
சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்
குறமகள் இறைவன்
தலைவி மடலேறுவேன் என்பதைக் கேட்டுக் கவலை கொண்டிருக்கும் தாய்க்கும் அவள் தோழிக்கும் உரையாடல் தொடர்ந்து நடைபெறுகிறது.
தோழி: திருவிடைக்கழியில் இருக்கும் முருகன் பெருமையை நீ நன்கு அறிவாயா?
தாய்: அறியாமல் என்ன?
தோழி: அவன் இருக்கும் திருப்பதியே மறை மணக்கும் இடமாயிற்றே, இறைவனை யன்றிப் பிறிது பொருள் ஏதும் நன்மை அளிப்பதன்று என்று அவனையே உறுதியாகப் பற்றிய திடத்தைப் பெற்ற அந்தணாளர்கள் இடைவிடாமல் மறையொலியால் அவனை ஏத்தெடுக்கும் இடம் அது.
தாய்: அது எனக்கு நன்றாகத் தெரியும். அதோடு முருகனுடைய பெருமையும் தெரியும். அவன் வீரத்திற் சிறந்தவன்; சிங்கம் போன்றவன்; உலகில் உள்ளவர்கள் தம்முடைய சிற்றறிவுக்கு ஏற்றபடி இரண்டு கண்களும் ஒரு முகமும் பெற்றிருக்கின்றனர். ஞானபண்டித சாமியாகிய அவனோ பன்னிரண்டு கண்களை உடையவனாக விளங்கு கின்றவன்; ஆறுமுகனாகக் காட்சியளிக்கிறான். எங்கே எது நிகழ்ந்தாலும் காணும் ஆற்றல் உடையவன் என்பதை அந்தப் பன்னிரு நயனத்தவன் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவன் அருள் கிடைத்துவிட்டால் கிடைக்கும் இன்பத்துக்கு அளவு இல்லை. அப்போது அவன் அமுதத்தைப் போல இனிப்பான்.
தோழி: அத்தகைய சிறப்பையுடையவனிடமா இவள் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாள்?
தாய்: ஆம்; அவனிடத்திலேதான் இவள் மயங்கியிருக்கிறாள்.
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்களை,மலரும் பன்னிரு நயனத்
தறுமுகத் தமுதினை மருண்டே.
தோழி: இவள் நிலை எங்கே? அவன் நிலை எங்கே? இந்தப் பேதைப் பெண் எட்டாத கனிக்குக் கொட்டாவி விடலாமா?
தாய்: இந்தப் பெண்ணின் துயரத்தை அவன் அறிய மாட்டானா? பன்னிரு நயனமும், ஆறு முகமும் உடைய அவன் அறியாதது ஏதும் இல்லை. அவன் தன் மார்பில் அணிந்த மாலையை இவளுக்கு அளிக்கவேண்டாம். தன் திருமுடியிலே அணிந்திருக்கும் தொங்கலைக் கூடத் தரவேண்டாம். அந்தக் கண்ணியில் உள்ள மலரின் புறவிதழில் இரண்டை எடுத்து இவளுக்கு அனுப்பக் கூடாதா? அதைப் பெற்று இவள் உயிர் தளிர்ப்பாளே! ஊரார் அறிந்து ஏசும்படியாக இவள் மடலேறும் பேச்சை எடுத்ததை அறிந்து, இந்தச் சிறிய கருணையாவது செய்யக்கூடாதா? அதனால் அவனுக்கு என்ன குறை வந்துவிடும்? குடம் குடமாகப் பால் அருளும் வள்ளலை அந்தக் குடத்தைக் கழுவிய நீரையாவது தா என்று கேட்பது போல நான் கேட்கலாமென்று தோன்றுகிறது. அதைக்கூட அவன் தரமாட்டான் போல் இருக்கிறது.
தொடங்கினள் மடல்என் றணிமுடித் தொங்கற்
புறவிதழ் ஆகிலும் அருளான்.
தோழி: புறவிதழாக இருந்தால் என்ன, அகவிதழாக இருந்தால் என்ன? அல்லது மாலையாகவே இருந்தால்தான் என்ன? மலரும் இதழும் மாலையுமா இங்கே குறிக்கோள்? அவன் இவள் காதலை ஏற்றுக் கொண்டான் என்பதற்கு அடையாளந்தானே மாலை? அந்த அடையாளம் எதுவாக இருந்தாலும், முதலில் அவன் இவளை ஏற்றுக்கொள்ளத் திருவுள்ளம் கொள்ள வேண்டுமே! தன்னையே கொடுப்பதற்கு அறிகுறிதானே தாரைக் கொடுத்தல்?
தாய்: அதுவும் உண்மைதான்.
தோழி: அவன். ஏற்றுக்கொள்வதற்குரிய தகுதி இவளுக்கு இருந்தால்தானே மாலையோ மலரோ இதழோ கிடைக்கும்? அவன் இருக்கும் இடம் வைதிகர் வாழும் இடம் என்பது உனக்குத் தெரியும். அவன் சிங்க ஏற்றைப் போன்றவன் என்பதையும் நீ அறிவாய். பேரறிவாளன் என்பதை உலகமே அறியும். அப்படி இருக்க, இந்தப் பேதைப் பெண்ணின் காதலை ஏற்று அவன் மாலையை அனுப்பவில்லை என்று அங்கலாய்க்கிறாயே! இந்தச் சிறு பெண்தான் ஏதோ மயக்கத்தால் சொல்கிறாள் என்றால், அநுபவசாலியாகிய நீயும் இப்படிப் பேசுகிறாயே!
தாய்: நான் வீண் ஆசைப்படவில்லை; அதற்கும் நியா யம் இருக்கிறது. என் மகள் அவனை மணக்கும் தகுதி உடையவள் அல்லள் என்பதை அறிவேன். ஆனால் அவன் தன்னினும் தாழ்ந்த நிலையுள்ளவர்களுக்கும் அருள்புரிபவன்.
தோழி: அருள்புரிவது வேறு; மணம்புரிவது வேறு.
தாய்: மணம் புரிவதையே சொல்கிறேன். வைதிகர் வாழ் இடைக்கழியில் இருப்பவனானாலும் வேடர்கள் வாழும் மலைக்குச் சென்று திருமணம் செய்துகொண்டான்.
தோழி: அவன் தேவேந்திரனுடைய மகளை மணந்தவன் அல்லவா?
தாய்: ஆம்; அவளோடு குறத்தியாகிய வள்ளியையும் திருமணம் செய்துகொண்டான். தேவயானைக்கு எத்தனை உரிமையும் இடமும் உண்டோ அதே உரிமையும் இடமும் பெறும்படியாகக் குறத்தியை மணந்தவன். தேவயானை திறத்தில் மணவாளனாக, தலைவனாக விளங்குவது போலவே, வள்ளி நாயகியின் திறத்திலும் இறைவனாகத் திகழுகிறான்.
தோழி: இந்தக் கதையை நானும் கேட்டிருக்கிறேன்.
தாய் : குறமகளை மணந்துகொண்ட வண்ணம் எப்படித் தெரியுமோ? அவளுடைய தாய் தந்தையர் வந்து வணங்கிக் கேட்டுத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொள்ளவில்லை. அவனே வேடனைப் போலக் கோலம் கொண்டான். வேடனைப் போலவே வேட்டையாடினான். வேடனுக்குரிய மறத் தொழிலைச் செய்தான். யாரும் அறியாமல் வள்ளியை எடுத்துச் சென்றான்.
தோழி : மறத்தொழிலுடையவனாகச் சென்று வள்ளியை மணந்தவன் உன் மகளை ஏன் மணக்கக் கூடாது என்று தானே கேட்கிறாய்?
தாய் : ஆம்; அவன், குறமகளும் தன்பால் இடம் பெறச் சென்று மறத்தொழில் புரிந்தது யாருக்கும் தெரியாமல் நடந்தது என்று சொல்லுவதற்கு இல்லை. ஊரும் உலகமும் அறிந்தது அது. சான்றோரும் நூல்களும் சான்று வரலாறு அது. மறத்தொழில் வார்த்தையை உடைய அவன் என் மகளை எற்றுக்கொள்வது தவறா? வைதிகர் வாழ் இடைக்கழியில் நின்றான் என்பதை மட்டும் எண்ணினால், என் மகள் காதல் பயனற்றது என்று சொல்லிவிடலாம். அவன் குறத்தி திறத்திலும் இறைவன், மறத்தொழில் வார்த்தையும் உடையன் என்பதை எண்ணும்போது தான் அவன் இவளை ஆண்டுகொள்ள நியாயம் உண்டு என்ற நம்பிக்கை உண்டாகிறது.
நற்றாயின் கூற்றாகச் சேந்தனார் திருவிடைக்கழித் திருவிசைப் பாவில் 9-ஆவது பாடலில் இந்தச் செய்திகளைப் புலப்பட வைத்திருக்கிறார்.
தொடங்கினள் மடல்என்று அணிமுடித் தொங்கற்
புறஇதழாகிலும் அருளான்;
இடங்கொளக் குறத்தி நிறத்திலும் இறைவன்;
மறத்தொழில் வார்த்தையும் உடையன்;
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை,மலரும் பன்னிரு
நயனத்து அறுமுகத்து அமுதினை மருண்டே.
[உறுதியையுடைய வைதிகர்கள் வாழும் திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் அழகிய குரா மரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கும் சிங்கம் போன்றவனும் மலர்ந்த பன்னிரண்டு திருவிழிகளையும் ஆறு முகங்களையும் உடைய அமுதம் போன்றவனுமாகிய முருகனைக் கண்டு மயங்கி மடலேறுவேன் என்று பேசத் தொடங்கினாள் என்று அறிந்து, அப்பெருமான் தன் அழகிய திருமுடியில் அணிந்த மாலை யின் மலரில் உள்ள புறவிதழையேனும் அளிக்கவில்லை. தன் இடத் திலே இருக்கும்படிக் குறமகளிடத்திலும் தலைவனாக இருப்பவன்: வேடர்களுக்குரிய மறத்தொழிலுடையவன் என்று பலர் பேசும் வார்த்தைகளையுடையவன்.]



