
சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்
இடும்பைக் குன்று
மனிதன் தன்னுடைய வாழ்வில் இன்பம் துன்பம் என்னும் இரண்டையுமே அனுபவிக்கிறான். புண்ணியத்தின் பயனை மட்டும் நுகர்பவர்கள் தேவர்கள். பாவத்தின் பயனை மட்டும் நுகர்பவை விலங்கினங்கள். புண்ணியம் பாவம் என்னும் இரண்டின் பயனையும் நுகர்பவன் மனிதன். அந்த இரண்டும் கலந்த வினைக்கு மிசிரகர்மம் என்று பெயர். அதன் பயனாக இன்பம், துன்பம் என்னும் இரண்டையும் அநுபவிக்கிறான்.
ஆனால் மனிதன் தான் பெற்ற துன்பத்தையே எண்ணி எண்ணி ஏங்குகிறான். வெங்காய வடை தின்றவன் வாயில் வடையில் உள்ள மற்றப் பகுதிகளின் சுவை நெடு நேரம் நில்லாது; வெங்காயத்தின் சுவை மட்டும் நெடிது நிற்கும். அது போலவே மனிதனுக்கு இன்பம் நுகர்ந்த நினைவு நெடு நேரம் நிற்பதில்லை; துன்ப நினைவே மனத்தில் வண்டலிடுகிறது. இன்ப துன்பங்களை ஒரு நிலையனவாகப் பார்க்கிற ஞானிகளுக்கு அவற்றால் எந்த விளைவும் உண்டாவதில்லை. மற்றவர்களுக்கோ துன்பமே மனத்தில் பதிந்திருப்பதனால் வாழ்வே துன்பம் என்று தோன்றிவிடுகிறது. குழந்தைகளும் ஞானிகளும் இதற்கு விலக்கு.
எவை எவை இன்பத்துக்கு ஏதுவானவை என்று புகுகிறானோ அவற்றையே துன்பத்துக்குக் காரணம் என்று உணர்கிறான். சுற்றத்தாரால் வரும் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே மிகுதி. உணவினால் வரும் இன்பத்தை விடத் துன்பம் மிகுதி. இப்படியே ஒவ்வொன்றாலும் துன்பத்தை அவன் அடைந்து கொண்டிருக்கிறான்.
“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்“
என்பது திருக்குறள். அதை வேறு வகையாகச் சொன்னால்,
“யாதனின் யாதனின் தேங்கியான் நோதல்
அதனின் அதனின் உளன்”
என்று வேறு குறளையே சொல்லிவிடலாம்.
இவ்வாறு வருகிற துன்பங்கள் நாளாக ஆக வளர்ந்து வருகின்றன. முயற்சி வளர வளர, உடம்பு வளர வளர, சுற்றம் வளர வளர, துன்பங்களே வளர்கின்றன. நாளாக ஆக உடல் தளர்கிறது; அதனால் நாம் துன்பம் அடைகிறோம். நம் தளர்ச்சியைக் கண்டு நம்மை அணுகுவோர்கள் அணுகு வதில்லை; அதை நினைத்தால் மிக்க துயரம் ஊறுகிறது.
மனிதப் பிறவியே துன்பந்தான் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
“பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்“
என்பது மணிமேகலை.
ஒரு பிறவியில் மாத்திரமா இந்தத் துன்பம்? பிறவி தோறும் துன்பம் குவிகிறது; மலைமலையாகக் குவிகிறது. இந்த மலையைப் போக்க ஓர் உபாயமும் இல்லையா? நமக்கு அவ்வாறு செய்யும் ஆற்றல் இல்லை.ஆனால் வேறு யாருடைய உதவியையாவது கொண்டு இந்த இன்னலெனும் மலையை அழித்துவிட முடியுமா?
மலையை அழித்தவர்கள் யார் இருக்கிறார்கள்? இப்போது நினைவுக்கு வருகிறது. முருகன் கிரெளஞ்ச மென்னும் மலையை அழித்தான். தன் திருக்கரத்திலுள்ள வடிவேலை ஏவி அந்த வெள்ளிமலையைப் பொடிப் பொடியாக்கினான். அந்தப் பெருமான் இந்தத் துன்பமலையையும் பொடியாக்கிவிட மாட்டானா?
இந்த எண்ணம் ஒரு பக்தருக்குத் தோன்றியது. அவர் கந்த புராணத்தைப் புரட்டிப் பார்த்தார். கிரவுஞ்சமலையை முருகன் பொடி படுத்திய கதையை மறுபடியும் படித்துப் பார்த்தார். கந்த புராணம் முழுவதையுமே படித்து இன்புற்றார்.
ஒரே ஒரு முறை ஒரு மலையை வடிவேலால் பொடி யாக்கினான் முருகன். அதற்குப் பிறகு அந்த வேலுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. அப்புறம் எந்த மலையையாவது அது துளைத்ததோ? அப்படிக் கேள்விப் படவே இல்லை. ஒன்றுக்கும் பயன்படாமல், என்றோ ஒரு நாள் ஒரு மலையைப் துளைத்ததென்று அந்த வேலை ஏந்தி நிற்கலாமோ? அதற்கு வேலை இருந்தால் கையில் ஏந்தி நிற்கலாம். அப்போதுதான் அதற்கு மதிப்பு உண்டு.இல்லா விட்டால் வேல் துருப்பிடித்துப் போய்விடாதா?
“சுவாமி, உம்முடைய வேலுக்கும் வேலை வைத்து எனக்கும் உபகாரம் செய்யவேண்டும்” என்று அந்தப் பக்தர் வேண்டிக் கொண்டார்.
“முன்னமே ஒரு மலைமேல் வேலை விட்டு மாய்த்தாய். வேலாலே சூரனைக் கொன்றாய். அந்த வேலை இப்போது என்னிடம் உள்ள துன்பம் என்னும் பெருமலையை நோக்கி விடுவது பொருத்தமாக இருக்கும். வேலை வீச இலக்கு இல்லாமல் இருந்தாய் அல்லவா? இப்போது அந்த வேலின் தினவு தீர எனது இடும்பைக் குன்றின்மேல் ஏவு அப்பா!” என்று இரந்து நின்றார். அவர் புலவர் ஆதலின் அந்த. வேண்டுகோள் பாட்டாக வந்தது.
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில் வேல் சூர்தடிந்த கொற்றவா – முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
(அச்சத்தைப் பயின்ற வேலாலே சூரனை அழித்த பெருமானே, முன்பு பனி மூடிய உயர்ந்த மலையாகிய கிரவுஞ்சத்திலே பட்டு உருவப் பிரயோகஞ் செய்த இணையில்லாத வேலாயுதத்தை, இன்னும் ஒரு முறை என் துன்பமாகிய குன்றின்மேலே ஏவலாம்; அது பொருத்தமாக இருக்கும்.)
எல்லோருமே முருகனைப் பார்த்துச் சொல்ல வேண்டிய பாட்டுத்தான் இது.



