சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

அருணகிரியாரின் திருவுள்ளம்

கடவுள் ஒருவரானாலும் அவரைப் பல உருவங்களில் வழிபடும் வழக்குப் பாரத நாட்டில் இருந்து வருகிறது. சைவம், வைணவம் என்ற இரண்டு பெரிய ஆறுகள் சங்கமம் ஆகின்ற பெரும் கடல் இந்து சமயம். இவற்றின் கிளைகள் பல சமயங்களாக உருவெடுத்திருக்கின்றன. சிவ பெருமானை வழிபடுவோர் எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள் என்று சொல்ல இயலாது. சமயத்திற்குத் தலைவராக ஒரே கடவுளை வழிபட்டாலும், இறைவன், உலகம், உயிர் ஆகிய வற்றின் தொடர்புகள், முத்தியின் இயல்பு என்ற கருத்துக்களில் பல வேறுபாடுகள் இருக்கும். துவைதம், அத்வைதம், த்வைதம், வீர சைவம் முதலிய வேறுபாடுகள் வழி படும் மூர்த்திகளின் வேறுபாட்டால் அமைந்தவை அல்ல. உயிர், உலகம், கடவுள், முத்தி ஆகியவற்றைப் பற்றிய கருத்து வேறுபாட்டால் அமைந்தவை. வழிபாட்டு முறையில் எந்த வகையைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் பலருக்கு வழிபடுகின்ற கடவுள் சிவபெருமானாக இருப்பர். வேறு பலருக்குத் திருமாலாக இருப்பர்.

சிவபெருமானைத் தொழுகின்ற கூட்டத்திற்குச் சிவ பிரானையன்றி அம்பிகை, முருகன், விநாயகர், வீரபத்திரர், பைரவர் முதலிய பல வழிபடும் மூர்த்திகள் உண்டு. அம்பிகையின் மூர்த்தங்கள் பல. முருகப் பெருமானின் கோலங்களும் பல பல. விநாயகப் பெருமானும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொண்ட கோலங்கள் பல உண்டு. இப்படியே திருமாலின் திரு அவதாரங்கள் பல. அந்த அந்த அவதாரத்திலும் வெவ்வேறு கோலங்கள் பக்தர்களின் வழி பாட்டுக்கு உரியனவாக இருக்கின்றன. இருந்து வருகின்றன என்று திருமுருகாற்றுப்படையினால் நாம் அறிகிறோம். பரிபாடல் என்ற நூலில் மதுரை மாநகரத்தில் வாழ்ந்த மக்கள் திருப்பரங் குன்றத்தில் எழுந் தருளியிருக்கும் முருகப் பெருமானிடத்தில் பேரன்பு வைத்து வழிபட்டுத் தத்தமக்கு வேண்டிய நலங்களைப் பெற்றார்கள் என்று தெரியவருகிறது.

பிற்காலத்திலும் முருகப்பெருமானை வழிபட்ட அடியார்கள் பலர் இந்த நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பாடிய பாடல்கள் பல. அவர்களுள் முருகப்பெருமானின் திருவருளில் ஈடுபட்டு மிகமிக விரிவாகத் திருப்புகழ் என்ற பெரிய பாக்கடலை வழங்கியவர் அருணகிரிநாதர். அவருடைய திருவாக்கினால் முருகப் பெருமானின் வீரச் செயல்களும், புகழும், அருளும், சிறப்பும் விளங்குகின்றன. அவை அல்லாமல் நம்முடைய பழைய பண்பாட்டின் வகைகள், பல துறைகளாக விரிந்த சமய நுட்பங்கள் ஆகியவையும் அவர் வாக்கில் விளங்குகின்றன. அருணகிரிநாதர் பெரிய தமிழ்ப் புலவர்; முருகன் அடியார் : ஞானி; யோகி; பக்தியைச் சிறப் பாகப் பாராட்டினவர்; எல்லாவற்றுக்கும் மேலாகப் பெரிய சமரசவாதி.

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் மிக விரிந்தது. அவர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடினார் என்று மார்க்க சகாயதேவர் சொல்கிறார். அவை முழுவதும் இப்பொழுது கிடைக்கவில்லை. ஆயிரத்து முந்தூற்றுச் சொச்சம் பாடல் களே கிடைத்திருக்கின்றன. கிடைத்தவற்றைப் பார்த் தாலேயே அருணகிரிநாத சுவாமிகளின் சமரச மனோபாவம், விரிந்த உள்ளப்பாங்கு, நன்கு தெரியும். அவர் தொடாத கதை இல்லை. பாடாத பொருள் இல்லை. சொல்லாத நெறி இல்லை.

ஞான நெறியைப்பற்றிச் சில பாடல்களில் விரிவாகச் சொல்வார். யோகத்தின் முறைகளைச் சில பாடல்களில் சிறப் பாகப் பாடுவார். பக்தியின் பெருமையைப் பல பாட்டுக்களில் விரித்து உரைப்பார். முருகப் பெருமானின் அழகை அகக் கண் கொண்டு பார்த்த அநுபவத்தை இனிமையாக எடுத்துச் சொல்வார். அவன் தத்துவத்தைச் சொல்வார். வீரப் பிரதாப விளையாடல்களைப் பல பல பாட்டுக்களில் எடுத்து விரிப்பார். அவன் கருணையின் பெருமையை, வள்ளி அம்மையின் இயல்பை, வள்ளியெம் பெருமாட்டி தினைப்புனம் காத்த மலைச்சாரலுக்கு ஓடிவந்து அவள்பால் முருகன் கொண்ட காதலின் சிறப்பை அருணகிரிநாத சுவாமிகள் சொல்வது போல யாராலும் சொல்ல முடியாது.

இவை மாத்திரமா? சிவபெருமானின் கருணைச் செயல்கள் எல்லாம் அங்கே வரும். அப்பெருமானைப் பற்றிய காமங்கள் எல்லாம் அருச்சனையாக விரிந்திருக்கும். திருமாலின் கருணையும், அவதாரக் கதைகளும், இராமபிரான் வரலாற்றின் பகுதிகளும், கண்ணபிரானின் கோலாகல விளையாடல்களும் அவர் பாடல்களில் ஆங்காங்கே காட்சி தரும். அம்பிகை, விநாயகப்பெருமான், திருஞான சம்பந்தர் முதலியோரின் பெருமைகளையும் திருப்புகழில் காணலாம்.

உலகத்தில் மக்கள் பிறந்து பலவகையான துன்பங்களை அடைந்து வாட்டமுறுவதைப் பல பல காட்சிகளாகச் சித்திரித்திருக்கிறார். மனிதன் அடைகின்ற துன்பங்களுக் கெல்லாம் மூலமான துன்பம் பிறப்பு என்பது. அந்தப் பிறப்புக்கு மூல காரணமாக இருக்கும் தீய குணங்கள் பல. ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் காமம் என்ற நோய் வாய்ப்பட்டே துன்புறுகின்றனர். அதனால் அருணகிரிநாத சுவாமிகள் உலகியலைப் பற்றிப் பாடுகின்ற பாடல்களில் காமத்தைப் பற்றிய பேச்சு மிகுதியாக இருக்கும். மங்கையர் மையலில் உழன்று படும் துன்பங்கள் மிக விரிவாகக் காணப் படும். அவற்றைக் கண்டு, அருணகிரியார் அத்தகைய அநுபவத்தைப் பெற்றுப் பின்பு அறிவு தெளிந்து, இறைவனிடத்தில் ஈடுபட்டார் என்று சில ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வார்கள். அப்படிச் சொல்வது முறையாகத் தோன்ற வில்லை. அருணகிரியார் தம் பாடல்களில் சொல்லியிருக்கின்ற அத்தனை தீய அநுபவங்களையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அநுபவிக்கக் கூடிய அநுபவங்களாகத் தோன்றா. அவர் வரிசை வரிசையாகச் சொல்கின்ற அத்தனை தீய அநுபவங்களையும் பல பல பிறவிகள் எடுத்தால்தான் அநுபவிக்க முடியும்,

அப்படியானால் அருணகிரியார் எதற்காக அவற்றை எடுத்துச் சொன்னார் என்ற கேள்வி எழலாம். உலகத்தில் மக்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு அவர்கள் வாயில்லாப் பூச்சிகளாக இருக்கிறார்களே என்று இரங்கி, அவர்கள் எம் பெருமானிடத்தில் விண்ணப்பம் செய்வதற்காகப் விண்ணப்பப் பிரதிகளாக அவற்றைக் கொடுத்திருக்கிறார். உலகத்தை எல்லாம் தாமாகப் பார்க்கிற உயர்ந்த அநுபவ நிலையில் வாழ்ந்த ஞானி அவர். தன் குழந்தையின் நோய்க்காக மருந்து உண்ணும் தாய் போன்ற கருணை உள்ளம் படைத்தவராதலின் உலகத்தாரின் துன்பங்களைத் தாம் ஏறட்டுக்கொண்டு அவர்களுக்காகப் பாடிய பாடல்கள் அவை என்றே கொள்ள வேண்டும். இப்பொழுது உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களைத் தாக்கி வாட்டி வதைத்து உருக்குலைக்கும் நோய் காமம் என்ற பெருநோய். ஆதலினால் அந்நோயைப் பற்றிய வருணனைகள் அவர் பாட்டில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

பொதுவாக, சைவசித்தாந்தம், அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்ற சமய வேறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு சமயத்திலும் உள்ள பெரியார்கள் ஒவ்வொரு நெறியை விரித்து உரைத்திருக்கிறார்கள். ஞானசம்பந்தப் பெருமான் முதலிய நாயன்மார்கள் எல்லோரும் சிவனடியார்கள். ஆனாலும் ஒவ்வொருவருடைய முறையும் வெவ்வேறு வகை. ஞானசம்பந்தப் பெருமான் சத்புத்திர மார்க்கத்தில் இறைவனை அடைந்தார் என்றும், அப்பர் சுவாமிகள் தாச மார்க்கத்தில் இறைவன் அருளைப் பெற்றார் என்றும், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சகமார்க்கத்திலும், மாணிக்கவாசகர் சன்மார்க்க நெறியிலும் சென்று இறைவன் அருளைப் பெற்றார்கள் என்றும் கூறுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு பெரியாரின் வாழ்க்கை முறையையும் ஆராய்ந்து பார்த்தோ மாயின், அவர்கள் எல்லோருக்கும் அடிப்படையாக அமைந்துள்ள சமயக் கொள்கைகள் இருந்தாலும் அவரவர்களுக்குச் சொந்த அநுபவமாக அமைந்த சிறப்பான கொள்கைகளையும் பார்க்கலாம். இதைத்தான் மேல் நாட்டார் அவர்களுடைய தத்துவ முறை (Philosophy) என்று கூறுவர்.

அருணகிரிநாதப் பெருமானின் திருவாக்கை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் அவருடைய திருவுள்ளத்தின் இயல்பு என்ன என்பது புலன் ஆகும். முருகன் அடியார் அவர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் தம் தம் கடவுளை உயர்த்திப் பாடுகின்ற மற்ற அடியார்கள் ஏதேனும் ஓர் இடத்தில் தங்கள் உபாசனாமூர்த்தி அல்லாத கடவுளைப் புறக்கணிக்கின்ற முறையில் பாடியிருக்கக் கூடும். அருணகிரி நாதர் அத்தகையவர்களைச் சேர்ந்தவர் அல்லர். தம்முடைய பேரன்புக்குரிய முருகனைப் போற்றிப் பாடுவதோடு மற்றத் தெய்வங்களையும் உயர்த்திப் பாடி, அந்தத் தெய்வங்களுக்கு முருகன் இன்ன உறவு என்பதைச் சொல்வதன் மூலம் முருகனின் சிறப்பைப் பின்னும் உயர்த்திய பெரியார் அவர். சிவபெருமானுடைய புகழாகவே சொல்லிக் கடைசியில் முருகனை அப் பெருமானின் மகனே என்று விளிப்பார். திருமாலின் சிறப்பாகவே பாட்டு முழுவதும் சொல்லிக் கொண்டு வந்துவிட்டுக் கடைசியில் அவர் மருகோனே என்று முருகனை உணர்த்துவார். இதுதான் அவரது சமரச நெறியும், முறுகிய பக்தியும் இணைந்து உருவெடுக்கும் முறை யோக நெறிகளைப் பற்றியும், ஞானவிசாரத்தைப் பற்றியும், பக்திப் பண்பாட்டைப் பற்றியும், கர்மயோகச் சிறப்பைப் பற்றியும் பலபல பாடல்களில் அவர் தம் கருத்தை வெளியிட்டிருக்கிறார். அப்படியானால் அவர் ஞானியா, யோகியா, பக்தரா என்ற ஐயம் நமக்கு எழும். அவரது தத்துவ நெறி எது என்ற பெரிய கேள்வி நம் முன்னால் நிற்கிறது.

பெரும்பாலும் உலகத்தினர் அருணகிரிநாதர் கடைப் பிடித்த வழி “பக்தி” என்று சொல்வர். பல தலங்களுக்குச் சென்று, ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டுத் திருப்புகழ் என்ற அற்புதமான நூலை அவர் நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார். இந்த நெறிபக்தி நெறி என்று பொதுவாக நாமும் ஒப்புக் கொள்வோம். அருண கிரியார் தலைமையான பக்தர். ஆயினும் அவருக்கு ஞானம் தெரியும்; யோகம் தெரியும்; சரியா கிரியா மார்க்கங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்தவர் அவர்.

அவரது பக்தி,ஞானத்திற்குப் புறம்பானது அன்று; அது பெரிய யோகத்திற்குப் புறம்பானதும் அன்று. மரமாக வளர்ந்து, தனக்குள் மற்ற எல்லா நெறிகளையும் கிளைகளாகக் கொண்டது. பக்தி யோகம் என்று ஒன்றைச் சொல்வார்கள். ஞானம் என்ற முடிவை அடைவதற்குப் பக்தி வழியாக இருப்பதாக வேதாந்த நூல்கள் பேசுகின்றன. அருணகிரியார் திருவுள்ளத்தில் கிளர்ந்து எழுந்த பக்தி அத்தகையது அன்று. பக்தி வழியாக இருக்க, அதற்கு. முடிவாகிய ஒன்று தலைப்பட்டதும் அந்த வழி நழுவி விடும். அத்தகையது அன்று இது. ஞானம் இல்லாமல் முத்தி கிடைக்காது என்று வேதாந்திகள் சொல்வார்கள். அந்த ஞானம் பக்தி இல்லாவிட்டால் விளையாது. பக்தியாகிய கனிவும், கர்மம் என்ற சாறும் கலந்தால்தான் ஞானக்கனி கிடைக்கும். பச்சை நிறமுள்ள காய் கனிவு கண்டவுடன் மஞ்சள் நிறமாகி, உள்ளேயுள்ள புளிப்புச் சுவையுள்ள சாறு இனிமையை அடைவதுபோல, பக்திக் கனிவினால் ஞானம் பழுத்து, கர்மம் என்ற சாறு சுவையுள்ளதாக மாறும்.

அப்போது கனிந்த கனியே இன்ப அநுபவம். பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் என்று சொல்லும் வழிகள் பெரியோர்களால் அநுசரிக்கப்பெற்று வருகின்றன. அருணகிரிநாதப் பெருமான் பக்தியோகியா? இல்லை. அதைப் பக்தி நெறி என்று சொல்லலாம். பக்தி நெறி என்பது யாது?

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் நமக்கருளியவா றார்பெறுவார் அச்சோவே!”

என்று மாணிக்கவாசகர் பேசுகின்றார். மாணிக்கவாசகப் பெருமான் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளில், ஞானத்தின் உச்சியில் நின்றவர் என்று சைவ சித்தாந்திகள் சொல்வார்கள். ஞானப் பிழம்பாகிய மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் தமக்குப் பக்தி நெறியை அறிவித்தான் என்று சொல்லுகிறார். அவரும் பக்தர்தாம். அவர் பக்தி வேறு; பக்தியோகம் வேறு. மாணிக்கவாசகர் உலகியலில் ஈடுபட்டு அமைச்சராகப் பணியாற்றி வந்தவர். அவரை எம்பெருமான் தடுத்தாட் கொண்டார். மனம் உருகி இறைவன் இன்ப அனுபவத்தைப் படிப்படியாகச் சுவைத்தார். ஒரே அடியாக ஒன்றை விழுங்குவதைக் காட்டிலும் சிறிது சிறிதாக நுகர்ந்தால் சுவையும் நீளும். அப்படி எம்பெருமானின் திருவருள் அநுபவ இன்பத்தை மெல்ல மெல்ல உண்டவர். அதனால் மற்றவர்கள் அனுபவிக்கின்ற அநு பவத்தைக் காட்டிலும் மாணிக்கவாசருக்கு அநுபவம் நீண்ட தாகவும்,உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும் அமைந்தது.

ஒரு வகையில் அருணகிரிநாத சுவாமிகளின் திருவுள்ளத்தை மாணிக்கவாசகர் திருவுள்ளமாகச் சொல்லலாம். ஆனால் மாணிக்கவாசகர் அருணகிரிநாத சுவாமிகளைப் போல உலகியலை மிக மிக விரிவாகக் கண்டார் இல்லை. அவர் அமைச்சராக இருந்ததோடு சரி. அருணகிரிநாத சுவாமிகளோ பல வகையான மக்களின் இயல்பைப் பார்த்து, இரங்கி மனம் உருகினவர். அவருக்கு முருகப் பெருமான் கருணை நிரம்பிய கடவுளாகத் தோற்றினான். தடுத்து ஆட் கொள்ளும் திறன் கருணை மிகுதியைக் காட்டுகிறது. பக்குவம் உடைய ஆன்மாக்கள் நல்லின்பம் அடையும்படி அருள் செய்வது இயற்கையான வழி. அப்படி இல்லாமல் தன்னை மறந்த நிலையில் செல்கின்ற ஆன்மாக்களுக்குப் பக்தியைக் கொடுத்து அவர்களைத் தடுத்து இறைவன் ஆட் கொள்கிறான். சுந்தரமூர்த்தி சுவாமிகளை அப்படி ஆட் கொண்டான். அப்பர் சுவாமிகளையும் அவ்வாறே ஆட் கொண்டான். இப்படித் தடுத்தாட்கொள்ளும் பெருமை முருகப் பெருமானிடத்திலும் சிறந்து நிற்கிறது. அது வள்ளியம் பெருமாட்டியின் வரலாற்றில் தெரிகிறது. மற்ற அடியார்களை இறைவன் தடுத்து ஆட்கொண்ட வரலாறுகளைச் சைவ வைணவ புராணங்கள் சொல்கின்றன. வள்ளியம்மையைத் தடுத்து ஆட்கொள்ள முருகன் சென்றது மிக மிகச் சிறந்த பண்பு. சன்மார்க்கத்தில் வருகின்ற பேரின்பத்தை வள்ளியம்மை பெற்றாள். அதை அருண கிரியார் ‘வள்ளி சன்மார்க்கம்’ என்று வள்ளிமலைத் திருப் புகழில் பேசுகின்றார். முருகப் பெருமான் வள்ளியைத் தடுத்து ஆட்கொண்டான் என்பதை அவர் பல இடங்களில் குறிப்பாகவும். வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார்.

உலகியற் பாசத்தில் கட்டுப்பட்டு, பிரபஞ்சச் சேற்றில் சுழலும் மனிதன் முருகனிடத்தில் உண்மையான அன்பு பூண்டு, நெஞ்சம் நெகிழ்ந்தால், மனம் உருகினால், அவன் கருணை செய்ய வருவான் என்ற பெரிய நம்பிக்கையை உண்டாக்குவது அருணகிரியாரின் இயல்பு. யோகம் செய்து முயற்சி பண்ணி, மூலாதாரத்து அக்கினியை மேல் எழுப்பி, ஆதாரங்களை எல்லாம் கடந்து சென்று, சகஸ்ரார சக்கரத்தை அடைந்து, அங்கே பொழியும் அமுதத்தைப் பருகலாம் எனச் சொல்லுகின்ற யோக முறைகளை அருணகிரியார் தெரிந்து கொண்டிருந்தார். அவாக்களை அறுத்து, இந்திரிய நிக்கிரகம் செய்து, உணவை ஒடுக்கி, விரதங்களைக் கடைப் பிடித்து, ஞான நெறியில் நிற்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவை அத்தனையும் எல்லோருக்கும் கை கை வந்த நெறிகள் அல்ல. உலகிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களில் சிலருக்கே யோகம் செய்ய முடியும். பல லட்சக் கணக்கான மக்களுக்குள்ளே யாரேனும் ஒருவர் இந்திரிய நிக்கிரகம் செய்து ஞானத்தை அடையலாம். ஆனால் முருகப் பெருமானின் திரு அவதாரம், மேல் சபைக்குப் பிரதிநிதி பொறுக்குகின்ற தேர்தல் அல்ல. உலகில் வாழ்கின்ற பெரும்பாலான மக்களுக்கு அருளைப் பரப்பவேண்டுமென்று கருதியே முருகன் அவதாரம் செய்தான். ஆதலால் பெரும் பாலான மக்களுக்குப் பயன்படுகிற நெறி எதுவோ அந்த நெறியில் உண்மையான நம்பிக்கையையும், பற்றையும் உண்டாக்க வேண்டுமென்பது அருணகிரியாரின் திருவுள்ளம். முருகப்பெருமானை மிக மிக எளியவனாக அவர் காட்டுகிறார், எத்தகைய வாழ்க்கையை உலகத்தில் அநுபவித்துக் கொண் டிருப்பவனாக இருந்தாலும் முருகனிடத்தில் பக்தி கொண்டு நெஞ்சு நெகிழுமானால் அந்த நெகிழ்ச்சி அவனைப் படிப்படி யாக ஏற்றி நிரதிசய ஆனந்தத்தைப் பெறச் செய்யும் என் பது அவர் திருவுள்ளத்தில் கொண்ட நெறி; தம் பாடல்களில் எடுத்துக் காட்டும் சிறப்பான நெறியும் அதுவே.

பக்தி என்பது ஒரு படி. அதற்கு அப்பால் இந்திரிய நிக்கிரகம் என்பது ஒரு படி அதற்கும் பிறகு சமநிலை என்பது ஒரு படி அதற்கு அப்பால் அருள் பதிதல் என்பது ஒரு படி, பின்பு இன்பத்தைப் பெறுதல் என்பது கடைசிப் படி என்று விளக்கிக் காட்டுகின்ற நூல்கள் பல இருக்கின்றன. அருணகிரிநாதப் பெருமான் சொல்வது என்ன? முருகப் பெருமானின் நினைப்பைக் கொள்வது அன்பின் முதல் படி. அந்த நினைவு தோற்றிய பிறகு நெகிழ்ச்சி பெறுவது அன்பின் இரண்டாவது நிலை. நெகிழ்ச்சி பெற்ற பிறகு உலகத்திலுள்ள ஆசை அத்தனையும் நழுவுவது அடுத்த நிலை. நழுவின பிறகு எம்பெருமான் திருவருள் படிவது தொடர்ந்து வரும் அநுபவம். அதன் பயனாகப் பேரின்பம் பெறும் நிலை- அன்பு பழுக்கும் நிலை-வரும்.முதலில் தோற்றிய அன்பே வெவ்வேறு பக்குவத்தில் தழைத்து வளர்ந்து முதிர்ந்த நிலையில் பேரின்ப அநுபவமாகிறது. இது அருணகிரி நாதருக்கே அமைந்த நெறி அன்று. திருமூலர் இதைச் சொல்கிறார்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

என்பது திருமந்திரம். அன்பு என்பது வழி, சிவம் என்பது அவ்வழியினுடைய முடிவில் உள்ள லட்சியம் என்று சொல்வது பிழை. அன்பு என்ற ஒரு நிலையே சிவமாக மாறுகிறதென்ற கருத்து, திருமூலர் வாக்கிலிருந்து புலப்படுகிறது.

முதலில் எம்பெருமானின் நினைவு உள்ளத்தில் தோற்றினால் அது குறுகிய வழியாக முதலில் தோன்றி, வர வர அதுவே விரிந்து பெரிய வழியாக வளர்கிறது. பெரிய மலையில் சிறிய சிறிய ஊற்றுக்கால்களாகத் தோன்றிய நீர் மிகக் குறுகிய அளவோடு புறப்படுகிறது. அந்த மலையில் ஊற்றெடுத்து இழிந்து வந்த நீர் மெல்ல மெல்ல ஒன்று கூடி ஒரு கால்வாய் ஆகிப் பின்பு வேகம் பெற்று அருவி ஆகிறது. அந்த அருவி கடகடவென்று நிலப்பரப்புக்கு வந்த பிறகு தொடர்ந்து படர்ந்து விரிந்து செல்கிறது. விரிந்த கால்வாய் ஆறாகப் பெருகிப் பல வயல்களைக் கொழிக்கச் செய்கிறது. கடைசியில் அது கடலோடு கலந்து விடுகிறது. மலையில் தோன்றிய ஊற்று வேறு, கீழே வந்த சிற்றாறு வேறு, பேராறு வேறு கடலோடு கலந்த ஆறு வேறு என்று சொல்ல முடியுமா? அங்கே தோன்றிய ஊற்று நீர் கடலோடு கலக்கும்போதும் இருக்கிறது. ஆனால் பல்வேறு நிலையில் பல்வேறு விளைவுகளை உண்டாக்குகிறது. அருணகிரியார் கூறும் பக்திக்கு இதைத்தான் உதாரணமாகச் சொல்லலாம். தோன்றும் போது நெஞ்சில் நினைவாகத் தோன்றி, முடியும் போது இரண்டற்ற இன்பமயமாக ஆவது அருணகிரியார் காட்டும்பக்தி நெறி. இதை அவருடைய பாடல்கள் பலவற்றி லிருந்து உணரலாம்.

பத்தித் துறையிழிந்து ஆனந்தவாரி படிவதனால் புத்தித்
தரங்கம் தெளிவது என்றோ?

என்று அலங்காரத்தில் பாடுகிறார். பக்தித் துறையில் இழிந்தால் ஆனந்தம் என்ற கடலில் கலந்து கொள்ளலாம் என்பது அவர் கருத்து. பக்தித் துறை யாது? அது எங்கே தொடங்குகிறது? அது எப்படி விரிகிறது? பக்தி என்பது உணர்ச்சி, நம் உள்ளத்தில் தோன்றுகின்ற உணர்ச்சி வகைகளுக்குக் கொழுந்தாக இருக்கிறது அது. தோன்றும் போது அது சிறியதாகத் தோன்றும். அதாவது ஒருவனுக்கு முருகன்பால் அன்பு பிறந்தால் நினைப்பாகத் தோன்றும். அவன் முருகன் படத்தைப் பார்ப்பான். பின்பு அவனது கோயிலுக்குச் செல்வான். அவன் பாட்டைக் காதினால் கேட்பான். வரலாற்றைப் படித்து இன்புறுவான். பின்பு அதனுடைய தத்துவத்தை நன்கு உணர்ந்து தியானத்தில் அமர்ந்துவிடுவான். கண்ணாலே கண்ட முருகன் கோலத்தையும் காதாலே கேட்ட முருகன் உபதேசத்தையும் தனியாக இருக்கும்போது தன் நெஞ்சிலே புதையும்படி சிந்திக்கத் தொடங்குவான். அப்படித் தன் நெஞ்சிலே புதைக்கப் புகும்போது புறத்தில் தோற்றுகின்ற பொருள்கள் அத்தனையையும் களைந்துவிட்டு, தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட தோற்றத்தை நிலை நிறுத்தப் பார்ப்பான். முயற்சி கைகூடி முருகனது தோற்றம் அவன் நெஞ்சில் சிதையாது இருக்கும்போது அவன் உணர்ச்சி ஒடுங்கி இருக்கும். அப்போது சமாதி நிலை கைகூடும். அதற்கு அப்பால் மெல்ல மெல்லப் பக்குவம் இயைந்து அநுபவ இன்பக் கடலில் வீழ்ந்து விடுவான்.

இதைப் பல்வேறு இடத்தில் அருண்கிரியார் சொல்கிறார். “நான் பரமானந்த சாகரத்தைக் கண்டேன்” என்கிறார். அந்தச் சாகரம் எங்கேயிருந்து வந்தது? “என் புத்தியில் சிறிய ஊற்றாகத் தோன்றியது. வாழ்க்கையில் ஒரு பகுதியாக, இடம்; காலம் ஆகிய எல்லைக்குள் அடங்கிய என் புத்தியில் தோன்றிய பக்தியாகிய உணர்ச்சி,மெல்ல மெல்ல வளர்ந்து எல்லைகளை உடைத்து எல்லையைத் தாண்டிய பரமானந்தக் கடல் ஆகிவிட்டது.”

பத்தித் திருமுகம் ஆறுடன்,பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன்; செயல் மாண்டு [அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே

என்று அலங்காரத்தில் பாடுகிறார். அதனுடைய தோற்ற நிலை, புத்திக் கமலத்தில் புறப்படும் உருக்கம். அதன் முடிவு, புவனங்களை ஏற்றி அகண்டமாக இருக்கின்ற ஆனந்தக்கடல். புத்திக் கமலத்திலே தோற்றிய தோற்றம் அநுபவத்தின் முளை. பரமானந்த சாகரந்தான் அதன் முடிவாகிய கனிச்சுவை. பருப்பொருளாகத் தோன்றிய ஒன்று நுண் பொருளாகப் பரவுகிறது. நினைப்பாகத் தோற்றிய ஒன்றை, இன்ப அனுபவத்திற்கு மூலமாகத் தோற்றிய பக்தி என்று சொன்னால், முடிவைச் சித்தி என்று சொல்ல வேண்டும். இறைவன் திருவருளால் முதலில் முளையாகத் தோற்றிய அதுவே வளர்ந்து மரமாகிவிடுகிறது. பக்தி சித்திக்கு வழி என்று சொல்பவர் பிறர். பக்தியே சித்தியாகிவிடுகிறது என்பது அருணகிரியார் கொள்கை.

பக்தி சித்திக்காட்டி அத்தர் சித்தம் மீட்ட
பக்தருக்கு வாய்த்த பெருமாளே!”

என்பது ஒரு திருப்புகழ்.

வள்ளி யெம்பெருமாட்டி தவம் செய்யவில்லை; சாதன வகையில் ஈடுபடவில்லை. அவள் நெஞ்சில் முருக பக்தி இருந்தது. ஆனால் அந்தப் பக்தி ஞான வைராக்கியமாக வளரவில்லை. இந்திரிய நிக்கிரகமாக மாறவில்லை. வேடர் குலத்து உதித்த மங்கை ஆதலால் வேடர்களுக்குத் தெய்வமாகிய முருகனை நினைந்து நினைந்து ஆலோலம் பாடித் தினைப்புனம் காத்து வந்தாள். அவளுடைய உள்ளத்தில் பக்தி என்ற ஒன்று சிறிய வித்தாகத் தோன்றியது. அந்த வித்துக்கு நீர் பாய்ச்சியோ உரம் ஊட்டியோ வளர்க்கும் முயற்சியில் அவள் ஈடுபடவில்லை. ஆனால் கருணைப் பிரானாகிய கந்தவேள் அவ் வித்து முளைத்து, வளர்ந்து, தழைத்து, மரமாகிக் கனி குலுங்க வேண்டு மென்று திருவருள் கொண்டான். வித்தை அவளாக வளர்ப்பதைக் காட்டிலும் தானே சென்று வளர்த்தால் நிச்சயமாகப் பலன் தரும் என்ற நினைப்புப் போலும். அவன் இந்திர குமாரி இருக்கவும், ‘கலாமயில் கூத்தயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய்ச் சிறு குறவர் மகளாகிய வள்ளியெம் பெருமாட்டிக்குச் சலாமிடற்கு ஏக்கற்று நின்றான். தன் கருணைப் பிரவாகத்தினால் வித்தாக இருந்த வள்ளியின் பக்தியை வளரச் செய்து கனி கிடைக்கச் செய்தான்.

வள்ளியெம்பெருமாட்டியின் திருமணம் முருகனுடைய பெருங் கருணையைக் காட்டும் திருவிளையாடல். முருகனை நினைந்து உருகத் தொடங்கினால் அந்த உருக்கம் பெருக்க மாகிப் பரமானந்த சாகரத்தை மடுக்கச் செய்யும் என்பதை அந்தத் திருமணம் காட்டுகிறது. இதை அருணகிரியார். சொல்கிறார்.

நாதா,குமரர், நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?”

என்று ஒரு கேள்வியைப் போட்டார். சிவபெருமானுக்குப் பிரணவத்தின் பொருளைச் சொன்னான் என்று கதை சொல்கிறது. அதை மாத்திரம் முருகன் சொல்லவில்லை. தன் அவதார விசேஷத்தையும் எடுத்து நுட்பமாகச் சொன்னான் என்றும் தெரிகிறது.

வள்ளி சன்மார்க்கம் விள்ஐக்கு ஈத்த

என்று ஓரிடத்தில் வருகிறது.

கருணை மிகுதியாலே பள்ளத்தில் கிடப்போரையும் எடுத்துக்கரை ஏற்ற வந்த அவதாரம் முருக அவதாரம். கருணை ஓடிக்கொண்டிருந்தது. அது மிகுதியாக ஆகவேண்டு மென்று கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு ‘முருகன் எழுந்தருளினான். கருணை கூர்தலாவது, கருணை பெறுவோரின் முயற்சி மிகச் சிறியதாக இருக்கவும் கருணை தருவோரின் முயற்சி பெருகி இருத்தல். இதை வள்ளி யெம்பெருமாட்டியை ஆட்கொண்ட நிகழ்ச்சியில் வைத்துக் காட்டினான், முருகன். ‘குற்றங்கள் இருந்தாலும் மறந்து, அன்பு வித்துத் தோன்றிய இடத்தில் அதை வளரச் செய் கின்ற பேரருளை வழங்குதற்கு நான் பிறந்தேன்’ என்ற உண்மையை அவன் சிவபெருமானிடத்தில் சொன்னான்.

வள்ளி சன்மார்க்கம் என்பது அதுதான். அதனால்,

நாதா குமரா நமஎன்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?”

என்ற கேள்வியைக் கேட்டவர்,

அதற்குரிய விடையை நேராகச் சொல்லவில்லை. குறிப்பாகப் பின் இரண்டு அடிகளில் அதனை உணர்ந்து கொள்ளும் படியாக வைத்திருக்கிறார்.

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா, குறமின் பதசேகரனே

என்று பேசுகிறார். “குறத்தியின் பாதத்தைத் தலையில் வைத்துக் கொள்ளும் பெருமானே!” என்று முடிக்கிறார். அதனோடு, “பிரம்மா முதலிய தேவர்கள் உன்னுடைய பாதத்தைத் தங்கள் தலையில் சூட்டிக்கொண்டிருப்ப, நீ சின்னஞ் சிறு குறத்தியின் காலை உன்னுடைய தலையில் வைத்துக் கொள்கிறாயே” என்று முருகனைப் பார்த்துச் சொல்கிறார். ‘சிவபெருமானுக்கு உபதேசம் செய்தது என்ன? வள்ளியெம்பிராட்டியை வணங்கின பெருமானே என்று வந்துள்ள பாடலைப் பார்த்தால் இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பு இல்லை போலத் தோன்றும். ஆனால் சிவபெருமானுக்குச் சொன்னதே. ”நான் வள்ளியை வணங்கப் போகிறேன்” என்பதுதான். ‘இந்த அவதாரத்தில் வித்து மாத்திரமே நோக்கி, பக்குவம் நோக்காமல் அருள் செய்யும் பண்பு என்னிடத்தில் உண்டு என்பதைச் சிவபெருமானுக்கு அறிவித்தான் என்பது அருணகிரியார் கருத்தாக இருக்க வேண்டும்.

சிவபெருமானுக்கு இந்த முறையைச் சொன்னதோடு அல்லாமல் தமக்கும் இந்த இரகசியத்தைச் சொன்னதாக அருணகிரியார் அலங்காரத்தில் பாடுகிறார்.

கின்னம் குறித்து அடி யேன்செவி
நீ அன்று கேட்கச்சொன்ன
குன்னம் குறிச்சி வெளியாக்கி
விட்டது; கோடுகுழல்
சின்னம் குறிக்கக் குறிஞ்சிக்
கிழவர் சிறுமிதனை
முன்னம் குறிச்சியில் சென்றுகல்
யாணம் முயன்றவனே.”

“யான் பலவகையாகத் துன்பப்பட்டேன்.முற்பிறவியில் செய்த வினைகளின் பயனாகத் துன்புற்றது ஒரு பங்கு. இனி எம்பெருமானின் திருவருளை எவ்வாறு பெறுவது என்ற கவலையாலேயும் மிக்க துன்பப் பட்டுக் கொண்டிருந்தேன்.

இறைவன் திருவருளைப் பெறுவதற்குப் பலவகையான நெறிகளைச் சொல்கிறார்கள். பல நூல்களும் உள்ளன. அந்த நெறிகளில் புகுவதற்கு உரிய தகுதி என்னிடத்தில் சிறிதும் இல்லையே! அப்படி இருக்க நான் எவ்வாறு முருகன் திருவருளைப் பெறுவேன் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நான்பட்ட கவலையை எம்பெருமான் குறித்துக் கொண்டு, ‘இவனுக்கு வலிய அருள் செய்வேன்’ என்று வந்தான். என் செவியில் தன் அவதார இரகசியத்தைச் சொன்னான். ‘நான் உனக்கு அடிமை’ என்ற நினைவை மாத்திரம் கொண்ட என் செவியில் கேட்கும் படியாகச் சொன்ன இரகசியத்தைக் குறிச்சி வெளியாக்கிவிட்டது” என்கிறார். குறிச்சி என்பது வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த குறிஞ்சி நிலத்து ஊர். எப்படி வெளியாக்கிவிட்டது என்பதைப் பின் இரண்டு அடிகளில் சொல்கிறார். ‘வள்ளியெம் பெருமாட்டியிடம் சென்று அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முயன்றவனே என்று கூறுகிறார். ‘என் செவி கேட்கச் சொன்ன இரகசியத்தை வள்ளி திருமணம் வெளியாக்கி விட்டது என்று அவர் கூறுகிறார். அருணகிரி நாதர் திருச் செவியில் சொன்ன இரகசியம் எதுவோ, அது தான் சிவபெருமானின் காதிலே பிரணவப் பொருள் விளக்கத்துக்குப் பின் சொன்னதாக இருக்க வேண்டும். இதுவே அருண்கிரியார் திருவுள்ளம்.

“வள்ளிச் சன்மார்க்கம் விள்ஐக்கு ஈத்த” என்ற திருப் புகழ்ப் பகுதியும், “செவி நீ அன்று கேட்கச் சொன்ன குன்னம் குறிச்சி வெளியாக்கி விட்டது” என்ற அலங்காரப் பகுதியும், “நாதா குமரா நம” என்ற அநுபூதிப் பாட்டும் இந்தக் கருத்தைக் குறிப்பாக வெளியிடுகின்றன.

எனவே, அருணகிரியார் திருவுள்ளம் யாது? வள்ளி திருமணத்தின் தத்துவம் என்ன? இந்த இரண்டு கேள்வி களுக்கும் “பாசக் கட்டில் கட்டுப்பட்டிருக்கின்ற ஆன்மா தன்னுடைய உள்ளத்தில் சிறிது அன்பைக் கொண்டு முருகா என்று சொல்லி உள்ளம் உருகினால் முருகப் பெருமான் அந்த அன்பை ஏற்றுக் கொண்டு, அந்த ஆன்மாவைப் பிரபஞ்சச் சேற்றினின்றும் எடுத்துத் தன் திருவடித் தாமரையோடு ஒன்ற வைக்கும் பெருங் கருணை படைத்தவன்.?’ இந்த நம்பிக்கையைக் கொண்டு வாழ்வது அருணகியார் சொல்கின்ற பக்தி நெறி. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு வகையான நெறியைப் பின்பற்றி வாழ்வதிலும் தாம் கடைப்பிடித்த ஒரு நெறியே மேலும் மேலும் வளர்ந்து பயன் தரும்படி அமையும் என்பதே அருணகிரியார் காட்டும் பக்தி நெறி.

நாரதர் பத்தி சூத்திரத்தில் பக்தியைப் பற்றிச் சொல்லும் போது “தத் பலத்வாத்” என்று வருகிறது. பக்தி என்பது ஒரு கருவியாகவும் முத்தி என்பது ஒரு பயனாகவும் இருப்பதாக நினைக்கும் நினைப்பை அந்தச் சூத்திரம் மாற்றுகிறது. பக்தியே முடிந்த முடிவாகிய பலாைக நிற்கும் என்பது அந்தச் சூத்திரத்தின் கருத்து. அந்த வகையில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் நிச்சயமாக அத்தகைய அநுபவம் பெறலாம் என்ற நம்பிக்கையை ஊட்டித் தம்முடைய அற்புதமான திருவாக்கினாலே வற்புறுத்திய பெருங் கருணையாளர் அருணகிரியார். பக்தியிலே தொடங்கி, பக்தியிலே விளைந்து, பக்தியிலே மடங்கி, பக்தியிலே இன்பம் பெற்றுக் கரைவதுதான் அருணகிரியார் திருவுள்ளம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !