உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி

13. விட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்கள்

உணவுப் பொருள்களில் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. உயிர்ச் சத்துக்களுக்கு விட்டமின் என்று ஆங்கிலத்தில் பெயர் கூறுவார்கள். விட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்கள் இல்லாமற் போனால் உடல்நலம் கெடும்; பலவித நோய்கள் உண்டாகும். ஆகவே, உயிர்ச் சத்துக்கள் உடல் நலத்துக்கு மிக மிக இன்றியமையாதவை. பல உயிர்ச் சத்துக்கள் உள்ளன. அவைகளில் நான்கு முக்கிய மானவை. அந்த நான்கு உயிர்ச் சத்துக்களுக்கு ஆங்கில எழுத்து வரிசைப்படி ஏ விட்டமின், பி விட்டமின், சி விட்டமின், டி விட்டமின் என்று பெயர் கூறுவார்கள். இந்த விட்டமின்களைப் பற்றி ஒவ்வொரு வரும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். விட்டமின் குணங்களை அறிந்து அந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் பெரும்பாலும் நோய் வராமலே தடுத்து விடலாம். நோயற்ற வாழ்வு வாழ்வதற்கும், உடம்பில் நோய் வராமல் தடுப்பதற்கும் விட்டமின் என்னும் உயிர்ச்சத்துக்களைப் பற்றிய விபரங்களை நன்கறிந்து கொள்ள வேண்டும். ஆகவே அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

ஏ விட்டமின்:

இந்த உயிர்ச்சத்து, உடம்பின் வளர்ச்சிக்கும் உடம்பில் நோய்க் கிருமிகள் புகாமல் தடுப்பதற்கும் கண்களின் பார்வை கெடாமலிருப்பதற்கும் மிக முக்கியமானது.

சிறு குழந்தைகள் பெரியவர்களாக வளர்கிற உடல் வளர்ச்சிக்கும், வளர்ந்தவர்களின் உடம்பில் ஏற்படுகிற தேய்வு கழிவுகளை நிரப்புவதற்கும் இந்த உயிர்ச்சத்து முக்கியமானது. தேகத்தில். இந்த உயிர்ச்சத்து இல்லாவிட்டால், உடம்பின் தோல் சொறசொறப்பாகவும் சொறி உள்ளதாகவும் இருக்கும். நோய்க் கிருமிகள் எளிதில் தேகத்தில், புகுந்து நோயை உண்டாக்கும்.

இந்த ஏ விட்டமின் உயிர்ச்சத்து உடம்பில் இல்லா விட்டால், கண் பார்வை மங்கும். இரவில் கண் தெரியாமல் போகிற மாலைக்கண் முதலிய கண்ணைப் பற்றிய நோய் உண்டாகும். ஆகவே இந்த உயிர்ச்சத்து உடல்நலத்துக்கு மிக முக்கியமானது. இந்த ஏ விட்டமின் எந்தெந்த உணவுப் பொருள்களில் இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்பு இந்த விட்டமின் எப்படி உண்டாகிறது என்பதைக் காண்போம்.

ஏ விட்டமின் என்னும் உயிர்ச்சத்து சூரிய வெளிச்சத்தில் இருக்கிறது. இந்தச் சத்தைச் சூரிய வெளிச்சத்திலிருந்து மரம் செடிகள் இழுத்துக் கொள்கின்றன. எனவே பசுமையான இலை தழைகளில் ஏ விட்டமின் காணப்படுகிறது. பசுந்தழைகளையும் இலைகளையும் புற்களையும் தின்கிற ஆடு மாடுகளின் பாலிலும், அதிலிருந்து கிடைக்கிற வெண்ணெய், நெய்களிலும் இந்த உயிர்ச்சத்து உண்டு. பச்சை நிறமான இலை தழைகளில்தான் இந்த விட்டமின் இருக்கிறதே தவிர, காய்ந்து உலர்ந்து போன புல் வைக்கோலை மட்டும் தின்கிற ஆடு மாடுகளின் பாலிலும் வெண்ணெயிலும் இந்த ஏ விட்டமின் கிடைக்காது. ஆகவே, பசுமையான இலை தழை தின்கிற கால்நடைகளின் பால், தயிர், வெண்ணெய்களில் ஏ. விட்டமின் உண்டு.

ஏரி குளம் கடல் முதலிய நீர்நிலைகளில் பாசிகளும் நீர்ப்பூண்டுகளும் வளர்கின்றன. இந்தச் செடிகளும் சூரிய வெளிச்சத்திலிருந்து ஏ விட்டமினை எடுத்துக் கொள்கிறது. சிறு மீன்கள் இந்தப் பாசிகளையும் நீர்ப்பூண்டுகளையும் தின்கிறபடியால், அவைகளின் உடம்பில் ஏ விட்டமின் உண்டு. சிறிய மீன்களைப் பிடித்துத் தின்று உயிர் வாழ்கிற பெரிய மீன்களின் உடம்பிலும் ஏ விட்டமின் உண்டு. ஆகவே காட்லீவர் ஆயில், ஷார்க் (சுறாமீன்) லீவர் ஆயில் முதலிய மீன் எண்ணெய்களில் ஏ விட்டமின் என்னும் உயிர்ச்சத்து இருக்கிறது.

மஞ்சள் நிறமான காய்கறி கிழங்குகளிலும் இந்த உயிர்ச்சத்து உண்டு என்று ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கம்பு என்னும் தானியத்திலிருந்து ஏ விட்டமின் என்னும் உயிர்ச்சத்துகளை உண்டாக்கிக் கொள்ளலாம். கம்பை நீரில் ஊறவைத்து ஈரத் துணியில் முடிந்து ஈரம் புலராமல் வைத்தால் இரண்டு நாட்களில் முளை வெளிப்பட்டு முளைக்கும். முனையுள்ள இந்தக் கம்பை சர்க்கரை அல்லது வெல்லத்துடன் மென்று தின்னலாம். இதில் ஏ விட்டமின் என்னும் உயிர்ச்சத்து உண்டு.

(குறிப்பு: இந்த முளைத்த கம்பில் சி விட்டமின் கிடையாது. ஏ விட்டமின் மட்டும் உண்டு.)

நமது நாட்டிலே கன்று ஈன்ற பசுக்களுக்கு முளைவிட்ட கம்புடன் சிறிது வெல்லம் கலந்து தின்னவைக்கும் வழக்கம் உண்டு.

முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, கொத்து மல்லிக்கீரை, கோசுகீரை, (முட்டைகோசு) முதலிய கீரைகளிலும், தக்காளிப்பழம், பப்பாளிப்பழம், மஞ்சள் முள்ளங்கி (கேரட் கிழங்கு), ஆட்டு ஈரல், முட்டையின் மஞ்சட்கரு, பசும்புல், பசுந்தழை இலைகளைத் தின்கிற ஆடு மாடுகளின் பால், வெண்ணெய், நெய் முதலிய பொருள்களிலும் ஏ விட்டமின் என்னும் உயிர்ச்சத்து உண்டு. இவைகளை நமது உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இந்த உயிர்ச் சத்தை நாம் அடையலாம்.

ஏ விட்டமின் உள்ள உணவுகளை அதிகமாகச் சமைத்தால், இந்த உயிர்ச்சத்து அழிந்து போகிறது. அதிக சூடுபட்டால் இந்த விட்டமின் கெட்டுப் போகிறது. ஆகவே நெடுநேரம் வேக வைக்காமல் இருப்பது நலம். மேலும், ஏ விட்டமின் உள்ள பொருள்களைச் சமைக்கும் போது காற்றுப் புகாதபடியும் மூடி வைக்கவேண்டும். ஏ விட்டமின் உள்ள கீரைகள் பழங்கள் முதலிய பொருள்களைக் காற்றுப்புகும்படி திறந்து வைத்துச் சமைத்தால், காற்றிலுள்ள பிராணவாயு அவைகளுடன் கலந்து அவற்றில் உள்ள ஏ விட்டமின் அழிந்து போகிறது, ஆகையால் அவைகளைச் சமைக்கும் போது மூடி வைத்துச் சமைக்க வேண்டும். மேலும் அதிகநேரம் சமைப்பதும் கூடாது.

பி. விட்டமின்:

பி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து, விட்டமின்களில் மிகவும் முக்கியமானது. இப்படிச் சொல்வதனாலே மற்ற விட்டமின்கள் முக்கியமானவை அல்ல என்று கருத வேண்டா. விட்டமின்கள் தேக சுகத்துக்கு மிக இன்றியமையாதவை. அவைகளிலும் இன்றியமையாதது பி. விட்டமின்.

பி. விட்டமின் என்னும் இந்த உயிர்ச்சத்து உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. உடம்பில் உண்டாகிற தேய்வு கழிவுகளை இது நிரப்புகிறது. நரம்புகளையும் தசைகளையும் பலப்படுத்துகிறது. உடம்புக்குள்ளே இருந்து கடினமாக உழைத்து வருகிற உறுப்புகளாகிய மூளை, இருதயம், ஜீரணக் கருவிகளாகிய தீனிப்பை, குடல்கள், ஈரல், குண்டிக்காய் முதலியவைகளை இந்த பி. விட்டமின் பலப்படுத்துகிறது. இந்த விட்டமின் உடம்பில் குறையுமானால், அஜீரணம், பேதி, மலச்சிக்கல், வயிற்றில் நோய், சோர்வு முதலிய நோய்கள் உண்டாகும்.

இந்த முக்கியமான உயிர்ச்சத்து, அரிசி கோதுமை கேழ்வரகு கம்பு சோளம் முதலிய தானியங்களிலும், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சைப் பருப்பு, உளுத்தம் பருப்பு முதலிய பருப்பு வகைகளிலும், மொச்சைக் கொட்டை, அவரைக் கொட்டை, பீன்ஸ் கொட்டை, வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, அக்ரோட்டுப் பருப்பு, வாதுமைப் பருப்பு முதலியவைகளிலும், தக்காளிப் பழம், வெங்காயம், காரட்கிழங்கு என்னும் மஞ்சள் முள்ளங்கிக் கிழங்கு, வசளைக் கீரை, பால், முட்டை, மீன் இறைச்சி முதலியவைகளிலும் இருக்கிறது.

அரிசி கோதுமை முதலிய தானியங்களில் இந்த பி. விட்டமின் இருக்கிறதென்று கூறினோம். தானியங்களிலுள்ள தவிடுகளில்தான் இந்த விட்டமின் உண்டு. நெல்லைக் குத்தினால் உமி வெளிப்படுகிறது. உமிக்குக் கீழே அரிசி இருக்கிறது. அரிசியின் மேலே மெல்லிய தோல் போன்ற பொருள் புரைபோல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் புரைக்குத் தவிடு என்று பெயர். இந்தத் தவிட்டில் தான் பி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து உண்டு. அரிசியில் தவிடு இருப்பது போலவே கோதுமையிலும் தவிடு உண்டு. 

நெல்லைக்குத்தி உமியை நீக்கும்போது அரிசியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கிற தவிடு ஓரளவு பரிந்து போகிறது. போனது போக மிகுதியுள்ள தவிடும் அரிசியைப் பல தடவை நீரில் கழுவி விடுவதனால், முழுவதும் பிரிந்து போகிறது. எனவே அரிசியை உலையில் இட்டுச் சமைக்கும் போது அதில் தவிடு கிடையாது. சோறு வெந்த பிறகு கஞ்சியை வடித்து விடுகிற படியினாலே பி. விட்டமின் அறவே கழிந்து விடுகிறது. இந்தச் சோற்றை உண்பதினாலே பி. விட்டமின் போய் விட்ட படியினால், நரம்புகள் தசைகள் மூளை இருதயம் ஈரல் முதலிய உறுப்புகளுக்கு உரம் அளிக்கும் சத்து கிடைக்கிறதில்லை. தவிடு போகாமல் சோற்றைச் சமைத்து அருந்தினால் இந்த உயிர்ச்சத்து நமது தேகத்துக்கு எவ்வளவோ நன்மையையுண்டாக்கும். சோற்றில் பி. விட்டமின் கழிந்து போய் விடுகிறபடியால், அதற்கு ஈடாக பருப்பு களையும் மாமிசம் மீன் முட்டை முதலியவைகளையும் சேர்த்துக் கொள்கிறோம்.

அரிசியையும் கோதுமையையும் மிஷினில் இட்டுத் தீட்டி உமி நீக்குகிறார்கள். இப்படிச் செய்வதனாலே அரிசியிலும் கோதுமையிலும் ஒட்டிக்கொண்டு இருக்கிற தவிடும் கழிந்து விடுகிறது. ஆகவே, தவிட்டோடு பி. விட்டமினும் கழிந்து போகிறது. நெல்லைக் கைக்குத்தலாகக் குத்தினால் அதிகமாகத் தவிடு கழிந்து போகாது. கைக்குத்தலாக இருந்தாலும் மிஷின் குத்தலாக இருந்தாலும் தவிடு போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கேழ்வரகு, சோளம் இவைகளை முழு தானியமாக அரைப்பதினாலே அவைகளில் உள்ள தவிடு பிரிந்து போகிறதில்லை. ஆகையால்தான், அரிசி உணவை உண்பவர்களை விடக் கேழ்வரகு உணவை உண்கிறவர்கள் அதிக உடல் கட்டோடு இருப்பதைக் காண்கிறோம்.

இக்காலத்தில் கிராமங்களில் கூட நெல்லை அரிசியாக்க மிஷின்கள் உள்ளன. மிஷின்கள் இல்லாத காலத்தில் நெல்லை உரலில் இட்டு உலக்கையால் உமி நீக்கி அரிசி ஆக்குவார்கள். கைக்குத்தல் அரிசியாகையால் தவிடு அதிகமாகப் பிரிந்து போவதில்லை. அந்த அரிசி உடம்புக்குப் பலம் அளித்தது. கைக்குத்தலிலும், நெல்லைக் குற்றி உமியைப் புடைக்கும்போது அதனுடன் தவிடும் இருக்கும். அந்தத் தவிட்டை எடுத்து அதனுடன் வெல்லம் சேர்த்துப் பாட்டிமார்கள் சிறுவர்களுக்கு உண்ணக் கொடுப்பார்கள். இதை உண்பதனால் சிறுவர் உடல் நலம்பெற்று வளர்ந்தனர். இந்த வழக்கம் இப்போது மறைந்து போயிற்று.

பச்சரிசியைவிட புழுங்கல் அரிசியில் சிறிதளவு தவிடு உண்டு. எப்படி என்றால் நெல்லை அவித்து உலரவைத்து அதைத் குற்றுகிற படியினாலே, அவிக்கப்பட்ட நெல்லில், தவிடு அரிசியுடன் ஒட்டிக் கொள்கிறது. அந்த நெல்லைக் குற்றி அரிசியாக்கும் போது, தவிடு அதிகமாகக் கழிந்து போகாமல், அரிசியோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையினாலே, பச்சரிசியை விடப் புழுங்கல் அரிசி சிறிது சத்துடையது என்பதில் ஐயமில்லை. ஆகவே புழுங்கல் அரிசி நல்லது; அதிலும் கைக்குற்றல் அரிசி நல்லது.

தவிடு நீங்காத அரிசி அல்லது கோதுமையை உண்பதனாலேயே போதுமான பி. விட்டமின் நமக்குக் கிடைக்கிறது என்று கருத வேண்டா. தினந்தோறும் பி. விட்டமின் உள்ள வேறு உணவுப் பொருள்களையும் உணவாகக் கொள்ளவேண்டும். பி. விட்டமின் உள்ள வேறு உணவுப் பொருள்களை மேலே கூறியுள்ளோம்.

பி.விட்டமின் என்னும் உயிர்ச்சத்து, அனலினால் அழிந்து போகிறதில்லை. ஆனால், சோடா உப்பு என்னும் உப்பைச் சேர்த்துச் சமைத்தால் இந்த உயிர்ச்சத்து அழிந்து போகிறது. ஆகையினாலே சோடா உப்பு சேர்க்காமல் சமைக்க வேண்டும். உணவு விடுதிகள் சிற்றுண்டிச் சாலைகள் முதலிய இடங்களில் இட்டலி, தோசை, வடை, போண்டா, பச்சி முதலிய உண்டிகளில் சோடா உப்புச் சேர்த்துச் சமைக்கிறார்கள். சோடா உப்பு சேர்ப்பதனாலே பண்டங்கள் விரைவாக வெந்து போகின்றன. அன்றியும் அந்தப்பண்டங்கள் உப்புசமாகப் பெரிதாகக் காணப்படுகின்றன. ஆனால் பி. விட்டமின் என்னும் முக்கியமான உயிர்ச்சத்து அழிந்து போகிறது. அதனாலே உடம்புக்கு நலம் உண்டாவதில்லை. ஓட்டல்களில் உணவு அருந்துவது உடல் நலத்துக்குத் தீமை பயக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

பி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து உடல் நலத்துக்கு மிக முக்கியமானது என்பதையும் இந்த உயிர்ச்சத்துள்ள பொருள்களை நாள் தோறும் உணவாகக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

பி.விட்டமின் என்னும் உயிர்ச்சத்தில் சில உட்பிரிவுகள் உண்டு. அவற்றைப் பற்றிய விபரம் நமக்குத் தேவையில்லை.

சி. விட்டமின் :


சி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து இரத்தத்தை உரப்படுத்தி நன்னிலையில் வைக்கிறது. சி. விட்டமின் இல்லாமற் போனால் இரத்தம் கெடும். பற்களையும் எலும்புகளையும் வளர்ப்பதற்கும் உரப்படுத்துவதற்கும் இந்த உயிர்ச்சத்து மற்ற உயிர்ச்சத்துக்கு உதவி செய்கிறது. இந்த உயிர்ச்சத்து குறையுமானால், தசைகள் பலவீனப்படும். இரத்தக் குறைவினால் உண்டாகும் சோகை என்னும் நோய் உண்டாகும். பற்கள் பலமற்றுப் போவதோடு ஈறுகளில் இரத்தம் வடியும். வாய் நாறும். பசியிராது. மலபந்தம் முதலிய ஜீரணக் கருவிகளைப்பற்றிய நோய்கள் உண்டாகும். எலும்பு மூட்டுகளில், முக்கியமாகக் கால் எலும்பு மூட்டு களில் நோவு அதிகரிக்கும். உடம்பு முழுவதும் நோகும். சி.விட்டமின் குறைவினால், தேகம் முழுவதும் தசைகளில் நோவு உண்டாவதால் குழந்தைகள் ஓயாமல் அழும். ஆகவே, உடல் நலம் சுகமாக இருப்பதற்கு சி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து மிக முக்கியமானது.

சி.விட்டமின் என்னும் உயிர்ச்சத்து பழங்களிலும் கீரைகளிலும் இருக்கிறது. ஆரஞ்சிப் பழத்தில் இந்த உயிர்ச்சத்து உண்டு. இரண்டு ஆரஞ்சிப்பழத்தில் உள்ள அளவு சி. விட்டமின் ஒரு சிறு நெல்லிக்காயில் உண்டு என்று அறியப்படுகிறது. எனவே நெல்லிக்காயில் இந்த உயிர்ச்சத்து மிகவும் அதிகம். நெல்லிக்காய் ஆண்டு முழுவதும் கிடைக்கிறதில்லை. மார்கழி, தை மாதங்களில் மட்டும் கிடைக்கும். கிடைக்கிற காலங்களில் அதை ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்ளலாம். அல்லது பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளலாம். (வேறு பக்கம் காண்க.) நெல்லிக்காயின் பெருமையை நமது நாட்டில் பண்டைக் காலம் முதல் அறிந்திருக்கிறார்கள். அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் அரசன் அருமையான நெல்லிக்கனியை ஔவையார் என்னும் புலவருக்கு அருந்தக் கொடுத்தான் என்றும், நெல்லிக்கனியை உண்ட ஔவையார் நெடுநாள் உயிர் வாழ்ந்திருந்தார் என்றும் ஒரு கதை உண்டு. இதிலிருந்து இந்தக் கனியின் பெருமையை அறியலாம்.

நமது நாட்டு வைத்தியர்கள், நெல்லிக்காயிலிருந்து சியவனப் பிராசம் என்னும் லேகியம் செய்து நோய்களுக்குக் கொடுக்கிறார்கள். நெல்லிக்கனியைப்பற்றி இந்நூலில் காண்க.

சி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து நெல்லிக்காய், ஆரஞ்சிப் பழம், தக்காளிப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், முருங்கைக் கீரை, வசளைக் கீரை முதலியவைகளில் உண்டு. முளைவிடப்பட்ட மொச்சை, காராமணி, பட்டாணி, உளுந்து, பச்சைப்பயறு ஆகிய பயறு வகைகளில் உண்டு.

அதாவது மேற்படி பயறுகளில் ஒன்றை ஒருநாள் தண்ணீரில் ஊறவைத்து ஈரத் துணியில் முடித்து ஈரம் புலராமல் வைத்தால் இரண்டு நாட்களில் முளைவிட்டு முளைவிட்டு முளைக்கத் தொடங்கும். இவ்வாறு முளைவிடப்பட்ட பயறுகளை பச்சையாக மென்று தின்ன வேண்டும். இவற்றில் சி. விட்டமின் உண்டாகிறது.

ஆனால் எல்லாப் பயறுகளையும் முளைவிட்டுப் பச்சையாகத் தின்பது அனுபவத்தில் செய்ய முடியாது. அனுபவத்தில் செய்யக் கூடியது ஒன்றுதான். அதாவது பச்சைப் பயற்றை மட்டும் முளைவிட்டு உண்ணலாம். மற்றப்பயறுகளை அவ்வாறு உண்பது இயலாது. பச்சைப்பயற்றை முளை கட்டி அதனுடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து தேங்காய்த் திருவலையும் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அன்றியும் சி. விட்டமினையும் பெறலாம். முளை விட்ட பச்சைப் பயற்றைப் பச்சடி செய்தும் உண்ணலாம். பழங்கள் விலை யதிகம். ஆகையால் பச்சைப்பயற்றை முளை கட்டி உண்பது எளிது. பழம் கிடைக்காத போதும் இதை உண்ணலாம்.

காய்கறிகளிலும் கீரைகளிலும் சி. விட்டமின் உண்டு. புல் இலை தழைகளைத் தின்கிற ஆடுமாடுகளின் பாலிலும் சி. விட்டமின் உண்டு. ஆனால், இந்த உயிர்ச்சத்திலுள்ள குறைபாடு என்ன என்றால், இது அனல்பட்டால் அழிந்து போகிறது. ஆகையால் காய்கறி கீரைகளையும் பாலையும் வேகவைப்பதனாலும், காய்ச்சுவதானாலும் அவற்றில் உள்ள இந்த உயிர்ச்சத்து முழுவதும் அழிந்துபோகிறது. பாலைக் காய்ச்சாமல் அருந்தினால் அதிலுள்ள சி. விட்டமின் உடலில் சேரும். காய்ச்சிய பாலில் இந்த விட்டமின் இல்லை.

பி. விட்டமினை வேகவைத்தால் அது சூட்டில் அழிவதில்லை. ஏ. விட்டமின் சிறிது சூடு தாங்கும். ஆனால், அதிக சூடுபட்டால் அழிந்துவிடும். சி. விட்டமின் சிறிது அனல் பட்டாலும் அழிந்து விடுகிறது. ஆகவே சி. விட்டமின் உள்ள உணவுகளைச் சமைக்காமல் பச்சையாகவே உண்பது நல்லது. 

டி. விட்டமின்:

டி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து பற்களையும் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. கால்சியம், பாஸ்பரஸ் முதலிய எலும்பை உண்டாக்கும் பொருள்கள் இரத்தத்தில் நிறைய இருந்தால் மட்டும் எலும்பு உருவடைந்து பலப்படாது. அவற்றோடு இந்த டி.விட்டமின் என்னும் உயிர்ச்சத்து இருந்தால்தான் எலும்பும் பற்களும் உருவடைந்து பலப்பட்டு வளரும். எலும்பு பலமாக இல்லாமற் போனால் உடம்பு பலமாக இராது. வளரும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும், கருவாய்த்த பெண்களுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் இந்த விட்டமின் மிகவும் தேவை. இந்த விட்டமின் உடம்பில் இல்லாத குழந்தைகள் நேராக நிற்கவும் நடக்கவும் முடியாது. கால் கைகள் வளைந்து குறுகிவிடும். இந்த உயிர்ச்சத்து போதுமான அளவு இருந்தால்தான் உடம்பு சுகமாக இருக்க முடியும். ஆகையால் எலும்புக்கு உரம் அளிக்கிற இந்த உயிர்ச்சத்து எல்லோருக்கும் தேவையானது.

இந்த உயிர்ச்சத்து, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது. சூரிய வெளிச்சம் இல்லாத நாடுகளில் வாழ்பவர்களுக்கு எலும்பு உறுதியாக இராது. சூரிய வெளிச்சம் அதிகமாக உள்ள நாடுகளில் வாழ்பவர்களுக்கு எலும்பு உறுதியாக இருக்கும். நமது நாட்டிலே போதிய சூரிய வெளிச்சம் உண்டு. சூரிய வெளிச்சம் உடம்பின் உள்ளே பாய்ந்து எலும்புகளைப் பலப்படுத்துகிறது. மேலும் உடம்பு முழுதும் எண்ணெய் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கும் பழக்கம் நமது நாட்டில் நெடுங் காலமாக இருந்து வருகிறது. இது நல்ல பழக்கம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதனாலே சூரிய வெளிச்சம் உடம்பில் பாய்ந்து எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது. எப்படியென்றால், எண்ணெயில் சூரிய வெளிச்சம் பாய்வதனால், எலும்புக்கு உரம் அளிக்கிற டி.விட்டமின் உண்டாகிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று தேரையர் கூறுகிறார். “வீறு சதுர் நாட்கொருகால் நெய் முழுக்கைத் தவிரோம்” என்கிறார்.

இப்படிக் கூறுவதனாலே, எண்ணெயை உடம்பில் தேய்த்துக் கொண்டு வெயிலில் காய்வது நல்லது என்று கருதக்கூடாது. வெயிலில் நின்றால் நரம்புகள் சோர்வடையும். வெயில் வேறு, வெளிச்சம் வேறு என்பதை அறிய வேண்டும். எண்ணெய் தேய்த்து சூரிய வெளிச்சம் படும்படி நிழலில் இருந்தால் போதும். சிலர், அகலமான கிண்ணத்தில் எண்ணெயை ஊற்றி வெயிலில் காய வைத்துப் பிறகு அந்த எண்ணெயை உடம்பில் தேய்த்துக் குளிப்பது வழக்கம். இதுவும் நல்ல வழிதான். எண்ணெயில் சூரிய வெளிச்சம் படுவதால் டி. விட்டமின் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

சூரிய வெளிச்சம் இல்லாத இருட்டு வீடுகளில் வசிப்பவர்களின் எலும்பு பலமாக இராது.

காட்லீவர் ஆயில் என்னும் மீன் எண்ணெயில், எலும்புக்கு உரம் அளிக்கும் டி. விட்டமின் நிறைய உண்டு. மற்ற மீன் எண்ணெயிலும் இந்த உயிர்ச்சத்து போதுமான அளவு உண்டு. வெண்ணெய் நெய்களில் சிறிதளவு இந்த உயிர்ச்சத்து உண்டு. தேங்காய் எண்ணெயில் சிறிதளவு உண்டு. ஆனால், நல்லெண்ணெய் முதலிய எண்ணெய்களில் இந்த விட்டமின் இல்லை. எனினும் முன்பு சொல்லியது போல தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய்களை வெயிலில் காய வைத்தால் அவற்றில் இந்த உயிர்ச்சத்து உண்டாகிறது. ஆடு மாடுகளின் பாலிலும் இந்த உயிர்ச் சத்து சிறிதளவு உண்டு. முட்டை, ஆட்டு ஈரல் முதலிவைகளிலும் இந்த உயிர்ச்சத்து இருக்கிறது.

குறிப்பு:- மீன் எண்ணெய்களில் டி. விட்டமின் இருப்பதோடு ஏ. விட்டமினும் இருக்கிறது.

இது வரையில் நான்கு வகையான உயிர்ச் சத்துக்களைப் பற்றியும் அவற்றின் உபயோகத்தைப் பற்றியும் அவை எந்தெந்த உணவுப்பொருள்களில் உள்ளன என்பது பற்றியும் கூறினோம். இந்த உயிர்ச்சத்துக்கள் நான்கும் இருந்தால்தான் உடல் நலம் நன்றாக இருக்கும். ஒரு உயிர்ச்சத்து இருந்து மற்ற உயிர்ச்சத்து இல்லாவிட்டால் தேகசுகம் பெறமுடியாது. ஆகவே, எல்லா உயிர்ச்சத்துக்களும் உடம்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உயிர்ச்சத்துக்கள் உள்ள உணவுப் பொருள்கள் எவை என்பதையும் கூறியுள்ளோம். அவ்வுணவுகளை யெல்லாம் சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் பெற்று இனிது வாழலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *