சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

அருளுவானா?

தாய் இப்போது முருகனுடைய இயல்பை எண்ணிப் பார்க்கிறாள். தன் மகளுக்கு ஏற்ற மணவாளன் அவன் என்பதை அவள் நெஞ்சம் சொல்கிறது. உலகில் பெண்ணைப் பெற்றவர்கள் தம்முடைய பெண்களுக்கு வரன் பார்ப்பதாக இருந்தால் மணமகன் இன்னபடி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தந்தை, பிள்ளை அறிவுடையவனாக இருக்கவேண்டும் என்று விரும்புவான். தாயோ, செல்வனாக இருக்கவேண்டும் என்று அவாவுவாள். மற்ற உறவினர்கள் நல்ல குலமாக இருப்பதை விரும்புவார்கள். மணம் புரிய இருக்கும் பெண்ணோ, இளமையும் அழகும் வீரமும் உள்ள வனாக இருக்க வேண்டும் என்று ஆவல் கொள்வாள். முருகனிடம் இந்தத் தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றை இப்போது எண்ணிப் பார்க்கிறாள் தாய்.

பெண் எதை விரும்புவாளோ அந்தத் தகுதி அவனிடம் பரிபூரணமாக இருக்கிறது. இளமை, அழகு, வீரம் ஆகிய வற்றையே இளநங்கை விரும்புவாள் என்பதைத் தாய் நன்கு அறிவாள்; அவளும் இளம் பெண்ணாக இருந்தவள் தானே?

முருகனுடைய இளமை அவனுடைய திருமேனி முழுவதும் மெருகூட்டிக் கிளைத்திருக்கிறது. என்றும் இளைய பிரானாகிய அவன் அழகோ கண் கொள்ளாதது. “பிள்ளை கறுப்பா,சிவப்பா?” என்று கேட்பது உலகியல். “சிவப்பு” என்றால் திருப்தி உண்டாகும். இந்த இளைய பிள்ளை நல்ல சிவப்பு “செங்கோட்டுப் பிள்ளை சிவந்த பிள்ளை” என்று ஒரு புலவர் பாடுவார். “செய்யன் சிவந்த ஆடையன்” என்பது திருமுருகாற்றுப்படை, சிவப்பு அழகுக்கு அடையாளம்;

சிவந்த நிறம் பெற்றதனால்தான் முருகனுக்குச் சேய் என்ற திரு நாமம் வந்தது. உரையாசிரியர்கள் சேய் என்று வரும் இடங்களில், பிள்ளை யென்று உரை எழுதாமல், சிவப்பு நிற முடையவன் என்றே எழுதுவார்கள். முருகன் தளிர்த்துக் கிளைக்கும் இளமையையும் அழகுச் சிவப்பையும் உடைய பெருமான்.

கிளை இளம் சேய்.

அவனுடைய வீரம் எத்தகையது? கிரவுஞ்சம் என்னும் மலையைப் பிளந்த ஆண்மையை உடையவன் அவன். ஓர் அசுரனே மலைவடிவாகப் பறந்தும் படிந்தும் தேவர்களுக்கும் மக்களுக்கும் இடர் விளைத்து வந்தான். அவனைப் பிளந்து வெற்றியை நிலை நாட்டிய ஆண்டகை முருகன். அவனுடைய வீரத்துக்கு அடையாளமாவும், வெற்றிப் போருக்குக் கருவி யாகவும் இருப்பது அவன் திருக்கரத்தில் உள்ள வேல். அது முருகன் திருக்கரத்தில் என்றுமே அழிவின்றி விளங்குவது. புறக்கண்ணுடையாருக்கு வீர வேலாகவும், அகக் கண்ணுடை யாருக்கு ஞான வேலாகவும் புலனாவது அது. அதுவே அவனுடைய வீரத்துக்கும் ஞானத்துக்கும் அறிகுறியாக விளங்குவது. அதை ஏந்திய அவன் பெருஞ் செல்வன்.

கிரிதனைக் கீண்ட ஆண்டகை
கேடில் வேற் செல்வன்.

இப்போது மணப் பெண்ணுக்கும் தகப்பனுக்கும் தனக்கும் விருப்பமான இயல்புகள் யாவும் அவனிடம் பொருந்தி யிருப்பதை எண்ணிப் பார்த்துத் திருப்தி அடைந்தாள். பெண்ணுக்கு வேண்டியவையே எல்லாவற்றிலும் முக்கியம். கிளை இளம் என்பதனால் இளமையும்,சேய் என்பதனால் அழகும், கிரிதனைக் கீண்ட ஆண்டகை என்பதனால் வீரமும் தெரியவந்தன. கேடில் வேல் என்றது ஞானத்தைக் குறிப்பது ஆதலின் அவன் ஞான பண்டித சாமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்தத் தகுதியைத் தந்தை விரும்புவான். செல்வன் என்பதனால் தான் விரும்புவதும் அவனிடம் உண்டு என்பதை உணர்த்தினாள்.

இனிச் சுற்றத்தார், நல்ல குடும்பத்தில் உதித்தவன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். முருகனோ இருமரபும் தூயவன். அவனுடைய தந்தையின் பெருமையும் தாய் மாமன் பெருமையும் உலகறிந்தவை. அவன் தந்தை சிவபெருமான்; வளைந்த இளம் பிறையைத் தன் சிவந்த சடையிலே அணிந்த பெருமான்; தூய்மை தவிர்ந்து குறை யவும் வளரவும் சாபம் பெற்ற சந்திரனைத் தன் திருமுடியிலே வைத்துத் தூய்மையுறச் செய்த கருணையாளன்,

வளை இளம் பிறைச் செஞ்சடைஅரன் மதலை.

முருகனுடைய மாமன் நீலமேக சியாமள வண்ணம் படைத்த திருமால். கண்ணுக்குக் குளிர்ச்சி தருவது மேக நிறம். அதை யுடையவனுக்கு முருகன் மருகள்,

கார்நிற மால் திரு மருகன்.

இப்போது முருகனிடம் மணமகனுக்குரிய எல்லாம் நன்கு பொருந்தியிருப்பதை அறிந்து உவந்தாள் தாய்.

பெண்விரும்பும் காலை பிதாவிரும்பும் வித்தையே
எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் நண்ணிடையே
கூரிய சுற்றம் குலம்விரும்பும் காந்தனது
பேரழகு தான்விரும்பும் பெண்

என்பது ஒரு பழம் பாட்டு. அதில் சொல்லப்பெற்ற தகுதிகள் யாவும் முருகனிடம் அமைந்திருக்கின்றன.

இவ்வளவு நலங்களையுடைய பெருமான் எட்டாத கொம்பிலே கிட்டாத கனியாக இருக்கிறானா? இல்லை, இல்லை; இதோ அணிமையிலுள்ள திருவிடைக்கழியில்தான் இருக்கிறான். மக்களெல்லாம் வந்து உலாவித் தென்றலும் நிழலும் நறு மணமும் தீங்கனியும் நுகர்ந்து திளைக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவிடைக்கழியில் குராமரத்தடியில் அவன் தன் மாளிகையை அமைத்துக்கொண்டு வாழ்கிறான். பூம்பொழிலில் அந்த மரத்தடியில் நிற்கும்போது அவனைப் பார்த்தால் இளைய கொம்பு முளைக்கும் பருவத்திலுள்ள இளைய யானைக் குட்டியைப் போலத் தோன்றுகிறான். என்ன அழகு! என்ன அழகு !

திளை இளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நிழற்கீழ் நின்ற
முளை இனங் களிறு.

தன் பெண்ணை நினைக்கிறாள். அவளும் நல்ல அழகி. அவளை அடிமுதல் முடிவரையில் வருணித்துக் கொண்டிருக்க நேரமேது? தலைமையான அழகு தலையழகு. அவள் கூந்தலழகி. அடர்ந்து மொய்த்த குழலை உடைய அவள் இளம் பெண்; சிறுமி. அழகும் இளமையும் உடைய அந்தப் பெண்ணை இளமை, அழகு, வீரம், அறிவு, செல்வம், குலம் ஆகிய எல்லாம் உடைய அவன் ஏற்றுத் திருமணங் கொண்டருளினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

தாய்க்குத் தன் பெண்ணை முருகனுக்கு மணம் செய்து கொடுக்கச் சம்மதந்தான். இது பாதிக் கல்யாணம் ஆனது போன்றது. ஆனால் மறுபாதியும் நிறைவேறினால் தானே திருமணம் உண்மையில் நிகழும்? ஆம்; அந்தப்பிள்ளை, முருகவேள் என்னும் திருநாமம் உடைய பிள்ளை, இந்தப் பெண்ணின் மேல் இரக்கம் வைத்து ஏற்றுக்கொள்ள வேண்டுமே! அவனுக்குக் கிடைக்காத பெண் இல்லை. அழகும் இளமையும் உள்ள பெண்கள் எத்தனையோ பேர். ஆனாலும் இவள் அவனையே நினைந்து வாடுகிறாள். அதை நினைந்து இரங்கிப்பரிவுடன் இவளை ஏற்றுக் கொள்ள அவன் திருவுள்ளம் கொள்ளவேண்டும்; கொள்வானா?

என் மொய்குழற் சிறுமிக்கு
அருளுங்கொல், முருகவேள் பரிந்தே?

முருகன் பெருமையையெல்லாம் எண்ணி மனம் களித்துத் தன் பெண்ணுக்கு ஏற்ற நாயகன் எனபதை உணர்ந்து உவந்த தாய், பிறகு அவன் இவளை ஏற்றுக் கொள்வானா என்று உருகியது. அவள் எண்ணும்போது அவள் உள்ளம் சொல்வதாகப் பாட்டு அமைந்திருக்கிறது.

கிளை இளஞ் சேய்,அக்கிரிதனைக் கீண்ட
ஆண்டகை, கேடில்வேற் செல்வன்,
வளை இளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை,
கார்நிற மால்திரு மருகன்,
திளை இளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளை இளம் களிறுஎன் மொய்குழற் சிறுமிக்கு அருளுங்கொள் முருகவேள் பரிந்தே?

[கிளைத்துப் பரந்த இளமையையுடைய செம்மை நிறத்தான், அந்தக் கிரவுஞ்ச மலையைப் பிளந்த ஆண்மையை உடையவன், அழி வற்ற வேலை ஏந்திய செல்வன், வளைந்த இளைய பிறையை அணிந்த சிவந்த சடையையுடைய அரனுடைய பிள்ளை,மேகத்தின் நிறம் பெற்ற திருமாலின் ஆழகிய மருமகன், யாவரும் வந்து இன்பம் நுகர்கின்ற சோலைகள் சூந்த திருவிடைக்கழியில் தெய்விகத் தன்மை வாய்ந்த குராமரத்தின் நிழவின்கீழ் நிலவும், கொம்பு முளைக்கும் இளைய ஆண்யானை போன்றவன், முருகவேள் என்னும் திருநாமம் உடையவன், அடர்ந்த குழலையுடைய என் இளம் பெண்ணுக்கு இரங்கி அருள் செய்வானா?

கிளை – கிளைக்கும்; பரவும். சேய் – செந்நிறம் உடையவன். கிரி – மலை; இங்கே கிரவுஞ்சமலை, அ :பண்டறி சுட்டு. கீண்ட – பிளந்த. மதலை – புதல்வன். மாலுக்கும் திருவுக்கும் மருகன் என்றும் பொருள் கொள்ளலாம்.திளை – இன்பம் நுகர்கின்ற. இளம் பொழில்- வளம் மங்காத சோலை. முளை – முளைக்கின்ற; முளை போன்ற இளமை யையுடைய எனலும் ஆம். பரிந்து இரங்கி. சேய், ஆண்டகை, செல்வன், மதலை, மருகன், களிறு, முருகவேள் பரிந்து அருளுங் கொல் என்று வினைமுடிவு செய்க.)

இது சேந்தனார் திருவிசைப்பாவில் ஆறாவது பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !