
உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி
9. எண்ணெய்கள்
எண்ணெயும் கொழுப்பும் உடல்நலத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களே. ஆகையால் உணவுடன் இவைகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். எள்ளிலிருந்து எடுக்கப்படுகிற நல்லெண்ணெயும், நிலக்கடலையிலிருந்து எடுக்கப்படுகிற கடலை எண்ணெயும் தேங்காயிலிருந்து எடுக்கப்படுகிற தேங்காய்எண்ணெயும் சமையலுக்கு உபயோகப்படுகின்றன. இவ்வெண்ணெய்களைக் காய்கறி, கீரை, கிழங்கு, குழம்பு, சாம்பார் முதலியவைகளைச் சமைக்கும்போது அவைகளுடன் சேர்க்கிறோம். எண்ணெய்களுக்குத் தாவரக் கொழுப்பு என்பது பெயர்.
ஆடு, மாடு, எருமை முதலிய பிராணிகளின் பாலிலிருந்து கிடைக்கிற வெண்ணெய் நெய்களையும் உணவுடன் உபயோகிக்கிறோம். இவைகளுக்கு மிருகக் கொழுப்பு என்பது பெயர். மீன்களிலிருந்து எடுக்கப்படுகிற மீன் எண்ணெய்களும் மிருகக் கொழுப்பைச் சேர்ந்தவையே. மிருகக் கொழுப்பு தாவரக் கொழுப்பு இரண்டும் உடல்நலத்துக்கு வேண்டிய பொருள்கள்.
மிருகக் கொழுப்பாகிய நெய்யிலும் வெண்ணெயிலும் ஓரளவு ஏ விட்டமின், டி விட்டமின் என்னும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. மீன் எண்ணெய்களில் அதிக அளவாக ஏ.டி. விட்டமின்கள் உள்ளன. தாவரக் கொழுப்புகளாகிய எண்ணெய்களில் ஏ.டி. விட்டமின்கள் கிடையா. ஆனால் எண்ணெய்களை வெயிலில் காயவைத்தால், வெயிலிலிருந்து எண்ணெய்களில் டி விட்டமின் உண்டாகிறது என்று ஆராய்ச்சி செய்தவர்கள் கூறுகிறார்கள்.
நமது நாட்டிலே எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் உடம்பு முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் எண்ணெய் உடம்பில் ஊறியபின், சீக்காய் அல்லது அறைப்பை தேய்த்து வெந்நீரில் குளிப்பது வழக்கம். உடம்பில் தேய்த்த எண்ணெயை நன்றாகத் தேய்த்துக் கழுவவேண்டும். இப்படி எண்ணெய் தேய்த்துக் குளிப்பதனாலே இரண்டு நன்மைகள் உண்டாகின்றன. அவை:
1. உடம்பு முழுவதும் மயிர்க்கால்கள் தோறும் உள்ள நுண்ணிய துளைகள் வியர்வையால் அடைபட்டிருக்கும் அழுக்கு நீங்கிச் சுத்தம் அடைகின்றன. வியர்வையோடு வெளிப்படுகிற அழுக்கினால் மயிர்க்கால் துவாரங்கள் அடைபடுகின்றன. எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பதனாலே மயிர்க்கால்கள் அழுக்கு நீங்கிச் சுத்தப்படுகின்றன. ஆனால் எண்ணெய் தேய்த்துத் தண்ணீரில் குளிப்பதனால் இத்தன்மை உண்டாகிறதில்லை. இதனால்தான் தேரையரும் நோயணுகா விதியில், “எண்ணெய் பெறில் வெந்நீரில் குளிப்போம்” என்று கூறினார்.
எண்ணெய் குளிப்பதனாலே, மயிர்க்கால் துளைகள் சுத்தப்படுவதோடு, நரம்புகளும் பலம் அடைகின்றன. கண் குளிர்கிறது. உடம்பில் வியர்வையினால் ஏற்படுகிற “கற்றாழை நாற்றம்” எண்ணெய் குளிப்பதனாலே நீங்கிவிடுகிறது. எண்ணெய் குளிக்கும் பழக்கம் இல்லாதவர்களின் உடம்பில் அருவெறுப்புள்ள கற்றாழை நாற்றம் வீசுவது உண்டு. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் அந்த நாற்றம் அடியோடு நீங்கிவிடுகிறது.
2. இரண்டாவது நன்மை என்னவென்றால், எண்ணெய் தேய்த்த உடம்பின் மேல் சூரிய வெளிச்சம் படுவதனால், எலும்புக்குப் பலம் உண்டாகிறது. சூரிய வெளிச்சத்தில் எலும்புக்குப் பலம் தருகிற டி விட்டமின் என்னும் உயிர்ச்சத்து உண்டு. எண்ணெயில் சூரிய வெளிச்சம் படும் போது அந்த உயிர்ச்சத்து ஏற்படுகிறது. இப்படிக் கூறுவதனால், எண்ணெய் தேய்த்துக் கொண்டு வெயிலில் நிற்க வேண்டும் என்பது பொருள் அல்ல. அப்படி நிற்பது தவறு. அதனால் தீமை உண்டாகும். வெயிலில் இராமல் சூரிய வெளிச்சம்படும்படி நிழலில் இருந்தால் போதும். எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகும் சிறிதளவு எண்ணெய்ப் பசை உடம்பில் இருப்பதனாலே, அதன்மேல் சூரியவெளிச்சம் பட்டாலும் டி விட்டமின் ஏற்படுகிறது. ஆகையினால், வாரத்துக்கு ஒருதடவை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது நல்லது.
விளக்கெண்ணெய் ஆகிய ஆமணக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு. விளக்கெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். கடலை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் வழக்கம் இல்லை.
தாவரக் கொழுப்பாகிய எண்ணெய்களைவிட மிருகக் கொழுப்பாகிய வெண்ணெய்களில் அதிக சத்து உண்டு. ஆனால், மிருகக் கொழுப்புகளை மட்டும் உணவுடன் உபயோகிப்பது நலம் அல்ல. இரண்டையும் சேர்த்துக் கொள்வது நலம்.
தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் முதலிய தாவரக் கொழுப்பிலிருந்து டால்டா, வனஸ்பதி முதலிய பொருள்களைச் செய்கிறார்கள். அவைகளில் ஏ.டி. விட்டமின்கள் கிடையா. மீன் எண்ணெய்களிலும் நெய் வெண்ணெய் போன்ற மிருகக் கொழுப்பு களிலும் தான் ஏ.டி. விட்டமின்கள் உண்டு.



