
உணவு நூல்
மயிலை சீனி. வேங்கடசாமி
7. பழங்கள்
பழங்களில் பலவகை உண்டு. மா, பலா, வாழை என்னும் முக்கனிகள் நமது நாட்டில் பேர்போனவை. அனாசி, ஆப்பிள், ஆரஞ்சி,தக்காளி, திராட்சை, எலுமிச்சை, பப்பாளி, மாதுளை, முலாம் பழம், தர்பூசிப்பழம், விளாம்பழம் முதலிய பழங்களும் உள்ளன.
பொதுவாகப் பழங்கள் எல்லாம் கீரைகளின் குணம் உடையன. கீரைகள் இரத்தத்தைத் தூய்மையாக வைப்பது போல, பழங்களும் இரத்தத்தைத் தூய்மை செய்கின்றன. அன்றியும் உணவைச் சமிக்கச் செய்வதில் உதவி புரிகின்றன.
மேலும், பழங்களின் பலவித உப்புச்சத்துக்கள் இருப்பதனால், அவை உடம்பை நன்னிலையில் வைக்கின்றன. அடிக்கடி பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்களில் இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி இரத்தத்திற்கு உரம் அளிக்கிற சி விட்டமின் என்னும் உயிர்ச்சத்து இருக்கிறது. பழங்களின் குணங்களை இங்கு ஆராய்வோம்.
ஆரஞ்சி:
கமலாப்பழம், சாத்துக்குடிப்பழம் என்றும் கூறப்படுகிறது. இரத்தத்திற்கு உரம் அளிக்கிற சி விட்டமின் என்னும் உயிர்ச்சத்து இப்பழங்களில் அதிகமாக உள்ளன. ஏ.பி. விட்டமின்களும் சிறிதளவு உண்டு. ஜீரணப்படுத்தும் பசி உண்டாக்கும் தேகச்சூட்டைத் தணிக்கும்.
எலுமிச்சம் பழம்:
இரத்தத்தை உரப்படுத்துகிற சி விட்டமின் என்னும் உயிர்ச்சத்து இதில் நிறைய உண்டு. பித்தத்தை நீக்கும். குளிர்ச்சி உண்டாக்கும் தீனிப்பைக்கு வலிவைக் கொடுக்கும். பசியுண்டாக்கும். மார்பின் நரம்புகளுக்கும் தலை நரம்புகளுக்கும் உதவாது. தனியே இதன் சாற்றை உபயோகிக்கும் போது தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொண்டால் மேற்படி தீமைகள் போகும். இதன் சாற்றைச் சர்பத்து காய்ச்சி அருந்தலாம். (சர்பத்து பார்க்க) எலுமிச்சம்பழத்தை உப்பில் இட்டு ஊறுகாய் போட்டு உண்பார்கள். சர்க்கரைப் பாகு அல்லது தேனில் ஊறவைத்து முரபா செய்தும் உண்பார்கள் (முரபா பார்க்க.)
கொடி முந்திரிப்பழம்(திராட்சைப் பழம்):
இவைகளில் 10 முதல் 25 சதவிகிதம் வரையில் சர்க்கரை உண்டு. இதில் பல வகை உண்டு. பச்சை, கறுப்பு முதலியவை. பொட்டாசியம் முதலிய உப்புகளும் இதில் உள்ளன. இதில் சிறிதளவு பி விட்டமின் உண்டு. சூட்டைத் தணிக்கும். பித்த அனலை மாற்றும். தேகம் பருக்கும். தேகத்திற்கு குளிர்ச்சியும் கண்ணொளியும் உண்டாகும்.
அன்னாசிப் பழம்:
இது அயல்நாட்டுப் பழம். இப்போது நமது நாட்டில் பயிரிடப்படுகிறது. இரத்தத்திற்கு உரம் அளிக்கிற உயிர்ச்சத்து இதில் அதிகம் உண்டு. இதன் சதை ஜீரணம் ஆவது கடினம் சாற்றை மட்டும் அருந்த வேண்டும். பித்தச்சூட்டை ஆற்றும். இருதயத்தின் வறட்சியைப் போக்கும். மூளைக்கு வலிவைக் கொடுக்கும். தொண்டை கம்மும், சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து உண்ணவேண்டும். கருவை அழிக்கும் என்பர். ஆகையால் கருத்தரித்த பெண்கள் உண்பது கூடாது.
சீமை அத்திப்பழம்:
இதில் நூற்றுக்கு 60 பங்குக்கு சர்க்கரை உண்டு. சூட்டை அகற்றும். தேகம் தழைக்கும். வலுவு உண்டாகும். உலர்ந்த பழம் மார்பு தொண்டை வறட்சியை மாற்றும். நுரையீரலுக்கு நன்மை தரும். இதில் சிறிது தசை வளர்க்கும் உயிர்ச்சத்து உண்டு. கார்போ ஹைட்ரேட் என்னும் உடம்புக்கு வெப்பம் அளிக்கும் பொருளும் இதில் உண்டு.
தக்காளிப்பழம்:
இது அமெரிக்க நாட்டுப் பழம். இப்போது நமது நாட்டில் குளிர்ப் பிரதேசங்களில் பயிராகிறது. ஏ.பி.சி. விட்டமின்கள் என்னும் மூன்று உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன. ஏ உயிர்ச்சத்தைவிட பி.சி. உயிர்ச்சத்துக்கள் அதிகம். சமைத்தும் உண்ணலாம். சமைக்காமலும் உண்ணலாம். தேகச் சூட்டைக் குறைக்கும். (தக்காளிச் சாறு, பானகம் காண்க.)
தர்பூசிப்பழம்:
நீண்டு உருண்ட பெரிய பழம். மேல் தோல் பச்சை நிறமாக இருக்கும். உள் சதை சிவந்து இருக்கும். இதில் செம்புச்சத்து உண்டு. இரத்தத்தை உரப்படுத்தும். உடம்புக்குக் குளிர்ச்சி தரும். இதை அரிந்தால் சாறு வழியும். இந்தச் சாற்றை வீணாக்காமல் பாத்திரத்தில் பிடித்து அருந்த வேண்டும்.
நெல்லிக்கனி (நெல்லிக்காய்):
இதில் இரத்தத்திற்கு உரம் தருகிற உயிர்ச்சத்து நிறைய உண்டு. ஆரஞ்சுப் பழத்திலும் இந்தச் சத்து உண்டு என்று கூறினோம். ஆரஞ்சுப் பழத்தை விட நெல்லிக் கனியில் அதிக உயிர்ச்சத்து இருக்கிறது. ஒரு நெல்லிக் கனியில் மூன்று ஆரஞ்சுப் பழத்தின் உயிர்ச்சத்து உண்டு. நெல்லிக்கனி, வயிற்றிலும் குடலிலும் மாசுகள் சேரவொட்டாமல் காக்கும். தீனிப்பைக்கும் இருதயத்துக்கும் வலிவு கொடுக்கும். பசி உண்டாக்கும். நமது நாட்டு வைத்திய நூல்கள் இந்தக் கனியைச் சிறப்பாகக் கூறுகின்றன. சியவனப் பிராசம் என்னும் மருத்து இதிலிருந்து செய்யப்படுகிறது. இந்த மருந்து நுரையீரலுக்கு (சுவாசப் பைக்குப்) பலம் தருகிறது. கருவுள்ள பெண்கள் இதை அருந்தக் கூடாது என்பர். ஊறுகாயாகவும் முரபாவாகவும் (இந்நூல் முரபா காண்க) செய்து உண்ணலாம். நெல்லிக்காயை இரவில் உண்பது கூடாது.
பப்பாளிப் பழம்:
இது அமெரிக்க நாட்டுப் பழம். இப்போது நம் நாட்டில் பயிராகிறது. இதில் ஏ.பி. விட்டமின்கள் சிறிதளவும் சி. விட்டமின் அதிக அளவும் உண்டு. மலம் போகும். சூடு செய்யும். இந்தப் பழத்தை அளவாக அடிக்கடி உபயோகிப்பது நலம். இதன் பால், இறைச்சியை நன்றாக வேகச் செய்கிறது. ஆகையால் இறைச்சி சமைப்போர், பப்பாளிக் காய்த் துண்டுகளை இட்டு வேகவைப்பது வழக்கம். பழுக்காத முற்றிய காயையும் கறி சமைக்கலாம். கர்ப்பிணிகள் இதை உண்பது கூடாது.
பலாப் பழம்:
முக்கனிகளில் ஒன்று. தலை நரம்புகளுக்கு வலிவைக் கொடுக்கும். மந்திக்கும், வயிறு வலிக்கும். சூடு பண்ணும். பசுநெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புளியம்பழம் (புளி):
சாம்பார், குழம்பு முதலியவைகளில் நம்மவர் இதை அதிகமாக உபயோகிக்கிறார்கள். இதில் பி.சி. விட்டமின் என்னும் உயிர்ச் சத்துகள் சிறிதளவு உண்டு. தீனிப் பைக்கு வலிவைக் கொடுக்கும். இரும்புச் சத்து இதில் உண்டு. தாது புஷ்டியைக் குறைக்கும். ஆகையால் இதை அதிகமாகச் சாப்பிடுவது கூடாது. அதிகமாகச் சாப்பிட்டால் இரத்தத்தைக் கெடுக்கும்.
பேரீச்சம் பழம் :
இதில் பி விட்டமின் சிறிதளவு உண்டு. கார்ப்போ ஹைட்ரேட் அதிகம் உண்டு. இரும்புச் சத்தும் இருக்கிறது. மார்புக்கு வலிவைக் கொடுக்கும். தேகம் தழைக்கும். மலம் போகும். பாலில் இட்டுக் காய்ச்சிக் குடித்தால் தாது வளரும். வாதுமைப் பருப்புடன் கலந்து தின்றால் தேகம் தழைக்கும் கண்களுக்கும் பற்களுக்கும் ஆகாது. ஆகையால், நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொம்பளிமாசுப் பழம் :
பித்தச் சூட்டை அகற்றும். தீனிப்பைக்கு வலிவைக் கொடுக்கும். இரத்த சுத்தியாகும். பசிதீபனம் உண்டாகும். பழச்சக்கை விரைவில் சீரணம் ஆகாது.
மாதுளம் பழம் :
இருதயத்துக்கும் வயிற்றுக்கும் வலிவு தரும். பித்தம் போகும். பி.சி. விட்டமின்கள் சிறிதளவு இதில் உண்டு.
மாம்பழம் :
இதில் சிறிதளவு ஏ விட்டமினும் சற்று அதிகமாக பி விட்டமினும் உண்டு. இருதயத்துக்கும் மூளைக்கும் வலிவு கொடுக்கும். வயிறு இளகும். மலசுத்தியாகும். சூடு பண்ணும். அதிகமாக உட்கொண்டால் தினவு, கரப்பான், சிரங்கு உண்டாகும். மிதமாக அருந்தவேண்டும். பால் சேர்த்துக் கொள்வது நல்லது.
முலாம் பழம் :
தேகம் தழைக்கும். நீரைப் பெருக்கும். மந்திக்கும். விரைவில் சீரணம் ஆகாது. இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வது நலம்.
வாழைப் பழம் :
இதில் பலவகை உண்டு. பி.சி. விட்டமின்கள் சிறிதளவு இப்பழத்தில் உண்டு. தேகம் தழைக்கும். வலிவுண்டாகும். குடல் பருக்கும். மந்திக்கும். தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக்கொள்வது நலம். வாத நோய் உள்ளவர்களுக்கு ஆகாது. பச்சை வாழைப்பழம் மலத்தைக் கட்டும்.
ஆப்பிள் பழம் :
இது குளிர் நாடுகளில் பயிராகிறது. நாள்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் வைத்தியரிடம் போக வேண்டியதில்லை என்று ஒரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. இதனால் இது நோய் வராமல் தடுக்கிறது என்று தெரிகிறது. இதன் மேல்தோல் சீரணிக்காது. ஆகையால் நன்றாக மென்று தின்னவேண்டும். சீரணம் உண்டாகும். இரத்தம் சுத்திகரிக்கும். இரத்தத்துக்கு உரம் தருகிற சி. உயிர்ச்சத்து இதில் இருக்கிறது.



