
சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்
ஐயுறும் வகை
இந்த முறை பெண்ணின் தாய் திருவிடைக்கழிக்குச் சென்று நின்று நிதானமாக முருகனைத் தரிசித்துவிட்டு வந்தாள். அவனுடைய திருமேனிப் பேரழகைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தாள். ‘இவனுடைய தெய்வத் திருமேனி எங்கே! மானிட மகளாகிய இவளுடைய நிலை எங்கே!’ என்ற எண்ணம் அப்போது அவளுக்கு உண்டாயிற்று.
ஊருக்கு வந்தாள். முருகனுடைய உருவம் அவள் அகக் கண்ணில் நின்றது. அவள் புறக்கண்ணுக்கு எதிரே அவளுடைய மகள் நின்றாள். இயற்கையில் அந்தப் பெண் நல்ல அழகிதான். ஆனால் இப்போதோ முருகன்மேல் காதல் கொண்டமையால் உடம்பெல்லாம் மெலிந்து பசலை பூத்து நிற்கிறாள். அவளுடைய தோற்றம் தாய்க்கு இரக்கத்தை உண்டாக்கியது.
மிகவும் இனிமையாகப் பேசும் பெண் அவள்; அஞ்சொல் இளநங்கை. இப்போது யாரோடும் பேசுவதே இல்லை. முருகனிடம் மையல் கொண்டாள். அதனால் துயரம் இல்லை. அந்த மையல் நிறைவேறுமோ இல்லையோ என்று அவள் ஒவ்வொரு கணமும் எண்ணி எண்ணி ஏங்குகிறாள். இந்த ஏக்கந்தான் அவளைக் குலைக்கிறது. மையல் கொள்ளாமல் இருக்கவேண்டும். அப்படிக் கொள்வதாக இருந்தால், நிச்சயமாக முருகன் அருள் செய்வான் என்ற உறுதி இருக்கவேண்டும். அந்த உறுதி இல்லாமல் மையலைக் கொண்டுவிட்டு எப்போதும், “அவன் அருள்வானோ, மாட்டானோ! என்று ஐயுற்று நிற்கிறாள் அவள். அவளுக்கு மையலால் வந்த துன்பத்தைவிட ஐயத்தால் வந்த துன்பமே மிகுதி.
தாயின் தோழி ஒருத்தி வீட்டுக்கு வந்தாள். “உன் மகள் ஏன் இப்படி இருக்கிறாள்?” என்று கேட்டாள்.
அவளுக்கு முருகனிடத்தில் மையல்!” என்றாள் தாய்.
“திருவிடைக்கழியில் இருக்கிறானே, அந்தப் பெருமானிடமா?”
“ஆம்.”
“அவனுடைய நிலையை நீ அறிவாயா?” என்று தோழி கேட்டாள்.
தாய் தான் சென்று வந்ததைச் சொன்னாள்; “நேற்றுத்தான் போயிருந்தேன்; கண்ணை இமைக்காமல் அப்பெருமானைப் பார்த்தேன். என்ன தேசு! என்ன தேசு! அக்கினிப் பிழம்பு போலத் தோன்றினான். சிவபெருமானுடைய அக்கினிக் கண்ணிலிருந்து தோற்றிய ஞானக் கொழுந்து அவன் என்பது நினைவுக்கு வந்தது. இவ்வுலகத்தார் உய்ய வேண்டும் என்று கருதி நம் கண் காணப் பரிவுடன் இங்கே எழுந்தருளி யிருக்கிறான். கருணையையுடைய செஞ்சுடராகிய அக்கினியோ என்று சற்றே நின்று யோசித்தேன்.’
“ஆம், அவன் திருமேனி செங்கனலைப் போலச் சிவப்பாக இருக்குமென்றுதான் சொல்கிறார்கள்.”
“மற்றொரு விதத்தில் அவன் கதிரவனைப் போலக் காட்சி அளித்தான். புற இருளைப் போக்கும் வான சூரியனைப் போல அக இருளைப் போக்கும் ஞான சூரியனாக அவன் இலங்குகிறான். இருளின் கூறு சிறிதளவும் அவனை அணுகாது.
“பெரியவர்கள் அவனை ஆயிரங்கோடி சூரியர் ஒன்றாக இருந்தாற் போன்ற உருவுடையவன் என்றுதான் புகழ்கிறார்கள்.”
சூரியன் உச்சிவானத்தில் இருக்கும்போதே நம்மால்
பார்க்க முடியவில்லையே! இவனோ நாம் கண் கொண்டு பார்க்கும்படி எழுந்தருளியிருக்கிறான். எத்தனை கூட்டம் இருந்தாலும் அவனுடைய வடிவம் மற்றவர்களினின்றும் நன்றாக எடுத்துக் காட்டுகிறது. மேகக் கூட்டத்தினிடையே மின்னலைப் போல அவன் திருவுருவம் கண்ணைப் பறித்தது.”
“மின்னலையும் கதிரவனையும் சொல்கிறாயே! அவை வானத்தில் இருப்பவை அல்லவா? அப்பெருமான் நாம் எப்போது போய்க் கண்டாலும் காணும்படி எளியனாக இருக்கிறானே!”
“அதுவும் உண்மைதான். பவளம் போல என்று சொல்லலாம் அல்லவா? பவளந் திரண்ட கோல மென்றே சொல்லவேண்டும். ‘பவளத்தன்ன மேனி’ என்று பழைய பாடலில் இருக்கிறதே!”
“சிவபெருமானே பவளக்குன்றம் போல இருப்பவர்; அவருடைய திருமகன்தானே?”
“அப்படியானால் முருகனைப் பவளத்தின் குழவி என்று சொல்லலாம் போல் இருக்கிறது. சில சமயங்களில் அவன் திருமேனி பொற் சோதியுடன் இலங்குகிறது. சிந்துர வண்ணமும் பொன்னும் இணைந்த ஓருருவம் அது. சிவப்பாலே சிந்துரமும் தேசினாலே பொன்னும் இணைந்த பேரழகு அது!”
“பவளம், பொன் என்று மக்கள் பாராட்டும் பொருள்களை யெல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டாயே! இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது?’
“அவனுடைய திருவுருவம் உவமைக்கு அப்பாற்பட்டது; ஈடும் எடுப்பும் அற்றது. நாம் நம்முடைய அறியாமையினால் நமக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் சொல்லி வைக் கிறோம். மாணிக்கம் போல அவனுடைய ஒவ்வோரங்கமும் சோதியும் செம்மையும் உடையதாக விளங்குகிறது; தூமணித்திரள் என்று சொல்லலாமோ என்று ஓர் எண்ணம் திக்கிறது: ஆனால் யாவும் அவனுடைய திருமேனிக்கு ஒப்பு ஆவதில்லை. இத்தனை சொல்லியும் சொன்னதாகவே இல்லை.”
“நீ சொல்லியவை எல்லாமே ஒப்புப் பொருள் அல்ல வென்றால் அவனை எப்படித்தான் சொல்வது?”
“அழகே அவன் வடிவம். உலகத்தில் அழகுள்ள பொருள்கள் பல உண்டு; ஆனாலும் அவன் அழகைப் பார்த்த கண்களுக்கு வேறு ஒன்றும் அழகாகத் தோன்றாது. இத் திருமேனி அழகை உடையது என்று சொல்வது கூடப் பிழை; அவன் திருமேனி வேறு, அழகு வேறு என்பது இல்லை. அழகே வடிவெடுத்திருக்கிறது. அழகா? அழகுள்ளே சிறந்த அழகரசு என்று ஒன்று இருந்தால் அதற்கு இதுதான் வடிவம் என்று சொல்லவேண்டும்.”
பரிந்து செஞ் சுடரோ! பரிதியோ! மின்னோ!
பவளத்தின் குழவியோ! பசும்பொன்
சொரிந்த சிந்துரமோ! தூமணித் திரளோ!
சுந்தரத் தரசு இது என்ன.
“நீ பார்த்தவன் முருகனா? வேறு தேவனா?”
“நன்றாகச் சொன்னாய்! எனக்கு அவனை அடையாளம் தெரியாதா? வரிந்து கட்டிய வில்லைக் கையில் ஏந்திக் கொண்டு நிற்கிறான் அவன். பகைவருக்கு வெம்மையைத் தரும் வெஞ்சிலை அது. வேல் எடுத்த கையிலே வில்லையும் எடுப்பவன் என்பது எனக்குத் தெரியும்.”
‘ஆம், ஆம்; ‘வானோர் வணங்கு வில் தானைத் தலைவ’ என்று நக்கீரரும் பாடியிருக்கிறார். திருவிடைக்கழியில்தானே அந்தப் பெருமகனைத் தரிசித்தாய்?
“ஆம்; வேதமும் சாத்திரங்களும் தெரிந்த வைதிகர் களாகிய அந்தணர் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா மர்த்தின் நிழலில் அவன் நின்றிருந்தான். வெஞ்சிலைக்கை மைந்தனாகிய முருகன் அவன் என்பதை நன்கு அறிந்தேன்.”
“அவனுடைய காட்சியைக் கண்டதால் விளைந்த இன்பம் அளவற்றதாக இருக்கும்.”
“அது உண்மைதான். ஆனால் அதற்குமேல் எனக்கு ஒரு கவலை வந்துவிட்டது. இவ்வளவு ஒளியும் அழகும் உடைய தெய்வத் திருமேனியைப் பெற்ற மைந்தனிடம் மனம் போக்கி மையலாலே வாடுகிறாளே, இந்தப் பைத்தியக்காரப் பெண்! இவளை நினைத்தால் என் வயிறு பகீர் என்கிறது. அவன் அருள் கிடைக்குமா, கிடைக்காதா என்று ஐயுற்றுத் தடுமாறுகிறாள் இவள். இவள் எங்கே? அவன் எங்கே? இவள் ஐயுறும் திறத்தைப் போலப் பேதைமை வேறு இல்லை. இதில் என்ன ஐயம் இருக்கிறது?”
“அவனுடைய திருமேனி எழிலுக்கு என்ன உவமை கூறலாம் என்பதில் தான் ஐயம் உண்டே ஒழிய, இவளுக்கு அவன் மணவாளன் ஆவானா என்பதில் உனக்கு ஐயம் இல்லை போலிருக்கிறது.”
“நன்றாகச் சொன்னாய்! உவமை காண இயலாத அந்தச் சுடருருவன் மானிட மகளுக்குரியவனாக ஆவான் என்ற நினைப்பே தவறு. இதை அறியாமல் இவள் கிடந்து தடுமாறுகிறாள். என்ன பேதைமை!”
தாயின் கூற்றாகச் சேந்தனார் பாடுகிறார்;
பரிந்தசெஞ் சுடரோ! பரிதியோ! மின்னோ!
பவளத்தின் குழவியோ! பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ! தூமணித் திரளோ!
சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நிழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண் டையுறும் வகையே!
(இரங்கி வந்த சிவந்த கனலோ! கதிரவனோ! மின்னலோ! பவளத்தின் குழந்தையோ! பசிய பொன்னைச் சொரியும் சிந்துரமோ! தூய மாணிக்கத்திரளோ! அழகின் அரசு இது என்று சொல்லும்படி, வேதம் முதலியவற்றை ஆராய்ந்து அறிந்த வைதிக அந்தணர் வாழ்கின்ற திருவிடைக்கழியில் அழகிய குராமரத்தின் நிழலின் கீழ் நின்ற, இறுகக் கட்டிய வெவ்விய வில்லை ஏந்திய கையையுடைய மைந்தனாகிய முருகனிடம் அழகிய சொல்லையுடைய பெண் காதல் கொண்டு, அருள்வானோ மாட்டானோ என்று ஐயம் அடையும் திறம் இருந்தவாறு என்னே!
பரிந்த – இரங்கிய. பரிதி – சூரியன். சிந்துரம் – குங்குமம்; செவ்வண்ணம். மணி – மாணிக்கம். சுந்தரத்து அரசு இது அழகுக்கு அரசாக உள்ள இவ் வடிவம். அதுவோ, இதுவோ, அன்று, அரசு இது என்று சொல்லும்படி என்ன; சுந்தரத்து அரசு இது சுடர் முதலியனவோ என்று கூட்டியும் பொருள் கொள்ளலாம். என்ன. என்று கண்டார் கூற. தெரிந்த- ஆராய்ந்த. வரிந்த கட்டிய வெம்சிலை – பகைவருக்கு வெம்மையாகிய வில், மைந்தன். வலிமையையுடையவன். அஞ்சொல் – அழகிய சொல்லை உடையவள்; அன்மொழித்தொகை. மையல் – காம மயக்கம். மைந்தனை: உருபு மயக்கம். ஐயுறுதல் – அருள்வானோ அருளானோ என்று ஐயம் கொள்ளுதல், வகையே வகை இருந்தவாறு என்ன பேதைமை!)
இது திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் ஏழாவது பாடல்.



