
உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி
15. சர்பத்து, பானகம், முறபா வகைகள்
சர்பத்துகள், பானங்கள், முற்பாக்களைச் செய்யும் விதத்தையும், அவற்றின் குணங்களையும், இங்கு எழுதுகிறேன். இதை வீட்டிலேயே செய்து உபயோகப்படுத்தலாம்.
காடி சர்பத்து:
நல்ல சீமைக் காடி ஒருபடி சர்க்கரை 1/4 படி. (சர்க்கரைக்குப் பதிலாகப் கற்கண்டை சேர்க்கலாம்.) சர்க்கரை அல்லது கற்கண்டைப் பாகு காய்ச்சிப் பதமான போது அதில் காடியைக் கொஞ்சம் கொஞ்ச மாக விட்டுத் துழாவிக் கடையில் கொஞ்சம் பன்னீர் விட்டுத் துழாவிச் சர்பத்துப் பதத்தில் எடுத்துப் புட்டியில் விட்டு வைக்க வேண்டும்.
காலை மாலை இரண்டு வேளையும் ஒரு தோலா எடை சாப்பிடலாம். தாகத்தை அடக்கும். பித்தத்தை நீக்கும். பசியை உண்டாக்கும். நீரைப் போக்கும்.
காடி சர்பத்து (வேறு வகை)
நல்ல சீமைக்காடி ஒரு பங்கு நல்ல தேன் இரண்டு பங்கு. இரண்டையும் சேர்த்துப் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு தோலா எடை சாப்பிடலாம். இரத்தத்தைச் சுத்தி செய்யும். சலதோஷத்தைப் போக்கும்.
அத்திப்பழச் சர்பத்து :
சீமை அத்திப்பழம் ஒரு பங்கு முழுக்கடலை அரைப்பங்கு. இரண்டையும் போதுமான அளவு நீரில் அளிய வேக வைத்துப் பிசைந்து வடிகட்டி கஷாயத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு லவங்கப்பட்டை கருஞ்சீரகம், லவங்கம், சடாமாஞ்சில் வகைக்கு வராகன் எடை ஒன்று சேர்த்து நைய இடித்து அந்தத் தூளைத் துணியில் முடிந்து மேற்படி கஷாயத்தில் போட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். முடிச்சிலுள்ள தூளின் சத்து கஷாயத்தில் இறங்கிய பிறகு முடிச்சை எடுத்துப் போட்டுவிடவேண்டும். இந்தக் கஷாயத்தில் 1/2 வராகன் எடை குங்குமப் பூவைச் சேர்த்து சாற்றின் சம அளவு சர்க்கரை சேர்த்துப் காய்ச்சிப் பாகு பதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்ப்பது நல்லது.
காலை மாலை வேளைகளில் 1 தோலா அல்லது 2 தோலா சாப்பிட வேண்டும். இடுப்பு நோயை மாற்றும். வலிவு கொடுக்கும். தாதுபுஷ்டி யுண்டாகும்.
எலுமிச்சை சர்பத்து :
முற்றிப் பழுத்த எலுமிச்சம் பழத்தைப் பிழிந்த சாறு தேவையான அளவு அதற்கு ஒன்று அல்லது ஒன்றரைப் பங்கு சீனி சர்க்கரை. இரண்டையும் சேர்த்துப் பதமாகக் காய்ச்சிப் புட்டியில் விட்டு வைக்க வேண்டும்.
காலை மாலைகளில் ஒன்று அல்லது இரண்டு தோலா எடை சாப்பிடலாம். பித்தச்சூடு, இரத்தச் சூடு நீங்கும். இரைப்பை, இருதயம், ஈரல், மூளை ஆகிய உறுப்புகளைப் பலப்படுத்தும்.
நாரத்தை சர்பத்து :
நாரத்தம் பழத்தைப் பிழிந்த சாறு வேண்டிய அளவு சீனி சர்க்கரை அதற்குச் சம அளவு, இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்துப் பதமாகக் காய்ச்சிப் புட்டியில் விட்டு வைக்கவேண்டும்.
வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தோலா அளவு சாப்பிடலாம். இருதயத்திற்கு வலுவைக் கொடுக்கும். தைரியம் உண்டாகும். சூட்டை ஆற்றும். பித்தத்தைப் போக்கும். ஆனால், குளிர்ச்சியான உடம்புக்கு உதவாது. குளிர்ந்த தேகத்தினர் இதை உபயோகிக்க வேண்டுமானால், இதனுடன் இஞ்சி முறப்பாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புதினா எலுமிச்சை சர்பத்து :
புதினா இலையை இடித்துப் பிழிந்த சாறு வேண்டிய அளவு. இந்தச் சாற்றின் அளவுக்கு மூன்று பங்கு எலுமிச்சம் பழச்சாறு. இரண்டு சாற்றையும் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சும் போது, சாற்றின் சமமான அளவு சர்க்கரையைக் கொஞ்சங் கொஞ்சமாகச் சாற்றில் இட்டுத் துழாவிச் சர்பத்துப் பதத்தில் இறக்கிப் புட்டியில் விட்டு வைக்க வேண்டும்.
காலை மாலை ஒன்று அல்லது இரண்டு தோலா எடை சாப்பிடலாம். பசியை உண்டாக்கும். இரைப்பைக்கும், ஈரலுக்கும் பலம் தரும்.
கேரட்டுச் சர்பத்து :
கேரட்டுக் கிழங்கு என்பது மஞ்சள் முள்ளங்கி, இந்தக் கிழங்கின் சாறு ஒரு பங்கு. இச்சாற்றுக்கு இரண்டு பங்கு தேன் இரண்டையும் சேர்த்துப் பதமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். தேனுக்குப் பதில் சர்க்கரைப் பாகைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தேன் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
(குறிப்பு: கேரட்டுக் கிழங்கில் சாறு கிடைப்பது கடினம். ஆகையால், கேரட்டுக் கிழங்கை நீரில் நன்றாகக் கழுவித் தோல் சீவாமல் நீளவாட்டத்தில் நான்காகப் பிளந்து, கிழங்கில் மத்தியில் உள்ள வெள்ளிய நரம்பை நீக்கி விட்டு, மற்றப் பகுதியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமன் எடை நீர் சேர்த்து வேக வைத்து நன்றாக வெந்த பிறகு, திப்பியைப் பிழிந்து போட்டு, சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாற்றுடன் இரண்டு பங்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து பதமாகக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.)
வேளைக்கு ஒரு தோலா சாப்பிடலாம். இடுப்பு நோயை மாற்றி இடுப்பிற்கு பலம் தரும். தாதுபுஷ்டி உண்டாகும்.
தாமரைப்பூ சர்பத்து :
தாமரைப்பூ இதழை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். வெள்ளைத் தாமரை இதழாகவும் இருக்கலாம். நிழலில் உலர்த்திய தாமரை இதழின் எடைக்கு நான்கு பங்கு நீரில் அதைப் போட்டு அதை இரவு பகல் ஒருநாள் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி நாலில் ஒன்றாகச் சுண்டிய பிறகு இதழ்களைப் பிழிந்து போட்டு விட்டுக் கஷாயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கஷாயத்தின் அளவுக்கு இரண்டு பங்கு சர்க்கரையை அதனுடன் சேர்த்துப் பதமாகக் காய்ச்சி புட்டியில் உற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தோலா தோலா எடை சாப்பிடலாம். சூட்டைப் பற்றிய தலைவலி, பித்தசுரங்கள், இருமல், மார்பு நோய், பக்கசூலை ஆகிய நோய்கள் நீங்கும்.
சந்தன சர்பத்து :
சந்தனக் கட்டையில் தூள் அல்லது, சந்தனக் கட்டையை இழைப் புளியால் இழைத்து எடுத்த தூள் வேண்டிய அளவு. அதைப் போதுமான அளவு நீரில் இட்டு ஊறவைத்து அடுப்பின்மேல் ஏற்றி நன்றாகக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறியபின் பிழிந்து சக்கையை நீக்கிக் கஷாயத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கஷாயத்துடன் போதிய அளவு சர்க்கரை சேர்த்துக் காய்ச்சிக் கடைசியில் கொஞ்சம் பன்னீர் விட்டுத் துழாவி சர்பத்துப் பதத்தில் இறக்கிப் புட்டியில் விட்டு வைக்கவேண்டும்.
வேளைக்கு ஒரு தோலா எடை சாப்பிடலாம். இருதயத்துக்கும் ஈரலுக்கும் வலிவு கொடுக்கும்.
குறிப்பு : சர்பத்துக்களைச் சாப்பிடும் போது நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். சர்பத்து காய்ச்சும் பாத்திரம் மண் பாத்திரமாக இருக்க வேண்டும். வேறு பாத்திரமாக இருந்தால் ஈயம் பூசியதாக இருக்கவேண்டும்.
நெல்லிக்காய் ஊறல் :
முற்றிய நெல்லிக்காயை வேண்டிய அளவு எடுத்து, கொதிக்கும் நீரில் இட்டு வேக வைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் இட்டு வேக வைப்பது நல்லதல்ல. ஐந்து நிமிஷம் வெந்த பிறகு எடுத்து நீர் இல்லாமல் துடைத்து விட வேண்டும். பிறகு, இந்த அளவுக்கு இரண்டு பங்கு சர்க்கரையைப் பாகு காய்ச்சி அதில், மேற்படி வேக வைத்த நெல்லிக்காயைச் சேர்த்துத் துழாவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி பாகைக் கவனிக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில், பாகில் நீர்க்கசிவு ஏற்பட்டால் மீண்டும் அடுப்பில் வைத்து நீர் போகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். பாகில் போடுவதற்கு முன்பு வெந்த நெல்லிக்காய்களை வேல மரமுள் அல்லது கிச்சிலி மர முள்ளினால் குத்துவது நலம். இப்படிச் செய்தால் பாகு காய்களில் நன்றாக ஊறும். இரும்பு, ஊசி, செம்பு ஊசி முதலிய ஊசிகளினால் காயைக் குத்துவது கூடாது.
வேளைக்கு இரண்டு பழம் உண்ணலாம். இருதயம் ஈரல் குடல்களுக்குப் பலம் உண்டாகும். பசி எடுக்கும்.
எலுமிச்சை ஊறல் :
நன்றாகப் பழுத்த எலுமிச்சம் பழம் வேண்டிய அளவு. அதற்கு ஏற்ற அளவு சர்க்கரை. நெல்லிக்காயைப் போலவே இதையும் செய்து கொள்ளலாம். வேளைக்குப் பாதி பழம் சாப்பிடலாம் தீனிப்பைக்கு பலம் கொடுக்கும். பித்தத்தைப் போக்கும். இருதயத்துக்கும் மூளைக்கும் பலம் தரும்.
(முறபாக்களைச் செய்யும் போது பாகம் அறிந்து செய்ய வேண்டும். இது அநுபவத்தினால் மட்டும் அடைய முடியும். முதலில் சிறு அளவாகச் செய்து பாகம் அறிந்த பிறகு அதிக அளவில் செய்து கொள்வது நலம்.)
கேரட்டு ஊறல் :
கேரட்டுக் கிழங்கு என்னும் மஞ்சள் முள்ளங்கிக் கிழங்கை (இது புதிதாக இருக்க வேண்டும்) நன்றாகக் கழுவிச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதைச் சிறிது அளவு பாலில் வேக வைத்து. எடுத்துக் கொண்டு சர்க்கரையைக் காய்ச்சிப் பாகு செய்து கொண்டு அதனுடன் இந்தக் கிழங்கைச் சேர்த்துப் பதமாகக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயைத் தூள் செய்து சிறிது சேர்த்துக் கொள்ளலாம். காலை மாலைகளில் கொட்டைப் பாக்களவு சாப்பிடலாம். நல்ல இரத்தம் உண்டாகும். அதிக நாள் வைக்கக்கூடாது. அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும்.
கேரட்டு ஹல்வா :
கேரட்டுக் கிழங்கைத் தேங்காய் திருகுவது போலத் திருகி எடுத்துக் கொண்டு அதைக் கடாயில் நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். அதற்குச் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் முந்திரிப் பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம்.
வேளைக்கு கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம். நல்ல இரத்தம் உண்டாகும். அதிக நாள் வைக்கக்கூடாது. அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும்.
எலுமிச்சைப் பானகம் :
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்த சாற்றில் ஒரு கல் உப்பும் போதுமான அளவு சர்க்கரையும் சேர்த்து நீரில் கலந்து அருந்தலாம்.
தக்காளிப் பானகம் :
நன்றாகப் பழுத்த பெரிய தக்காளிப்பழச் சாற்றில் ஒரு கல் உப்பும் போதுமான அளவு சர்க்கரையும் சேர்த்து நீரில் கலந்து உண்ணலாம்.
ஜைன பானகம் :
மிகப் பதமாகப் பொரித்த அரிசிப் பொறிமா. போதிய அளவு வெல்லம். வெண்ணெய் கடைந்த மோர், எலுமிச்சம் பழச்சாறு, இவை போதுமான அளவு. பொரிமாவுடன் வெல்லத்தைச் சேர்த்து மோர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். பிறகு எலுமிச்சைச் சாற்றை விட்டுக் கலந்து உபயோகிக்கவும். வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், வெல்லத்தில் சத்து அதிகம் உண்டு.
இந்தப் பானகம் மிகச் சுவையாக இருக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது, பசியை யடக்கும்.
இதை, ஜைன சமயத்தவர்தான் உபயோகிக்கிறார்கள். ஜைனர் மற்றவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். வேறு ஊருக்குப் போக வேண்டியிருந்தால், ஜைனர் பொரிமாவை மட்டும் எடுத்துக் கொண்டு போவார்கள். போன ஊரில் பசியெடுத்தால் இந்தப் பானகத்தைச் செய்து சாப்பிடுவார்கள். பசியையடக்குவதோடு உடம்பைக் கெடாமல் நன்னிலையில் வைக்கிறது. சுவையுள்ள நல்ல பானமாகவும் இருக்கிறது. இதை ஜைனர் சத்துமா பானகம் என்று கூறுவர் ஜைனர்கள் உபயோகிப்பதனால். ஜைன பானகம் என்று பெயர் கூறினோம். அரிசியை பதமாகப் பொரியாக்க வேண்டும்.
தயிர்க் கதலி :
நல்ல தயிரில் வாழைப் பழத்தை உரித்துப்போட்டுப் பிசைந்து உட்கொள்ளவும். வேண்டுமானால் வெல்லம் அல்லது சர்க்கரையைச் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். புளித்த தயிரில் வாழைப் பழத்தைப் பிசைந்து உண்பது தேக ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்காமல் உண்பது நல்லது. வெல்லம் சர்க்கரை சேர்க்காமல் புளித்த தயிரில் வாழைப் பழத்தைப் பிசைந்து உண்பதனால், குடலில் உள்ள நோய்க் கிருமிகள் இறந்து போகின்றன. உடம்பு சுகம் அடைகிறது. (இது பானகம் அல்ல.)



