
உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி
11. கொழுப்புப் பொருள்களும் மாவுப்பொருள்களும்
உடம்புக்கு வெப்பம் அளிக்கிற பொருள் உண்டு. அப்பொருள் உடம்பின் வெப்பம் குறைவுபடாதபடி செய்கிறது. உடலுக்கு வெப்பம் அளிக்கிற பொருள்கள் இரண்டு. அவை: கொழுப்புப் பொருள்கள், மாவுப் பொருள்கள் என்பன.
கொழுப்புப் பொருள் என்பவை, வெண்ணெய், நெய், மீனெண்ணெய், நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய் முதலியவை. (இவற்றைப் பற்றி இந்நூலின் மற்றோர் இடத்தில் விளக்கமாகக் காண்க.)
மாவுப் பொருள் என்பது, ஆங்கிலத்தில் கார்போஹைரட்ரேட்டு என்று கூறப்படும்.அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலிய தானியங்கள் மாவுப் பொருள்களாகிய கார்போஹைட்ரேட்டு ஆகும். வெல்லம், சர்க்கரை, தேன் முதலியவைகளும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவை. கொழுப்புப் பொருள்களும், மாவுப் பொருள் சர்க்கரைப் பொருள்களும் ஆகிய இவை உடம்புக்கு வெப்பம் அளித்துச் சக்தியைத் தருகின்றன. மாவுப் பொருள்களும் சர்க்கரைப் பொருள்களும் விரைவாக எரிந்து உடம்புக்கு வெப்பத்தையும் சக்தியையும் அளிக்கின்றன. கொழுப்புப் பொருள்கள், மெல்ல நின்று எரிந்து வெப்பத்தையும் சக்தியையும் அளிக்கின்றன.



