சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

கோமளக் கொழுந்து

அவர்கள் வாழும் இடம் திருப்பிடவூர். அன்னையும் மகளும் அவர்கள் தோழியரும் அடிக்கடி திருவிடைக்கழியில் எழுந்தருளியுள்ள முருகனைத் தரிசித்துக்கொண்டு வருவார்கள். அப்படி ஒருமுறை சென்று வந்தபோதுதான் அந்த இளம்பெண் முருகன் மேற் காதல் பூண்டு மயங்கி யிருந்தாள். அதைக் கண்டு வருந்திய அவள் தாய் பலபலவாக எண்ணியும் பேசியும் தனக்கு உண்டான துயரைச் சொல்லுகிறாள்.

திருப்பிடவூரிலும் கோயில்கள் உண்டு. குன்றிலே பொழில் வளர்ந்தால் எப்படி வளப்பத்துடன் இருக்கும்! அப்படி வளர்ந்த பொழில்கள் உண்டு. யாவரும் கண்டால் பிரமிக்கும் மாளிகைகளில் மக்கள் உறைந்தார்கள். அங்கே வாழும் மடந்தையர் மான்போன்ற வெருண்ட பார்வையை உடையவர்கள். அவர்களுக்குமட்டும் அருள் செய்ய மாட்டேன் என்ற விரதமா முருகன் கொண்டிருக்கிறான்?

இளம் பெண்ணின் அன்னை இவற்றை எண்ணிப் பார்க்கிறாள். ‘இந்த ஊரே அழகியது; இந்த ஊரிலுள்ள கோயில் அழகியது; பொழில்கள் மிகமிக அழகியன; பெண்களுடைய அழகுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. அவர்களின் கண் அழகே போதுமே! அவர்களுக்கு முருகன் அருள் செய்ய மாட்டானா? தன்னுடைய காதலியைப் பிரிந்து பொருளே பெரிதாகக் கருதிச் செல்லும் ஆடவன் பாலை நிலத்து வழியே போவான். தன் வீட்டில் ஒவ்வொரு கணமும் தன் பிரிவைத் தாங்காமல் துடித்துக் கொண்டிருக்கும் காதலியின் துன்பத்தைச் சிறிதும் எண்ணாமல் பொருளை ஈட்டுவது கடமை என்று செல்வான். இப்படிப் பிரிந்து செல்லும் பாலை நிலச் செலவை யுடையவனை விடலை என்று சொல்வார்கள். பாலை நிலத்தில் சிறிதும் ஈரம் இல்லாதது போல விடலையின் நெஞ்சிலும் ஈரம் இல்லாமல் இருக்கும். பெண்ணின் துயரத்தைச் சிறிதும் அறியாத கொடுமையை நெஞ்சிலே உடையவன் விடலை. முருகனும் பெண்ணின் உள்ளத்துயரை அறியாத விடலைதானே? எல்லாப் பெண்களுக்குமா அவன் விடலையாக இருப்பவன்?’

அன்னை சற்றே யோசனையை நிறுத்தினாள். அவளுடைய தோழி அப்போது வந்து சேர்ந்தாள்.

“என்ன குருட்டு யோசனை செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“என் மகளுடைய நிலையை எண்ணிக் கவலையில் ஆழ்ந்திருக்கிறேன்” என்றாள் அன்னை.

“கவலை ஏன்?”

அவள் தான் நினைத்தவற்றை யெல்லாம் எடுத்துச் சொன்னாள்.

“நன்றாக இருக்கிறது உன் சிந்தனை! கோயிலையும் பொழிலையும் எண்ணி உடனடியாகப் பாலை நிலத்தையும் விடலையையும் நினைக்கிறாயே! இங்கிருந்து அங்கே எப்படித் தாவியது உன் மனம்”

”மனம் குரங்கு அல்லவா? அதனால் தாவுகிறது.”

‘பாலை நிலத்திலே பொருளின்மேற் பற்றுடையவனாகிப் போகும் ஒருவனையும் முருகனையும் ஒன்றாக எண்ணுகிறாயே! பைத்தியம் பிடித்துவிட்டதோ, உனக்கு?

“என் கவலை எனக்குத் தெரியும்!”

“எனக்குக்கூடத் தெரியும்; ஆனால் கவலையில் நீ நினைக்க வேண்டியதை நினைக்காமல்,சம்பந்தம் இல்லாதவற்றை எண்ணி வேதனைப்படுகிறாய்.

“எதை நினைக்க வேண்டுமென்று சொல்கிறாய்?’

“முருகனைத்தான்.”

“அவனை நினைக்க நினைக்க எனக்குத் துயரம் பொங்கு கிறதே ஒழிய ஆறுதல் உண்டாகவில்லையே!”

“அவனுடைய இயல்பையும் அவன் இருக்கும் இடத்தையும் நினைக்காமல் கற்பனையால் பாலை நிலத்தையும் விடலை யையும் நினைத்து வருந்துகிறாயே!”

”பின், எவற்றை நினைக்க வேண்டும்?”

‘முருகன் இருக்கும் இடத்தையும் அவன் குடும்பத்தையும் அவன் இயல்பையும் எண்ணிப் பார். அவன் அருள் நிறைந்தவன், பெரிய குடும்பத்துப் பிள்ளை என்பதை யெல்லாம் எண்ணிப் பார். அவன் இருக்கும் திருவிடைக்கழியின் சிறப்பை எண்ணிப் பார். கொலைக்கு அஞ்சா வேடர் வாழும் பாலை நிலத்திலே செல்லும் விடலையை எண்ணுகிறாயே! மெய்யான அன்பையும் நன்றாகத் தெளிவுபெற்ற மெய்ஞ் ஞானத்தையுமுடைய மறைவாணர் வாழ்கிற இடத்தில் முரு கன் விளங்குகிறான். மலர்மல்கிய திருக்குராமரத்தின் நிழற்கீழ் நிற்கிறான். இவற்றை மறந்துவிட்டாயா? வீணே, திருப்பிட வூரில் உள்ள பெண்களுக்கு அருள் செய்யாமல் விடுவானோ? யாருக்கும் விடலையாக இருப்பானோ?’ என்று அங்கலாய்க் கிறாயே!”

மருண்டுறை கோயில் மல்கு நன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப்பிடவூர்
வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே?
விடலையே எவர்க்கும்?மெய் அன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற

“நீ சொல்வது உண்மைதான். அவன் மெய்யன்பர்களாகிய வைதிகரிடையே வாழ்பவன் தான்.”

“அது மட்டுமா! அவன் குடும்பம் எத்தகையது தெரியுமா? நெற்றியிலே கண் படைத்த முக்கட்பிரான் அல்லவா அவனுடைய தந்தையார்? வளைவான குஞ்சியையும் பிறையை அணிந்த சடையையும் உடைய சிவபெருமானைப் பற்றி அறியாதார் யார்? அவருடைய பிள்ளை முருகன். அவன் எவ்வளவு கருணையை யுடையவன்! மென்மையானவன்: முருகனைப் போன்ற கோமள மூர்த்தியை எங்காவது பார்க்க இயலுமா? கொழுந்துபோல இளமையும் எழிலும் உடைய அந்தக் கோமள மனத்தனை விடலை யென்று சொல்லலாமா?”

அன்னை தன் நினைவையும் தன் தோழி கூறியவற்றையும் ஒருங்கே வைத்து எண்ணுகிறாள்;

மருண்டுறை கோயில் மல்குநன் குன்றம்
பொழில்வளர் மகிழ்திருப்பிடவூர்
வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே?
விடலையே எவர்க்கும்?மெய் அன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற குருண்டபூங் குஞ்சிப்
பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.

[இறைவனிடத்தில் மெய்யான அன்பையுடையவரும், தெளிந்த அறிவை யுடைய வைதிகருமாகிய பெரியோர் வாழ்கின்ற திரு விடைக்கழியில் அழகிய குராமரத்தின் நிழலின்கீழ் நின்றவனும்: சுருண்ட கேசத்தையும் பிறையை அணிந்த சடைமுடியையும் மூன்று கண்களையும் உடைய சிவபெருமானுடைய மென்மையான கொழுந்து போன்ற பிள்ளையாகிய முருகன், யாவரும் தன் சிறப்பை நோக்கி வியப்படைந்து தங்கும் கோயிலும் வளம் மல்கிய குன்றிலே வளரும் பொழிலைப் போன்ற பொழில்களும் வளர்கின்றதும், மகிழ்ச் சிக்கு இடமாவதுமாகிய திருப்பிடவூரில் உள்ள, அஞ்சிய மானின் விழியைப் போன்ற விழிகளை உடைய மங்கையருக்கு அருள் செய்யா மல் விடுவானோ? அவன் எல்லாருக்குமே கொடிய மனம் படைத்த விடலையோ? பொதுவாக வெருண்ட மான்விழியார்க்கு என்று சொன்னாலும், அவள் தன் மகளையே உள்ளத்தில் எண்ணினாள்.

முக்கண் உடைக் கொழுந்து விடுமே, விடலையே என்று கூட்டுக.

மருட்சி -பிரமிப்பு; வியப்பு. கோயில் – மாளிகையென்றும் கொள்ளலாம். குன்றப்பொழில் -குன்றத்திலே வளரும் பொழி லைப் போன்ற பொழில். செயாவிடுமே – செய்யாமல் விடுமே; செய்யாமல் என்பது ஈறு குறைந்தது: செய்யுள் விகாரம்.விடுமே- விடுவானோ? விடலை – பாலைநிலத் தலைவன்: பெண்ணின் துயர் பாராமல் பிரிவுத் துன்பத்தைத் தந்து செல்கிறவன் அவன். அந்தப் பண்பு இவன்பாலும் உண்டோ என்பாள், விடலையே என்றாள். எவர்க்கும் விடலையே. ஏகாரம்,வினா. மெய்யன்பராகிய வைதிகர். குருண்ட சுருண்ட குஞ்சி – ஆண் கேசம். குஞ்சியையும் சடை யையும் உடைய முக்கண்ணான், முடித்தது சடை; எஞ்சி நின்றது குஞ்சி. முக்கண்: அன்மொழித் தொகை: முக்கண்ணையுடைய சிவபிரானுக்கு ஆயிற்று. அவனுடைய கொழுந்து, கோமளக் கொழுந்து என்று கூட்டுக. கொழுந்து -தளிர்: இங்கே இளங் குமரன் என்பதைக் குறிக்க வந்தது. கோமளக் கொழுந்தாக இருப்பவன் விடலையாக இருக்க நியாயம் இல்லையே என்றபடி.]

இதில் கூறிய திருப்பிடவூர் என்ற ஊர் இன்ன இடத்தில் உள்ள தென்று தெரியவில்லை. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய ஆதியுலாவை அவர் திருக்கைலையில் அரங்கேற்றிய போது கேட்ட சாத்தனார், அதனை வேதியர் நிறைந்த திருப்பிடவூரில் வெளிப்படப் பகர்ந்தார் என்ற செய்தி பெரிய புராணத்தில் வருகிறது. அந்தப் பிடவூரும் இந்தப் பிட ஆரும் ஒன்றோ வேறே அறியக் கூடவில்லை. திருச்சிராப் பள்ளிக்குப் பதினேழு மைல் தூரத்தில் ஒரு பிடவூர் இருக் கிறது. இப்போது திருப்பதட்டூர் என்று வழங்குகிறதாம். இங்கே சாத்தனார் கோயில் இருக்கிறது. சாத்தனாரின் திருக் கரத்தில் ஏடு இருக்கிறதாம். திருவுலா ஏட்டைக் குறிப்பது அது. இந்த ஊரே பெரிய புராணத்தில் குறித்த பிடவூர் என்பர். [திரு சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமனிய முதலியாரவர்கள் தம்முடைய பெரிய புராண விருத்தியுரையில் இந்தச் செய்தியைத் தெரிவித்திருக்கிறார்கள் (வெள்ளானைச் சருக்கம்.ப. 6437) ]

சேந்தனார் திருவிசைப்பாவில் பத்தாவது பாடல் இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !