சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

இது அழகோ?

தன் மகளைத் தாய் பார்த்தாள். அவள் வாட்டமுற்றுக் கிடந்தாள். மான்குட்டி போலத் துள்ளி விளையாடிச் சிரிப்பும் பாட்டுமாகக் கலகலப்பாக இருக்கும் பெண் அவள். இப்போது ஏக்கமே உருவமாகச் சோர்ந்து கிடக்கிறாள். ஊரெல்லாம் பாராட்டும் குணம் நிறைந்தவள் அவள். அழகுக்குத் தான் குறைவா? அவளுடைய கூந்தல் நீல மணிபோல இருக்கும்; சுருள் சுருளாக இருக்கும். இப்போது அதை வாரிக் கொள்ள நினையாமல் கிடக்கிறாள் அவள். அவள் வாய் கொவ்வைக் கனி போல இருக்கிறது. அவள் என்ன நினைந்து வருந்துகிறாளோ? அவள் படும் இடரைத் தாயினால் நன்கு அறிய முடியாது. ஆனால் அந்தப் பெருமான் அறிய முடி யாதா? இப்படிக் கவனிக்காமலிருப்பது அவனுக்கு அழகா?

அவன் மக்களுடைய இடரைக் கவனிக்காமல் இருப்பவன் அல்லவே! பேசாமல் சுகமாகக் கந்தலோகத்திலே இருந்துவிடலாம் அவன். அப்படி இருந்தால் பலருக்குப் பயன் விளையாமல் போய்விடும். யாவரும் உய்யவேண்டுமானால் அவர்கள் காண அருகில் வந்து வாழவேண்டும். அவன் அப் படிச் செய்கிறான்.

உலகில் உள்ளவர்கள் வாழவேண்டுமானால் அவர்களுக்கு வேண்டிய மழை, காற்று, தீ முதலியன வெல்லாம் வேண்டிய போது வேண்டிய அளவு கிடைக்க வேண்டும். அவற்றை வழங்கும் சக்தி உடையவர்களே தேவர்கள். அதிகாரிகள் மக்களுக்கு நலம் செய்வார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் அரசாங்கத்தில் சம்பளம் கிடைக்கிறது. அந்தச் சம்பளத்தை அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டால் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள்.

அதுபோல இறைவனுடைய அரசாங்கத்தில் அமரர்கள் மக்களுக்கு நலம் செய்யும் அதிகாரிகள். அவர்களுக்கு மறையவர்கள் அக்கினி காரியம் செய்து ஆகுதி கொடுத்து உணவளிக்கிறார்கள். வேள்வித்தீ எழுப்பி நெய்யும் அவியும் சொரிந்து தேவர்களை வழிபட்டு அவர்களைத் திருப்திப்படுத்துகிறார்கள். அவர்கள் செய்யும் வேள்விகளால் தேவர்கள் மகிழ்ந்து உலகம் வாழத் தாம் செய்ய வேண்டியவற்றைச் செய்கிறார்கள்.

வேள்வி செய்யும் அந்தணர்கள் நீர் நாண செய் சொரிந்து தீ வேட்கிறார்கள். அவர் கையும் உடலும் நெய் மணக்கின்றன. அந்த மணத்தை அணிந்த மறையோரை முருகன் காப்பாற்றுகிறான். “அந்தணர் வெறுக்கை” என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. முருகன் தானே இவ்வுலகிற்கு வந்து மூர்த்தீகரித்து ஆலயங்களில் எழுந்தருளியிருக்கிறான். அவனை வணங்கி வேள்வி செய்து வாழ்கிறார்கள் அந்தணர்கள். அவர்கள் வாழ, வேள்வி மல்குகிறது. அதனால் தேவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ, மழை காலத்தில் பெய்கிறது; காற்றுப் பருவத்தில் வீசுகிறது. அதனால் வையத்திலுள்ள மக்கள் வாழ்கிறார்கள்.

இவ்வளவும் ஒன்றை ஒன்று தொடர்ந்து நடைபெறுகின்றன. முருகன் பூவுலகில் திருவிடைக்கழியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பதனால் நெய்மணத்தை அணியும் மறையோர் உய்கிறார்கள்; அவர்களால் ஆகுதி பெறும் வானவர் உய்கிறார்கள்; அவர்களால் வையம் உய்கிறது. அது மட்டோ? அந்தத் தாய் வாழுவதே முருகப்பெருமான் திருவருளால்தானே? தன் மகளைப் புறக்கணித்துவிட்டான் என்பதற்காக உண்மையை மறைத்துப் பேசலாமா? அந்தப் பெருமான் நம் அருகே வந்து எழுந்தருளியிருக்கிறான் என்ற தைரியத் தால் அந்தத் தாய் எத்தனையோ இடர்ப்பாடுகளை வென்றிருக்கிறாள். அதை எளிதில் மறக்கமுடியுமா?

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படும்இடர் குறிக்கொளா தழகோ?
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்யமற்று அடியனேன் வாழத் திணமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற

இவ்வாறெல்லாம் எண்ணுகிறாள் முருகனிடம் காதல் பூண்ட மங்கையின் தாய்.

திருவிடைக்கழியில் குராமரத்தினடியில் எழுந்தருளியிருக்கும் முருகன் தனக்கு வேறு இடம் இல்லாமையினாலா அங்கே வந்திருக்கிறான்? அன்று, அன்று; உலகம் உய்ய வேண்டும் என்று வந்திருக்கிறான்.வந்து கோயில்கொண்ட இடம் தாழ்ந்ததா? உறுதியான, திண்ணமான, மணி மாடங்கள் உள்ள அழகிய ஊர் திருவிடைக்கழி ; மறையோரும் பிறரும் அந்த மாடங்களில் வாழ்கின்றார்கள்; அங்கே தனக்கும் ஓர் இருக்கையைக் கொண்டு உறைகிறான் முருகன்; நல்ல மரநிழல் அடர்ந்து இடத்தில் எழுந்தருளியிருக்கிறான்.

மனிதர்கள் வாழும் இந்த இடத்தில் வந்து தங்கி யிருப்பது, அவனுடைய கருணையினாலே. பெரிய மனிதர்களை உறவாகப் பெற்றவர்கள் தமக்கு ஒரு பெருமை இல்லாவிட்டாலும், அந்த உறவினர்களின் பெருமையை நினைந்து செருக்கடைவது உலக இயல்பு. முருகன் எவ்வளவோ உயர்ந்த உறவினர்களைப் பெற்றவன்; அத்தகையவன் இங்கே வந்து நம்மோடு ஒருவனாக வாழ்கிறான். எவ்வளவு எளிய பண்பு:

அவன் உறவினர்கள் யார் தெரியுமா? கங்காதேவியின் குமரன் அவன்; காங்கேயன் என்பது அவன் பெயர்களில் ஒன்று. அவனைத் தன் அலைக்கரங்களால் தாங்கிப் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டவள் கங்கை. தூய்மைக்கு உறைவிடம், கங்கையின் நீர் பளிங்குபோலத் தூயது; கூட்டமாகப் பளிங்கு கிடந்தால் எப்படி இருக்கும், அப்படி உள்ளது. அத்தகைய கங்கை யன்னையின் புதல்வன் முருகன்.

எப்போதும் பெருங் கூட்டத்தின் நடுவே இருப்பவன் கணபதி. எத்தகைய தடைகளையும் போக்கி எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகச் செய்பவன். அவனை வணங்காதவர் யாரும் இல்லை. அத்தகைய பெருமானுக்குப் பின் வந்த தம்பி இப்பெருமான்.

இவ்வளவு சிறந்த அண்ணல், உலகத்தினர் வாழ உலகில் வந்து இக்கோயிலில் வாழ்கிறான். அவன் கருணையை அளவிட முடியுமா? மறையோர் உய்ய,வானவர் உய்ய, வையம் உய்ய – ஏன், இந்தத் தாயே வாழ – வந்து எழுந்தருளிய வள்ளல், இந்த மடந்தைக்கு உண்டான இடரை எண்ணாமல் இருக்கலாமா? “எங்கோ இருப்பவன்; ஆதலால் தெரியாது என்று சொல்ல வகையில்லை.அவன் எங்கே யிருப்பினும் அறியாதது ஒன்றும் இல்லை; இங்கே அருகிலேயே எழுந் தருளியிருக்கிறான்.

தன்னால் யாவரும் வாழ்வு பெறவேண்டும் என்று இறங்கி வந்தவன் ஓர் இளம்பெண் வாழ்வு பெறாமல் ஏங்கு கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? இது அவனுக்கு அழகா?-” தாயின் சிந்தனை இவ்வாறெல்லாம் படர்ந்தது.

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடத்தை

படும்இடர் குறிக்கொளா தழகோ?
மணம் அணி மறையோர் வானவர் வையம்
உய்யமற்று அடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கண்மணி பொரு நீர்க் கங்கைதன் சிறுவன்,
கணபதி பின் இளங் கிளையே.

[நெய்மணத்தைக்கொண்ட மறையோரும் வானவரும் உலகில் உள்ளவரும் உயிர் பிழைக்க, அடியேன் வாழ, உறுதியான மணிகளாலான மாடங்களை யுடைய திருவிடைக்கழியில், அழகிய குரா மரத்தின் நிழலின்கீழ் எழுந்தருளிய, கூட்டமான பளிங்கை ஒத்த நீரையுடைய கங்கையின் புதல்வன், கணபதிக்குப் பின் வந்த தம்பி, குணத்தையும், நீலமணிபோன்ற சுருண்ட கூந்தலையும், கொவ்வைக் கனி போன்ற வாயையும் உடைய இந்தப் பெண் படுகின்ற துன்பத்தைத் திருவுள்ளத்தில் கொள்ளாமல் இருப்பது அழகாகுமா?

குணமடந்தை மணிக்குருளை மடந்தை, கொவ்வை வாய் மடந்தை என்று கூட்டிக்கொள்ள வேண்டும். மணி -நீலமணி குருளை – சுருண்ட கூந்தல். மடந்தை என்பது பருவத்தைக் குறியா பெண்ணென்னும் துணையாய் நின்றது. குறிக்கொளாதது என்றது செய்யுள் விகாரத்தால் குறைந்து நின்றது. மணம் அணி நெய் முதலியவற்றின் மணத்தைப் பெற்ற, வையம் – உலகத்திலுள் ளோர்; ஆகு பெயர், மற்று அசைநிலை. அடியனேன் என்றது தாய் தன்னையே கூறிக்கொண்டது. திணம் – திண்ணம். இடைக்குறை உறுதி யென்னும் பொருள் உடையது.

மணி – நீல மணி, மாணிக்கம் முதலிய மணிகள். கணம் – கூட்டம். மணிபொருபளிங்கை ஒத்த கங்கையின் நீர் வெண்மையானது. ளங்கிளை -தம்பி.]

இது திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் 5-ஆவது திருப்பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !