சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

மடல் தொடங்கினாள்

தலைவிக்கு முருகன் மேல் அடங்காத காதல் உண்டாகி விட்டது. அவனுடைய அருள் தனக்குக் கிடைப்பது அரிது என்று அஞ்சினாள். உள்ளத்தே தோன்றிய காதலை மாற்ற இயலுமா? ஒருவனுக்கென்று அளித்த உள்ளம் வேறு யாருக்கும் இடம் கொடாதே! ஊரார் அறியத் தன் ஆற்றாமையைச் சொல்லிப் புலம்பிப் பிறர் நெஞ்சில் இரக்கம் உண்டாகும் படி செய்யலாமா என்று யோசித்தாள். அப்போது அவளுக்கு ஒரு நினைவு வந்தது.

காதலன் ஒருவன் தான் காதலித்த பெண்ணை மணம் செய்ய விரும்பி அதற்கு ஆவன செய்கிறான். பெண்ணைப் பெற்றவர்கள் இணங்குவார்கள் என்று தோன்றவில்லை. அதனால் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதலியை அவனால் மறந்துவிட முடியுமா? ஊரார் அறியத் தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பை வெளியிட்டுச் சான்றோர் முன் நின்று அவர்களுக்கும் அதனைப் புலப்படுத்தினால், அவர்கள் உண்மையை உணர்ந்து இருவரையும் ஒன்றுபடுத்துவார்கள். தம்மிடையே உள்ள நட்பையும் தன் காதலியைப் பெறும் உரிமை தனக்கு இருப்பதையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க அவன் ஓர் உபாயம் செய்வான். பனமடலால் குதிரையைப் போன்ற உருவத்தைச் செய்து, அதில் தன் படத்தையும் தன் காதலி படத்தையும் எழுதி மாட்டிக்கொள்வான். எருக்கு மாலை அணிந்து விகாரமான கோலம் புனைந்து, பைத்தியம் பிடித்தவனைப் போன்ற தோற்றத்துடன் அந்த மடல்மாவில் ஏறி ஊரைச் சுற்றி வருவான். இப்படிச் செய்வதற்கு மடலூர்தல் என்று பெயர்.

இந்த வழக்கம் முருகனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்த இளம் பெண்ணுக்கு நினைவு வந்தது. ஆனால் ஆடவர்கள் மடல் ஏறுவது வழக்கமேயன்றிப் பெண்கள் அவ்வாறு செய்வதில்லை.

செய்வதாகச் சிலர் வாயினால் சொல்வார்கள். “நாம் மடல் ஏறினால் என்ன? இதுகாறும் எந்தப் பெண்ணும் மடலேறியது இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் என்னளவு துயரம் அடைந்தவர்கள் யார்? நான் முருகனைக் காதலித்து மறுகிக் கிடந்தேனானால் என்னை வீட்டில் யாரும் கவனிக்க மாட்டார்கள்; ஊராரும் கவலைப்பட மாட்டார்கள். நான் நாணை அடியோடு அகற்றிவிட்டு ஊரறிய மடலேறினால்தான் வீட்டில் உள்ளவர்களுக்குப் படும்” என்று எண்ணினாள் அந்த இளம்பெண். வீட்டிலுள்ளோர் காதில் படும்படி தன் தோழியுடன் சொன்னாள்.

அதைக் கேட்ட தாய்க்குத் தூக்கிவாரிப் போட்டது. “இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு துணிவு வந்துவிட்டதே!” என்று அஞ்சினாள். ‘பெரு வீரனாகிய முருகன் இவளுடைய காதலை உணராமல் இருக்கிறானே!’ என்று வருந்தினாள். பித்துப் பிடித்தவர்களை அடக்கினாலும் காதல் முறுகினவர்களை எப்படி அடக்குவது? அவள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

அப்போது அவளுடைய தோழி வந்தாள். “என்னவோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாயே! முகத்தில் வாட்டம் மூட் டம் போட்டிருக்கிறதே!” என்றாள்

இளம் பெண்ணின் தாய் சிந்தனையிலிருந்து தெளிந்தாள் “ஆம், ஆழ்ந்த சிந்தனைதான். வழி தெரியாத திண்டாட்டத்தில் தத்தளிக்கிறேன்” என்றாள்.

‘உனக்கு என்ன துயரம் வந்துவிட்டது?’

“எனக்கு ஒரு கேடும் இல்லை. என் மகளுக்குத்தான் வந்திருக்கிறது.’

“மகளுக்கா? அவளுக்கு என்ன உடம்பு?”

“உடம்புக்கு ஒன்றும் இல்லை; உள்ளத்தில்தான் கோளாறு”

“என்ன செய்கிறாள்?”

“மடல் ஏறப் போகிறாளாம்!”

“இதென்ன கூத்து? பெண் மடல் ஏறுகிறதா?”

“நாணம் என்பது கழன்றுவிட்டால் பெண் எதைத் தான் செய்யமாட்டாள்?”

“அவ்வளவு தூரத்துக்கு வருவானேன்? அவள் யாரைக் காதலிக்கிறாளோ, அவனுக்கே அவளை மணம் முடித்துவிடுகிறது தானே?”

“எனக்குச் சம்மதந்தான்; அவன் இணங்க வேண்டுமே! பாதிக் கல்யாணம் ஆனால் போதுமா?”

“அந்தப் பிள்ளையாண்டான் யார்? இவளுக்கு ஏற்றவன் தானே?”

“அவன் பெருவீரன்; வகைவகையாக இருந்த அசுரர்கள். தேவர்களுக்கும் நல்லவர்களுக்கும் இடுக்கண் செய்து வந்தார்கள். தேவர்கள் முப்பத்து மூன்று கோடியினர் என்றால், அசுரர்கள் அறுபத்து ஆறு கோடிப் பேர்கள். அவர்களெல்லாம் மாளப் போர் செய்து தன் வீரத்தைக் காட்டினான் அவன். அவர்களுடைய மதில்களை உழிஞை மாலை பூண்டு சென்று அழித்தான். வாளால் அமர் செய்தான். சிறிதும் சோர்வின்றித் தாளாண்மையுடன் அமரை விளைத்தான்.”

வகைமிகும் அசுரர் மாள வந்து
உழிஞைவாள் அமர் விளைத்து தாளாளன்.

‘அவனுடைய தந்தை யார்?’

அவரும் பெரிய வீரர். மூன்று மதில்களை வைத்துக் கொண்டு உலகுக்குத் தீங்கு செய்தார்கள், மூன்று அசுரர்கள். அவர்களுடைய முப்புரங்களையும் புகை மிகுந்த தீயில் படுசூர்ணமாகப் போகும்படி செய்தவர் அவர். தம் கையில் பொன் மலையையே வில்லாக வளைத்து வைத்துக் கொண்டிருக்கிறவர். அத்தகைய வீரருக்குப் புதல்வன்தான் என் மகளுடைய காதலன்.”

புகைமிகும் அனலில் புரம் பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்.

“அவன் எந்த ஊரில் இருக்கிறவனோ?”

திக்கெல்லாம் பாராட்டும் கீர்த்தியை யுடைய திருவிடைக் கழியில் இருக்கிறான்.

“அவனை அங்கே சென்றால் பார்க்கலாமோ?”

“நன்றாகப் பார்க்கலாம். அங்கேயுள்ள திருக்கோயிலில் அழகிய குரா மரத்தின் நிழலில் அவன் நின்றுகொண்டிருப்பான்.”

“அவனுடைய திருநாமம் எது?”

“திருநாமமா? ஒன்றாக இருந்தால் இதுதான் என்று சுட்டிச் சொல்லலாம். அல்லது பத்துப் பெயர்கள் என்றால் அவற்றையும் சொல்லலாம். அவனுடைய பெயர்கள் பல பல; அவற்றை எண்ணிக்கையில் அடக்க முடியாது; பெயர் களின் தொகை எண்ண எண்ண மிகுந்துகொண்டே செல்லும்.”

திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நிழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத்தவன்.

“நீ சொல்வனவற்றை யெல்லாம் பார்த்தால், அன்பர்கள் யாவரும் வந்து வணங்கும் திருவடியையுடைய முருகன் என்றல்லவா தோன்றுகிறது?”

‘ஆம், ஆம், நீ சொல்வது சரிதான். அவன் திருவடியை எண்ணித்தான் இவள் மடலேறுவேன் என்று தொடங்கி யிருக்கிறாள்.’

“இவளா மடலேறப் போகிறாள்? இவள் எவ்வளவு மென்மை உடையவள்!”

“துடிபோன்ற இடையையுடைய என் மகள் தான் மடல் தொடங்கினாள்.”

தாயின் கூற்றைப் பின் வரும் பாடல் தெரிவிக்கிறது.

வகைமிகும் அசுரர் மாளவந்து உழிஞை
வாள் அமர் விளைத்ததா ளாளன்,
புகைமிகும் அனலில் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்,
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
துடிஇடை மடல்தொடங் கினளே.

[இனங்கள் மிக்க அசுரர்கள் மாளுவதற்காகத் திருவவதாரம் செய்து பகைவர் மதிலைக் கோடலாகிய உழிஞைத்திணைப் போரை வாளால் விளைத்த முயற்சியை யுடையவன், புகை மிக்க நெருப்பில் மூன்று புரங்களைப் பொடியாக்கிய மேரு மலையை வில்லாகவுடைய சிவபெருமானுக்குப் புதல்வன், திசைகளில் மிக்குப் பரவிய புகழை யுடைய திருவிடைக்கழி யென்னும் தலத்தில் அழகிய குரா மரத்தின் நிழலில் நின்றருளும், எண்ணிக்கையில் மிக்க பல திருநாமங்களை யுடையவனாகிய முருகனது திருவடியின் பொருட்டு, துடி போன்ற இடையையுடைய ஏன் மகள் மடலூர்தலைத் தொடங்கினாள்.

வகை -இனம், பிரிவு, வந்து – அவதரித்து. மதிலை முற்றுகையிடுவது உழிஞைத்திணையின் பாற்படும்; அப்போது உழிஞை மாலையை வீரர் அணிவர். உழிஞை அமர்வாள் அமர் என்று தனித்தனியே கூட்டுக. தாளாளன் – பெரு முயற்சியுடையவன். பொன் மலை – மேரு. திரிபுர சங்காரத்தின் போது இறைவன். மேருவையே வில்லாக வளைத்துச் சென்றான் என்பது. புராண வரலாறு.திகை – திசை, தொகை – எண்ணிக்கை; கூட்டமுமாம். திருவடிக்கு – திருவடியை அணுகும் பொருட்டு. அவன் காதலைப் பெறும் பொருட்டு என்பது கருத்து. மடல் ஏறுவேன் என்று சொல்வதைக் கேட்டு அஞ்சினமையால் மடல் தொடங்கியதாகவே கூறினாள். துடியிடை: அன்மொழித் தொகை.]

இது சேந்தனார் திருவிசைப்பாவில் எட்டாம் பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !