
சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்
இடர் பயப்பது குணமா?
தன்னுடைய மகள் முருகனிடம் வைத்த காதலால் வாடுகிறாள் என்று ஒவ்வொரு நாளும் வருந்தினாள் தாய். தன் மகள் கொண்ட காதல் தகாததென்று அவள் எண்ணவில்லை. தேவயானை அமரர்கோன் மகள். வள்ளி மானிட மகள்தானே? அவளை ஆட்கொண்ட முருகன் தன் மகளையும் ஏற்றுக் கொள்ள இடம் உண்டு என்ற நம்பிக்கை அவளுக்கு எழுந்தது. வந்தவர்களிடம் அவனைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. உள்ளத்தை ஒரு வழியே போக்கின தன் மகளை அந்த ஆசையை விட்டுவிடு என்று சொல்லலாமா? அவளுடைய மகள் நினைத்தபடி யெல்லாம் மனத்தை அலையவிடுபவள் அல்லவே.
தளதளவென்று அரும்பும் மலரும் கொண்டு நின்ற கொடி போலப் பருவ எழில் நிறைந்து துளும்ப இலங்கின அந்த மங்கை இன்று வாடிய கொடிபோல அல்லவா கிடக் கிறாள்? இதற்குப் பரிகாரம் ஒன்றும் இல்லையா?
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்பார்கள். யார் யாரிடமோ சொல்லிக் குறை கூறுவதைவிட முருகனிடமே சென்று முறையிடலாம் அல்லவா? தாயே அப்படிச் செய்வது தக்கதன்று.
அப்போது அவளுக்கு ஓர் உண்மை புலனாயிற்று. உலகத்தில் உள்ள மக்களாக இருந்தால்தானே நேரே போய்ச் செவ்வி பார்த்துச் சொல்லவேண்டும்? முருகன் எங்கும் நிறைந்தவன். எங்கும் செவியுடையவன். மனத்திலே எண்ணினால்-அன்புடன் உருகி எண்ணினால் – அந்த எண்ணத்தை அவன் உணர்ந்து கொள்வான். இப்போது தனியே இருந்து, மனம் உருகி, தன் மகளுக்கு அருள் புரிய வேண்டுமென்று வேண்டிக்கொள்ளலாமா? வேண்டுவார் வேண்டுவதே ஈவான் அவன் என்று அவனைத் தெரிந்தவர்களெல்லாம் சொல்லுகிறார்களே!
அவள் முருகனை நினைந்து வழிபட்டாள். அவனை நேரே விளித்துச் சொல்ல நாணமாக இருந்தது. யாரேனும் மதிப்புக்குரியவர் ஒரு தவறு செய்தால் அவரை நேர்முகமாக வைத்து, “நீங்கள் இப்படிச் செய்வது நியாயமா?” என்று கேட்பது வழக்கம் அன்று. ”இவ்வளவு பெரியவர், குணம் நிறைந்தவர் இவ்வாறு செய்யலாமா?” என்று கேட்பது மரபு. இந்த அன்னையும் அவ்வாறே முருகனைப் படர்க்கையில் வைத்து முறையிடத் தொடங்கினாள். இரக்கமற்ற செல்வர்கள், யாரேனும் தம் முன்னிலையில் நின்று எவ்வளவு உரக்க அரற்றினாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள். ஆனால் முருகனோ எப்படிச் சொன்னாலும் கேட்கும் ஆற்றலுள்ளவன்; பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்துள்ள பரமன். அவள் சிந்தையினால் எண்ணி முருகனை முறையிடலானாள்.
முருகன் பிறரால் வரும் இடையூறுகளை அன்பர்களுக்கு நீக்கி இன்ப வாழ்க்கை அருள்பவன். பேராற்றல் உடையவர் களுக்கும் சில சமயங்களில் இடையூறுகள் வரும்; அவை பிறரால் போக்குவதற்கு அரியவை. அவற்றையும் தீர்த்து அருள்பவன் முருகன். அவன் இந்தப் பெண்ணுக்கு இடரை உண்டாக்குவது பண்பாகுமா?
அன்று வானவர்களுக்கு இடுக்கண் வந்தது. ஆயிரத் தெட்டுக் கோடி அண்டங்களைத் தன் கொடுங்கோலாட்சிக்குள் அடக்கி ஆண்டான் சூரபன்மன் அசுரர்கள் அறுபத்தாறு கோடி பேர்கள். தேவர்களோ முப்பத்து மூன்று கோடி தேவர்கள் மடிவதையன்றி வேறு வழி இல்லை.
மரளஞ்சாசுரன் திடீர் திடீரென்று எழும்பி வந்து எங்கேயாவது படிந்து அமரரை நாசம் செய்தான். இந்த அக்கிரமத்தைப் போக்க இந்திரனால் இயலவில்லை; வானவர் சேனையால் இயலவில்லை. எல்லாத் தேவர்களும் கூடிச் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். முருகன் தோன்றினான். வானவர் தாமே அசுரர் மேல் படையெடுத்துச் சென்றால் அடியோடு அழிந்து விடுவார்கள். முன்பே சிலர் மடிந்து போனார்கள். அதை அறிந்து முருகன் தேவர் படைக்குத் தானே தலைவனானான். தானே போர்க்களத்தில் நின்று அமர் பொருதான்.
முருகனுக்கும் சூரனுக்கும் நேரே பகை ஒன்றும் இல்லை. அமரர்கள் மடிய, அது கண்டு கருணையினால் தானே போர்க் களத்தில் குதித்துப் போர் செய்தான். பேராற்றலும் பெரு வீரமும் உடைய முருகன் சூரன் மார்பினைப் பிளந்தான். இத்தகைய பெருவீரன், பெரியவர்களின் இன்னலைப் போக்குவதே தன் கடமையாகக் கொண்ட கருணையாளன், என் மகளுக்கு இடர் பயப்பது குணமாகுமா?
தான்அமர் பொருது, வானவர் சேனை
மடியச் சூர் மார்பினைத் தடிந்தான்.
(வானவர் சேனை மடிய, அதுகண்டு தானே முன்சென்று வானவர்களோடு அமர் பொருது. சூரனுடைய மார்பைப் பிளந்தான்.)
அவனுடைய தந்தை பெரிய வள்ளல். தாருகர் வனத்து முனிவர்கள் ஒரு யாகம் செய்து அதிலிருந்து ஒரு மானை உண்டாக்கி அவர் மேலே பாய் அனுப்பினார்கள். அவர் மானைக் கண்டு இரங்கினார். தம் மேலே மோத வருகிறதே என்று அஞ்சவில்லை. குழந்தை காலால் உதைக்கிறதென்று தந்தை அஞ்சுவாரா? சிவபெருமான் அந்த மானை எளிதிலே பிடித்துக் கையிலே ஏந்திக் கொண்டார். தம்மைப் பகைத்தவர் களுக்கும் அருள் தரும் கருணை வள்ளல் அவர். அவருடைய பிள்ளை அல்லவா முருகன்? தந்தையின் பண்பை வளர்ப்பது தானே புதல்வனது கடமை? அப்படி இருக்க, அவன் என் மகளுக்குத் துன்பம் உண்டாகும்படி செய்வது பண்பாகுமா?
மான் அமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை.
(அமர்- தங்கும். தடக்கை – பரந்த கை.)
முருகன் அன்று தேவர்களின் இடரைத் தீர்த்து இந்திரனுக்கு மீண்டும் வானுலக அரசாட்சியை வழங்கினான். அவனுடைய இராசதானி கந்தலோகம். குரனுடைய சங்காரத்தோடு அவனுடைய கடமை முடிந்துவிடவில்லை. அப்போதுதான் தொடங்கியது. உலகில் உள்ளவர்கள் நன்கு வாழவேண்டும். அறவாழ்வினால்தான் இன்பம் உண்டாகும். அறம் வளர்ந்தால் பாவம் தேயும். மறவாழ்விலே ஈடுபடுவர்கள் அசுர இயல்பு உடையவர்கள்; அறநெறியிலே செல்பவர்கள் தேவ இயல்பு உடையவர்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தேவர்களோடு ஒப்ப எண்ணுதற்குரியவர்கள் அல்லவா? அறத்துக்கும் மறத்துக்கும் உலகில் ஒவ்வொரு நாளும் போர் நடந்து கொண்டே இருக் கிறது. அறத்தை வேதம் கூறுகிறது. அது பெரிய அறநூல். அறத்தை உணராமல் மனிதனை மனிதன் வெறுத்து அடித்துத் துன்புறுத்துகிறான். குடும்பத்தைக் குடும்பம் பகைத்துக் கலாம் விளைக்கிறது. நாட்டை நாடு மோதி உலக வாழ்வையே குலைக்கிறது. உலகெல்லாம் மறத்தின் கொடுமை மிகுதியாக இருக்கிறது. உண்மையான, நிலைபெற்ற, சத்தான அறம் வளர வேண்டுமானால் இறைவன் திருவருள் துணை இருந்தால் முடியும்.
குற்றவாளிகள் மலிந்துள்ள இடங்களில் பல போலீஸ் ஸ்டேஷன்களை அமைப்பது ஆட்சியாளர் இயல்பு. அதுபோல அறம் வளர வேண்டுமானால் மறத்தைத் தொலைக்க முருகன் கந்த லோகத்தை மாத்திரம் இராசதானியாகக் கொண்டு வீற்றிருந்தால் போதாது.
பல இடங்களில் அறங்காவல் நிலையங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அவசியத்தை அறிந்து முருகன் பல நிலையங்களை அமைத்துக் கொண்டிருக்கிறான். நிலவுலகத்தில் அவன் மறத்தோடு போரிட்டு அறநெறியையும் அருளின்பத்தையும் வளர்ப்பதற்காகவே ஆறுபடை வீடுகளில் அமர்ந்திருக்கிறான். அவை பெரிய காவல் நிலையங்கள். அன்றியும் வேறுபல அழகிய இடங்களிலும் அவன் எழுந்தருளியிருக்கிறான். அவற்றில் ஒன்றுதான் திருவிடைக்கழி.
என்ன அழகான நிலையம் அது! வண்டுகள் விரும்பிச் சென்று இசை பாடும்வண்ணம் நிறைய மலரையுடைய பொழிலைப் பெற்றது அந்த நகரம். அங்கே வளமும் அழகும் நிரம்பிய குராமரத்தின் நிழலில் அவன் நிலைபெற்றிருக்கிறான். அவ்வாறு நின்ற கோன், எதற்காக இப்படியெல்லாம் வந்திருக்கிறான் என்பது நினைப்பதற்குரியது..
பூம்பொழிலின் வளத்தைக் காண அன்று; மங்கையரை மயல் பூட்ட அன்று; புதிய இடத்தைப் பிடிப்பதற்காக அன்று; சத்தான அறம் வளரவேண்டும் என்பதற்காகவே அவன் எழுந்தருளியிருக் கிறான்.
அறச் செயல்கள் வளர்வதற்காக வந்து நிற்கும் பெருமான் என் மகளுக்கு இடர் உண்டாக்குவது அறம் ஆகுமா?
மறைநிறை சட்டறம் வளரத்
தேன்அமர் பொழில்சூழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோன்.
[வேதத்தில் நிறைந்து விளங்கும் சத்தான அறங்கள் வளரும் படி வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவிடைக்கழி என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும் இறைவன்.
சட்டறம் – சத்தான அறம். சத் என்பது சட்டென வந்தது. வட மொழிச் சொற்களில் வரும் தகரம் சில சமயங்களில் தமிழில் டகர மாக மாறுவதுண்டு; வீரட்டானம், மூலட்டானம் என்பவற்றைக் காண்க. தேன் – வண்டுகள், அமர் – விரும்பும்.)
இப்படி உலகில் அருள் நிலையங்களை அமைத்துக்கொள்வது வழி வழியே வந்த பண்பு. முருகனுடைய தந்தையாரும் அவ்வாறு செய்பவரே. அவர் தலைமை பூண்டு எழுந்தருளி யுள்ள கோயில்கள் எத்தனை! கோயில் என்று நினைத்தவுடன் நம் உள்ளத்தே முதலில் தோன்றுவது சிதம்பரம். அதுதானே அடையின்றிக் கோயில் என்று சொல்வதற்கு ஏற்ற பெருமையை உடையது? அந்த அருள் நிலையத்தில் சிவபெருமான் தாம் ஐந்தொழிலும் நடத்துவதைக் குறிப்பாகத் தம் கூத்தினாலே புலப்படுத்தியருளுகிறார். அறம் வளரக் கோயிலில் நின்றும், இருந்தும், ஆடியும் கடமையாற்றும் பெருமானார் அவர். அவருடைய குலத்தில் தோன்றிய இளைய புதல்வன் முருதன்: வீரத்திலும் வெற்றிமிடுக்கிலும் களிற்றைப் போன்றவன். தானும் தன் தந்தையும் அறம் வளர்வதற்காகவே இவ்வுலகத்தில் கோயில் கொண்டிருக்கும்போது, என் பெண்ணுக்குத் தீங்குபுரிவது அறமாகுமா?
அமர் கூத்தன் குல இளங் களிறு.
[யாவரும் விரும்பிச் சென்று தரிசிப்பதற்குரிய நடராசப் பெருமானுடைய குலத்தின் இளைய ஆண்யானை போன்ற பிள்ளை அமர் – விரும்பும்.]
குணமலை யென்றும் பண்பில் ஓங்கியவனென்றும் புகழ் ஏற்ற முருகன், அமரர் இடையூற்றைப் போக்கி நலம் புரிந்த கோமான், வள்ளலுடைய பிள்ளை, அறம் வளர இடைக்கழி நின்ற கோன், அறம் வளர்க்கும் கூத்தனின் இளங்குமரன் தன் இயல்புக்கு மாறாக என் மகள் படும் இன்னலை அறியாமல் இருக்கிறான்; தன்னை நம்பினவளைக் காப்பது அறம் என்பதை மறந்திருக்கிறான்; கொடி போன்ற மெல்லியலாகிய இவளுக்கு இடரை உண்டாக்குவது அவனுடைய நற்பண்புக்கு ஏற்றதாகுமா?
இவ்வாறு முருகன் பேரழகிலே உள்ளத்தைப் பறி கொடுத்து வாடும் பெண்ணை எண்ணி அவள் தாய் மறுகினாள்.
தான்அமர் பொருது, வானவர் சேனை
மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்;
மான் அமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை;
மறைநிறை சட்டறம் வளரத்
தேன் அமர் பொழில்சூழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோன்; அமர் கூத்தன் குலஇளங் களிறு; என்
கொடிக்கிடர் பயப்பதும் குணமே?
[என் : கொடிக்கு – பூங்கொடிபோன்ற மெல்லியலாகிய என் மகளுக்கு. பயப்பது – உண்டாக்குவது. குணமே – நல்ல பண்பு ஆகுமா? அமர்கூத்தன் என்பதையும் முருகனுக்கு ஆக்கி,யாவரும் விரும்பும் மயில் மேலாடும் பெருமான், சிறந்த இளங்களிறு போன்ற வன் என்று பொருள் கொள்வதும் ஒரு முறை.]
இந்த அருமைப் பாடல் சேந்தனார் பாடிய திருவிடைக் கழித் திருவிசைப்பாவில் வரும் நான்காவது பாடல்.



