உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி

10. புரொட்டின்

புரொட்டின் என்னும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது. புரெட்டினைப் புரதம் என்றும் கூறுவர். புரொட்டின் (தசையை) உடம்பை வளர்க்கிறது. மேலும், அன்றாடம் உடம்பில் ஏற்படுகிற தேய்வு கழிவுகளை நிரப்பி, உடம்பை நன்னிலையில் வைக்கிறது. அன்றியும் சில நோய்களை வராதபடி தடுக்கிறது; உடம்புக்குச் சக்தி தருகிறது. தோல் சதை ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப் படுத்துகிறது.

எனவே, குழந்தைகளின் தேகம் வளர்வதற்குப் புரொட்டின் மிக அவசியமானது. வளர்ந்தவர்களின் தேகத்தில் ஏற்படுகிற தேய்வு கழிவுகளை நிரப்புவதற்கும் அவசியமாக வேண்டியிருக்கிறது. இதனால் உணவில் இது முதன்மையான பொருளென்பது தெரிகிறது.

தானியங்கள், பருப்புகள் காய்கறிகள், இறைச்சிகள் முதலியவற்றில் புரொட்டின் உண்டு. ஆனால், தாவரப் பொருள்களில் இருந்து கிடைக்கிற புரொட்டினை விட, இறைச்சிகளில் இருந்து கிடைக்கிற புரொட்டின் சிறந்தது. இதனால், தாவரப் புரொட்டின் வேண்டாம் என்று கூறியதாகக் கருதக்கூடாது இரண்டு வகைப் புரொட்டின்களும் வேண்டியவையே.

பால், தயிர், மோர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன் முதலியவைகளில் இருக்கும் புரொட்டின் சிறந்தது. வளர்கிற குழந்தைகளுக்குப் பாலும் முட்டையும் சிறந்த உணவு. கோதுமை, சோளம், கம்பு, ராகி (கேழ்வரகு), அரிசி (சிறு அளவு) முதலிய தானியங்களில் புரொட்டின் உண்டு. கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சைப் பருப்பு, துவரம் பருப்பு, பட்டாணி, அவரைக்கொட்டை, பீன்ஸ்கொட்டை, மொச்சைக் கொட்டை முதலிய பருப்பு வகைகளிலும் புரொட்டின் உண்டு. முந்திரிப் பருப்பு, வாதுமைப் பருப்பு, நிலக்கடலை, அக்ரோட் பருப்பு முதலிய கொட்டைகளிலும் புரொட்டின் உண்டு. உருளைக் கிழங்கு, காரட் கிழங்கு (மஞ்சள் முள்ளங்கி), பீட்ரூட் முதலியவற்றிலும் புரொட்டின் சிறு அளவு உண்டு. புரொட்டின் உணவுகளை நாள்தோறும் உட்கொள்ள வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *