சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

கால தரிசனம்

முருகன் தன் அன்பர்களுக்கு என்றும் துணையாக நிற்ப வன். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் முன்நின்று காப்பவன். உயிர்களுக்கு வரும் துன்பங்களில் மிகப் பெரிது இறப்பாகிய துன்பம். “காலன் வரும்போது என்ன துன்பம் உண்டாகுமோ?” என்று கதறி அழுத மக்கள் பலர். யமபயம் உண்மையில் ஒருவனுடைய உள்ளத்தில் பதிந்துவிட்டால் அவன் உடனே அந்தப் பயத்தைப் போக்கிக்கொள்ளும் வழி என்னவென்று ஆராய்வான். இறைவனைப் புகல் புகுவது ஒன்றுதான் அதற்குப் பரிகாரம் என்பதை உணர்ந்து பக்தி செய்ய முற்படுவான்.

ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்துன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின் றிலேன்

என்று அருணகிரிநாதர் கூறுகிறார். முருகனை வழிபட்டு அன்பு நெறியில் நிற்பவருக்கு யமபயம் இல்லை என்பதைப் பல இடங்களில் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

காலாயுதக்கொடியோன் அருளாய கவசம் உண்டு என்
பால் ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே

என்று படர்க்கையிலும்,

வாராது அகல் அந்தகா வந்த போதுயிர் வாங்குவனே

கட்டிப் புறப்படடா சக்தி வாள் என்றன் கையதுவே

திண்டாட வெட்டி விழவிடுவேன்

என்று முன்னிலையிலும் வைத்துப் பாடுகின்றார்.

உடம்பு எடுத்த உயிர்கள் இறந்துபடுவது உறுதி. ஆனால் மரணத்தில் இரண்டு விதம் உண்டு. பிறக்கும் பொருட்டு இறப்பது, மீட்டு இங்கு வாராமல் வீட்டின்பத்தை அடைய இறப்பது என்பன அவை. இறைவனுடைய திரு வருள் பெற்று வாழ்பவர்கள் உடம்பை விடும்போது விடுதலை பெற்றவராகி அவனடியை அடைகிறார்கள். மற்றவர்கள் வேறு பிறவியை எடுக்கிறார்கள்.

நல்ல ஆன்மாக்கள் உயிர்விடும்போது அவர்கள் உயிர்களை இறைவனுடைய ஏவலாளர்களாகிய கணங்கள் வந்து அழைத்துச் செல்லும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வுயிர்கள் மரணத்தால் துன்பம் அடையாமல் இன்ப வாழ்வின் தலைவாசல் திறந்தது போன்ற நிலையை அடை வதையே அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு நேர் மாறாக, அருள்பெறா உயிர்களை, மீட்டும் பிறக்க வேண்டி யிருக்கும் ஆன்மாக்களை, கால தூதுவர்கள் அழைத்துச் செல்ல வருவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் மேலும் துன்புறும் நிலையில் உள்ளவை அவ்வுயிர்கள் என்பதையே அது குறிக்கின்றது.

முருகனுடைய திருவருளைப் பெறாதவர்கள் உயிர் விடும் போது காலனுடைய தரிசனத்தைத்தான் பெறுவார்கள். அருள் பெற்றவர்களோ முருகன் தரிசனத்தைப் பெறுவார்கள். காலன் தரிசனமும் வேலன் தரிசனமும் அந்த ஆன்மாக்கள் இந்த உலக வாழ்வில் செய்த செயல்களைப் பொறுத்தே கிடைக்கின்றன.

“முருகனுடைய அடியார்களுக்கு உயிர்விடும் காலையில் கால தரிசனம் இராது” என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அருணகிரிநாதர் திருவாய் மலர்ந்தருளிய திருப்புகழில் ஓரிடத்தில் இதற்கு மாறான பொருள் கொள்ளும் வகையில் ஒரு பகுதி வருகிறது.

“புவிக்குன் பாத மதைநினை பனர்க்கும்
கால தரிசனை புலக்கண்கூடும் அதுதனை
நினையாதே
புரட்டும் பாவ சமயிகள் நெறிக்கண்
பூது படிறரை.”

இந்தப் பாட்டுக்கு, “உலகில் நின் திருவடியை நினைபவருக்கும் காலதரிசனம் கண்ணாகிய புலனில் தோன்றும். அந்த உண்மையை நினையாமல் புரட்டிப் பேசும் பாவிகளாகிய சமயிகளுடைய வழியிலே புகும் வஞ்சகரை” என்று பொருள் கொள்ளலாம்.

“புவிக்கு உன் பாதமதை நினைபவர்க்கும் கால தரிசனை புலக்கண் கூடும்” என்ற பகுதிதான் இங்கே ஆராய்ச்சிக்கு உரியது- புவிக்கு என்பது புவியில் என்னும் பொருள் உடையது; உருபு மயக்கம். பாதமதை – பாதத்தை; அது: பகுதிப் பொருள்விகுதி. ‘உன் திருவடியை நினைப்பவர்களுக்குக் கால தரிசனை கண்ணில் படும்’ என்று பொருள் கொள்ளும்படி இப் பகுதி அமைந்திருக்கிறது. அருணகிரிநாதர் பிற இடங்களில் கூறும் கருத்துக்கு இது மாறுபாடாக இருக்கிறது. அது மட்டும் அன்று; ‘நினைபவர்க்கும் கால தரிசனை கூடும்’ என்பதில் வரும் உம்மைக்கு ஒரு பொருளும் இருப்பதாகத் தோன்றவில்லை. மற்றவர்களுக்குத் தோன்றுவதோடு, அவர்களுக்கும் தோன்றும் என்று கொள்ளலாமா? அது சிறப்பன்று; பொருத்தமாகவும் இல்லை.

இந்த அடி, “உன்னை நினைக்கிற அன்பர்களுக்கும் காலன் தரிசனை கூடுமா? அவர்கள்முன் அவன் தலையை நீட்டுவானா என்று பொருள் பண்ணும்படி இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்போது உம்மைக்குப் பொருள் கிடைக்கும். அது உயர்வு சிறப்பும்மையாகிவிடும்.

“புலக்கண் கூடுமா?” என்று வினாப்பொருள் கிடைத்தால் இந்தப் பகுதி சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமையும். புலக்கண் கூடும்” என்பது சந்தத்தில் அமைந்த மையால், அங்கே வினாவைக் குறிக்கும் இடைச் சொல் இருந்து, போயிருக்க வேண்டும் என்று சொல்ல இயலாது. ஆதலால் பாடபேதம் இருக்கலாம் என்று சொல்வதற்கும் வழியில்லை.

“புலக்கண் கூடும்” என்பதையே வினாவாகக் கொள்ள வழி உண்டா? இதைச் சற்று இங்கே ஆராயலாம்.

நாம் பேசும்போது சில சமங்களில் வினா எழுத்தை உபயோகிக்காமலேயே தொனி வேறுபாட்டால் வினா வென்பதைக் குறிப்பிக்கிறோம். “ராமன் வந்தான்; கண்ணன் வந்தான்; கோபாலன் வந்தான்” என்று வந்தவர்களை ஒருவர் சொல்கிறார். அப்போது “முருகன்?” என்று ஒருவர் கேட்கிறார். முருகன் என்ற சொல்லில் வினாவைக் குறிக்கும் எழுத்து இல்லாவிட்டாலும் பேசுகிறவர்களுடைய குரல் வினாவைப் புலப்படுத்துகிறது.

“பம்பாய் நெடுந்தூரத்தில் இருக்கிறதே. அங்கே போய் நீ வேலை பார்ப்பாய்?” என்று வரும் பேச்சில் ‘வேலை பார்ப்பாயா’ என்ற பொருளில் ‘வேலை பார்ப்பாய்’ என்ற தொடர் வருகிறது. இப்படி வருவதைக் காகு என்றும் காகு சுரம் என்றும் வடமொழியாளர் கூறுவர்.

பெரிய புராணத்தில் ஓரிடத்தைப் பார்க்கலாம். சேக்கிழார் கூறும் அவையடக்கப் பாட்டு. “அருளின் இயல்பால் புரியும் திருத்தொண்டை அறிவதற்கரிய, தெளிவில்லாத நீர் இந்தப் புராணம் செய்யலாகுமா என்று கேட்டால், அச்சம் இல்லாத மெய்யாகிய மொழியை வான் நிழலாகிய அசரீரி கூறிய உண்மையின் வலிமையால் ஆகும் என்று சொல்வோம்” என்கிறார்.

அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும்
தெருள் இல் நீர்இது செப்புதற் காம்எனின்
வெருளில் மெய்ம்மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாம்அன்றே

என்பது பாட்டு. “நீர் இது செப்புதற்கு ஆம்?” எனின், “ஆகும் எனப் புகல்வாம்” என்கிறார். இங்கே,”நீர் செப்பு தற்கு ஆம்” என்பது, “நீர் செப்புதற்கு ஆகுமா?” என்று வினாப் பொருளில் வந்தது. ஆகுமா என்ற கேள்விக்கே பின்பு ஆகும் என்று விடை கூறுகிறார். “உமக்குத் தெளிவில்லையே; செப்புதற்கு ஆகுமா?” என்று கேட்பவர் காரணத்தோடு கேட்க, “என் தெளிவைக் கொண்டு நாள் புகலவில்லை. வான் நிழல் கூறிய பொருளின் ஆற்றலால் செப்பல் ஆகும்” என்று காரணத்தோடு விடை பகர்வதாகப் பாட்டு அமைகிறது. இங்கே, “செப்புதற்கு ஆம்” என்றது காகு தொனி வேறுபாட்டால் வினாப் பொருளைத் தரும் தொடர்.

‘பூவிக்குன் பாதமதைநினை பவர்க்கும்
கால தரிசனை புலக்கண் கூடும்

என்பதையும் காகுவாகக் கொண்டு, “அத்தகைய அன்பர் களுக்கும் காலன் முன் நிற்பானா? கால தரிசனை புலக்கண் கூடுமா?” என்று பொருள் கொண்டால், உம்மைக்கும் பொருள் கிடைக்கிறது; பாட்டுக்கும் பொருத்தமான பொருள் அமைகிறது.

மாகத்தை மூட்டி வரும்நெடுங் கூற்றன் வந்தால்
என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்

என்ற வேண்டுகோளுக்கு இணங்க, தன்னை நினைப்பவர் களுக்குக் கால தரிசனம் கிட்டாமல் மயில் வாகனக் கோல தரிசனம் காட்டும் பிரான் அல்லவா முருகன்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !