சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

முருகன் அழகு

கண்ணுடைய மக்கள் தரிசனம் செய்து, தம்முடைய உள்ளத்திலே சோதித் திருவுருவை எண்ணி, தியானித்து, மன ஒருமைப்பாடு பெற்றுப் பின்பு அருவத்தோடு கலந்து இன்புற வேண்டுமென்ற கருத்துடன், குணம் குறி இல்லாத இறைவன் உருவம் பெற்று வருகிறான். இந்தத் தத்துவத்தை உருவ வழிபாட்டை ஒப்புக்கொள்கிற சமயத்தினர் எல்லோரும் சொல்கிறார்கள். இறைவனது உருவம் கண்ணை முதலில் கவர்ந்து பின்பு கருத்தையும் கவரவேண்டும். கண்ணைக் கவர்கிற தத்துவந்தான் அழகு என்று பெயர் பெறும். இறைவன் பல்வேறு வகையில் திருவுருவம் கொண்டாலும் அழகுடைய திருவுருவமாக இருந்தால் எத்தகையவரும் அந்த மூர்த்தியினிடத்தில் ஈடுபடுவர். அந்த வகையில் பார்த்தால். இந்த நாட்டில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் அழகுத் திருமேனியுடைய மூர்த்திகளாக இருவர் இருப்பதைக் காணலாம். கந்தனும், கண்ணனும் பேரழகுத் திருக்கோலம் கொண்டு விளங்குகிறார்கள். அன்பு நெறி பற்றும் சைவர்கள் கந்தனையும், வைணவர்கள் கண்ணனையும் பாராட்டி வழி பட்டு இன்புற்றுத் தம்மை மறந்து நிற்கிறார்கள்.

முருகப்பெருமானுடைய திருவழகைப் பற்றி அன்பர்கள் பலபடியாகப் பாராட்டியிருக்கிறார்கள். அவன் என்றும் மாறாத அழகுடையவன்; என்றும் மாறாத இளமை உடையவன். இளமையும் அழகும் ஒன்றி நின்றால் அங்கே கவர்ச்சி தானே வந்துவிடுகிறது. முருகன் என்ற சொல்லுக்கே பேரழகு உடையவன் என்று பொருள். முருகு என்பது தெய்வத்தன்மை, பேரழகு, இளமை, மணம் ஆகியவற்றை எல்லாம் குறிக்கும். இந்த நான்கு திறத்திலும் சிறந்து நிற்பதனாலேயே முருகன் என்ற திருநாமம் கந்தபிரானுக்கு வந்தது.

அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக

என்று அத் திருநாமத்தின் அருமைப்பாட்டை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் எடுத்தோதுகிறார்.

முருகனுடைய பேரெழிலைப் பற்றிச் சொல்லுகின்ற பெருமக்களுள் அருணகிரிநாதப் பெருமான் சிறந்தவர் என்று சொல்லவேண்டும். அவர் அவனுடைய அழகை அங்கம் அங்கமாகப் பார்த்துச் சொன்னதோடு, சமுதாய சோபை யையும் சொல்லியிருக்கிறார்.

ழுமெ னருவி சொரியு மிமய முதல்வி புதல்வன் வருகவே இயலு நடையும் வடிவு மழகு மெழுத அரியன் வருகவே ஒழுகு கருணை முழுகு கலை வதனன் வருக வருகவேஒருவன் இருவ ரொடுகை தொழுந லுபய சரணன் வருகவேவிழுது விடுவெ ணிலவு பொழியும் நகையன் வருக வருகவே விளரி பயிலு மளியும் ஞிமிறும் விரவு குரவன் வருகவே மழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே

என்றார் குமரகுருபரர்.

‘என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாயென் உள்ளத் துறை

என்பது ஒரு பழைய பாட்டு.

முருகப்பெருமானைப் பிள்ளையாகப் பாடிய பிள்ளைத் தமிழ்க் கவிகளில் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் என்பது ஒன்று. அதனைப் பாடியவர் குமரகுருபர சுவாமிகள். அவர் அப்பெருமானுடைய பேரெழிலைத் தம்முடைய சொல்லினாலே கோலம் செய்கிறார்.அவர்,

வடிவி னழகு மெழுத வரிய புயமும் நறிய செச்சையும்
மருமம் விரவு குரவு மரையின் மணியு மணிகொள் கச்சையும் கடவு மயிலும் அயிலு மொழுகு கருணை வதன பற்பமும்
கமல விழியும் விழியும் மனமும் எழுதி யெழுதி நித்தலும் அடிகள் எனவு னடிகள் பணியும் அடிய ரலது மற்றும்வே றமரர் குழுவு மகில மறையும் அரியு மயனு முற்றும் நின் முடியு மடியு முணர வரிய முதல்வ தருக முத்தமே
முனிவர் பரவு பரிதி புரியின் முருக தருக முத்தமே

என்று பாடியிருக்கிறார்.

திருச்செங்கோட்டுக்குச் சென்று முருகப்பெருமானுடைய திருவுருவப் பேரெழிலைக் கண்டு பேரானந்தம் பெற வேண்டும் என்ற பசியோடு இருந்தது அருணகிரிநாதருடைய உள்ளம். செங்குத்தான மலை ஏறி அந்த இளைப்பு நீங்காது முருகப்பெருமானின் சந்நிதானத்தில் நின்ற போது, அவருடைய உள்ளத்தில் இருக்கிற பசியும், அப்பெருமானின் பேரெழிலின் ஏற்றமும் காரணமாக ஒரே சோதி வடிவமாய் முருகன் அவருக்குத் தோன்றினான். அந்தத் திருக் கோலத்தைக் கண்டு கண்டு ஆராத இன்பம் மாந்தினார். இந்த இரண்டு கண்களினால் மாத்திரந்தானே நான் காண்கிறேன்? பல கண்கள் இருந்தால் இன்னும் நன்றாக அநுபவிக்கலாமே” என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. அதன் பயனாக ஒரு பாட்டுப் பாடினார்.

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேல்ஆர் வயல்பொழில் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ நாலா யிரம்கண் படைத்தில னே அந்த நான்முகனே.”

முருகப்பெருமானுடைய பேரழகைப் பற்றி அடியார்கள் பாடியிருக்கிற பாடல்களை எல்லாம் கூட்டிப் பார்ப்பதற்கு இப் போது நேரம் இல்லை. பொதுவாக அவனுடைய பேரழகைக் கண்டு கண்டு மனம் கிளர்ந்தும் ஈடுபட்டும் உருகியும் இன்புற்றவர் பலர் என்பதை இப்போது நினைப்பூட்டிக் கொண்டால் போதும்.

உறவை உலகத்தில் உள்ள மக்களிடையே உள்ள மூன்று வகையாகச் சொல்வார்கள்: நண்பர், பகைவர், அயலார் என்று. ஒருவரிடம் ஒருவர் அன்பு கொள்கின்ற தகைமையை நட்பு என்றும், அதற்கு நேர்மாறான தன்மையைப் பகை என்றும், நட்பும் பகையும் இல்லாமையை அயல் – நொதுமல் – என்றும் சொல்வார்கள். அமெரிக்க நாட்டில் ஒருவர் இருக்கிறார். அவரைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர் நமக்கு நொதுமலர்.

ஏதேனும் ஒரு பொருளின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தப் பொருளோடு தொடர் புடையவர்களையோ அபிமானம் உடையவர்களையோ கேட்டால் அதை மிகைப்படுத்திச் சொல்வர். இறைவனிடத்தில் ஈடுபட்ட பக்தர்கள் தங்கள் தங்கள் வழிபடு கடவுளின் பெருமையைச் சிறப்பித்துச் சொல்வது இயற்கை. அருண்கிரி நாதர் போன்ற பெருமக்கள் முருகனுடைய பேரழகைப் பாராட்டுவது வியப்பன்று. அவர்கள் அந்தப் பெருமா னுடைய அருள்நுபவத்தைப் பெற்றவர்கள். அந்தத் திருவுரு வத்தில் ஈடுபாடும் அபிமானமும் உடையவர்கள். அதனால் பேரழகு உடையவன் முருகன் என்றார்கள் என்று சொல்லலாம்.

ஒரு கூடத்தில் பல வகையான ஓவியங்களை மாட்டியிருக் கிறார்கள். சிவபெருமானின் திருக்கோலப் படம், தசாவதாரப் படங்கள், விநாயகர் திருவுருவப் படம், அம்பிகையின் திருவுருவம் ஆகியவற்றை மாட்டியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இளமையும், அழகும் நிறைந்த முருகப்பெரு மானின் படமும் இருக்கிறது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வரும்போது முருகப்பெருமானுடைய திருவுருவத்தைக் கண்டு அந்த இளமை எழிலில் மனம் பறிகொடுத்து, இந்த உருவம் அழகாக இருக்கிறதே! இது யாருடையது?”

என்று அயலார் யாராக இருந்தாலும் கேட்பார்கள். அதற்குக் காரணம் இளமையும்,அழகும் உள்ள பொருளிடத் தில் மனித மனம் ஈடுபடும் என்பதுதான். வீதியிலே சின்னக் குழந்தையொன்று நடமாடிக் கொண்டிருந்தால் யாராக இருந் தாலும் அதை எடுத்துக் கொள்வார்கள். இன்னாருடைய குழந்தை என்று தெரியவேண்டிய அவசியம் இல்லை. அது போல் இளமையோடு அழகும் ஒருசேரத் திரண்ட பிழம்பாகிய மூர்த்தி முருகனுடைய படத்தை யார் கண்டாலும் இது அழகியது என்று சொல்லுவார்கள்.

ஆகவே அன்பர்கள் மட்டுமன்றி இருப்பவர்கள் கூட இளமை, அழகு ஆகிய இரண்டும் ஒரு சேரக் காட்சி அளிக்கும் முருகனைப் பேரழகுடையவன் என்று சொல்வார்கள்.

இந்த இரண்டு பேருடைய கருத்துங்கூட அத்தனை சிறப்பு உடையன என்று சொல்வதற்கில்லை. உண்மை ஒன்று இருக்குமானால் அந்த உண்மையைப் பகைவனும் ஒப்புக்கொள்ள வேண்டும். கதிரவனுடைய வெப்பத்தைத் தாங்கமாட்டாமல் ஒருவன் இருக்கிறான். ஆனாலும் கதிரவன் ஒளி கொடுக்கிறான் என்பதை அவன் மறுக்க முடியாது. அது போல் முருகப்பெருமானுடைய பேரழகைப் பகைவனும் போற்றினான் என்றால் அந்த அழகு உண்மையானது, உறுதி யானது என்பது புலனாகும்.

கந்த புராணத்தில் முருகப்பெருமானுடைய பேரழகை அவனுடைய பெரும் பகைவனான சூரபன்மனே போற்றுகின்ற வரலாறு வருகிறது. முருகன் சூரபன்மனோடு போராடினான். அப்படிச் சொல்வதைவிட, பொல்லாத பிள்ளையாகிய சூரபன்மனை வசக்கித் தனக்கு அடியனாக்க வேண்டுமென்று போர்க்களத்தில் வந்து நின்றான் என்று சொல்வது பொருத்தம். சூரனும் முருகனும் செய்த போர் மிகப் பெரிய போர். அந்தப் போரில் சூரபன்மன் முருகனைத் தன்னை அழிக்க வந்த பகைவனாக எண்ணினான். ஆனால் முருகனே சூரபன்மனைத் தனக்கு அடியானாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணினான். சூரபன்மனை அழித்துவிட வேண்டும் என்ற கருத்து முருகப்பெருமானுக்கு இருக்குமானால் போர்க்களத்தை உண்டாக்கி, பல பெரும் படைகளை அணிவகுத்து வரவேண்டும் என்பதில்லை. தன்னுடைய மனத்தில் ஒரு கணம் நினைத்தானானால் சூரபன்மன் மாத்திரம் அல்ல; அவனது அண்ட கோடி அத்தனையும் படுசூரணமாகிவிடும். ஆனால் முருகப்பெருமானுக்கோ சூரனை அழிக்க வேண்டுமென்பது கருத்தன்று. கையில் கத்தியை வைத்துக் கொண்டு கண்டகண்ட இடங்களிலெல்லாம் குத்திக் காயப்படுத்தும் தன் குழந்தையைத் தாய் கண்டு குத்த மாட்டாள். குழந்தையின் கையில் உள்ள கத்தியை ஏதாவது தந்திரம் செய்து பிடுங்க நினைப்பாள். அதுபோல் சூரபன்மனுடைய உள்ளத்திலுள்ள அகங்காரத்தையும், அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று இறைவன் எண்ணிப் பார்த்தான்.

‘சூரனுக்கு, அவனுடைய பலவீனத்தைப் புலனாகும்படி செய்தால், நம்முடைய பலம் எல்லாம் பலம் அன்று. இறைவனுடைய திருவருள் ஒன்றுதான் உறுதியானது. என்பதை உணர்ந்து, நம் அடியில் வந்து விழுவான்’ என்று எண்ணினான்.

அதனால்தான் பல காலம் போர் செய்தான். அவனுடைய படைகளை எல்லாம் அழித்தான். அவனுடைய தம்பிகளும் மக்களும் அழிந்தனர். ‘இந்தச் சமயத்திலாவது அவன் உணர்வு பெற்றுத் தன் வல்லமை இன்மையை உணர்ந்து நம்முடைய திருவடியில் வந்து விழுவானா? அப்படி விழுந்தால் ஆட்கொள்ளலாம்’ என்று பார்த்தான். மாயம் வல்ல சூரன் தன் மாயங்களை எல்லாம் காட்டிப் போர் புரிந் தானேயொழிய முருகப்பெருமானது உண்மையை வில்லை. “முருகன் என்ன, சின்னக் குழந்தைதானே?” எனத் தலைதருக்கிப் பகை உணர்ச்சியிலே வெறி பிடித்து நின்றான் அவன். ‘நம் பெருமையை இவன் உணரமாட்டான்” என்னும் எண்ணம் முருகனுக்கு உண்டாயிற்று. ‘நம்முடைய திருவுருவத்தைக் கண்டாலே யாவரும் உள்ளம் கசிந்து உருகுவார் களே! இந்தப் பாவிக்கு அந்த நிலை வரவில்லையே” என்று எண்ணினான். அப்போது முருகப்பெருமானுக்கு ஒரு கருத்துத் தோன்றியது. ‘நம்மை இவன் கண்கொண்டு பார்க்க வில்லை. நான் சின்னஞ் சிறிய உருவத்தில் இருப்பதனால் பெரிய கண்ணும், பெரிய உடம்பும் உடைய அசுரனுக்கு நம் முடைய அழகு புலனாகவில்லை’ என்று எண்ணினான். அவனுடைய கண் நிரம்பும்படி பெரிய திருவுருவம் ஒன்றை எடுத்துக் கொண்டான். எப்படியாவது அவனுடைய உள்ளத்தை உருக்கவேண்டும், அறியாமையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அந்த அழகுப் பேருருவத்தை எடுத்துக் கொண்டான்.

நம்முடைய வீட்டில் எறும்புகள் சாரிசாரியாகப் போகின் றன. எறும்புக் கூட்டத்திலும் ஆண் பெண் உண்டல்லவா? எறும்பு இனத்தில் ஒரு கல்யாணம் நடப்பதாக வைத்துக் கொள்வோம். மாப்பிள்ளை எறும்பும் பெண் எறும்பும் ஊர்வலம் போகிறார்கள். மனித இனத்தில் மாப்பிள்ளை அழகு என்றால் எறும்பு இனத்திலும் மாப்பிள்ளை எறும்பு அழகாகத் தான் இருக்கும். ஆனால் நம் பார்வையில் எல்லா எறும்பும் ஒரே மாதிரியாகவே தோன்றுகின்றன. எறும்புகள் போகும் போது அவற்றின் உருவச் சிறப்பும், அழகும் நம் கண்ணுக்குப் புலனாவதில்லை; வெறும் உருவம் மாத்திரம் தெரிகிறது. அதுபோல் சூரபன்மனுடைய புறக்கண்ணின் எதிரே வந்து முருகன் நின்றபோதும், ‘யாரோ குழந்தை இங்கே வந் திருக்கிறது என்று எண்ணினானேயன்றி அவனுடைய பேரழகைக் காணுகின்ற ஆற்றல் அவனுக்கு இல்லை. அதனை உணர்ந்து முருகன் மிகப் பெரிய திருவுருவத்தை எடுத்துத் தன்னுடைய அழகு அவனுக்குப் புலனாகும்படி செய்தான். சூரபன்மன் நிமிர்ந்து பார்த்தான். ஆயிரம் ஆயிரம் கதிர்களை வீசிப் பரப்புகின்ற தேசுத் திருவுருவம் தன் முன்னே நிற்பதைப் பார்த்தான். இதுகாறும் அத்தகைய திருவுருவத்தை அவன் கண்டதில்லை. ஒருவனுக்கு அடி பணிந்து வளையவும், வியந்து அண்ணாந்து பார்க்கவும் அவனுக்குத் தெரியாது. நின்றால் நின்றபடியே பார்க்கும் தகைமையன். இப்போது மிக உயரமாக இருக்கும் முருகப்பெரு மானின் திருவுருவத்தை அண்ணாந்து பார்த்தான். அந்தப் பேருருவத்தின் அடி எங்கே என்று குனிந்து பார்த்தான். பார்க்கும்போது, இதுகாறும் இத்தகைய பேருருவத்தைக் கண்டிலோமே என்ற வியப்பு உண்டாகியது. ‘யாரோ சிறிய குழந்தை ஒரு மயில் குஞ்சின் மீது ஏறி வருகிறதென்று அல்லவா நினைத்தேன்? இவ்வளவு பெரிய அழகுத் திருவுரு வத்தை உடையவன் முருகன் என்பதை இந்நாள் வரை நினைத் திலேனே!’ என்று எண்ணி ஏங்குகின்றான்.

கோலமா மஞ்ஞை மீதிற்
குலவிய குமரன் தன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாள்;
பரிசிவை யுணர்ந்தி லேன்யான்;
மாலயன் தனக்கும் ஏனை
வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகா ரணமாய் நின்ற
மூர்த்திஇம் மூர்த்தி அன்றோ?”

என்று வியப்பு அடைகிறான். இது, முதல் தோற்றத்தில் உண்டான வியப்பு: தான் சிறுவன் என்று கருதிய திருவுருவம் எல்லாப் பொருளுக்கும் மூலகாரணமாக இருக்கிற மூர்த்தியாகத் தோற்றினவுடன் தோற்றிய வியப்பு.

அதற்கப்புறம் அவன் தன்னுடைய கண்ணால் அப்பெருமானது ரூப லாவண்யத்தை நுகரப் போகிறான். மெல்ல ஒவ்வோர் உறுப்பாக அவன் கண் உலவுகிறது.

எல்லை கட்டிக் காணவொண்ணாத பரப்பும், எல்லை கட்டிச் சொல்ல முடியாத அழகும் உடைய அந்தத் திருவுருவத்தின் திருவடி முதல் திருமுடி வரையில் தன் கண்ணை ஓச்சுகிறான்; பக்கத்தில் ஓட்டுகிறான். திருக்கரங்களின் முடிவு காணவில்லை. திருமேனியின் எல்லை காணவில்லை. அழகை அனுபவித்து முழுமையும் காண முடியவில்லை. இந்த நிலையில் எம்பெரு மானுடைய திருவழகில் ஈடுபடுகிறான்.”உலகம் பைத்தியக் காரத்தனமாகக் காமனைப் பேரழகன் என்று சொல்கிறது. அழகுக்குத் தலை எல்லை மன்மதன் என்று அறியாமையினால் சொல்கிறார்களே! அந்த மன்மதன் எம்பெருமானுக்கு முன்னாலே நிற்க முடியுமா? எம்பெருமானுடைய திருவுருவம் முழுமையிலும் உள்ள அழகு கிடக்கட்டும்; அவன் திருவடியில் உள்ள அழகின் ஒரு பகுதிக்காவது ஆயிரம் கோடி மன்மதர்களுடைய அழகு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உருவம் எடுத்தாலும் ஒப்பாகுமா?” என்று ஈடுபட்டு அந்த அழகை வியக்கிறான்.

ஆயிர கோடி காமர்
அழகெலாந் திரண்டொன் றாகி
மேயின எனினும் செவ்வேள்
விமலமாம் சரணந் தன்னில்
தூய இவ் வெழிலுக் காற்றா
தென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம்
உவமையார் வகுக்க வல்லார்?”

இந்த அருமையான பாடலை இரண்டு மூன்று இடங்களில் ஆழ்ந்து பார்க்கவேண்டும். இறைவனுடைய பாதார விந்தங்களில் அவன் உள்ளத்தைச் செலுத்துகிறான். இதற்கு முன்னால் அசுரத் தன்மையோடு நின்றவன் அவன். இப்போதோ முருகப்பெருமானுடைய திருவுருவ அழகு அவனைக் கவர்ந்திருக்கிறது. அதனால் அவனுடைய உள்ளம் உருகுகிறது. ‘நம்முடைய திருவுருவத்தைக் கண்டாவது இவன் உருகமாட்டானா? உருகும் இயல்பு இருந்தால் இந்தப் போரை விரைவில் முடித்து இவனை ஆட்கொள்ளலாம்’ என்று கருதித் தான் முருகன் தன் திருவுருவத்தைக் காட்டினான். அந்த உரு வத்தின் பேரழகு சூரபன்மனை மயக்கிற்று. அப்போது அவன் உள்ளம் உருகுகிறது. அடியார்கள் முருகப்பெருமானுடைய திருவுருவப் பேரழகைக் கண்டு கண்டு, பின்பு அவன் திருவடியைப் பார்த்து அதிலே தங்கள் உள்ளம் வண்டாக மொய்க்கக் கிடப்பார்கள். அதே நிலை சூரபன்மனுக்கு வந்துவிடுகிறது. முருகப்பெருமானது ரூப லாவண்யத்தை நன்றாகப் பார்த்து, முற்றக் கண்டு முடிவு பெறாமை யினால் மெல்ல மெல்ல அவன் சரணத்திலே தன் கருத்தைப் பதிக்கிறான். அவன் கண்களிலே இதுகாறும் நின்ற மாசு அகலுகிறது. “அடடா! இந்தச் சரணம் விமலமாகிய சரணம் அல்லவா?’ என்பது புலனாகிறது. மலச் சார்பற்ற, மலம் உள்ள இடத்தில் சார்ந்தால் அந்த மலத்தைப் போக்கக் கூடிய சரணம் அது. அந்தச் சரணத்தின் அழகு தூய அழகு.

அழகில் இரண்டு வகை உண்டு. புறக்கண்களில் பட்ட மாத்திரத்தில் சில அழகுகள் உள்ளத்தில் தூய எண்ணத்தை உண்டாக்கும்; சில அழகுகள் கெட்ட எண்ணத்தை உண்டாக்கும். உள்ளத்தில் கெட்ட எண்ணத்தை உண்டாக்குகிற அழகு மாய் அழகு; அது தூய அழகாகாது. அப்படியின்றித் தூய எண்ணங்களை உள்ளத்தில் உண்டாக்குகின்ற அழகு எதுவோ அதுதான் தூய அழகு என்று சொல்லப்படும். சித்திர மாதர்களுடைய அழகு மாய் அழகு; மீட்டும் மீட்டும் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக்கும் அழகு; உள்ளத்தில் வெறியை ஊட்டும் அழகு. கற்புடைய மகளிரின் அழகு அத் தகைய மாசை உள்ளத்தில் உண்டாக்காது. அத்தகையவர் களைக் கண்டால் நம்முடைய அன்னையைக் காண்பது போன்ற உணர்ச்சி உண்டாகும். அல்லாதவர்களுடைய அழகு வெறியை ஊட்டுவதனாலே அதை மாய அழகு என்று சொல்லலாம். வெறியை அடக்கி, அமைதியைப் பெற வைத்துத் தூய இன்பத்தை உண்டாக்குகின்ற பேரழகே தூய அழகாகும்.

இத்தகைய தூய் பேரழகை உடையவன் முருகன். அது எதனால் தெரிகிறது? முருகனுடைய பேரழகில் தன் உள்ளத்தைப் புதைத்து நிற்கிறான் சூரபன்மன். ஒவ்வோர் உறுப்பாக அவன் கண் பார்த்து வரும்போதே அந்த அழகு அவன் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகிறது. மேலேயுள்ள கந்தையை விசிறி எறிந்து, தலையில் உள்ள பாரத்தை எல்லாம் தூக்கி எறிந்து, மனத்தில் உள்ள அழுக்கு நீங்க, உடம்பு லேசாகத் தோற்ற நிற்கின்ற ஒரு வகை இன்பம் அவனுக்குத் தோற்றுகிறது. ஆகவே,

விமலமாம் சரணம் தன்னில் தூய இவ் வெழிலுக்கு

என்று சொல்லும்போது அவன் ஒரு வகையான இன்பக் கிளுகிளுப்பில் நிற்கிறான்.

தூய இவ்வெழில்

என்று சொல்வதில் ஒரு நயம் இருக்கிறது. முருகப்பெரு மானை அவன் நெருங்கிவிட்டான். கடவுளை ‘அவன் அவன்’ என்று வேதம் சொல்கிறது. அவனை நெருங்கிய அன்பர்கள் ‘இவன்’ என்று சொல்வார்கள். சூரபன்மன் இதற்கு முன்னால் முருகப் பெருமானின் முன் நின்றாலும் இதுவரைக்கும் நெருங்கவில்லை. ஆயிரம் காத தூரம் விலகி நின்றவனைப் போல நின்றான். இப்போது எம்பெருமானின் அழகில் ஈடுபட்டு அடியார்களைப் போல உள்ளுணர்ச்சி கொண்டதால் நெருங்கிவிட்டான், முருகப்பெருமானுடைய எட்டும் தூரத்தில் நிற்கிறான்.கருத்துக்கு எட்டும் அண்மையில் இருக்கிறான். ஆகவே ‘இந்தத் தூய எழில்’ என்று அண்மைச் சுட்டைப் போடுகிறான்.

அந்தத் திருவுருவத்திலே உள்ளத்தை ஈடுபடுத்தி நின்றவனுக்கு மெல்ல மெல்ல அவன் தீமைகள் எல்லாம் ஒழிகின்றது தெரிகிறது. உலகம் எல்லாம் தன்னுடையன என்று எண்ணினவன் அவன். நான் என்ற அகங்காரம், எனது என்ற விரிவான மமகாரம் இரண்டும் அவனிடத்தில் தலைதூக்கி நின் றன. அந்த எனது என்பதற்குள் ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களை அடக்கி அமைத்தும் போதாமல் தேவேந்திர லோகத்தையும் அகப்படுத்திக் கொள்ள முயன்றவன். இப்போதோ எங்கே பார்த்தாலும் தான் என்ற உணர்வு மறைந்து எனது என்ற மமகாரம் போய் எல்லாம் இறைவன் மயமாக அவனுக்குத் தோன்றுகின்றன. அவன் உள்ளத்தில் புதிய அறிவு புகுகின்றது. சூரியோதயம் ஆனவுடன் எப்படி இருள் அகன்று விடுகிறதோ அப்படி எம்பெருமானின் பேரழகுத் திருவுருவம் அவனுக்குத் தோன்றியவுடன் அவன் உள்ளத் தில் உள்ள அறியாமை இருள் அகன்று விடுகிறது. அவ்வழகு அவன் உள்ளத்தில் புதிய ஞானத்தை உண்டாக்குகிறது. அந்த ஞானத்தோடு நான்கு திக்கிலும் திரும்பிப் பார்க்கிறான். இதுவரைக்கும் அவனுக்குத் தோற்றிய காட்சிகளாக இல்லாமல் புதியனவாகத் தோன்றின. நான் எனது என்ற இரண்டு பற்றுக்களும் தொலையவே முருகன் நினைவு ஒன்றே தலை தூக்கி நிற்கிறது. புதியதாகப் போதம் புகுந்தது. பிரபஞ்சம் எல்லாம் அவனுக்கு இப்போது புதியதாகத் தோன்றுகின்ற தைக் காண்கின்றான்.அவனுக்கு வியப்பு உண்டாகிறது.

‘போயின் அகந்தை போதம் புகுந்தன வலத்த தான் தூயதோர் தோளும் கண்ணும் துடித்தன புவன மெங்கும் மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணோர் நாயகன் வடிவம் கண்டேன் நற்றவப் பயனி தன்றோ?’

என்று அந்தப் பேரானந்தக் கொந்தளிப்பில் பேசுகின்றான். “பலகாலம் நல்ல தவம் செய்து அதனால் பெறுவதற்குரிய பேறு அல்லவா இது? எம்பெருமான் தன்னுடைய திருக் கோலப் பேரெழிலைக் காட்டிக்கொண்டு முன்வந்து நிற்கும் பாக்கியம் மாபாவியாகிய அவனுடைய பகைவனாகிய, எனக்கும் கிடைத்ததே” என்று இறைவனுடைய கருணையை எண்ணி ஆச்சரியமுறுகிறான். போதம் புகுந்தவுடன் இது வரைக்கும் தனக்குத் தோன்றிய புவனம் இப்போது வேறு பட்டுத் தோன்றுகிறதைக் காண்கிறான். இதுவரைக்கும் அவனுக்குத் தோன்றியது மாயத் தோற்றம்; இப்போது தான் உண்மையான தோற்றம் புலனாகிறது. பிரபஞ்சம் இதுவரைக்கும் தனக்குச் சொந்தம் என்றும், தானே எல்லாவற்றுக்கும் தலைவன் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான் அவன். இப்போதோ நாயகனைக் கண்டவுடன் தன் நிலை புலனாகிறது. “அவன்தான் இறைவன்; நான் அடிமை” என்ற உணர்ச்சி தோன்றுகிறது. இதன் மூலகாரணம் அவன் கண்ட எம்பெருமானுடைய தூய பேரழகுக் கோலந்தான்.

பின்பும் அவன் பார்க்கிறான். முருகப் பெருமானின் திருமேனிக்குப் பக்கத்தில் சென்று பார்க்கிறான். பின்னே நின்று பார்க்கிறான். மேலே அண்ணாந்தும், கீழே குனிந்தும் பார்க்கிறான். இன்னும் அந்த அழகுக்கு முடிவு கட்ட முடியவில்லை. எத்தனை காலம் பார்த்தாலும் அந்த அழகை முற்றும் பார்த்துத் திருப்தி அடைய முடியாது என்ற உண்மை புலனாகிறது. காலத்தினாலும், இடத்தினாலும் எல்லை கட்டி அறிய முடியாத அருள் வடிவம் அல்லவா அது? அதனைக் கண்டு கண்டு அவன் கண்கள் இன்புறுகின்றன. கருத்து இன்பப் பொங்க லிடுகிறது. ஆனால் எல்லை இன்னது என்று தெரியாமல் வியப்பில் மீதூர்ந்து நிற்கிறான்.

அண்ணலார் குமரன் மேனி
அடிமுதல் முடியின் காறும்
எண்ணிலா வூழி காலம்
எத்திறம் நோக்கி னாலும்
கண்ணினால் அடங்கா துன்னிற்
கருத்தினால் அடங்கா தென்பால்
நண்ணினான் அமருக் கென்கை
அருளென நாட்ட லாமே

இறைவனுடைய பேரழகைக் கண்ட மாத்திரத்தில் அவனுக்கு உருக்கமும் உணர்வும் அடியார்களுக்கு உண்டாவது போல உண்டாயின என்றால் சற்று முரணாகத் தோற்றலாம். பல காலம் இந்திரிய நிக்கிரகம் செய்து விரதம் காத்து, தவம் செய்கின்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இந்தக் காட்சி இந்தப் பாவிக்குக் கிடைக்கலாமா என்ற கேள்வி எழுவதற்கு நியாயம் உண்டு. ஆனால் அந்தத் தவம் நிறைந்தவர்கள் யாவரும் தம்முடைய முயற்சியினால் இறைவனைக் கண்டு கொள்ள வேண்டுமென்று இருப்பார்கள். இங்கேயோ சூரபன்மன் முயலவில்லை. எம்பெருமானே அவனை ஆட்கொள்ள வேண்டுமென்று முயன்றான். முருகனைச் சூரபன்மன் சென்று காணவில்லை. சூரபன்மனிடம் வந்து முருகன் தன் திருவுருவத்தைக் காட்டினான்.

ஓர் அறை பலகாலமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் விளக்கை எடுத்துக் கொண்டு போனால், “பலநாள் இருள் மண்டிக் கிடந்த அறை ஆயிற்றே: அதனால் பலநாட்கள் விளக்கின் ஒளி அங்கே பட்டால்தான் இருள் நீங்கும்” என்று சொல்லலாமா? விளக்கைக் கொண்டு போனவுடன் எத்தனை காலமாக இருள் மண்டிக் கிடந்தாலும் ஒளிபட்டபோதே இருள் ஓடிவிடுகிறது. அதுபோல, எத்தனையோ காலமாக அறியாமை இருள் மண்டிக்கிடந்த உள்ளம் உடையவனாகச் சூரன் இருந்தாலும் அருள் ஒளிப் பிழம்பாகிய எம்பெருமானின் தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் அவன் அறியாமை நீங்கியது. போதம் புகுந்த பிறகு அவனுக்கு உண்மை தெளிவாகிறது.

“என்னுடைய முயற்சியினால் முருகப்பெருமானுடைய காட்சியை நான் கண்டேன் இல்லை. அவன் தன் திருவருளால் ஆட்கொள்ள எண்ணினான். வேறு எந்த வகையினாலும் என்பால் அருள்பாலிக்க ஒண்ணாது என்றல்லவா அமருக்கு நண்ணினான். இதுதான் அவனுடைய பேரருள் என்று நாட்டலாம்” என்கிறான். “நான் அவனைக் காணவேண்டு மென்று நினைக்கவில்லை. தன்னை எனக்குக் காட்டவேண்டு மென்று அவன் உறுதியாக நினைத்தான். அவன் உள்ள இடத்திற்கு நான் போகவில்லை; நான் உள்ள இடத்திற்கு அவன் வந்தான். போர்க்களத்தைக் கோயிலாக்கி, போரைத் தரிசனம் ஆக்கி,பகைவன் இவன் என்ற உணர்வுடன் வாரா மல், எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று வந்திருக்கிறான். போரை வியாஜமாகக் கொண்டு எனக்குக் காட்சிதர வந்தானே”

நண்ணினான் அமருக் கென்கை அருளென நாட்ட லாமே

என்று கூறுகிறான்.

பின்பு அந்தப் பெருமானைப் போய் அடைந்து காலில் விழவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. இறைவன் சிறிது திரையைப் போட்டவுடன், ”மானம் தடுக்கிறது” என்று சொல்லி மீட்டும் போர் செய்கிறான். குறுகிய காலத்திற்குள் அவனை அடர்த்து வேலால் சூரத்துவத்தைப் போக்கி மயிலாகவும் சேவலாகவும் ஆக்கிக் கொள்கிறான் முருகன்.

அகங்கார மமகாரப் பிழம்பாகிய சூரபன்மாவைக் கூட வசப்படுத்தி, உள்ளம் உருகும்படியாகச் செய்தது முருகப் பெருமானது பேரழகு. பகைவனாகிய சூரபன்மனே இந்த அழகைக் கண்டு வேறு யாரும் சொல்ல முடியாத அளவில் பாராட்டியுள்ளான்.

முருகப் பெருமான் உண்மையான பேரழகு உடைய வன். அந்த அழகைப் பகைவனாகிய சூரனே பாராட்டுகிறான்.

ஆகையால் அந்தப் பேரழகு கால எல்லை கடந்து, இட எல்லை கடந்து ஒளிர்வதோடு, அன்பர்கள், நொதுமலர்களுடைய உள்ளங்களை உருக்கிப் பகைவரையும் உருக்குவது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளலாம். “உண்மையான பேரழகன் முருகன்; உறுதியான பேரழகன் முருகன்; பயன் தரும் பேரழகன் முருகன்” என்பவற்றை எல்லாம் இந்த வரலாற்றினால் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !