
உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி
1. உணவும் உடம்பும்
உலகத்தில் வாழும் பிராணிகள் எல்லாம் பிறந்தது முதல் இறக்கும் வரையில் உணவை உண்டு வாழ்கின்றன. மனிதராகிய நாமும் பிறந்தது முதல் இறக்கும் வரையில் உணவை உண்டு வாழ்கிறோம். ஆனால், மற்றப் பிராணிகளின் உணவிலும், மனிதரின் உணவிலும் சில வேறுபாடுகள் உண்டு, அவ்வேறுபாடுகளில் முக்கியமானது, மனிதன் தான் உண்கிற உணவைச் சமைத்துச் சாப்பிடுகிறான். மற்றப் பிராணிகள் உணவைச் சமைத்துச் சாப்பிடுவது இல்லை. ஆதிகாலத்தில், மற்றப் பிராணிகளைப் போலவே மனிதனும் உணவைச் சமைக்காமல் அருந்தினான். பிறகு நெருப்பைக் கண்டு பிடித்துச் சமைத்து உண்ணக் கற்றுக்கொண்டான். இதனால், பல வகைப்பட்ட உணவுகளை உண்ணப் பழகிக் கொண்டான். வெவ்வேறு வகைளில் விலங்குகளிலிருந்து பிரிந்து உயர்வடைந்தது போலவே மனிதன் உணவு உண்பதிலும் விலங்ககளிலிருந்து பரிந்து உயர்வடைந்து விட்டான்.
மனிதன் நல்ல முறையில் பகுத்தறிவுள்ள விஞ்ஞான முறையில் உணவு உண்ணக் கற்றுக்கொண்டபோதிலும், பெரும்பான்மையோர் உடம்புக்கேற்ற தகந்த உணவை உண்பதில்லை. சயன்ஸ் என்னும் விஞ்ஞான முறைப்படி உணவை உண்ணத் தெரிந்து கொள்ளாத படியினாலே மனிதரில் பெரும்பான்மையோர் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். உடல் நலம் இல்லாமல் துன்புறுகின்றனர், உடல் நலத்துக்குத் தகுதியான உணவு வகைகளைத் தெரிந்து உண்பார் களானால் பெரும்பாலும் நோயில்லாமலும் உடல் நலத்தோடும் நன்றாக வாழலாம்.
வயிற்றைச் “சோற்றுத் துருத்தி” என்றும் ‘தூராத் துருத்தி’ என்றும் கூறுவர். ஏனென்றால், உண்ட உணவு ஜீரணமாகி வேளை தோறும் பசிக்கிறது. பசிக்கும் போதெல்லாம் புசிக்கிறோம். ஆனால், ‘சோற்றுத்துருத்தி’ வேளை தோறும் உணவைக் கேட்கிறது. பசியைப் போக்குவதற்கு மட்டும் நாம் உணவு கொள்வதில்லை. உடம்பில் பலமும் சக்தியும் உண்டாவதற்காகவும் உணவு உண்கிறோம். ஆகவே, கிடைத்ததை உண்டு பசியாறுவோம் என்பது பொருந்தாது.
‘கனியேனும் வறிய செங்காயேனும்
உதிர் சருகு கந்த மூலங்களேனும்,
கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்புசித்து நான்
கண்மூடி மௌனியாகித்
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணமிது
சாமி நீ யறியாததோ?’
என்று தாயுமான சுவாமிகள் கடவுளை வேண்டியது போல, கிடைத்த இலை காய்கனிகளை மட்டும் உண்டு வாழ்வது அவரைப் போன்ற யோகிகளுக்கும் துறவிகளுக்கும் தகுமேயன்றி உலகத்திலே “நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்” என்று விரும்புகிற நம்மைப் போன்றவருக்குப் பொருந்தாது. ஆகவே விஞ்ஞான முறைப்படி உடல் நலத்துக்கு ஏற்ற நல்லுணவை நாம் உண்ணவேண்டும். விஞ்ஞான முறைப்படி நம்முடைய உணவை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இக்காலத்தில் மனித வாழ்க்கை, விஞ்ஞானத்தோடு இயைந்ததாக அமைந்துவிட்டது. மனிதன், மற்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருப்பது போலவே உணவுத் துறையிலும் விஞ்ஞானத்தின் உதவியினால் முன்னேறியிருக்கிறான். பல நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அனுபவத்தினாலும் விஞ்ஞான ஆராய்ச்சி முறையினாலும் உணவைப் பற்றிய நல்ல அனுபவத்தை மனிதர் அடைந்துள்ளனர். அந்த முறைப்படி உடல் நலத்துக்கு ஏற்ற நல்லுணவை உட்கொண்டு நோயற்ற வாழ்வு வாழப் பழகிக்கொள்வோமாக.
உடலுக்கு உரம் அளிக்கும் உணவுப் பொருள்கள் எவை? நோய் வராமல் தடுக்க எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும்? எப்படிப்பட்ட உணவை உட்கொண்டால் நோயில்லாமல் வாழலாம்? இக்கேள்விகளுக்கு அறிஞர்கள் தக்க விடை கூறியுள்ளனர்.
நாம் உண்ணும் உணவில், உடம்புக்கு வெப்பம் தருகிற மாவுப் பொருள்கள் இருக்க வேண்டும். மாவுப் பொருளை ஸ்டார்ச் என்று கூறுவர். தசைகளுக்கு உரம் தருகிற புரதப் பொருள்கள் இருக்க வேண்டும். எலும்புகளுக்கு பலந்தருகிறவையும் இரத்தத்தைத் தக்க முறையில் வைப்பவையும் ஆன உலோகப் பொருள்களும், உப்புப் பொருள்களும் இருக்கவேண்டும். வைட்டமின் என்னும் உயிர்ச்சத்துப் பொருள்கள் இருக்கவேண்டும். இவையெல்லாம் கலந்துள்ள உணவை உட்கொள்வோமானால் உடம்பில் நோயில்லாமல் நன்றாக வாழலாம். ஆனால், இந்தப் பொருள்களையெல்லாம் எங்குப் போய்த் தேடுவது? இவை எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கவலைப்பட வேண்டாம். நாம் உண்ணும் உணவில் எந்தெந்த சத்துக்கள் என்னென்ன உலோகங்கள், உப்புகள், வைட்டமின்கள் கலந்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அப்பொருள்களை நம் உணவில் கொள்வோமானால் அதுவே போதுமானது. நாம் உண்ணும் உணவுகளில் பலவிதமான சத்துக்களும் இருக்கின்றன. எந்தெந்தப் பொருளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பிறகு, அவைகளை எப்படிக் கலந்து உண்ணவேண்டும் என்பதை யறிந்து கொள்ளவேண்டும். இவைகளைத் தெளிவாகக் கூறுவோம்.



