

அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி
”வரவே வேண்டாம்!. வரவே வேண்டாம் !” என்று வெறுத்துப் பேசிய மக்கள் மன்றம் ஒரு புறம்- “வரட்டும், வரட்டும்!” என்று வரவேற்றோர் ஒரு புறம் – “வருமோ, வராதோ” என்று சந்தேகித்தோர் ஒரு புறம் – இதற்கிடையே ‘அகிம்சா மூர்த்திகள்’ என்ற அடைமொழியோடு ஆட்சிபீடம் ஏறிவிட்டனர் காங்கிரஸார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.
சுதந்திரம் தேடித் தந்த உரிமை கொண்டாடும் அந்த ‘சுத்த’வீரர்கள், தங்களது முற்கால ஆட்சியிலும், இக்கால ஆட்சியிலும் திராவிடத்திலே கிளப்பிவிட்ட கொந்தளிப்பு அநேகம். அகிம்சை பேசும் அவர்கள் இம்சைக்கு இலக்கணம் எழுதினார்கள்! நீதி பேசும் அவர்கள் பீதியின் பிறப்பிடமானார்கள் ! ஆகவே, நேர்மை பேசும் அவர்கள் திராவிடத்தின் நேசத்தை இழந்தார்கள்
அந்த ‘அகிம்சா மூர்த்தி’ களின் திரை மறைவுத் திருவிளையாடல்களை எழுத்துக்கு எழுத்து, மேடைக்கு மேடை அம்பலப் படுத்திய பெருமை தமிழகத்தில் பலருள், கலைஞர் கருணாநிதி அவர்களையும் சாரும்.
திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்காக பணியாற்றிய “மாலை மணி” யில் இடம் பெற்ற கருணாநிதி அவர்களின் அத்தகைய எழுத்தோவியங்கள் சிலவற்றின் தொகுப்பே இந்நூல்.
படியுங்கள் – சிந்தியுங்கள்.



