
சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்
பயன்
ஏதேனும் ஒரு நூல் எழுதினால் அதற்குப் பயன் இன்ன தென்று சொல்வது ஒரு வழக்கு; தேவாரத்தில் திருஞான சம்பந்தப் பெருமான் ஒவ்வொரு திருப்பதிகத்திலும் கடைசிப் பாசுரத்தில் பயனைச் சொல்லியிருக்கிறார். அந்தப் பாடலைத் திருக்கடைக்காப்பு என்று சொல்வார்கள்; அதில் பயனோடு சம்பந்தப்பெருமான் தம் திருநாமத்தையும் இணைத்திருப்பார். “ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த, திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்பது போல வரும். வேறு பலரும் இந்த முறை யில் பாடியிருக்கிறார்கள்.
சேந்தனார், திருவிசைப்பாவில் திருவீழிமிழலை, திருவாவடு துறை என்னும் இரண்டு தலங்களில் உள்ள சிவபெருமானையும், திருவிடைக்கழியில் எழுந்தருளியுள்ள முருகனையும் தனித்தனியே ஒவ்வொரு பதிகத்தில் பாடினார். திருப்பல் லாண்டும் அவர் பாடியிருக்கிறார். இவற்றில் திருவிடைக் கழித் திருவிசைப்பாவிலும் திருப்பல்லாண்டிலும் இறுதிப் பாடலில் தம் பெயரைக் கூறியிருக்கிறார். திருவிடைக்கழிப் பாடலில் மட்டும் பயனைச் சொல்லியுள்ளார். அதில் உள்ள பத்துப்பாட்டும் அந்தாதியாக இருப்பதோடு முதல் பாட்டின் முதலும் இறுதிப் பாட்டின் இறுதியும் ஒன்றி மண்டலித் துள்ளன. ‘மாலுலா மனம்” என்று முதற் பாட்டுத் தொடங்குகிறது; “இடர்கெடும் மாலுலா மனமே” என்று இறுதிப்பாட்டு முடிகிறது.
திருவிடைக்கழித் திருவிசைப்பா முழுவதும் முருகனை நாயகனாக வைத்துப் பாடியது; அவன்பால் காதல் கொண்ட தலைவியின் நிலையை அவளுடைய தாய் கூறும் முறையில் ஒவ்வொரு பாட்டும் அமைந்திருக்கிறது. இதைப் பதினோராவது பாட்டின் முற்பகுதியில் சேந்தனார் குறிக்கிறார்.”கொழுமையான திரண்ட வாயையுடைய தாயின் மொழியாகச் சேந்தனார் பாடியவை இவை; தூய மொழியைப் பேசும் அமரர்களுக்கெல்லாம் கோமானாக விளங்கும் முருகனைப் பாடியவை” என்று சொல்கிறார்.
சேந்தனாருடைய ஊர் செப்புறை என்று தெரிகிறது. செழுமையான திரட்சி பெற்ற சோதியையுடைய செப்புறை யாம். அங்குள்ள மாட மாளிகைகள் மணி குயிற்றியமையால் சோதி வீசுவனபோலும். சேந்தனார் முருகனுடைய பெரு மையை வாய்ப்பாகச் சொன்ன சொற்கள் இவை.
கொழுந்திரள் வாய் ஆர் தாய்மொழியாகத்
தூய்மொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் இவை.
[கொழுவிய திரண்ட வாயைப் பெற்ற தாயின் கூற்றாகத் தூய மொழிகளையுடைய அமரர்தலைவனாகிய முருகனை, செழுமையும் திரட்சியும் உடைய சோதி நிறைந்த செப்புறை என்னும் பதியில் உள்ள சேந்தன் புகழும்படி அமைந்த சொற்கள் இவை,
தூய மொழி என்பதை அமரருக்கும் கூட்டலாம்; கோமகனுக் கும் கூட்டலாம்; அமரர் கோவாகிய சிவபிரானுடைய திருமகனை என்றும் பொருள் கொள்ளலாம்.]
இந்தப் பதிகத்தைச் சொல்லி முருகனை வழிபடுபவர்களுக்கு இடர் நீங்கும் என்று அடுத்தபடி சொல்ல வருகிறார். முருகனுக்குச் சுவாமி என்பது ஒரு பெயர். சுவாமியாகிய முருகன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழற்கீழ் நிற்கிறான். உதய சூரியனைப் போன்ற ஒளியையுடைய திருமேனியோடு அவன் காட்சி தருகிறான். உதய சூரியன் சிவப்பாக இரும் பான் முருகனும் சிவந்த மேனியினன். காணக் கூசாத வடிவினன் உதய சூரியன்; முருகனும் அத்தகையவன். எழுங் கதிர் ஒளி போன்ற தேசு படைத்தவன் முருகன் அவன் எழுந்தருளியிருக்கும் திருவிடைக்கழியில் சோலை சூழ வளர்ந்திருக்கிறது; செழுமையான சோலை; பரந்து விரிந்து படர்ந்த சோலை. அங்கே சுவாமியும்,எழுங்கதிர் ஒளியுமாகிய முருகனைத் தரிசிக்கலாம்; தரிசித்து இந்தப் பாடல்களையே சொல்லித் தோத்திரம் செய்யலாம்.
இசையோடு சொல்லும் ஆற்றலுள்ளவர்கள் இந்த இசைப்பாவைப் பாடலாம். பாட இயலாதவர்கள் காதாரக் கேட்கலாம். பாடினாலும் கேட்டாலும் நல்ல பயன் உண்டாகும்.
நம்முடைய மனத்தில் எப்போதும் மயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை இது, பொய் இது என்று தெரியாமல் கலங்குகிறோம். இந்த மயக்கம் கெட வேண்டும். அதற்கு நிலைக்களமான மனங்கூட அழிய வேண்டும். மனம் என்பது மாயையின் சிறு துணுக்கு. சமஷ்டியாகிய மாயையின் வியஷ்டியாகிய சிறுதுண்டு மனம். அகண்ட மாயையின் கண்டம் இது. மனம் அற்றால் மாயை அறும்; மனமற்ற பரிசுத்த நிலையே இன்ப அநுபவ நிலை. அந்த நிலை வரும், இந்தப் பாடல்களைப் பாடினாலும் கேட்டாலும்.
சுவாமியையே,
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நிழற்கீழ் நின்ற
எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலாம் மனமே.
[சுவாமியை, செழுமையான பரந்த சோலைகள் சூழ்ந்த திரு விடைக்கழியில் அழகிய குராமரத்தின் நிழற்கீழ் எழுந்தருளியிருக்கும் உதய சூரியனுடைய ஒளி போன்றவனை, இந்தப் பாடல்களால் துதிப்பார், அவற்றைக் கேட்பவர் ஆகியவர்களுடைய துன்பங்கள் கெடும்; மயக்கம் பரவிய மனமும் கெட்டு இன்புறுவர்.
செழுந்தடமும் பொழிலும் சூழும் என்றும் கொள்ளலாம்; தடம் – தடாகம்: ஏத்துவார் என்று பொதுவாகக் கூறினும் இப்பதிகத்தால் ஏத்துவார் என்று கொள்ள வேண்டும். சொல்லாகிய இவற்றால் ஏற்றுவார் என்று முன்னுள்ளவற்றோடு கூட்டுவதும் ஆம்; இடர் கெடும், மால் உலாம் மனம் கெடும் என்று கெடும் என் பதை இரண்டிடத்தும் கூட்டுக: இடைநிலை விளக்கு.
கேட்பாருக்கு மாலுலாம் மனத்தில் உள்ள இடர் கெடும் என்றும் சொல்லலாம்.]
இது தாயின் கூற்றாகப் பாடிய பதிகமாயினும் அகப் பொருட்டுறையாகாது. சுட்டி ஒருவரது பெயர் கொள்வன அகப்பொருளிற் சேரா. இது புறப் பொருளைச் சார்ந்த பாடாண் திணையில் கடவுளரை மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்தின் பாற்படும்.
திருவிசைப்பாவில் உள்ள மற்ற எல்லாப் பதிகங்களும் சிவபெருமானைப் பற்றியனவே. இந்த ஒன்று மாத்திரம் முருகனைப் பாடியது. பன்னிரண்டு திருமுறைகளில் முருகனைப் பாடிய பகுதிகள் இரண்டு உள்ளன; ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பாவில் உள்ள திருவிடைக்கழித் திரு விசைப்பாவாகிய இப் பதிகம் ஒன்று; பதினோராந் திருமுறையில் உள்ளதும், நக்கீரர் பாடியதுமாகிய திருமுருகாற்றுப் படை மற்றொன்று.
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூய்மொழிஅமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் இவை; சுவா மியையே,
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதி ரொளியை எத்துவார் கேட்பார்
இடர்கெடும் மால்உலாம் மனமே.
(சேந்தன் மகனைத் தாய் மொழியாக வாய்ந்த சொல் இவை: சுவாமியை, ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர்,மனம் கெடும். என்று கூட்டுக.)



