
உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி
17. சில குறிப்புகள்: உண்ணும் விதம்
1. உணவைச் சற்றுச் சூடாக உண்பதும் நலம். சூடாகச் சாப்பிட்டால் உணவு விரைவில் ஜீரணமாகிறது. ஆறிப் போன உணவு சூடான உணவைப் போல, விரைவில் ஜீரணம் ஆவது இல்லை.
2. உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும். மெல்லுவதற்காகப் பற்கள் இருந்தும், பலர் பல்லை உபயோகிப்பது இல்லை. பல்லை உபயோகித்து உணவை நன்றாக மென்று தின்றால், தீனிப்பைக்கும் குடல்களுக்கும் வேலைகுறைகிறது. உணவை அரை குறையாக மென்று விழுங்குவதால் ஜீரணக் கருவிகளாகிய தீனிப்பைக்கும் குடல்களுக்கும் அதிக வேலை ஏற்படுகிறது. மெல்லும் பழக்கத்தினாலே, மற்றொரு நன்மையும் உண்டு. மெல்லும் போது பற்களின் வேர்களில் இரத்தம் அதிகமாக ஊறி பற்களுக்கு உறுதி ஏற்படுகிறது. ஆகவே பற்களுக்கு இரத்த ஓட்டம் ஏற்பட்டு அவை உறுதிப்படுவதற்காகவும், உண்ட உணவு விரைவில் ஜீரணம் ஆவதற்கும் நன்றாக மெல்லும் பழக்கத்தைப் பழகிக் கொள்ள வேண்டும்.
3. அதிகச் சூடாகவும் அதிகச் குளிர்ச்சியாகவும் நீரை அருந்துவது கூடாது. சிலர், தேனீர், காபி, பால் போன்ற பானங்களை அதிகச் சூடாகக் குடிக்கிறார்கள். சிலர், பனிக்கட்டிக் தண்ணீர், ஐஸ்கிரீம், பாதம்கீர் போன்ற மிகக் குளிர்ந்த பானங்களை அருந்துகிறார்கள். இரண்டும் உடல் நலத்துக்குத் தீமை பயக்கின்றன. அளவுக்கு மிஞ்சிய சூடும் அளவுக்கு மிஞ்சிய குளிர்ச்சியும் உடல் நலத்துக்கு ஏற்றது அல்ல. மித உஷ்ணமாக உண்பது மிகவும் நல்லது.
4. அதிகமான காரம் அதிகமான புளிப்பு உள்ள உணவை உண்ணக்கூடாது. அதிக இனிப்பான பண்டங்களையும் உண்பது கூடாது. மிட்டாய் முதலிய இனிப்புப் பொருள்களை அதிகமாக உண்பதனால் தேகத்துக்குத் தீமை உண்டாகும். சர்க்கரையில் உயிர்ச்சத்துக்களோ உப்புச்சத்துக்களோ உலோகச் சத்துக்களோ கிடையா. அன்றியும் இனிப்புப் பொருள் பசியைக் கெடுக்கும். ஆகையால் இனிப்புப் பொருள்களை அதிகமாக உட்கொண்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது.
5. இறைச்சி, மாமிசம் போன்ற தசை வளர்க்கும் பொருள்களை மிதமாக உண்ண வேண்டும்; அதிகமாக உண்பது உடல் நலத்தைக் கெடுக்கும். வாதுமைப் பருப்பு, அக்ரோட்டுப் பருப்பு, நிலக்கடலை, முந்திரிப் பருப்பு போன்ற வித்துக்களையும் குறைந்த அளவாக உண்ண வேண்டும். இவைகளை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
6. மாவுப்பொருள்களாகிய சோறு, இட்டலி, தோசை, பொங்கல், பூரி, ரொட்டி போன்றவை ஸ்டார்ச்சு என்று சொல்லப்படும். இந்த மாவுப்பொருள்கள் மென்மையாக இருப்பதனால் இதை நன்றாக மெல்லாமல் விழுங்கி விடுகிறார்கள். மாவுப்பொருள்களை ஜீரணப்படுத்துவது உமிழ் நீர். உணவை வாயில் போட்டவுடன் உமிழ்நீர் சுரக்கும். இதை எச்சில் என்றும் கூறுவர். எச்சிலாகிய உமிழ்நீரை மாவுப் பொருள் உணவுடன் நன்றாகக் கலந்து குழப்பி விழுங்க வேண்டும். வேண்டும். எச்சில் எவ்வளவு அதிகமாகக் கலக்கிறதோ அவ்வளவு அதிக விரைவாக மாவுப்பொருள்கள் ஜீரணம் ஆகின்றன. ஆகவே சோறு இட்டலி, தோசை, பொங்கல் முதலியவைகளை மென்று உமிழ்நீருடன் கலந்து விழுங்க வேண்டும்.
7. பசித்தபிறகு சாப்பிட வேண்டும். பசி இல்லாத இல்லாத போது உண்ணாதே. பசி இல்லாதபோது சாப்பிட்டால் உடலில் நோய்கள் ஏற்படும். “ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்” என்று கூறுகிறார் தேரையர் தமது நோயணுகா விதியில், அடிக்கடி எதையேனும் வயிற்றில் போட்டுக்கொண்டிருப்பது, நோயை விலைகொடுத்து வாங்குவது போலாகும்.
ஜீரணக் கருவிகளாகிய தீனிப்பையும் குடல்களும் தசைகளால் ஆன இயந்திரங்கள். உணவை ஜீரணம் செய்வதற்கு இந்தச் தசை இயந்திரங்கள் கடினமாக உழைக்கின்றன. அவற்றிற்கு இடையிடையே ஓய்வு கொடுக்க வேண்டும். இரயில் இஞ்சின் முதலிய இயந்திரங்கள் இரும்பினால் செய்யப்பட்டவை. இந்த இரும்பு இயந்திரங்களுக்குக் கூட, அவை வேலை செய்த பிறகு இவ்வளவு நேரம் ஓய்வு கொடுக்கவேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். இரும்பு இயந்திரங்களுக்கே ஓய்வு வேண்டும் என்றால், வெறும் தசைகளால் அமைந்த ஜீரணக் கருவிகளாகிய இயந்திரங்களுக்கு ஓய்வு அவசியம் வேண்டும் அல்லவா?
வயிற்றுக்கு அடிக்கடி ஓய்வு கொடுத்தால் உடம்பில் நோய் வராது; நெடுநாள் உயிர் வாழலாம். வயிற்றுக்கு ஓய்வு கொடுக்காமல் அதிகமாக வேலை கொடுத்தால், ஜீரணக் கருவிகள் விரைவில் கெடும். நோய் உண்டாகும். ஆயுள் குறையும்.
8. உணவை அளவாக உண்ணவேண்டும். அதிக உணவு உண்பது கட்டாயம் தீமை உண்டாக்கும். ஒரு பிடி குறைவாகவே உண்பதனால் உடல் நலம் கெடாது; சந்தோஷமும் ஆரோக்கியமும் உண்டாகும். அதிகமாக உண்கிறவனிடம் எப்போதும் நோய் இருக்கும். மிதமாக உண்கிறவனிடம் எப்போதும் உடல் நலமும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் இருக்கும்.
தீயளவன்றித் தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவின்றிப் படும்.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.
அற்றால் அளவறிந்து உண்க. அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.
என்பன திருவள்ளுவர் கூறிய திருக்குறள்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழியை நினைவில் வைக்க வேண்டும்.
9. சாப்பிட்டவுடன் சிறிது நேரம் ஓய்வு கொள்ள வேண்டும். சாப்பிட்டவுடன் வேலை செய்வது நலம் அல்ல.
10. இரவில் சாப்பிட்டவுடன் படுத்து உறங்குவது தீய பழக்கம். வயிறு நிறைய சாப்பிட்டு உடனே படுத்து உறங்கினால், உறக்கம் சுகமாக இராது கனவுகள் தோன்றும்.
11. கடினமாகச் சிந்தித்து மூளைக்கு வேலை கொடுப்பவர், வயிறு நிறைய உணவு கொள்வதுகூடாது. அவர்கள் சிறிதளவு உணவு கொள்ள வேண்டும். தமது வேலை முடிந்த பிறகு போதுமான அளவு உணவு கொள்ளலாம். உணவு சாப்பிட்டவுடன் கடினமாக மூளைக்கு வேலை கொடுப்பதால் சீரணம் கெடுகிறது. உணவு உண்டவுடன் தீனிப்பையும் குடல்களும் வேலை செய்யத் தொடங்குகின்றன. அப்பொழுது குடலுக்கும் தீனிப்பைக்கும் இரத்தம் அதிகமாகச் சென்று அவற்றை வேலை செய்யத் தூண்டுகிறது. அதே சமயத்தில் மூளைக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே சீரணக் கருவிகளில் இரத்தம் குறைவுபட்டு சீரண வேலை தடைப்படுகிறது. இதனால் அசீரணம் முதலிய நோய்கள் உண்டாகின்றன. ஆகையால், மூளையைச் செலுத்திக் கடினமாகச் சிந்திக்கும்போது, வயிறு நிறைய உணவு கொள்வது கூடாது. மூளை வேலை முடிந்து ஓய்வு கொண்ட பிறகு போதுமான உணவு அருந்தலாம்.
12. ஒரே மாதிரி உணவை எப்பொழுதும் உண்பது நலம் அல்ல. பலவித உணவுகளைக் கலந்து கொள்ள வேண்டும். சிலர் எப்பொழுதும் இட்டலி, தோசை, சோறு, பொங்கல், பூரி போன்ற மாவு உணவுகளையே காலை பகல் மாலை இரவு வேளைகளில் உண்பர். இவ்வாறு மாவுப் பண்டங்களை மட்டும் உண்பது தவறு. வேறு காய்கறி கிழங்கு பருப்பு வகைகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முற்றும்.
★ ★ ★



