் ஏன் தையல்? இங்கிருந்துதான் வெய்ன் எடுத்து அடைபட்டிருந்த ரத்தக் குழாய்களுக்குப் பக்கத்தில் பை-பாஸ் குழாய் போட்டுச் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி செய்துள்ளார்கள்.

மூன்று நாள் கழித்து என்னைப் பார்க்க சுஜாதா வந்திருந்தார். நான்தான் அதிகம் பேசினேன். ஆபரேஷன் அனுபவங்களை அவரிடம் எழுத்தாளர் கோணத்தில் சொன்னேன். ‘இவ்வவு பெரிய சமாசாரத்தை ரொம்ப ரொம்ப லேசாக்கி இத்தனை நகைச்சுவையோடு சொல்கிறீர்களே!’ என்று சிரித்து மகிழ்ந்தார் சுஜாதா. என் பேச்சு அவருக்குப் புதுத்தெம்பையும் தைரியத்தையும் அளித்திருக்க வேண்டும். அப்புறம் ஏழெட்டு நாட்களே ஆஸ்பத்திரியில் இருந்தேன். டாக்டர் கிரிநாத் வந்து ‘யூ ஆர் ஆல்ரைட்: உங்களை டிஸ்சார்ஜ் செய்கிறேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம், பழையபடியே எல்லா வேலைகளையும் கவனிக்கலாம், என்றார்.

பிறவியிலேயே எனக்கு அமைந்து விட்ட மனத்திட்பம், மனைவியின் மாங்கல்ய பலம்,

ஏழுமலையானின் அருள் மூன்றும் சேர்ந்து என்னைக் காப்பாற்றி விட்டன.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *