உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி

12. உப்புக்களும் உலோகங்களும்

இரும்பு,செம்பு, துத்தநாகம், வெள்ளி, பொன், கால்ஸியம், ஸோடியம், பொட்டாஸியம், பாஸ்பரஸ், ஸல்பர், அயோடின் முதலிய உலோகப் பொருள்களும் உப்புப் பொருள்களும் நமது உடம்பில் இருக்கின்றன. இவை மிகச் சிறிதளவு இருந்த போதிலும் உடல் நலத்துக்குத் தேவையாக உள்ளன. இரத்தத்தில் இரும்புச் சத்து உண்டு. அதனுடன் செம்புச் சத்தும் சிறிதளவு உண்டு. மூளையில் துத்தநாகச் சத்து உண்டு. வெள்ளி, பொன் முதலிய உலோகங்களும் மிகச் சிறிய அளவில் இருக்கின்றன.

அயர்ன் டானிக் சாப்பிடும்படி சில சமயங்களில் டாக்டர்கள் சொல்லுகிறார்கள். அல்லவா? அயர்ன் டானிக் என்பது அயம் (இரும்பு) சேர்ந்த மருந்து. நமது நாட்டு வைத்தியர்களும் அயச் செந்தூரத்தைச் (இரும்புச் செந்தூரம்) சில நோய்களுக்குக் கொடுக்கிறார்கள். செம்பிலிருந்து தாம்பிரச் செந்தூரமும் தாம்பிர பஸ்பமும், வெள்ளியிலிருந்து வெள்ளி பஸ்பமும், பொன்னிலிருந்து தங்க பஸ்பமும் நமது நாட்டு வைத்தியர்கள் செய்து நோயாளிகளுக்குக் கொடுக்கிறார்கள். இதிலிருந்து தெரிவது என்ன வென்றால், நமது உடல் நலத்துக்கு உலோகங்களும் சிறிதளவு தேவைப்படுகிறது என்பதே ஆனால், இந்த உலோக மருந்துகளை, வைத்தியர் சொன்னால் தவிர, நாம் வாங்கிச் சாப்பிடுவது கூடாது. நாம் உண்ணும் உணவிலேயே இந்த உலோகச் சத்துக்கள் கலந்து இருக்கின்றன.

குறிப்பு: கடைகளில் விற்கும் இந்த உலோக மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவது ஆபத்தானது. இந்த மருந்துகள் சரியானபடி செய்யப்படா விட்டால், இவை நஞ்சாக மாறி உடம்பையே கெடுத்து அழித்துவிடும். உதாரணமாகத் தாம்பிரபஸ்பம், தாம்பிரச் சுன்னம் என்னும் மருந்துகள் செம்பிலிருந்து செய்யப்படுகிறது. செம்போடு ஒரு விதக் களிம்பு சேர்ந்திருக்கிறது. இந்தக்களிம்பு விஷத் தன்மை உள்ளது. களிம்பை நீக்கியபிறகு மேற்படி மருந்துகளைச் செய்யவேண்டும். அப்படிச் செய்வது மிகமிகக் கடினம். சுத்தி செய்யாத செம்பிலிருந்து செய்யப்பட்ட மேற்படி மருந்துகளைச் சாப்பிட்டால் உடல் நலம் கெட்டு உடம்பை அழிக்கும்.

அதுபோலவே லங்கபஸ்பம் என்னும் மருந்தும். லங்கபஸ்பம் ஈயத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த மருந்து நல்லமுறையில் செய்யப்பட்டால் நலம் பயக்கும். நல்லமுறையில் செய்யப்படாத லங்கபஸ்பம் நஞ்சுத் தன்மையுடையது. இதனால்தான் “வங்கம் தின்றால் பங்கம்” என்னும் பழமொழியும் வழங்குகிறது. வெள்ளி பஸ்பத்தினால் யாதொரு கெடுதியும் இல்லை. வெள்ளி பஸ்பம் நரம்புகளைப் பலப்படுத்துகிறது. அயச்செந்தூரம் இரத்த விருத்திக்கு ஏற்றது. தங்க பஸ்பம் நரம்புகளுக்குப் பலம் கொடுக்கும். அதே சமயத்தில் சிற்றின்ப இச்சையை அதிகமாக உண்டாக்கும். இதனால் தான் “இருக்கிறவன் இரும்பைத் தின்னு, போகிறவன் பொன்னைத் தின்னு” என்னும் பழமொழி ஏற்பட்டிருக்கிறது. இப்பழமொழியில் இரும்பு என்பது அயச்செந்தூரம்; பொன் என்பது தங்கபஸ்பம் ஆகும்.

இந்த உலோகங்களைத் தவிர, உடம்பில் வேறு முக்கியமான உலோகப் பொருள்களும் உள்ளன. அவற்றைப் பற்றி ஆராய்வோம்:

கால்ஸியம்:

கால்ஸியம் என்பது சுண்ணாம்பு எலும்புகளும் பற்களும் கால்ஸியம் பாஸ்பேட் என்னும் பொருளினால் அமைந்தவை. ஆகவே, கால்ஸியம் என்னும் சுண்ணாம்புப் பொருள் நமது உடல் நலத்துக்கு அவசியமானது. கால்ஸியம், எலும்புகளையும் பற்களையும் வளர்த்து பலப்படுத்துவதோடு வேறு வேலைகளையும் செய்கிறது. இடைவிடாமல் வேலை செய்து கொண்டிருக்கிற இருதயத்தை, நன்றாக வேலை செய்வதற்குக் கால்ஸியம் உதவி செய்கிறது. மேலும் நரம்புகளுக்கும் இரத்தத்திற்கும் கால்ஸியம் தேவைப்படுகிறது. தேவையான அளவு கால்ஸியம் உடம்பில் இல்லையானால் எலும்புகள் உறுதிப்படா, பற்களும் விரைவில் கெட்டுப்போகும். வளர்கிற குழந்தைகளின் உடம்பில் கால்ஸியம் இல்லையானால், எலும்புகள் மென்மையடைந்து, வளர்ச்சி குன்றிவிடும். இருதய நோய்களும் உண்டாகும். பிள்ளைப்பேறுபெற்ற தாய்மாருக்கும், கருத்தரித்த பெண்களுக்கும் இந்தக் கால்ஸியம் தேவை. ஆகவே, கால்ஸியம் உள்ள உணவு எல்லோரும் உண்ண வேண்டும்.

கால்ஸியம் என்னும் சுண்ணாம்புச் சத்துள்ள உணவுப் பொருள்கள்: பால், மோர், முட்டையின் மஞ்சட் கரு, முளைக்கீரை, முருங்கைக் கீரை முதலிய கீரைகள், பருப்பு வகைகள், வாதுமைப் பருப்பு முதலிய கொட்டை வகைகள் முதலியன. தாம்பூலம் போடுவது நமது நாட்டு வழக்கம். தாம்பூலத்துடன் சுண்ணாம்பு சேர்கிறது. தாம்பூலச் சாற்றை விழுங்குவதன் மூலம் உடம்பில் கால்ஸியம் சேர்கிறது. ஆனால், தாம்பூலத்துடன் புகையிலை போடுவது கூடாது. அப்படிச் செய்வது உடம்புக்குத் தீமை பயக்கிறது. ராகி (கேழ்வரகு),சோளம், கோதுமை, தவிடு உள்ள அரிசி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட் கிழங்கு, காரட் கிழங்கு (மஞ்சள் முள்ளங்கி), இறைச்சி முதலிய பொருள் களிலும் சிறிதளவு கால்ஸியம் உண்டு.

பாஸ்பரஸ்:

பாஸ்பரஸ் என்பது ஒருவகை உப்பு. இது கால்ஸியத்தைப் போலவே எலும்புகளையும் பற்களையும் வளர்க்கிறது. ஆகவே, பாஸ்பரஸ் எலும்புகளும் பற்களும் வளர்வதற்குத் தேவைப்படுகிறது. எலும்புகளை வளர்ப்பதோடு நரம்புகளும் தசைகளின் ஜவ்வுகளும் நன்னிலையில் இருக்கும்படி வைக்கிறது. உணவின் வழியாக உடம்பில் சேர்க்கிற கார்போ ஹைட்ரேட் என்னும் மாவுப் பொருளையும் கொழுப்புப் பொருளையும் கரைத்துப் பிரித்து அவை உடம்புக்குப் பயன்படும்படியான நிலையை உண்டாக்குகிறது. இரத்தத்துக்கு ஓரளவு பாஸ்பரஸ் தேவைப்படுகிறது.

பாஸ்பரசும், கால்ஸியமும் தகுந்த அளவாக உடம்பில் இருந்தால் தான் எலும்புகள் நன்றாக வளரும். தகுந்த அளவாக இல்லாமல் ஏற்றக்குறைவாக இருந்தால் எலும்புகள் நன்கு அமையா. ஆனால், போதுமான டி விட்டமின் என்னும் எலும்பு வளர்க்கும் உயிர்ச்சத்து உடம்பில் இருக்குமானால், எலும்புகள் நன்றாக வளரும் பாஸ்பரஸ் உள்ள உணவுப் பொருள்களாவன:

பால், மோர், முட்டை, பருப்பு வகைகள், வாதுமை, முந்திரி முதலிய கொட்டை வகைகள், ராகி (கேழ்வரகு), சோளம், வெள்ளரிக் காய், (இதைத் தோல் சீவாமல் உண்ண வேண்டும்.) வசளைக்கீரை, மஞ்சள் முள்ளங்கி (காரட் கிழங்கு), முள்ளங்கி, இறைச்சி, மீன் முதலியவை.

இரும்பு:

இரும்பு என்னும் அயம் நமது உடம்பின் நலத்துக்குத் தேவையானது என்று மேலே கூறினோம். இரும்புச் சத்துள்ள உணவுப் பொருள்களைச் சாப்பிட்டால் போதுமான அயச்சத்து உடம்பில் சேரும். அப்பொருள்களாவன: முளைக்கீரை, தண்டுக்கீரை, தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், பருப்புகள், கேழ்வரகு, முதலிய தானியங்கள், இறைச்சி, முட்டை, ஈரல், முலாம் பழம், தர்பூசிப் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த பேரீச்சம் பழம் முதலியன.

குளோரின், அயோடின்:

இந்த உப்புக்களும் உடல் நலத்துக்குத் தேவை. குளோரின், இரத்தத்தைச் சரியான முறையில் இருக்கச் செய்யவும், ஜீரணக் கருவிகள் உணவை ஜீரணம் செய்வதற்கும் இது வேண்டியதாக இருக்கிறது. நாம் உணவுடன் சேர்த்துக் கொள்கிற சாதாரண உப்பில் குளோரின் இருக்கிறது. அன்றியும் பச்சையான கீரைகளிலும், தக்காளிப்பழம், அன்னாசிப்பழம், வசளைக்கீரை, வாழைப்பழம், பேரீச்சம்பழம் முதலியவற்றினும் குளோரின் உண்டு.

கொழுப்புப் பொருள்களையும் கால்ஸியத்தையும் உடம்பில் உபயோகப்படுத்துவதற்கு அயோடின் வேண்டியிருக்கிறது. அயோடின் கீரைககளிலும், பழங்களிலும் இருக்கிறது. மீன் எண்ணெயிலும் இது உண்டு.

மேலே கூறிய உப்புகளும் உலோகங்களும் காய்கறி கீரை கிழங்குகளில் இருப்பதையறிந்தோம். ஆகவே, அவைகளை வேக வைத்த பின், அந்த உப்புகளும் உலோகங்களும் பாத்திரத்தின் அடியில் நீருடன் கலந்து இருக்கும். அந்த நீரைக் கொட்டி விடாமல் உணவுடன் பயன் படுத்த வேண்டும். இதைச் சமையல் செய்வோர் உணர வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *