
சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்
எழில் கவர் கள்வன்
தன் மகள் கொண்ட மால் உறுதியாக இருப்பதை உணர்ந்தாள் தாய். அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தச் சேந்தனைத் தானும் ஒரு முறை போய்ப் பார்த்து வரலாம் என்ற எண்ணம் அவளுக்கு உண்டாயிற்று. ஒரு நாள் திருவிடைக்கழிக்குப் போனாள்.
அன்றும் முருகன் திருவுலா வந்து கொண்டிருந்தான். கூட்டமான கூட்டம்? எவ்வளவு கூட்டமாக இருந்தால் என்ன? அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவன் யானையின் மேல் அன்று பவனி வந்தான். யானை மிகப் பெரியது. அதைப் பார்த்து அயர்ந்து போய்விட்டாள். இந்த யானைக்குக் கவளம் கொடுத்துக் காப்பாற்றப் பெரிய மன்னனாகத்தான் இருக்கவேண்டும் என்று வியந்தாள். அந்தக் கவளமா கரியின்மேல் முருகன் எழுந்தருளிய போது இருமருங்கும் அரம்பையர் கவரிகளை இரட்டினர். மேலே குடை நிழற்றியது. யானைமேல் அம்பாரி வைத்து அதன் மேல் வீற்றிருந்தான் அவன். யானை அசைந்து அசைந்து வந்தது. அதன் முகத்திலே முகபடாம் பளபளத்தது. இரு மருங்கும் மணி ஒலித்தது. எங்கே பார்த்தாலும் கண்ணைப் பறிக்கும் பொன்னும் மணியும்.
இந்த ஒளி வெள்ளத்துக்கு நடுவிலே முருகனுடைய கோலம் ஒளிப் பிழம்பாகத் திகழ்ந்தது. அவன் பொன் மலைபோலக் கம்பீரமாக யானையின்மேல் வீற்றிருந்தான்.
யானை ஒரு மலைபோல இருந்தது; அதற்கு மேல் கனகக் குன்று போல அவன் காட்சி அளித்தான். சிறிது நேரம் அவள் எல்லாவற்றையும் மறந்து அவனுடைய திருக் கோலத்தைக் கண்டபடியே நின்றாள். பிறகு தன் நினைவு பெற்றாள். தன் மகளுடைய நினைவும் வந்தது. ‘அவளுடைய உள்ளத்தையும் எழிலையும் கவர்ந்து கொண்ட கள்வன் அல்லவா இவன்?’ என்று தொடர்ந்து நினைவு கூர்ந்தாள். சிறிதே அவள் மனம் அவள் வீட்டுக்குச் சென்றது. தன் பெண்ணை அகக் கண்ணிலே கண்டாள்.
கச்சினை யணிந்து தன் பருவ எழில் பொங்க விளங்கினவள் அவளுடைய மகளாகிய இளநங்கை; வளரும் வாழை போலத் தளதளவென்றிருந்தவள். இப்போதோ அந்த உடல் வளம் குறைந்தது. அழகுப் பொலிவே குறைந்து விட்டது போலத் தோன்றியது. வார் இளமென் கொங்கையில் பசலை அடர்ந்தது. காதலால் பற்றப்பட்டவர்கள் தம் காதலரைப் பிரிந்து வாடும்போது அவர்கள் உடம்பில் பசலை தோன்றும். அது பீர்க்கம் பூப்போலப் பொன்னிறமாக இருப்பது; தேமலைப் போல்வது. பீர் என்பது பீர்க்குக்கு ஒரு பெயர்; பீர்க்கம் பூப்போல இருப்பதனால் பசலையைப் பீர் என்று சொல்லுவார்கள்.
உடம்பெலாம் எழில் பொங்க இளமென் கொங்கை யொடு நின்ற நங்கைக்கு இப்போது பீர் பொங்குகிறது. அதற்குக் காரணம் இளங்காளையாகிய முருகன் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதுதான்; அவள் எழிலையும் கொள்ளை கொண்டான்.
தன் மகள் நிலையை எண்ணியபோது தாய்க்குச் சற்றே வருத்தம் வந்தது. எதிரே யானையின் மேல் உலா வந்தவன் தன் மகளுக்கு ஏற்ற பருவத்தினன்தான்; இளங்காளை, ஆனால் அவன் நிலை எத்தனை உயர்ந்தது! கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக் குன்று என்று சொல்லும்படி அல்லவா வருகிறான் அவன்? இத்தனை பெருமை உடையவனாக இருந்தாலும் யாரும் அறியாமல் ஓர் இளம் பெண்ணின் எழிலைக் கவர்ந்து விட்டானே! அவனைக் கள்வன் என்று சொல்வதில் தவறு என்ன?
பவனி வந்த முருகன் தன் திருக்கோயிலை அடைந்தான். தாய் அந்த ஊரைச் சுற்றிப் பார்த்தாள். அவனுடைய பெருமைக்கு ஏற்ற நகரமாக விளங்கியது அது. மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் வீதிதோறும் விளங்கின. ஊர் சிறப்புறுவது மாளிகைகளால் அல்லவா? அந்த ஊர் நன்கு திவளும் படியாக (விளங்கும்படி) அவை நின்றன. அந்த மாளிகைகளுக்கு நடுவே முருகனுடைய திருமாளிகை இருந்தது.
திருவிடைக்கழியின் சிறப்பை அறிந்து முருகன் திரு மாளிகையாகிய திருக்கோயிலுக்குள்ளும் சென்றாள். அங்குள்ள அழகிய குராமரத்தின் கீழ் அந்தக் குமரன் நின்று கொண்டிருந்தான். அவன் மட்டுமா நின்றான்? அருகில் பேரழகி ஒருத்தியும் நின்றுகொண்டிருந்தாள். அவள்தான் வள்ளி; அவளை உற்று நோக்கினாள்.
இவன் பேரழகன்: இவளும் இவனுக்கு ஏற்ற பேரழகி; இவள் என்ன, எப்போதும் இவனைத் தன் கண்ணின் மணியைப் போல வைத்துப் பாதுகாக்கிறாளோ? எப்போதும் இவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாளே! அழகுக் கண்ணால் இவள் பார்க்கிற பார்வையே இனிமையாக இருக்கிறது. நீலமலர் போன்ற கண்ணை இவன் பக்கலில் வீசுகிறாள். இவள் இவனையே நயந்து காதல் செய்து அடைந்தவள் போலும்! இந்தக் குவளை மா மலர்க்கண் நங்கை நயப்பதில் வியப்பு என்ன? இவன் கட்டிளமையும் பேரழகும் கண்டால் யார்தாம் நயக்க மாட்டார்கள்? இளங்காளை, குழகன், அழகன் என்று சொல்லிச் சொல்லி மகிழலாமே. இவனைப்போல அழகர் யார் இருக்கிறார்கள்? மன்னாதி மன்னன், கோ, அழகிய அரசன், அம் கோ இவன்.’
இப்படி அவள் வியந்தபடியே நின்றாள். தன் மகளை மறந்து வியந்தாள்; குழகனென்றும் அழகனென்றும் கோவென்றும் புகழ்ந்தாள். இடையிலே மகள் நினைவு வந்தால், அவள் பீர் பொங்க எழிலிழந்து நிற்கும் நிலை தோன்றினால், காளையென்றும் கள்வனென்றும் கூறினாள்.
யானையைக் கண்டால் மலைப்பு, அதன்மேல் முருகனைக் கண்டால் பிரமிப்பு ஊரில் உள்ள மாளிகையைக் கண்டால் வியப்பு. அவன் அருகில் உள்ள வள்ளியைக் கண்டால் இறும் பூது. இப்படி ஒரே ஆச்சரிய உருவமாக நின்றாள் தாய்.
கடைசியில் தன் ஊர் போய்ச் சேர்ந்தாள். சேர்ந்த அன்றே அவளுடைய தோழி வந்தாள். அவளுடைய மகளைப் பார்த்தாள். அவள் உடம்பு மெலிந்திருந்ததைக் கண்டு, “என்னடி இது? எப்படி இருந்தவள் எப்படி ஆகி விட்டாள்!” என்று தாயைக் கேட்டாள்.
தாய், அவள் நிலைக்குக் காரணத்தைச் சொல்லத் தொடங்கி, அவள் எழில் கவர்ந்த காளை பவனி வந்ததையும், அவன் இருக்கும் ஊரையும், அவன் திருக்கோயிலையும், அவனை நயக்கும் மங்கையையும் பற்றி விரித்து உரைத்தாள்.
அவள் கூறும் கூற்றாக உள்ளது பாட்டு.
இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
எழில்கவர்ந் தான் இளங் காளை
கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவரும் கள்வன்,
வளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்கும்
குழகன், நல் அழகன் அம் கோவே.
[வார் – கச்சு. பீர் – பசலை இவளை எழில் கவர்ந்தான்.திவள் ஊர் விளங்க. குழகன் – இளையவன்.]
திருவிடைக்கழியை அருணகிரிநாதர் பாடி யிருக்கிறார். இந்தப்பாடல் சேந்தனார் திருவிசைப்பாவில் திருவிடைக் கழிப் பதிகத்தில் உள்ள இரண்டாவது பாட்டு.



