
சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்
சேந்தன் காதல்
தேவர்கள் புடைசூழ முருகன் திருவீதியில் உலா வந்தான். இசைக் கருவிகள் முழங்க, அந்தணர் மறை ஓத, அரம்பையர் வாழ்த்தெடுப்ப, அன்பர்கள் புகழ் பாட ஒளி மயமான சூழலுக்கு நடுவே தன்னுடைய அருட்சோதியைப் பரப்பிக் கொண்டு பச்சைப் பசு மயில்மேல் அவன் பவனி வந்தான். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத பேரழகன், என்றும் குன்றாத சீரிளமையோன் உலா வந்தால் அன்பர்கள் சும்மா இருப்பார்களா? அவனுடைய திருமேனியழகில் சொக்கிப் போய்த் தம்மை மறந்து நின்றனர். விண்ணவர் வியந்து நின்றனர். மகளிர் அந்த அழகுக் கடலுக்குக் கரை காணாமல் தம் கண்களாகிய மீன்களை அதில் உலாவ விட்டனர்.
அவர்களுள் ஓர் இளம் பெண் ஆறுமுகத்தையனுடைய பேரழகிலே உள்ளத்தைப் பறி கொடுத்தாள். பெண் பிறவி யெடுத்த பேறாக அவனையே காதலனாக உள்ளத்தில் வரித்துக் கொண்டாள். அவன் திருவடி முதல் திருமுடி வரையில் கண் களால் ஊடுருவிப் பார்த்தாள். அவன் தனக்காகவே திருவீதியில் உலா வந்ததாக எண்ணிப் பூரித்தாள். கள் குடித்தவள் போல் ஆடினாள், பாடினாள்; மனத்தில் ஒருவகை நிறைவை எய்தினாள். ‘உலகத்தில் ஆண்களே இல்லை; இவன் ஒருவன்தான் ஆண். இவனை நோக்கமற்ற ஆண்கள் யாவருமே பெண்கள்தாம். இந்த ஆணழகனை, இந்த நம்பியை, இந்தப் புருஷோத்தமனைக் காதலனாக அடைவதுதான் பெண்ணாய்ப் பிறந்த பிறவிக்குப் பயன்’ என்று துணிவு பூண்டாள். அவள் கண்களில் ஓர் ஒளி;அப்பால் இன்பக் கண்ணீர். புறத்தே கண்ட முருகன் காட்சியை அகத்தேயும் கண்டு இன்புற்றாள். கண்மூடி மோன யோகியைப் போல நின்றிருந்த அப் பேதை கண்ணைத் திறந்து பார்த்தாள். முருகன் நெடுந்தூரம் சென்றுவிட்டான்.
சோழ நாட்டில் உள்ள திருவிடைக்கழி யென்னும் திருத் தலத்துக்கு அந்தப் பெண் வந்திருந்தாள். வந்தபோது நிகழ்ந்தது இது. உணர்வு வந்த நங்கைக்கு முருகனைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற அவா எழுந்தது. எவ்வளவு தூரந்தான் அவள் போக முடியும்? அவளுடன் வந்த தோழிமார்கள் அவளை அழைத்தார்கள். கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று பிரமை பிடித்தவளைப் போல நிற்பதைக் கண்டு அவர்களுக்கு வியப்பாக இருந்தது; அச்சமும் உண்டாயிற்று. ‘இவளைக் கூட்டிக்கொண்டு போய் இவள் வீட்டில் விட்டுவிடலாம். இனியும் இங்கே நிற்பது கூடாது’ என்று எண்ணிய அவர்கள் அந்த அழகியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தம் ஊரை அடைந் தார்கள். அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவளை விட்டு விட்டு அவளுடைய தாயிடம், “உங்கள் பெண்ணுக்கு ஏதோ உடம்பு சரியில்லைபோல் இருக்கிறது” என்று தனியே சொல்லிப் போய்விட்டார்கள்.
வீட்டுக்கு வந்தவள் திருவிடைக்கழியிலே கண்ட காட்சியிலே உள்ளத்தை நிறுத்தி வேறு ஒன்றும் தோன்றாமல் இருந்தாள். வழக்கம் போல் பேசுவதும் விளையாடுவதும் தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்வதும் ஆகியவற்றை இப்போது அவள் மறந்தாள். எப்போதும் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். எப்போதும் மான் போலத் துள்ளி விளையாடும் தன் மகள் இவ்வாறு இருப்பதை உணர்ந்த தாய்க்கு, ஏன் இப்படி இருக்கிறாள் என்ற ஆராய்ச்சி பிறந்தது. தானாக உய்த்துணர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தாள் : தன் பெண்ணின் செயல்களை உற்றுக் கவனிக்கலானாள்.
இளநங்கை வரவர மெலிவை அடைந்தாள். இறுக இறுகப் போட்டிருந்த கைவளை நெகிழ்ந்தது. அவளுக்கு விருப்பமான உணவுகளைக் கொடுத்துப் பார்த்தாள் அன்னை. அவள் அவற்றை நாடவில்லை. நல்ல மணமுடைய மலரானால் குழல் நிறையச் சூட்டிக் கொள்ளும் வழக்கம் உடையவள் அந்தப் பெண். இப்போது மலரைக் கண்டாலே அருவருக் கிறாள். அயல்வீட்டுப் பெண், எதிர் வீட்டுத் தோழி, அடுத்த தெரு நங்கை ஆகியவர்களுடன் ஓடியும் ஆடியும் கூடியும் குதித்தும் விளையாடுவாள்: இப்போது நோய் வந்தவளைப் போலச் சும்மா உட்கார்ந்திருப்பதும் சோர்ந்து சோர்ந்து படுப்பதுமாக இருந்தாள்.
தாய்க்கு அவளிடம் உண்டான மாறுபாடுகள் தெரிந்தன. ஆனால் காரணம் இன்னதென்று தெரியவில்லை. அவளுக்கு உடல் நோயா? உள்ளநோயா?- தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஒருநாள் அன்னைக்கு உண்டான கவலை கரையிறந்து சென்றது. ‘வளரும் குழந்தை, வாழுங் குழந்தை இப்படி இருக்கலாமோ?’ என்று அங்கலாய்த்தாள். அவளிடமே கேட்டு விடுவதென்று தீர்மானித்தாள். அவளை அணுகி மெல்ல அவள் தலையைக் கோதினாள்; உடம்பை வருடினாள். “ஐயோ! உடம்பு எவ்வளவு இளைத்துப் போய்விட்டது! ஏன் அம்மா, இப்படிச் சோர்ந்து சோர்ந்து கிடக்கிறாய்? உன் உடம்புக்கு என்ன?” என்று கேட்டாள்.
“என் உடம்புக்கு ஒன்றும் இல்லை.”
“அப்படியானால் என் கண் காணுவது பொய்யா? என் கண்தான் சரியாகப் பார்க்கவில்லை யென்று வைத்துக் கொண்டாலும் ஊரார் கண்கள் கூடவா பொய் சொல்லும்?”
“ஊராரா? அவர்கள் எங்கே வந்தார்கள்?”
“உன்னைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் என்னை உன் பெண் ஏன் இப்படி இளைத்திருக்கிறாள்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு விடை சொல்ல முடியாமல் திணறுகிறேன். உனக்கு என்ன நோய் வந்திருக்கிறதென்று எனக்கே தெரிய வில்லையே! அவர்களுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்?”
“என் உடம்பைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?”
“அவர்களும் உன்னிடம் அன்புடையவர்கள்; அதனால் கேட்கிறார்கள். அவர்கள் கூறுவது கிடக்கட்டும். இப்போது நான் கேட்கிறேன்; எனக்குச் சொல்: ஏன் உன் உடம்பு இப்படி இளைத்துப் போகிறது?”
அந்தப் பெண் அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள்; “நீ என் உடம்பை மட்டுந்தானே பார்க்கிறாய்?”
“பின் எதைப் பார்க்கவேண்டும் என்கிறாய்?”
“என்னுடைய மனமும் இளைத்திருப்பதை நீ அறிவாயா?’
“அதென்ன புதுமை?”
“புதுமை ஒன்றும் இல்லை; இயல்புதான். என் உள்ளம் இளைத்தது; அதனால் என் உடலும் இளைத்தது.”
“உள்ளம் என் இளைக்கவேண்டும்?”
‘உள்ளத்தில் மயக்கம், மால், உண்டாகி யிருக்கிறது. அது பரவி யிருப்பதால் உள்ளம் இளைத்து வருகிறது.’
”மாலா? அது எப்படி வந்தது?”
“அதை ஒருவன் தந்தான்.”
“ஒருவனா? அவன் யார்?”
“அவன் ஒன்றைத் தந்து ஒன்றை வவ்விக்கொண்டு போனான்.”
“நீ பேசுவது வியப்பினும் வியப்பாக இருக்கிறதே! சற்றே விளக்கமாகச் சொல்.”
“அவன் மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான்.”
“மாலுக்கும் சங்கத்துக்கும் பிரிவு இல்லையே! நீ சொல்வது மாறாக இருக்கிறதே! மாலைக் கொடுத்துச் சங்கை வவ்வுவதாவது?”
என் கைவளைகளைச் சொல்கிறேன். என் உள்ளத்தே காம மயக்கத்தை வைத்துவிட்டு என் கைவளையைக் கவர்ந்து கொண்டான்.”
“யார் அந்தக் கள்வன்?”
“அவன் என் அளவிலே கள்வனே யன்றி, சிறந்த குடியிற் பிறந்தவனே.”
“யார் அவன்?”
“மலைமகளுக்குப் பிள்ளை.”
“மலையிலுள்ள மகளென்றால் குறத்தியா? என்ன சாதி?”
“அவன் பார்வதி குமரன்.’
“அவனுக்கு என்ன வேலை?”
“அவன் அரசன்; குடிமன்னன்; மன்னாதி மன்னன்; சக்கரவர்த்தி.”
“எந்த நாட்டுக்குச் சக்கரவர்த்தி?’
“தேவலோகத்துக்கு நாயகன் அவன்; மேலே உள்ள விண்ணில் உலவும் தேவர் குலம் முழுவதையும் அடிமை யாகக் கொண்டு ஆட்சி செலுத்தும் மன்னன் அவன்.”
“அவன் வயசு?”
“அவன் கட்டிளங்காளை; குமரவேள்.”
“இன்னும் திருமணம் ஆகவில்லையோ?”
அவனுக்கு இரு மனைவியர் உண்டு. இருவருக்குள் உலகமெல்லாம் அறிந்த பெருமையை உடையவள் அந்த வள்ளி.
“அவனா உன் உள்ளத்தில் காதலை உண்டாக்கினவன்? ஆம்; அவன்தான் என் காதலன்.”
“அடி பைத்தியக்காரப் பெண்ணே! நாம் இங்கே மருத நிலத்திலே வாழ்கிறவர்கள். யாரோ மலைமகள் மதலையாம்; தேவலோகத்து அரசனாம்; தெய்வப் பெண்ணையல்லவா அவன் மணம் புரிந்துகொண்டிருப்பான்?”
“இல்லை; இல்லை. அவன் இந்த உலகத்திலே பிறந்து வளர்ந்த மானிடப் பெண்ணாகிய வள்ளியை மணந்தவன்; வள்ளிதன் மணாளன்.”
“அவனை நீ எப்படிக் கண்டாய்? தேவலோக மன்னனாகிய அவன் உன் கைச் சங்கம் வவ்வினான் என்றாயே; அது எப்படி நிகழ்ந்தது?”
அவன் தேவர் குலமுழுதாளும் மன்னன் ஆனாலும் உலகம் யாவுமே அவன் அருளாட்சியினால் இயங்குகிறது. அவனுக்கு இந்த உலத்திலும் பல அரண்மனைகள் உண்டு.
‘அரண்மனைகளா? நான் கண்டதில்லையே!’
“திருவிடைக்கழியில் ஓர் அரண்மனை இருக்கிறது.”
“இதோ பக்கத்தில் இருக்கிறதே; இந்தத் திருவிடைக் கழியிலா?”
“ஆமாம்; சேல் மீன்கள் உலாவும் கழனிகளோடு விளங்கும் நிலவளம் மிக்க இதே திருவிடைக்கழிதான்.”
“அங்கே அரண்மனை ஏதும் இருப்பதாகத் தெரிய வில்லையே?”
“கோயிலும் அரண்மனை தானே? கோ என்பது அரசனுக்குப் பெயர்: அவன் இருக்கும் இல் அரண்மனை அல்லவா?”
“அந்தக் கோயிலிலா அவன் இருக்கிறான்?”
“ஆம்; அங்கே ஒரு குரா மரம் இருக்கிறது. அதன் குளிர்ந்த நிழலில் அவன் எழுந்தருளியிருக்கிறான்.”
“அவனுடைய அங்க அடையாளங்களைத் தெரிந்து கொண்டாயா?”
”நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறேன். அவன் தன் திருக்கரத்தில் வேற் படையை ஏந்தியிருக்கிறான். அதனால் அவனை வேலன் என்றும் சொல்வதுண்டு. செக்கச் செவே லென்று இருப்பான். உலகத்தில் சில மக்களைச் சிவப்பாக இருக்கிறார்கள் என்று சொல்வது வெறும் உபசாரம். உண்மையாகவே சிறந்த செந்நிறம் படைத்தவன் என் சேந்தன்.”
”உன் சேந்தனா?”
“ஆம்; சேந்தன் என்றாலே சிவந்த வண்ணமுடையவன் என்று பொருள். அவன் என் மனத்திலும் கொண்டான். ஆகையால் எனக்கு உறவினனாகிவிட்டான். மால் உலாம் மனந்தந்த அவனை என் சேந்தன் என்று சொல்வதில் தவறு என்ன?”
இவ்வாறு தன் மகளோடு உரையாடிய தாய் அவள் வாயிலாக எல்லாவற்றையும் உணர்ந்துகொண்டாள். தேவ லோக நாயகனான முருகன் மேல் காதல் கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்து வியப்பில் மூழ்கினாள். அயல் வீட்டில் இன்னார் இருக்கிறார்கள் என்று கூடத் தெரிந்து கொள்ளாத பேதை அவள். மிகவும் மென்மை யான உடலும் மென்மையான உள்ளமும் படைத்தவள். அவள் இப்படித் தேவர்குல முழுதாளும் குமரவேளைக் கண்டு அவன்பால் காதல் கொண்டாள் என்பதை எண்ண எண்ணத் தாய்க்கு வியப்பு மேன்மேலும் ஓங்கியது.
அந்த அன்னையின் தோழி ஒருத்தி, “உன் மகள் என்ன, ஒரு மாதிரியாக இருக்கிறாளே!” என்று கேட்டாள். உடனே அவள் தன் மகளிடம் அறிந்தவற்றை யெல்லாம் தொகுத்துச் சொல்லலானாள்:
“மால்உலாம் மனம்தந் தென்கையில் சங்கம்
வவ்வினான், மலைமகள் மதலை;
மேல்உலாம் தேவர் குலம்முழு தாளும்
குமரவேள்,வள்ளிதன் மணாளன்,
சேல்உலாம் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேல்உலாம் தடக்கை வேந்தன், என் சேந்தன்“
என்னும் என் மெல்லியல் இவளே!
(மால் -காதல். சங்கம் – வளை. மதலை – பிள்ளை. குரா – ஒருவகை மரம். சேந்தன் – முருகன்: செந்நிறம் உடைமையால் இப் பெயர் வந்தது . மெல்லியல் – மென்மையான இயல்பை உடையவள். நற்றாய் தன் மகள் நிலையைச் சொல்லியது.)
ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பாவில் சேந்தனார் பாடிய பதிகங்களில் ஒன்று முருகனைப் பற்றிக் கூறுவது. அதில் உள்ள முதல் பாட்டு இது.



