சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

மேகலை கவர்பவன்

திருவிடைக்கழி முருகனிடம் காதல் கொண்ட இள நங்கையின் நிலை பார்க்கப் பார்க்க இரங்கத் தக்கதாக ஆகிவிட்டது. எல்லாரையும் போலச் சிரித்து விளையாட வேண்டும் என்று அவள் முயன்றாலும் அவளால் முடியவில்லை. அவள் உடம்பே அவள் வசம் இருக்கவில்லை. காலை எடுத்து வைத்து நடந்தால் அது எங்கேயோ போகிறது. முதல் எட்டு எடுத்து வைத்தால் அடுத்த எட்டு அதைத் தொடர வேண்டாமோ? அந்தக் கால் தொடர்வதில்லை. அப்போது அந்த இளநங்கை தடுமாறுவதைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது; மற்றொரு பக்கம் இரக்கம் உண்டாகிறது.

இன்று எப்படியாவது வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று துணிந்தாள் அவள். அவளுக்கு வீட்டு வேலை செய்யக்கூடாது என்ற எண்ணமா? அப்படி ஏதும் இல்லை. அவள் உள்ளம் அவளிடம் இருந்தால்தானே, இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்தித்து நின்று நிதானித்துச் செய்ய முடியும்? அதைத்தான் திருவிடைக்கழி முருகன் பறித் துக்கொண்டானே!

அவள் வெளியே சென்று நீர் கொண்டு வரலாம் என்று இடுப்பிலே குடத்தை எடுத்துக்கொண்டு போனாள். அவள் தாய் அவள் நிலையை நன்கு உணர்ந்திருந்தாள்.எப்போதும் வாட்டத்துடன் உட்கார்ந்திருப்பதை விட, இப்படி ஏதாவது வேலையில் ஈடுபட்டால் கொஞ்சம் சுறுசுறுப்பு வரலாம், அந்த வாட்டம் ஒழியலாம் என்பது அவள் எண்ணம்.

குடத்துடன் குளத்துக்குப் போனாள். நீர் நிரப்பினாள். எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் உடல் முன்னையினும் மிகவும் இளைத்துவிட்டது. நடக்கும்போது அந்த மெலிவு நன்றாகத் தெரிகிறது. அதை ஊரார்கள் கவனிக்கிறார்கள்; ஏதேதோ பேசுகிறார்கள். அவள் காதில் அவை விழுந்தால்தானே? அவள் உள்ளந்தான் திருவிடைக்கழியில் இருக்கிறதே! தான் போகும் வழியின் இருமருங்கும் உள்ள வர்களை அவள் பார்க்கவில்லை. அவள் சிந்தனையோடு நடந்தாள்.

அப்போது அவள் இடையில் அணிந்த மேகலை எங்கோ நழுவிவிட்டது. அதை அவள் உணரவில்லை. எப்போதோ நழுவி விழுந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் இப்படித் தளர்ந்து நடந்து வரவில்லை. இன்று நடந்தாள்.அது உடம்பு மெலிவினால் நழுவி விழுந்தது.

வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் நங்கை. அவள் தாய் அவளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு நின்றாள். அவளைக் கண்டதும் மேலும் கீழும் பார்த்தாள். மேகலையைக் காண வில்லை.

“எங்கே, இடையில் மேகலையைக் காணவில்லையே!” என்றாள் அன்னை.

அப்போதுதான் அந்த நங்கை அதை உணர்ந்தாள். வழியிலே எங்கேயோ நழுவி யிருக்க வேண்டும் என்று எண்ணினாள். அதற்குள் அவள் தாய் ஆளைவிட்டுத் தேடச் செய்தாள். மேகலையை இழந்து மெலிந்த நங்கை மீட்டும் வாட்ட முற்றவளாய் உட்கார்ந்தாள்.

அந்தச் சமயம் பார்த்து அவள் அன்னையின் தோழி அங்கே வந்து சேர்ந்தாள். சிறிய ஊரில் ஒரு வீட்டில் எது நிகழ்ந்தாலும் ஊர் முழுவதும் ஒரு கணத்தில் பரவி விடும். மேகலை கெட்டுப்போன துக்கத்தை விசாரிக்க வந்திருந்தாள் அந்தப் பெண்மணி!

“உன் பெண்ணின் மேகலையைக் காணோம் என்றார்களே!”

அதைக் கேட்ட தாய்க்குக் கோபமும் துயரமும் கலந்து பொங்கின. தன் மகளுக்கு இந்த நிலை வருவதற்குக் காரணமான குமரன் மேல் கோபம் வந்தது. இப்படி நாலு பேர் கேட்கும்படி வந்துவிட்டதே என்று துக்கம் மூண்டது.

தோழி கேட்ட கேள்விக்கு அவள் ஆத்திரத்தோடு விடை கூறினாள். “ஆம்; அது திருட்டுப் போயிற்று!”

“என்ன,திருட்டுப் போயிற்றா? திருடினவனைக் கண்டு பிடிக்கவில்லையா?”

“திருடினவன் இன்னான் என்று தெரியும்.”

“தெரியுமா? தெரிந்துமா சும்மா இருக்கிறாய்?”

“என்ன செய்யச் சொல்லுகிறாய்?”

“திருடனை என்ன செய்வது? தண்டித்துக் களவு போன உடைமையை மீட்டும் பெறுவது.”

‘அந்தத் திருடனைத் தண்டிப்பது நீ சொல்வது போல அத்தனை எளிதன்று.’

“அந்தத் திருடன் இன்னும் பல இடங்களில் திருடிப் பழக்கமானவனோ?”

“இல்லை;இல்லை. அவனைச் சுற்றி இவளைப் போல எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவ்வளவு பேரும் நிறைய ஆபரணங்களை அணிந்திருப்பவர்கள். சிறந்த வேலைப் பாடுகளையுடைய பவளத்தாலாகிய அணிகளையும் வேறு அணிகலன்களையும் அணிந்திருப்பார்கள். இளைய பெண்கள். அவர்களைப் பார்த்தால் கல்யாணப் பெண்களைப் போலவே காட்சி அளிப்பார்கள்.”

“அவ்வளவு பேரிடமும் அவன் ஒழுங்காக நடந்து கொள்கிறானா?”

அவர்கள் எல்லாம் அவனைச் சூழ்ந்துகொண்டு இருப்பார்கள். அவர்கள் நகைகளில் ஒன்றுகூடக் களவு போவதில்லை.

கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் சூழ்.

[சிறந்த வேலைப்பாடுகளையுடைய பவள அணிகளையும் இளமையையும் மணக் கோலத்தையும் உடைய பெண்களின் கூட்டங்கள் சுற்றியிருக்கும். கோ – மேன்மை, சிறப்பு. பவளம்: ஆகுபெயர்: அதனால் ஆன அணிகளுக்கு ஆயிற்று. குழ-இளமை.]

“அவனுக்கு அடையாளம் ஏதாவது உண்டா?”

“எல்லாரும் எளிதில் காணும் அடையாளம் இருக்கிறது.”

”என்ன அது?”

“கோழியை வெற்றிக்கு அறிகுறியான கொடியாகப் பிடித்துக்கொண்டிருப்பான். நெடுந்தூரத்தில் அவன் வரும் போதே அவனுடைய கொடி, இன்னான் வருகிறான் என்பதைப் புலப்படுத்தும்.

கோழி வெல் கொடியோன்.

“இத்கையவன் எப்படித் திருட்டுத் தொழிலை மேற் கொண்டான்?”

“அவனுக்குத் தொழில் திருடுவது அன்று; காவல் காப்பதுவே தொழில்.”

“நீ சொல்வது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? வேலியே பயிரை மேயலாமா என்று பழமொழி கூறுவார்கள். நீ சொல்வதைப் பார்த்தால் அப்படியும் முரணாண ஒரு செய்கை இருக்கிறதென்று தெரிகிறதே! அவன் காவல் தொழிலிலுள்ளவன் என்று எப்படித் தெரியும்?”

“உலகில் யாவரும் அறிவர். என்னுடைய காவலுக்கு உட்படுவது சிறந்த சேனையாகிய அமரர் படை என்று சொல்லி அதைக் காப்பவன். அதனால் அவனுக்குத் தேவ சேனாபதி என்ற பெயரும் அமைந்திருக்கிறது.”

காவல்நற் சேனை என்னக் காப்பவன்.

[நற்சேனை – நல்ல சேனையாகிய அமரர் படை.]

“அவன் அணிகலன்களை அணிந்த பெண்கள் சூழ இருப் பவன் என்கிறாய்; இவன் மேகலையைக் கவர்ந்தான் என்கிறாய். அவன் காவல் தொழில் பூண்டவன் என்கிறாய்; இங்கே கர வுத்தொழில் செய்தான் என்கிறாய். முரணான செய்திகளாக இருக்கின்றனவே!”

”ஆம்; அவனைப்பற்றி நான் கேள்வியுற்றதும் இப்போது நிகழ்வதும் ஒன்றுக்கொன்று விரோதந்தான்.”

“அவனுடைய இயற்பெயர் என்ன?”

“சுப்பிரமணியன்.”

“அவன் ஊர்?”

‘திருவிடைக்கழி.’

“அவன் அந்தஸ்து?”

“தேவர்களுக்கெல்லாம் தலைவன், மயிலின்மேல் ஊர்ந்து வருபவன்.”

“என்னவோ அம்மா, நீ சொல்வது வரவரப் புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது; அணிகலன்களை அணிந்த பெண்கள் விரும்பிச் சூழ நிற்பவன், தேவர் படையைக் காப்பவன், தேவருக்குத் தலைவன் இப்படிச் செய்கிறான் என்றால் நம்பவே முடியவில்லை.”

“பிறருக்கெல்லாம் அவன் அப்படி இருந்தால் என் பொன்னான மகளளவில் அவளுடைய மேகலையைக் கவர் கிறவனாக இருக்கிறான். இந்த உண்மையை மறைப்பதில் பயன் இல்லை.”

தாய் சொல்வதையே பின் வரும் பாடல் சொல்கிறது.

கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன்,
காவல்நற் சேனை என்னக்காப் பவன்என்
பொன்னைமே கலைகவர் வானே!
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவி நற் பீலி மாமயில் ஊரும்
சுப்பிர மண்ணியன் தானே.

[சிறந்த வேலைப்பாட்டை உடைய பவளத்தாற் செய்த அணிகளை யுடைய இளைய மணக் கோலத்தை யுடைய பெண்களின் கூட்டங்கள் சூழும், கோழியாகிய வெல்லும் கொடியை உடையவன், தன் காவலுக்குட்படுவது அமரர்தம் நல்ல சேனை என்று காப்பவன், தேவர்களின் நல்ல தலைவன், திருவிடைக்கழியில் அழகிய குராமரத்தின் நிழலில் நின்ற, மெல்லிய. இறகையும் அழகிய பீலியையும் உடைய பெரிய மயில் மேல் ஊர்ந்து வரும் சுப்பிர மணியன், என் திருமகள் போன்ற மகளினிடமிருந்து மேகலையைக் கவர்வான்.

கோ – சிறப்பு. பொன் – திருமகளைப் போன்றவள். பொன்னை – பொன்னிடமிருந்து: உருபுமயக்கம் தேவு – தேவர்கள். தூவி – மெல்லிய இறகு. பீலி – மயிலின் சிறகில் கண்போலத் தோன்றும் பிஞ்சம். ஊரும் – ஏறிவரும். சுப்பிரமணியன் என்பது சுப்பிர மண்ணியன் என விரிந்தது; செய்யுள்விகாரம்.]

இது சேந்தனார் பாடிய பதிகத்தின் மூன்றாவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !